செவ்வாய், 10 செப்டம்பர், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது… பாதுஷா.


மறக்கக் கூடிய சம்பவமா அது? எத்தனை வருடங்கள் உருண்டோடினாலும் நினைவில் நிற்கக்கூடிய சரித்திர நிகழ்ச்சியல்லவா? எனக்கு அப்போது எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். சினிமாவை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பு இல்லாது வளர்ந்த நிலை, விடுமுறை நாளில் ஒரு சினிமாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். படம் நன்கு நினைவிருக்கிறது – ‘மதுரை வீரன்’.

ஆனால் அதில் நடித்தவர் யாரென்று அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் கதாநாயகனாக நடித்தவர் என் உள்ளத்தில் பதிந்துவிட்டார். பெயர் தெரியாமலேயே நான் அவரது ரசிகனாகி விட்டேன்.

ஒரிரண்டு ஆண்டுகள் சென்றிருக்கும். அப்போது நான் மதுரையில் படித்துக் கொண்டிருந்தேன். ‘நாடோடி மன்னன்’ வெளிவந்த நேரம் என்று நினைக்கிறேன். படத்தை அப்போது பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆனால் அப்போது எம்.ஜி.ஆர். என்பவர் யார் என்பதை பள்ளித் தோழர்கள் வாயிலாக அறிந்திருந்தேன்.

மதுரை வீரனை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆவலை என்னுள் வளர்த்துக் கொண்டிருந்தேன். அந்த வாய்ப்பு அவ்வளவு விரைவில் வரும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

மதுரை நகரமே அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது! மக்கள் திலகம் மதுரை வருகிறார்! அவருக்கு தங்கவாள் கொடுக்கப் போகிறார்கள் என்று ஊரெங்கும் பேச்சு. இந்த வாய்ப்பை நான் நழுவ விடுவதாக இல்லை. மக்கள் திலகத்தைக் காணப்போகும் அந்தத் திருநாளை நான் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தத் திருநாளும் வந்தது.

புரட்சி நடிகர் ஊர்வலம் வரும் பாதையை அறிந்து வைத்துக்கொண்டு சில நண்பர்களுடன் பகல் ஒரு மணிக்கே ஊர்வலம் வரும் பாதையில் நின்று கொண்டேன். நேரம் செல்லச் செல்ல மனிதத் தலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போயிற்று.
 
எனது கவலையெல்லாம்  புரட்சி நடிகர் வரும் போது இந்தக்கூட்டம் அவரை மறைத்து விடுமே என்பதுதான். சுமார் ஐந்து மணி இருக்கும். ஒரே ஆரவாரம். புரட்சி நடிகர் ஒரு லாரியின் மேல் அமர்ந்து ஊர்வலமாக வருகிறார். அருகே இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும், மதுரை முத்துவும் இருக்கிறார்கள். நான் கண் கொட்டாது பார்க்கிறேன். என் மனதில் பதிந்து விட்ட மதுரை வீரனை இப்போது நேரிலேயே பார்க்கிறேன். எனக்கு புல்லரிக்கிறது.

புரட்சி நடிகர் என்னைப் பார்த்து கையை அசைக்கிறார். (நான் அப்படி நினைத்துக் கொண்டேன்). நானும் பதிலுக்கு கையசைத்து என் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னைக் கடந்து செல்லும்போது நான் எதையோ இழப்பதைப் போல் உணர்ந்தேன். அந்த உணர்ச்சியை என்னால் விவரிக்க இயலவில்லை. புரட்சி நடிகரை தரிசித்த அந்த ஐந்து நிமிடங்களை விவரிக்க எனக்கு எழுத்தாற்றல் மட்டும் இருந்தால் ஒரு காவியமே இயற்றி விடுவேன்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த நிகழ்ச்சி மட்டும் என் மனதை விட்டு அகலவே இல்லை. ஆண்டுகள் பலவாகி விட்டன. வங்கியில் சேர்ந்து பணி புரியத் தொடங்கி இருந்தேன். அவசர நிலை அமுலில் இருந்த நேரம். எங்கள் வங்கிக்காக புதிய கட்டிடம் ஒன்று கட்டப் பட்டுக்கொண்டிருந்தது. ஒருநாள் வங்கி முகவர் என்னை அழைத்து கட்டிடத் திறப்பு விழாவுக்கு யாரை அழைக்கலாம் என்று கேட்டார்.

நான் சொன்ன பதில் அவருக்கு சிரிப்பை வரவழைத்து விட்டது. முதல்வராக எம்.ஜி.ஆர். அவர்கள் வந்தவுடன் அவரை வைத்தே நமது கட்டிடத்தை திறக்க வேண்டும் என்றேன். தேர்தல் வரும் அறிகுறி கூட இல்லாத நிலை. ஆனால் என்ன ஆச்சர்யம்? புரட்சித்தலைவர் முதல்வராக வரும் வரை கட்டிடப் பணி முடியவே இல்லை.

ஆனால் அதைவிட ஆச்சர்யம் அந்த வங்கிக் கட்டிடத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களே திறந்து வைத்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் எம்.ஜி.ஆர். அவர்களை மிக அருகில் இருந்து கண்டுகளித்தேன்.
-            -  பாதுஷா.

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

என்னவொரு ஆர்வம்...!!!

ரசித்தேன்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே!

சிம்புள் சொன்னது… [Reply]

எம்.ஜி.ஆர் ஒரு அதிசய பிறவி தான் !

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

சிம்புள், வருகைக்கு நன்றி!

பெயரில்லா சொன்னது… [Reply]

MGR ஓட யாரு வந்தாக ?
ஜெயலலிதாவா ஜானகி அம்மாவா ?

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கேட்டுச் சொல்றேன் அனானி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!