தமிழாசிரியர்களுக்கென்றே
ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. 'எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவான்' என்பது இவர்களுக்கு
முழுக்கப் பொருந்தும். தாய்மொழியில் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டபின்தான் மற்ற
பாடங்களையே படிக்க ஆரம்பிக்கிறோம். நாம் பிறந்தது முதல் உணர்ந்து, கேட்டு, பேசி வந்தாலும் ஒரு
மொழியை முற்றிலுமாக கற்பது என்பது வாசித்தலையும், பிழையற எழுதுவதையும் உள்ளடக்கியது.
இதற்கான முதல் வித்து ஊன்றப்படுவது தமிழாசிரியர்களால்தான்.
ஆரம்பப்
பள்ளிக்கூடத்தில் நான் பயின்ற நாட்கள் பெரும்பாலும் நினைவில்லை என்றுதான்
சொல்லவேண்டும். புளிய மரத்தடியில் எங்களை உட்காரவைத்து எங்களுக்கு வகுப்பெடுத்த 'மனோன்மணி' ஆசிரியையை நன்றாக
நினைவிருக்கிறது. மதிய உணவுத் திட்டத்தில், மூன்று சக்கர வண்டியில் கருப்பு
பிளாஸ்டிக் டப்பாக்களில் கோதுமையால் செய்த ஒரு வகை உணவை அடைத்து எங்கிருந்தோ
சுடச்சுட கொண்டு வருவார்கள். எல்லோருக்கும் கிடைக்கும்தான் என்றாலும் வரிசையில்
உட்காருவதற்கே சிறுவர்களுக்கேயான ஒரு தள்ளுமுள்ளு போட்டி இருக்கும். அப்போது
வரிசையில் உட்காரவில்லை என்பதற்காக 'பீதாம்பரம்' என்ற எனது தலைமை
ஆசிரியர் என்னை குனியவைத்து முதுகில் அடித்ததை இன்று வரை என்னால் மறக்க
முடியவில்லை. ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்
யார் என்று எவ்வளவு முயற்சி செய்தும் நினைவுக்கு வரவில்லை.
ஆரம்பப்
பள்ளியிலிருந்து 5-ம் வகுப்பு முடித்து 6 வது படிக்க, எங்கள் ஊரிலிருந்து 3
கி.மீ. தொலைவிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து எனக்கு
வகுப்பெடுத்த அத்தனை ஆசிரியர்களையும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அங்கும் கூட 'மனோன்மணி' என்ற பெயருடைய ஆசிரியையே
தமிழாசிரியராகவும் வகுப்பாசிரியராகவும் இருந்தார். ஏழாம் வகுப்பு போனபோது திருமதி.
மனோன்மணி ஆசிரியரின் கணவர் திரு.ஜி. நாராயணசாமி ஜயா அவர்கள் தமிழாசிரியராக
இருந்தார். படிப்பில் சுட்டியாக இருந்த காரணத்தால் மனோன்மணி ஆசிரியையிடம் நல்ல
பெயர் எடுத்தபடியால் சுலபமாக அவரது கணவரான நாராயணசாமி ஜயா அவர்களிடமும் நல்ல பெயர்
வாங்க முடிந்தது.
ஆனால் எட்டாம்
வகுப்பில் திரு. தங்கராசு ஜயா தமிழாசிரியராக வந்த பின்பு தமிழாசிரியர் என்றால்
மென்மையானவர்கள் மட்டுமில்லை இவரைப்போல கண்டிப்பானவர்களும் உண்டு என்பதை
அறிந்துகொண்டேன். நல்ல மாணவர்களிடத்தில் அன்பும், சரியில்லாத மாணவர்களிடத்தில் கண்டிப்பும்
என்பதே அவரது பாணி. பெரும்பாலும் அவரிடம் அடி வாங்காதவர்களே கிடையாது. அதிலும்
காதில் கிள்ள ஆரம்பித்தால் அது ஜென்மத்துக்கும் மறக்காது. அத்தனை கண்டிப்பானவர்.
ஒன்பதாம்
வகுப்புக்குப் போனபோது திரு. அமரன் ஐயா அவர்கள் தமிழாசிரியர். அவரது கையெழுத்து
அச்சில் வார்த்தது போல இருக்கும். பள்ளியில் இலக்கியப் போட்டிகள் எது நடந்தாலும்
அது கட்டுரைப் போட்டியோ, கையெழுத்துப்
போட்டியோ அல்லது ஓவியப் போட்டியோ எது நடந்தாலும் என்னைக் கேட்காமலேயே என் பெயரைச்
சோர்த்துவிடுவார். இதிலிருந்து பின்வாங்கவே முடியாது. எப்படியோ மன்றாடி பேச்சுப் போட்டியிலிருந்து
தப்பித்துவிடுவேன். அப்போது அவர் தந்த ஊக்கம்தான் இப்போது இந்த அளவுக்காவது
என்னால் எழுதமுடிகிறது. கட்டுரைப்போட்டி எந்த தலைப்பில் எப்போது கொடுத்தாலும்
அதில் நான் கலந்து கொண்டால் முதல் பரிசு எனக்குத்தான். இந்த தன்னம்பிக்கை
பிற்காலத்தில் ஒரு பிரபல வார இதழ் ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்தபோது
நண்பர்களிடம் சவால் விட்டு அந்தக்கட்டுரைப்பொட்டியில் ஜெயித்தும் காட்டினேன். என்
அழகான கையெழுத்துக்கும் காரணம் அவரே!
பின்னாளில்
பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், துணுக்குகள், விமர்சனங்கள் என என்
பன்முகத்தன்மை வெளிப்பட அவரே காரணமானவர். அடுத்து பத்தாம் வகுப்பிலும், மேல்நிலைக்கல்வி
பயிலும் போதும் எனக்கு தமிழாசிரியர் திரு. சைலவாசன் ஐயா அவர்கள். எந்தப்
பேச்சுப்போட்டியிலும் பங்கெடுக்காத நான் இவரின் வகுப்பெடுக்கும் அழகால், பேச்சாற்றலால்
மிகவும் கவரப்பட்டேன். இவர் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளரும் கூட. ஏன் பட்டிமன்றம்
என்றால் என்ன என்பதையே இவரால்தான் நான் அறிந்துகொண்டேன். இவர் கலந்து கொள்ளும்
பட்டிமன்றம் என்றால் அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும் நண்பர்களுடன் சைக்கிளில்
கிளம்பிவிடுவேன்.
நாளடைவில் எங்களூரில்
நடைபெற்ற ஒரு விழாவில் இவரின் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்ய அவர் வீடு தேடிச்சென்று
ஒப்புதல் வாங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்தபின் அவரால் அதில் கலந்துகொள்ளாமல் போனது
எங்கள் துரதிஷடமே!
பின்னர் இவர் எங்களூரிலிருந்து
மாற்றலாகி வேலூருக்கு அருகில் உள்ள ‘பள்ளிகொண்டா’விற்கு தலைமையாசிரியராக பதவி உயர்வு
பெற்று சென்றதாக அறிந்தேன். எட்டாம் வகுப்பிலேயே மாற்றலாகிப்போன தங்கராசு ஐயா
எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அமரன் ஐயாவும் வேலூரில் தான் இருக்கிறார்
என்று நம்புகிறேன். இதில் திரு. நாராயணசாமி ஐயா கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு
மறைந்துவிட்டார். அவரது துணைவியார் திருமதி. மனோன்மணி ஆசரியை அவர்களை எப்போதாவது
சென்று பார்ப்பது உண்டு. என் இந்த ஓரளவு தமிழறிவுக்கு காரணமான இந்த
தமிழாசிரியர்கள் எப்போதுமே என்னால் மறக்க முடிந்ததில்லை.
இது தவிர நூலகங்கள்
எனது தமிழை மேம்படுத்த மிகவும் உறுதுணையாய் இருந்திருக்கின்றன. வேலூர் தலைமை
நூலகத்தில் உறுப்பினராகி காலை முதல் மாலை வரை சாப்பிடக்கூடச் செல்லாமல் அங்கேயே
கிடந்த நாட்கள் அதிகம். வீட்டிற்கு எடுத்துச்செல்லும் புத்தகங்களை உரிய நேரத்தில்
திருப்பிச் செலுத்தாமல் அபராதம் கட்டியதும் அதிகம். இப்படி நூலக வாசிப்புக்கு
அடிகோலியது நான் படித்த பூட்டுத்தாக்கு அரசு மேல்நிலைப்பள்ளியே மிக முக்கிய
காரணமாகும். பின்னாளில் நான் பயணம் போகும் இடமெல்லாம் நூலகம் எங்கே என்று
தேடியலைந்து உறுப்பினரானது வேறு விஷயம்.
இப்படி புத்தக
வாசிப்பிற்கு அடிமையாகிப் போனதற்கு எனது இளம் பிராயத்து கதைப்புத்தக வாசிப்பின்
ஆர்வம் கூட காரணமாக இருந்திருக்கலாம். எனது பெரியப்பா வீடுகளில் அவர்கள்
வாசிக்கும் எந்தப் புத்தகத்தையும் எப்படியாவது கெஞ்சிக்கேட்டு வாங்கிவந்து
படிப்பது எனது வாடிக்கையான வழக்கம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே கலைஞரின்
‘புதையல்’ என்கிற மிகப்பெரிய
நாவலை வாசித்திருக்கிறேன். அப்புறம் குமுதம், கல்கி, ராணி போன்ற இதழ்களும் சிறுவயதிலேயே
வாசிக்கத்தொடங்கியிருந்தேன். தமிழ்வாணனின் பல புத்தகங்களும், டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,
மெர்வின் போன்றவர்களின் புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தது அப்போதுதான்.
அந்த பழக்கங்கள்தான்
என் இன்றைய இணைய வாசிப்பிற்கும் ஊன்றுகோலாயிருந்து பதிவு உலகம் வரை என்னை அழைத்து
வந்திருக்கிறது. இவைகள் எல்லாம் என் நினைவில் இருந்தாலும் எழுத்திலே நினைவு கூற
வைத்த 'தமிழ்ச்செடி'க்கும்,
'தமிழ்ச்செடி'யை எனக்கு அறிமுகப் படுத்திய ‘தேவியர் இல்லம் திருப்பூர்’ ஜோதிஜி அவர்களுக்கும் எனது மனமார்ந்த
நன்றி! நன்றி! நன்றி!
தொடர்புடைய இடுகை; அன்புள்ள ஐயா!
2 கருத்துகள்:
எனக்கும்கூட பள்ளியில் எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தாலும் தமிழாசிரியரின் மகிழ்ச்சியான மனநிறைவான வகுப்பு எல்லோருக்குமே பிடிக்கும்.
தங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!