God is love
என் அன்பின் இனிய நண்பருக்கு உங்கள் பிரியமுள்ள க்ளாரா அன்புடன் எழுதுவது. இங்கு நான் நலம். உங்கள் நலன் உங்கள் மனைவி குழந்தைகள் நலன் உங்கள் கடிதம் மூலம் அறிந்தேன்.
முதலில் என் கடித காலதாமதத்திற்கு மன்னிக்கவும். உங்களுக்கு இரண்டு மாதமாக கடிதம் எழுதாமல் இருந்ததற்கு உங்களை மறந்துவிட்டேன் என்பது காரணமல்ல. என் மரணத்தில் மட்டும்தான் உங்களை மறக்க முடியும். உங்கள் அன்பு எப்படி எனக்குப் புளித்துப் போகும்? நீங்கள் எனக்குக் கிடைத்தது நான் செய்த பெரும் பாக்கியம்.
நான் ஏன் கடிதம் போடவில்லை தெரியுமா? என் மனநிலை சரியில்லை. இங்கு நாங்கள் 30 கிராமங்களுக்குப் போக வேண்டும். ஆனால் தனியாக எங்கும் போகமுடியாது. இடம் அப்படி. நாங்கள் மூன்று பேர் இருக்கின்றோம். சைக்கிளில் போகலாம். ஆனால் என்னோடு இருக்கிறவர்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. பஸ் வசதி கிடையாது. எனவே நடந்துதான் போக வேண்டும்.
எல்லா கிராமமும் 10 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம்தான். தினமும் போய் திரும்பி வருவதற்கு இரவு 12 மணி ஆகிவிடும். திரும்பி வரும்போது 2 பேராகத்தான் வருகிறோம். இருந்தாலும் பயமாக இருக்கிறது. என்னோடு இருப்பவர்கள் என்னைவிடப் பெரியவர்கள். அவர்களே பயப்படுகிறார்கள். எனவே அதிகமாக வரமாட்டார்கள். எனக்கு எந்த ஒத்துழைப்பும் இல்லை. இன்னும் பல்வேறு பிரச்னைகள். வெறுப்பாக இருக்கிறது.
மக்கள் மிகவும் எளியவர்கள். அதனால்தான் இன்னும் இங்கு இருக்கின்றேன். தீபாவளி அன்று நான் ஒரு கிராமத்திற்குப் போனேன். யாரும் என்னோடு வராததால் தனியாகவே போனேன். காலையில் நடக்க ஆரம்பித்து மாலை 5.30 மணிக்குத்தான் அந்த கிராமத்திற்குப் போக முடிந்ததது. வெயில், பசி, தாகம் இவற்றால் நான் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா? பசியின் காரணத்தால் வழியில் உள்ள ஒரு புளிய மரத்தின் காய்களைப் பறித்து சாப்பிட்டேன்.
வழியில் கடைகளும் கிடையாது. பாலைவனம் போன்று இருக்கும். ஆனால் அவ்வளவு கஷ்டப்பட்டும் நான் இருக்கும் இடத்தில் எந்த ஆதரவும் எனக்குக் கிடையாது. எல்லாரையும் விட்டுவிட்டு இங்கு வந்துவிட்டேன். அதனால் கடைசி வரையிலும் இப்படியே இருக்க வேண்டும் என்றுதான் இதுவரை கஷ்டப் படுகிறேன். இப்படி ப்ரீ சர்வீஸ் செய்து கடைசியில் எந்த பலனும் இல்லை என்றுதான் கஷ்டமாக உள்ளது.
அதனால்தான் உங்களுக்கும் கடிதம் எழுதவில்லை. ஆனால் உங்களை நினைக்காத நேரம் இல்லை. இன்னும் ஒரு காரணம். நான் அடிக்கடி கிராமங்களுக்குப் போவதால் நிறைய பேருக்கு என்னைத் தெரியும். ஆனால் நான் யாரோடும் அவ்வளவாக வைத்துக்கொள்வதில்லை. இடம் அப்படி.
அதனால் என் வேலை முடிந்ததும் யாரையும் எதிர்பார்ப்பது இல்லை, வந்துவிடுவேன். அப்படி வரும்போது ஒரு ஆள் என்னிடம் வந்து எனக்கு மனைவி இறந்துவிட்டாள். ஒரு குழந்தை இருக்கிறது. அதைப்பற்றி உங்களிடம் பேசவேண்டும் என்றான். இன்று நேரம் இல்லை, நாளை பேசலாம் என்று வந்துவிட்டேன்.
நான் நினைத்தது அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆஸ்டல் வசதி கேட்பான் என்று நினைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அவனிடம் போய்க் கேட்டால் என்ன சொன்னான் தெரியுமா? உனக்கு எப்போது நேரம் கிடைக்கும்? ‘நான் உன்னோடு ஒரு நாள் தங்க வேண்டும்’ என்று சொன்னான்.
எனக்கு அந்த இடத்தில் அவனை என்ன செய்வது என்று தெரியவில்லை. மௌனமாக வந்துவிட்டேன். ஆனால் இப்படி கேட்டுவிட்டானே என்று என்று இன்னமும் என்னால் அதை தாங்க முடியவில்லை. அப்படியாக எந்த விதத்திலும் நிம்மதி இல்லாமல் இருந்ததால்தான் உங்களுக்கு உடனடியாக கடிதம் எழுதவில்லை.
ஆனால் இந்த சமயங்களில் நீங்கள் என் அருகில் இருக்கக் கூடாதா என்று ஏங்கிய நாட்கள் ஏராளம். நிறைய நாட்கள் அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் உங்கள் ‘இந்த கண்ணம்மா என் தோழி’ என்ற கவிதையைத்தான் படித்து என் மனதை கொஞ்சம் சரி செய்து கொள்வேன். எனக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற அந்த ஒரு நினைவுதான் நான் இதற்கும் அப்பால் தைரியமாக இருப்பதற்குக் காரணம்.
ஆனால் இங்கு எனக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எனவே என்னால் தொடர்ந்து இங்கு வேலை செய்ய முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஏதாவது குழந்தைகள் காப்பகம் அல்லது முதியோர் பராமரிப்பு இல்லம் இவற்றில் வேலை கிடைத்தால் நல்லது என்று தோன்றுகிறது. ஆனல் எங்கு போவது என்றுதான் தெரியவில்லை.
காதல் கோட்டை, காதல் தேசம் படங்களைப் பார்க்கச் சொன்னீர்கள். இங்கு டி.வி. எதுவும் கிடையாது. ஆனால் புத்தகங்கள் படிக்கிறேன். போட்டோ கேட்டிருந்தீர்கள். அது ஊரில் இருக்கிறது. இனி போகும்போது அதை வாங்கி அனுப்புகிறேன். மற்றபடி இப்போது நான் ஆர்க்காடு அல்லது சென்னை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இருந்தால் கண்டிப்பாகத் தெரியப்படுத்துகிறேன்.
SORRY! நான் உங்கள் பிறந்த நாள், தீபாவளி போன்றவற்றுக்கு வாழ்த்து அனுப்ப முடியவில்லை. ஆனால் திடீரென்று யாரைப் பார்த்தாலும் அது உங்களைப் போலவே தெரிகின்றது. எனக்கென்று நீங்கள் மட்டும் போதும். இனி வேறு வாழ்க்கையும் தேவையில்லை. நீங்கள் எந்த நேரத்திலும் இங்கு வரலாம்.
I AM NOT FORGETTING YOU! தந்தி அடிப்பதற்கு முடியவில்லை. ஆனால் என்றுமே உங்களை நான் மறக்கவே முடியாது. எனக்குக் கூட உங்களை நேரில் பார்த்து எவ்வளவோ பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது. அப்படி தோன்றும் போதெல்லாம் நீங்கள் என் அருகில் இருப்பதாய் கற்பனை செய்துகொள்வேன். படுத்து கண்ணை மூடினாலே நீங்கள்தான் தெரிகிறீர்கள்.
எப்போதும் எங்கு சென்றாலும் உங்கள் கவிதையும் நானும்தான். நீங்களே என்னோடு துணைக்கு வந்தது போல் இருக்கும். எனக்கு வேறு எதுவும் வேண்டாம். அடிக்கடி உங்களைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதும். நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? தீவாவளி எப்படி இருந்தது? ஊருக்குப் போனீர்களா? உங்கள் மனைவி, குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்?
ஒரு விதத்தில் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்கள்! உங்களோடு வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். எதற்கும் அதிர்ஷடம் வேண்டும். நான் காலதாமதமாக கடிதம் எழுதினேன் என்பதற்காக நீங்கள் உடன் கடிதம் எழுதாமல் இருந்துவிடாதீர்கள். என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. எனவே என்னை மன்னித்து உடன் கடிதம் எழுதுங்கள்.
துன்பம் வரும்போதெல்லாம் சிரிக்க முடிந்தால் அது வளர்ச்சியின் முதிர்ச்சி. நம் இரண்டு பேருக்குமே ஒரு வகையில் துன்பம்தான். பிரிவு என்பதே ஒரு பெரும் துன்பம். சிரிப்போம்! இரண்டு பேருமே சிரிப்போம்! எழுதவேண்டும், எழுதிக்கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. மற்றவை அடுத்த கடிதத்தில்.
என்றும் உங்கள்,
க்ளாரா.
23.11.1996
23.11.1996
அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பகிரங்கக் கடிதங்கள் எழுதுவதில் பாமரனை விஞ்ச ஆள் கிடையாது... அவரின் வலைத்தளத்துக்குப் போக சுட்டி.
2 கருத்துகள்:
நன்றி நண்பரே உங்கள் அழைப்புக்கு...வித்தியாசமான வலைப்பூவாக உள்ளது...தொடர்கிறேன்...உங்கள் பழைய படைப்புகளை குறிப்பாக கடிதங்களை விரைவில் படிக்கிறேன்...
அழைப்பை ஏற்று எனது தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி ரெவரி! தொடர்ந்து வாருங்கள்!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!