செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சிங்கப்பூரிலிருந்து ஜென்ஸி ...


சென்னையில் நான் வாடகை வீட்டில் வசித்தபோது பக்கத்து வீட்டில் கவிதா என்ற பெண்ணும் அவள் சகோதரி ஒருத்தியும் அவளது அம்மா என மூன்று பேர் வசித்து வந்தார்கள். கவிதா என்னிடம் கொஞ்சம் கலகலப்பாக பேசுவாள். ஏதாவது விபரம் தேவை எனில் என்னைத்தான் கேட்பாள். சென்னையிலுள்ள பிரபல கார் கம்னியிலிருந்து அவளுக்கு இன்டர்வியூ வந்தபோது என் வழிகாட்டுதலினால்தான் வேலை கிடைத்தது 

அந்த நேரத்தில் நான் வேலை செய்த நிறுவனம் மூடும் நிலையில் இருந்ததால் வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.
அப்போது இந்தக் கவிதா, எனக்கு ஜென்ஸி என்ற ஸ்நேகிதி (அக்கா) இருப்பதாகவும், அவர்கள் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும் சொன்னாள். வேண்டுமானால் நான் முகவரி தருகிறேன், நீங்கள் வேலைக்காக அவரிடம் கேட்டுப்பாருங்கள். ஒருவேளைஉங்கள் நல்ல நேரம் வேலை கிடைத்தாலும் கிடைக்குமில்லையா? முயற்சிதான் செய்து பாருங்களேன்என்றாள்.

ஆனால் அறிமுகமில்லாதவர்களிடம் எப்படி திடீரென்று கடிதம் எழுதுவது? அதனால் ஒருஏரோகிராம்வாங்கி வந்து, முதல் பாதி கடிதத்தை கவிதாவை எழுதச்சொல்லி, மறுபாதியில் நான் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு கடிதம் எழுதினேன். பத்தே நாளில் பதில் வந்தது. எனக்காக முயற்சி செய்வதாகவும், என்னை நண்பனாகவும், சகோதரனாகவும் ஏற்றுக் கொண்டதாகவும் எழுதியிருந்தார். எனக்கோ ஒரு புதிய நட்பு கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம், எப்படியும் சிங்கப்பூருக்குப் போகப் போகிறோம் என்ற சந்தோஷம் மறுபுறம்.

ஒரு கட்டத்தில் இந்தக் கவிதா காணாமல் போய்விட்டாள். கார் கம்பனிக்கு அருகிலேயே வீடு பார்த்துக்கொண்டு போனவள் என்ன ஆனாள் என்று தெரியாது. ஆனால் இந்த ஜென்ஸியின் நட்பு மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. தன் எல்லா மனக்குமுறல்களை எல்லாம் கொட்டித்தீர்த்தார் இந்த ஜென்ஸி. நான் என்ன எழுதினேன், எதைப் பகிர்ந்து  கொண்டேன் என்று நினைவில்லை.

மனிதர்கள் எல்லோருமே ஆதரவான உறவுக்கு ஏங்குகிறவர்களாகவும், தன் துயரங்களை நம்பிக்கையானவர்களோடு பகிர்ந்து ஆறுதல் அடைகிறவர்களாகவுமே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண்கள் காதலன், கணவன், நண்பன் என்று ஏதோ ஒரு துணையின் அன்புக்கு ஏங்குகிறார்கள். அது எதிர்பார்த்தவர்களிடம் கிடைக்காதபோது, யார் அப்போது நம்பிக்கையானவர்கள் கிடைக்கிறார்களோ அவர்களிடம் தன் மனத்துயர்களை பகிரத் தொடங்கிவிடுகிறார்கள்.

இதுவும் ஒரு காலகட்டத்தில் சூழ்நிலைகளினாலோ, கருத்து வேறுபாடுகளினாலோ, இடம் பெயர்தல்களினாலோ தொடர்பற்றுப் போய்விடுகிறது. ஆனாலும் பழைய நினைவுகளை, நண்பர்களை மறந்து விட்டார்கள் என்று நினைக்க முடியுமா? நான் இப்போது நினைத்து இங்கே எழுதிக் கொண்டிருப்பதைப்போல, அவர்களும் என்னை எப்போதாவது நினைத்துப் பார்க்கலாம்!

யாரோ ஒரு பக்கத்து வீட்டுப் பெண்ணின் அறிமுகத்துடன் தொடர்ந்த இந்த நட்பின் பரிமாணங்கள் என்னை அந்தக் காலகட்டத்தில் மிக மகிழ்ச்சியாக வைத்திருந்தது. எனது நட்பின் தேவையும், ஆறுதலும் ஜென்ஸியையும் சந்தோஷப்படுத்தியது. அவர் மூலம் வேலை கிடைத்ததோ இல்லையோ அவரின் நட்பு கிடைத்ததே பெரிய விஷயமாய்க் கருதினேன்

விடுமுறையில் அவர் இந்தியா வந்தபோது, எனக்காகவும், என் மனைவி குழந்தைகளுக்காகவும் துணிமணிகள் சாக்லெட் என்று கொண்டுவந்து அசத்தினார். இந்தியா வந்தபோது விமான நிலையத்தில் வரவேற்க நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பியிருந்தார்.  

எத்தனையோ முறை சென்னை விமானநிலையம் வழியே நான் சென்றிருந்தாலும், முதன்முறையாக, விமான நிலையத்தினுள், அதுவும் உறவினரல்லாத ஒருவரை வரவேற்க நான் சென்றது இன்றுவரை மறக்கமுடியாத நிகழ்வாகும். கணவர், உறவினர்களுக்குக் கூட அவர் வருவதைத் தெரிவிக்கவில்லை.

அவரின் கடிதங்களில் ஒரு பெண்ணின் மனத்துயரங்கள், அவரின் குடும்பச்சுமை, குழந்தையின் பிரிவு, அன்பு, பாசத்திற்கான ஏக்கம், வெளிநாட்டில் பணிபுரியும் சூழல் என எல்லாவற்றையும் அறிந்துகொள்ளலாம். அவரின் கடிதங்கள் அடுத்த பதிவிலிருந்து... தேதிவாரியாக இல்லாமல் முன்பின் இருக்கும். படித்துவிட்டு உங்கள் கருத்துரைகளைச் சொல்லுங்கள்.



2 கருத்துகள்:

சசிகலா சொன்னது… [Reply]

நட்பின் பரிணாமங்களை அழகாக விளக்கிய விதம அருமை .

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சசிகலா அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!