GOD IS LOVE
Hello Brother,
உங்கள் கடிதம் கிடைத்தது. பதில் போட தாமதம் ஆனதில் மன்னிக்கவும். கடவுள் அருளால் நான் நல்லபடியாக உள்ளேன். என் மகளும் நல்லபடியாக உள்ளாள். எல்லா வாரமும் ஒருமுறை அவளுடன் ஃபோனில் பேசுவேன். மற்றபடி என் கணவர் இதுவரை லெட்டர் போடவில்லை. காரணம் ஏன் தெரியுமா? இந்த முறை வந்து அவருக்கு பணம் ஏதும் அனுப்பிக் கொடுக்கவில்லை, அதனால்தான்.
உங்கள் லெட்டர் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். காரணம் என்னுடைய சூழ்நிலைகளை எல்லாம் அறிந்துகொண்டு மனப்பூர்வமாக பதில் அனுப்பி உள்ளீர்களே அதை நினைத்துதான். நீங்கள் எழுதிய அனைத்து விஷயங்களும் சிந்திக்கக்கூடிய விஷயங்கள்தான். காரணம் என் திருமணம் முடிந்து வருகின்ற ஜூன் 7 ம் தேதியோடு 14 வருடங்கள் முடிகின்றது. ஆனால் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ்ந்த காலம் வெறும் 5 வருடம் மட்டும்தான். அப்புறம் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. அன்றைய தினத்திலிருந்து என் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. ஏன் காதலித்து திருமணம் செய்தேன் என்று இப்போது நினைக்கிறேன்.
நீங்கள் எழுதினீர்கள், ஏன் இன்னொரு துணைவரைத் தேடக்கூடாது என்று! உண்மையிலேயே எனக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை நினைக்கும்போது, இனி எனக்கு ஒரு துணை வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். என் மகளுக்காக மட்டும் இந்த உலகத்தில் வாழ வேண்டும், அவளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்ட மாதிரி அவளும் படக்கூடாது.
நான் வாழ வேண்டிய வயதில் சரியாக வாழவில்லை. இனி எனக்க்கென்று யார் வாழ்வு கொடுக்க வருவார்கள்? பெண்களைப் பற்றி எழுதினீர்கள், தியாகிகள் என்று. அந்த தியாகத்தைக் கடைபிடித்துக் கொண்டுதான் இவ்வளவு நாட்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பெண்களால் அப்படி வாழ முடியும். ஆனால் ஏனோ ஆண்கள் அப்படிப்பட்ட பெண்களுக்கு துரோகம் செய்து விடுகிறார்கள். என் வயது சரியாக 32. இனியும் யார் என்னைத் திருமணம் செய்து கொள்வார்கள்?
என்மேல் பாசமுள்ள கணவராக இருந்திருந்தால், இரண்டு வருடம் பொறுத்து வந்த என்னை ஏமாற்றி இருக்க மாட்டாரே! அவருக்கு தாம்பத்திய சுகம் கொடுக்க ஆள் இருந்திருக்கும். அதனால்தான் என்னை அவர் அலட்சியப்படுத்தினார். என்னைப் பொருத்தவரை அந்த சந்தோஷத்தைவிட உண்மையான அன்பு பாசத்தைத்தான் எதிர்பார்க்கிறேன். செக்ஸ் இல்லாமல் என்னால் எத்தனை வருடம் வேண்டுமானாலும் வாழ முடியும். காரணம் நான் அனுபவித்த வேதனைகள் அவ்வளவு. பல வருடத் தனிமையினால் பழகிவிட்டேன்.
நான் இப்படி எழுதிவிட்டேன் என்று தவறாக நினைக்கவேண்டாம். நீங்கள் வெளிப்படையாக எழுதினது போலவே, நானும் என் மனதில் உள்ளதை எழுதுகிறேன். என்னைப் பொருத்தவரை இனி என் கணவருடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளமாட்டேன். வெளி உலகத்துக்கு வேண்டுமானால், கணவன் மனைவியாக வாழ்வேனே தவிர இனி எந்த உறவும் இருக்காது. காரணம் என் மகளுக்கு தந்தை என்று சொல்ல ஒரு ஆள் வேண்டும் அல்லவா?
நான் போனமுறை அவரிடம் கேட்டதற்கு, ‘உன்னை வாழவும் விடமாட்டேன், சாகவும் விடமாட்டேன்’ என்று சொன்னார். அதாவது என்னை சந்தோஷமாக வைத்து குடும்பம் நடத்தமாட்டாராம். இந்த அர்தத்தில் இப்படிப் பேசினார். என்னை இந்த அளவிற்கு துன்பப் படுத்துவதற்கு நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எந்த துரோகமும் செய்யவில்லை. அவர் முழுமையாக தவறு செய்துவிட்டார் என்று தெரியும். அதே போல நானும் தவறு செய்திருப்பேனா என்ற சந்தேகம்தான்.
அதனால்தான் ஃபிரண்ட்ஸ் என்று பேசினாலே வீணாகக் கோபப்படுவார். ஒருமுறை சபாபதி சார் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரை ரொம்பவும் இன்சல்ட் பண்ணிவிட்டார். இந்த மாதிரி சுபாவம் திருமணம் ஆன புதிதில் இல்லை. என் மேல் அன்பாகவும் பாசமாகவும் இருந்த அவரை யார் தான் இப்படி மாற்றினார்களோ அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.
வார்த்தைகளாலே என் மனதை அதிகமாய் வேதனைப் படுத்தி உள்ளார்.
உண்மையிலேயே அவர் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தேன். ஆனால் என் பாசத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையில் இப்பொழுது அவர் இல்லை. என் வீட்டில் உள்ளவர்கள் எத்தனையோ தடவை அவரை விவாகரத்து செய் என்று சொன்ன நேரங்கள் உண்டு. நான் தான் காதலித்து திருமணம் செய்துகொண்டேனே, நாளை இப்படி ஒரு சூழ்நிலை வந்துவிட்டால் ஊர் உலகம் என்ன பேசுவார்கள் என்று யோசித்தேன். அதனால்தான் இன்னும் வேதனைகளை அனுபவித்து வருகிறேன்.
எத்தனையோ கிலோமீட்டருக்கு அப்பால் நான் உள்ளேன். சொந்தங்கள், அம்மா, அண்ணன்கள், அக்கா எல்லோரும் இருந்தும் ஒரு அனாதை போலவே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். உண்மையிலேயே என்னை ஆறுதல்படுத்த உங்களைப் போன்ற நண்பர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மொத்தத்தில் நண்பர்கள்தான் இப்போது சொந்தங்களைப் போல! மற்றபடி
கவிதா வீட்டிற்கு வந்த பொழுதே உங்களுக்கு என் கணவரைப் பற்றித் தெரிந்திருக்கக்கூடும்.
அவருடைய சுபாவத்தினால்தான் சென்னை வந்த சமயம் கூட அவருக்கு தெரிவிக்காமல் வந்தேன். தெரிவித்திருந்தால் உங்களையோ, சபாபதி சாரையோ யாரையுமே பார்த்திருக்க முடியாது.
அவருடைய சுபாவத்தினால்தான் சென்னை வந்த சமயம் கூட அவருக்கு தெரிவிக்காமல் வந்தேன். தெரிவித்திருந்தால் உங்களையோ, சபாபதி சாரையோ யாரையுமே பார்த்திருக்க முடியாது.
நான் இந்த தடவை வந்து நான்கு மாதம் முடியப்போகிறது. இதுவரை ஒரு லெட்டர் கூட எனக்கு என் வீட்டிலிருந்தோ, என் கணவரிடமிருந்தோ எனக்கு வரவில்லை. உண்மையிலேயே உங்கள் நட்பு கிடைத்ததற்கு மிகவும் சந்தோஷப்படுகிறேன்.
இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போதே (இன்று) கவிதாவின் லெட்டர் வந்தது. எனக்கென்று நீங்களும் கவிதாவும்தான் கடிதம் எழுதுகிறீர்கள். வேறு யாருடைய கடிதமும் எனக்கு வந்ததில்லை. மற்றபடி எழுதிக்கொண்டே போனால் நிறைய எழுதலாம்...
இனி, உங்களுடைய விஷயத்திற்கு வருகிறேன். உங்கள் மனைவி, பிள்ளைகள் எல்லோரும் நலம்தானே! நான் ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்லுங்கள். உங்களுக்கு ஏதேனும் இன்டர்வியூ வந்ததா? அந்த ஜெகன்நாதனைப் போய் மீண்டும் பார்த்தீர்களா? என்ன சொன்னார்.
மற்றபடி இதில் ஒரு பேப்பரில் கவிதாவிற்கும் எழுதியுள்ளேன். கவிதாவின் முகவரியையும் எழுதுகிறேன். சிரமம் பாராமல் அவளுக்குப் போஸ்ட் செய்யுங்கள். மறக்காமல் எனக்காக இந்த உதவியைச் செய்யவும். இனியுள்ள விஷயங்களை அடுத்த மடலில் எழுதுகிறேன்.
நேரம் கிடைக்கும் போது எனக்கு கடிதம் எழுதுங்கள். நானும் தொடர்ந்து எழுதுகிறேன். என் கையெழுத்து சரியாக இருக்காது. காரணம் இரவு தூக்கக் கலக்கத்தில் அவசர அவசரமாக எழுதியது. அதனால் மன்னிக்கவும்.
By
உங்கள் அன்புச்சகோதரி மற்றம் தோழி!
ஜென்ஸி.
சிங்கப்பூர்.
Please pray for me.
‘மலர்கள் மலர்வதற்காக இயற்கை செய்யும் உதவிகள் வெளியே தெரியாது. அதைப்போலத்தான் நண்பர்கள்’