சனி, 21 ஏப்ரல், 2012

உண்மையான நண்பர்களே உறவுகள்


என் உறவினரும் நண்பருமான திரு.ரவி எனக்கு எப்போதுமே நல்ல ஆலோசனைகளைத் தந்து வருபவர். நான் முதன் முதலாக வெளிநாட்டிற்குப் போனதும் எல்லோருக்குமே கடிதம் எழுதித் தெரிவித்தேன். அப்போது எனக்கு அவர் எழுதிய கடிதம் இது!


அன்புள்ள கவிப்ரியனுக்கு, 

ரவி எழுதும் கடிதம். உனது 3.10.2003 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். தீபாவளி ஃபண்ட் பிடித்த சமயமாதலால் உடனே கடிதம் எழுத முடியவில்லை. கோடைச்சுற்றுலா குளிர்ந்தது. வரும் கோடையில் ஆந்திரா, ஒரிஸா, பீகார், உத்திரப்பிரதேசம், உத்ராஞ்சல், டெல்லி, மேற்கு வங்காளம் போக உத்தேசித்து அதற்கான வேலையில் இறங்கியுள்ளேன். மொத்தம் 19 நாட்கள்.

உனது கடிதம் வந்த பின்பு புதிதாக சீட்டு ஆரம்பித்தேன். தற்போது ஆட்சியாளர்களால் பணப்புழக்கம் கடினமாக உள்ளதால் எல்லோருக்குமே வேலையில்லை. வருமானம் இல்லை. தற்போது புதிதாக அரிசி மூட்டைகள் (25 kg) வரவழைத்து, வீட்டில் வைத்து வியாபாரம் துவங்கியுள்ளேன். எதிர்பார்த்தபடி போகிறது. இதனை மேலும் விரிவாக்கவும் உடன் பருப்பு வகைகள், ஆயில் என அத்தியாவசியப் பொருட்களை விற்க திட்டமிட்டுள்ளேன். வளர்ந்தால் சூப்பர் மார்க்கெட், இல்லை என்றால் சைடு பிஸினஸ் ஆக இருக்கட்டுமே!

பெண்ணியம் தொடர்பான உன் எண்ணங்களை எழுத்தாக்கி வைக்கவும். எத்தனை புதுமைகள் வந்தாலும், புத்தகத்திற்கு என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு. தனித்தனி தலைப்புகளில் உனது எண்ணங்களுடன், சிறிது கற்பனை, உதாரணங்களுடன் மேற்கோள் காட்டி, நகைச்சுவையுடன் எழுதலாம். கையெழுத்துப் பிரதியை தயார் செய்து வைக்கவும். இங்கு வந்தவுடன் செய்துவிடலாம்.

கடந்த மாதம் டி.டி. பொதிகையில் அபஸ்வரம் ராம்ஜியுடன் வாடகை வீடு சிறந்ததா? சொந்த வீடு சிறந்ததா? என்ற விவாதத்தில், நான் 2 வது தலைப்பில் பேசினேன். ஒளிபரப்பாகி பலரின் பாராட்டுதல்கள் கிடைத்தது.

உலகம் ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிறதென்றே தெரியவிலலை. உடம்புக்கு வயது ஏற ஏற பிரச்னைகளும் வேகமாகத்தான் வளர்கிறது. அண்ணன் தம்பி உறவுகள் என்பதெல்லாம் போலி என்பதை உணரும் பருவம் இதுவென்று நினைக்கிறேன். இளமைக் காலங்களை இன்றைய சூழலுக்குப் பொருத்திப் பார்த்து வெறுத்துப்போகிறேன். தித்திக்கும் அந்த நினைவுகள் – அப்படியே நாம் இருந்திருக்கக்கூடாதா? என்ற ஏக்கத்தைத் தந்தாலும், நிகழ்காலம் கடமைகளை நினைவூட்டுகிறது. ஆனாலும் தினம் மூன்று வேளை சாப்பிடும் போதெல்லாம் எனக்கு இளமைக்கால நினைவுகளே அதிகம் வருகிறது.

என் தந்தை சொத்துக்களை பிள்ளைகளுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டால், தம்மை யாரும் கவனிக்கவோ, ஏன் மரியாதை கூட கொடுப்பார்களோ என்னவோ என்று எண்ணித்தான் கடைசிவரை சொத்தைப் பிரிக்கவில்லை. அருக்குப் பின் சொத்தை மட்டுமா அண்ணன் தம்பிகள் பிரித்தார்கள்? சொந்த பந்தங்களையும்தான்.

இந்து மதத்தின் வலிமையே, ஒற்றுமையே குடும்ப ஒற்றுமையில்தான் உள்ளது. அதற்கு ஆபத்து வந்துவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை. நான் நம்பாததால் அது பொய்யாக ஆகப்போவதில்லை. உன்னைக் குழப்பவில்லை. இனிவரும் காலத்தில் உறவுகள் பொய்யாகி, உண்மையான நண்பர்கள் உறவுகளாக வருவார்கள். இன்றைய உறவுகள் பணத்தை மட்டுமே குறியாக வைத்து உறவாடுகிறது. இது எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல. எண்ணற்ற குடும்பங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

நீ உனது மனைவி குழந்தைகளை முன்வைத்து அவர்கள் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை யோசித்து வாழ்க்கையை நடத்து. நீ வரும் முன்பு கடிதம் எழுது. புத்தகம் முயற்சி, அப்போதைய சூழல், எப்படி வெளியிடலாம் என்பதைப் பற்றியெல்லாம் பிறகு பேசுவோம்.
இடையில் புலம்பிய என் புலம்பல்கள் விரக்தியின் வெளிப்பாடு. அதை அறிவுறையாகவோ அனுபவ உரையாகவோ கொள்ள வேண்டாம். இன்றைய நம் ஊரின் நிலை இது. 

விரைவில் இன்டர்நெட் உபயோகிக்க கற்றுக்கொள்கிறேன். மற்றபடி இன்றுவரை மழை 50% கூட பெய்யவில்லை. தண்ணீர் பற்றாக்குறைதான். விடுமுறைக்கு வருமுன் கடிதம் எழுதவும். உனக்கு அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே வாங்கவும். தாராளமயமாக்கலில் அனைத்து பொருட்களும், அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது என்பது உனக்கும் தெரியும்.

பிற அடுத்து.
அன்புடன்,
ரவி.

கடிதம் பற்றிய ஒரு உருக்கமான பதிவு...
ஹரணி பக்கங்களில் மடலேறுதல் என்ற பதிவில்........
'செல்போன் எனும் உயிர்க்கொல்லி உறவறுத்து..உறவின் வேரறுத்து..நம்பிக்கையை அறுத்து..வாழ்வின் சகலத்தையும் அறுத்து..உயிரைக் கொன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது.'

கடிதம் ஒரு அற்புதமான வாழ்வின் அடையாளம். கடிதம் அற்புதமானது. அது ஒரு சுகம். கடிதம் தவ அமைதி.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!