செவ்வாய், 10 டிசம்பர், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது... கருணாநிதி



அப்போது நான் எஸ்.டி. சுந்தரத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். கோவையிலிருந்து என் உறவினர்கள் சென்னை வந்தவர்கள், படப்பிடிப்பு ஏதாவது பார்க்கவேண்டும் என்றனர். எஸ்.டி.எஸ். தயாரித்த படம் வாஹினியில் எடுக்கப்பட்டதால் அந்த அனுபவத்தை வைத்து என் உறவினர்களை வாஹினி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றேன்.
 
அப்போது மக்கள் திலகம்தாய் மகளுக்குக் கட்டிய தாலிபட்ப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. மக்கள் திலகத்தின் காதல் காதல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. படப்பிடிப்பைப் பார்க்க என் உறவினர்களை அழைத்துச் சென்றேன். ‘எம்.ஜி.ஆர். காதல் காட்சியில் நடிக்கிறார். அதனால் படப்பிடப்பைப் பார்க்க வெளியார் யாரும் அனுமதிக்கக் கூடாது என்று நொல்லியிருக்கிறார். எனவே உள்ளை அனுமதிக்க முடியாதுஎன்று தயாரிப்பு நிர்வாகி கூறிவிட்டார்.

துரதிஷ்டவசமாக அன்று வாஹினியில் வேற் எந்த படபிடிப்பும் இல்லை. புரட்சித்தலைவரின் படபிடிப்பு ஒன்றுதான் நடந்தது. அதிலும் அனுமதி இல்லை என்றவுடன் எனக்கு ஒருபக்கம் வேதனை, மறுபக்கம் அவமானம். என்ன செய்வது என்று புரியாமல் தவித்த சமயம் எம்.ஜி.ஆர். வெளியே வந்தார். அவரைப் பார்த்ததும் ஓடிப்போய் வணக்கம் தெரிவித்தேன்.

அவரும் வணக்கம் தெரிவித்துவிட்டு என்னைத் தெரிந்தவர் போலஎன்ன சௌக்கியமா? என்றார். ‘நல்லாயிருக்கேன்என்றேன் நான். பின் என்னை அவரிடம் அறிமுகம் செய்துகொண்டேன். ஊரிலிருந்து தங்கள் படபிடிப்பைப் பார்க்க வந்திருக்கிறார்கள்என்று தெரிவித்தேன்.
‘’பார்க்கலாமே! உள்ளே கூட்டிப்போங்கள்’’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். அவ்வளவுதான், என் உறவினர்களை உள்ளே கூட்டிச் சென்று படபிடிப்பைக் காட்டினேன். தயாரிப்பாளர் எனக்கும், என் உறவினர்களுக்கும் ஏகப்பட்ட மரியாதை காட்டினார். நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருங்கியவன் என்ற நினைப்பு அவருக்கு.

அன்றுதான் நான் முதன் முதலில் புரட்சித்தலைவரை முதன் முதலாக சந்தித்துப் பேசியது. அதன் பின்னர் விஜயா கார்டனில் ஒரு விழா. ஒரே நட்சத்திரக்க்கூட்டம். நானும் போயிருந்தேன். அந்த விழாவிற்கு புரட்சித்தலைவரும் வந்தார். வழியில் நின்ற என் முதுகில் யாரோ தட்டுவது தெரிந்தது. திரும்பிப்பார்த்தேன். புரட்சித்தலைவர்தான் என் முதுகைத் தட்டியவாறே உள்ளே சென்றவர் என்னைப் பார்த்து, ‘’ என்ன சௌக்கியமா?’’ என்றார். அவரது நினைவாற்றலை யினைத்து என்னுள் நானே வியந்து கொண்டேன்.

அவர் அப்போது குடியிருந்த லாயிட்ஸ் சாலையில்தான் எஸ்.டி.எஸ். புரோடக்ஷன்ஸ் அலுவலகமும் இருந்தது. காலை நேரத்தில் நான் வெளியே நிற்பதுண்டு. அப்போது அவ்வழியே காரில் போகும்போதெல்லாம் கையை ஆட்டி என்னைப் பார்த்து சிரித்தவாறே செல்வார். அது சமயம் என் மெய் சிலிர்க்கும். நானோ மிகவும் சாதாரணமானவன், அவரோ மிகவும் பிகழ் பெற்றவர். மிக எளியவர்களிடம்கூட அவர் காட்டும் பரிவை எண்ணி நான் இன்று கூட வியப்பதுண்டு.

நாடோடி மன்னன் படம் வெளியிடுவதற்கு முன்பு; பெரிய தலைவர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கு அதை போட்டுக்காட்டினார் மக்கள் திலகம். என் குரு எஸ்.டி.எஸ். என்னையும் அந்தப் படத்தைப் பார்க்க கூட்டிச் சென்றார். படம் தொடங்குவதற்கு முன்னர் எஸ்.டி.எஸ்.ஸிடம் எம்.ஜி.ஆர். பேசிக்கொண்டிருந்தார். நான் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன். பின்னர் தலைவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார் எஸ்.டி.எஸ்.

‘’அவரை எனக்குத் தெரியுமே!’’ என்றார் எம்.ஜி.ஆர். அப்போது அவரது உயர்ந்த பண்பை நினைத்து என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது.

சோ. கருணாநிதி.


செவ்வாய், 26 நவம்பர், 2013

சமையலில் மனைவிக்கு உதவும் ஆண்களுக்காக….


 
இப்பொழுது முழுக்க முழுக்க சமையல் செய்வதில் பெண்கள் மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்ற காலம் மாறிவிட்டது. ஆணும் பெண்ணுமாய் வேலைக்குச் சென்றால் வீடு திரும்பியதும் ஒருவருக்கொருவர் சமையலில் உதவி செய்தாலும் விரைவாகவும் எந்தவித மனத்தாங்கலும் சோர்வும் இல்லாமல் சமையலை முடித்து உறங்கச் செல்லலாம். நிறைய பேர் உதவியும் வருகிறார்கள். இது உதவி மட்டுமில்லை. பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளலே. என்னப்போல சிலருக்கு தனியாக சமையல் செய்து சாப்பிடும் ஆண்களுக்கும் இந்த தகவல்கள் உபயோகமாக இருக்கும் அல்லவா? 

சாதம் வடித்த அரிசி கலந்த நீரில் கொஞ்சம் மோர் கலந்து அதில் கருவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை கையால் கசக்கிவிட்டால் வாசனையான தீடீர் மோர் தயார்.

இரண்டு டம்ளர் பயத்தம் பருப்புக்கு ஒரு டம்ளர் பச்சரிசி என்ற விகிதத்தில் கலந்து உப்பு, பச்சை மிளகாய் பெருங்காயம் கலந்து அரைத்து தோசை வார்க்கலாம்.

வெண்டைக்காய் பொரியலை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் வேர்க்கடலையை சிறிது வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துப் போட்டு வதக்கினால் சுவையாக இருக்கும்.

அல்வா மிக்சுடன் ஜவ்வரிசியை கொஞ்சம் ஊறவைத்து அரைத்துக் கலந்தால் அல்வா நிறையவும், கண்ணாடி போல் மின்னவும் செய்யும்.
வடாம் போடும் பிளாஸ்டிக் ஷீட் பறக்காதிருக்க வைக்கிற கற்களை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி வைத்தால் கல், மண் வடாமில் விழாது.

ஃபில்டரில் காபிப் பொடி போடுவதற்கு முன் அதிலுள்ள துளைகளின் மேல் பரவலாக சர்க்கரையைபோட்டால் துளை அடைத்துக்கொள்ளாது டிகாஷன் ஒரே சீராக இருக்கும்.

மைசூர்பாகு செய்து இறக்கும் பொழுது ஒரு சிட்டிகை சோடா உப்பைப் போட்டால் கலவை பொங்கி ‘’மொறுமொறு’’வென்றிருக்கும்.
வெண்டைக்காய், கத்திரிக்காய் பொரியல் மிச்சமாகிவிட்டால் தயிர் சேர்த்து பச்சடி செய்துவிடலாம்.

வேக வைத்த காரட் அல்லது பரங்கிக்காயையும் பாதி வறுத்த துவரம் பருப்பையும், நான்கு பச்சை மிளகாய் நறுக்கி வைத்த வெங்காயம் உப்பு ஆகியவற்றையும் சேர்த்தால் அரைக்கிற சட்டினி படு சூப்பராக இருக்கும்.

முட்டைகோஸ் பொரியல் மீதியாகிவிட்டால் வடை மாவு, அடை மாவுடன் கலந்துவிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

சமைத்த பொரியல் மீதமாகிவிட்டால் அவற்றுடன் காரம் சேர்த்து வதக்கி, மைதா மாவைப் பிசைந்து, வட்டமாக இட்டு நடுவே பொரியல் கலவையை வைத்து பொரித்து சாப்பிடலாம்.

மீதமான தேங்காய் சட்டினியை கெட்டியான புளிப்பு மோரில் கலந்து கொதிக்க வைத்தால் மோர்க்குழம்பு தயார்.

சப்ஜி, கூட்டு போன்றவைகளை சப்பாத்தி இல்லாத பட்சத்தில் ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே வைத்து சாண்ட்விச் போல சாப்பிடலாம்.

வாழைக்காய் கத்திரிக்காயை அரிந்ததும் உடனே தண்ணீரில் போட்டுவிட்டால் கருத்துப் போகாது.

வாழைக்காய் வாங்கியவுடன் பச்சைத் தண்ணீரில் போட்டுவைத்தால் பழுக்காது.

நறுக்கிய ஆப்பிள், பேரிக்காய் ஆகியவற்றை உப்புத் தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காது.

வெங்காயத்தை பாதியாக வெட்டி சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைத்து பின் நறுக்கினால் கண்ணில் நீர் வராது.

முட்டைக்கோஸை காரட் சீவும் கட்டரில் சீவி வதக்கினால் சீக்கிரம் வதங்கிவிடும்.

கத்தியால் தக்காளியின் மேல்புறத்தில் ஒரு பிளஸ் குறி போடவும். சிறிது நேரம் பச்சைத் தண்ணீரில் ஊறவைத்து பிளஸ் குறியிலிருந்து தோலை சுலபமாக உரிக்கலாம்.

அதே போல தக்காளிப் பழத்தை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் பச்சைத் தண்ணீரில் சிறிது நேரம் போட்டு எடுத்தாலும் தோலை சுலபமாக உரிக்கலாம்.

கையில் நல்லெண்ணையைத் தடவிக்கொண்டு சேனைக்கிழங்கை நறுக்கினால் கையில் அரிப்பு உண்டாகாது.

நறுக்கிய பாகற்காயை அரிசி கழுவிய தண்ணீரில் ஊறவைத்தால் அதன் கசப்பு போய்விடும்.

நிறம் மாறாத காய்கறிகளை முதல் நாளே மறுநாள் சமையலுக்கு அரிந்து வைத்துக்கொள்ளலாம்.

கீரை வகைகளை அரிவதற்கு முன்பே கழுவி விடவேண்டும். நறுக்கிய பிறகு கழுவினால் அதிலுள்ள சத்துக்கள் போய்விடும்.

பாலிதீன் கவரில் பச்சைத் தக்காளியுடன் ஒரு பழுத்த தக்காளியையும் போட்டு வைத்தால் எல்லாம் பழுத்து விடும்.