ஞாயிறு, 29 ஜனவரி, 2012

போலித்தனமே வாழ்க்கையாகிவிட்டதா?


உன்னைப் பற்றிப் பெருமைப்படு!

அன்புள்ள தம்பு!



அமைச்சரவையில் இருந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். நல்ல வெள்ளை ஆடை; வெள்ளைப் பல். கை குலுக்கினார். பிறகு விரல்கள், எனது கைவிரல் மோதிரங்கள் பத்திரமாக இருக்கிறதா என்று சோதித்துக் கொண்டேன்.

காரணம் அவர் மீது 43 குற்றங்கள் இருக்கின்றன. ஒரு கொலை செய்த குற்றம் உள்பட.

இப்படிப்பட்ட மனிதர்கள் உலா வருகிறார்கள் பொது வாழ்வில். நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடிவதில்லை.

வேலை வாங்கித்தர நேரடியாக பணம் லஞ்சமாகக் கேட்டவர்; பல்கலைக்கழகம் என்ற பெயரில் படிப்பு சொல்லித்தர பல லட்சங்கள் வாங்குபவர்; காட்டில் மரங்களை வெட்டி பணம் சம்பாதிப்பவர் – இவர்களெல்லாம் காரில் வருகிறார்கள் கல்யாண வீட்டிற்கு! அவர்களுக்கு மரியாதை; முதல் வரிசையில் முதலிடம் உட்கார, காலில் விழுகிறார்கள் மணமக்கள்!

இவர் சாராயம் விற்று குடியைக் கெடுத்தவர்; அதுவும் கள்ளச்சாராயம். இவரைக்கேட்டு அரசில் பெரிய பதவிகள் அளிக்கப்படுகின்றன.
எப்படி இப்படிப்பட்ட ஊழல் மனிதர்களெல்லாம் பெரிய மனிதர்களாக மேடை ஏறுகிறார்கள்? உலகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது?

நாம் எல்லோரும் ஒரு பொய் விளையாட்டு விளையாடுகிறோம். அவன் திருடன் என்று தெரிகிறது. இருந்தாலும் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு கை குலுக்குகிறோம்.

பெரிய மனிதர்களை வளைத்துப்போட்டு விபச்சார வாழ்க்கை நடத்தும் ‘ஊரைக்கெடுத்த உத்தமி’ என்று தெரிகிறது இருந்தாலும் கழுத்திலுள்ள நகைகளையும் பட்டுப்புடவையையும் பார்த்து புன்னகையுடன் கைகூப்பி வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறோம்.

இப்படி போலித்தனமே வாழ்க்கையாகிவிட்டது. ஊர்மக்கள் போலி நாடகம் ஆடுகிறார்கள். விவஸ்தை கெட்டவர்கள்.

உனக்கும் இப்படி குறுக்கு வழியில் சம்பாத்தித்தால் என்ன என்று தோன்றுகிறது! ஆசை அடிக்கடி எழுகிறது. மறந்தும் போலி வாழ்க்கை நடத்தாதே! நீ அசல். ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா.

அவர்களுக்கெல்லாம் அவர்கள் சந்ததிகளுக்கெல்லாம் காலம் என்ன வைத்திருக்கிறது என்று அவர்கள் அறியமாட்டார்கள்.

ஏனெனில், இவ்வுலகில் சத்தியம், நேர்மை, சமத்துவம், சுதந்திரம் என்று சில விஷயங்கள் மாறா உண்மைகள்! அவற்றுடன் விளையாடுபவர்கள் அதற்கு ஒரு விலை கொடுத்துத்தான் ஆகவேண்டும். ஏனெனில் இப் பிரபஞ்சம் ஒரு நெறிமுறையில்தான் இயங்குகிறது. அந்த நெறிமுறைதான் சத்தியம், நேர்மை, அகிம்சை.

நீ ஒரு அசல்!
அசலாக வாழ்ந்துவிடு;
உன்னைப் பற்றிப் பெருமைப்படு.
நேர் வழியில் நில். நேர் வழியில் செல்.
சபலம் உன்னைத் தொடாமல் பார்த்துக்கொள்.

டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி.


திங்கள், 23 ஜனவரி, 2012

காதலெனும் அரும்பை...


அன்பே!
காதலெனும் அரும்பை
மலர்வதற்குள் பறித்தேனா?
உன் மனதை உடைத்துவிட்டேனா?
மனந்திறந்து மன்னிப்பு கேட்கிறேன்


மலர் கொடுத்தேன்
சூடிக்கொண்டாய் – என்
மனதைக் கொடுத்தேன்
தீயிலிட்டாய்!

பூ பூக்கலாம் உதிரலாம்
உதிர்ந்த்தடி என் நெஞ்சம்
கண்ணீரைச் சிந்தி
கரைத்துவிட்டாய் என் மனதை


ஆறுதல் சொல்வேன் அரவணைப்பேன்
ஆனால்
என்னவென்று சொல்வேன்
எது தடுக்கிறதென் நெஞ்சை?


மண்ணின் தாகத்தைத்
தீர்த்திடலாம் மேகம்!
பெண்ணே! உன் தாகத்தைத்
தீர்த்திடுமோ என் மோகம்?


நம் உறவு ஆரம்பித்தது எங்கே?
முடியப்போவது எங்கே?
பார்க்க முடியாத தூரத்தில்
நாம் இருந்தாலும்
பாவையுன் மீது நாளும் ஞாபகம்


நல்ல பதில் வருமென்று
நாளும் நான் காத்திருப்பேன்!?


இந்தக் கவிதை என் நண்பன் தாண்டவமூர்த்தி 12.12.1989 அன்று எனக்கெழுதிய கடிதத்தில் எழுதியது.


அடிக்-கடி கடிதம் எழுது. நீ பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரை, விமர்சனங்களை எனக்கு காட்டவே இல்லை. எனக்கும் ஞாபகம் இல்லை. இன்னும் பல எழுதிவை. அடுத்தமுறை படித்துக் கொள்கிறேன். (எப்போது?)


இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும்போது உனது முதல் கடிதம் எனக்கு வரும். அதன்பின்பு மறுபடியும் ஏதாவது கிறுக்கி எழுதுவேன். அதுவரை விடைபெறுவது,
உன் நண்பன்,
தாண்டவமூர்த்தி.


மறக்க முடியாத நினைவுகளுடன்,

புதன், 18 ஜனவரி, 2012

'ஆடாமல் ஆடுகிறேன்' ... ஜெயலலிதா


"ஆயிரத்தில் ஒருவன்" - மறக்க முடியாத சினிமா


4) 'ஆடாமல் ஆடுகிறேன்'

கடற்கொள்ளையின்போது கிடைத்த பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள் கூட பொருட்களாக கருதப்பட்டு ஏலத்தில் விடப்பட வேண்டும் என்ற தீவின் சட்டப்படி, ஜெயலலிதா ஏலம் விடப்படும்போது அவர் மனம் நொந்து ஆண்டவனை அழைக்கும் பாடல். சுசீலா மேடத்துக்கு இப்படத்தில் அற்புதமான மூன்று தனிப்பாடல்கள், அதில் இதுவும் ஒன்று. இசை அருமையோ அருமை. முதலில் சாட்டயடி சத்தம், அதைத்தொடர்ந்து ஒவ்வொரு சாட்டையடிக்கும் அதைப் பிரதிபலிக்கும் வண்ணம் வயலினின் ஓசை.

"
ஆடாமல் ஆடுகிறேன்... பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா...வா...வா....
நான் ஆண்டவனைத் தேடுகிறேன்
வா...வா...வா.... வா....வா...வா......"


முதல் இரண்டு வரிகளுக்கு பாங்கோஸ் இசைக்க, 'ஆண்டவனைத் தேடுகிறேன்' என்ற வரி ஆரம்பிக்கும்போது அருமையாக த்பேலா ஆரம்பிக்கும். இடையிசையில் முதலில் வயலின், பின்னர் கிடார், அடுத்து ஃப்ளூட், பின் மீண்டும் வயலின் அடுத்து தபேலா சோலோ என்று மாறி மாறி ஒலித்து பாடலை எங்கோ கொண்டு செல்லும்.

"
விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்"

'
கன்னித்தீவின் இளவரசியாக கவலையில்லாமல் வாழ்ந்தேனே, இன்று இவர்கள் கையில் மாட்டி ஏலம் போகவா செங்கப்பரை வற்புறுத்தி கடல் பயணம் வந்தேன்' என்ற ஏக்கம் பொங்க ஜெயலலிதா காட்டும் முகபாவம் நம் கண்களில் நீரை வரவழைக்கும். வயலினும் தபேலாவும் உச்ச ஸ்தாயியில் போய் பாடல் முடியும்போது மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருக்கும்.

(
மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அருமையான ‘SEND OFF ‘கொடுத்திருக்கிறார்கள் இப்படத்தில்).

5) '
நாணமோ... இன்னும் நாணமோ..'

நீ இளவரசி, நான் அடிமை யென்று பேதம் பார்த்து ஒதுங்கிருந்த மணிமாறனை ஒருவழியாக (விஷம் அருந்தியதாக பொய் சொல்லி) தன் காதலுக்கு சம்மதிக்க வைத்தாயிற்று. பின்னர் என்ன..?. காதலர்களுக்கு ஒரு பாடலாவது வேண்டாமா?. அதுதான் இந்தப்பாடல். சிங்கம் ஒரு குட்டி போட்டாலும் அது சிங்கக் குட்டியாக இருக்கும் என்பது போல, படத்தில் இடம் பெற்றது ஒரேயொரு டூயட் பாடல் என்றாலும், மனதை அள்ளிக்கொண்டு போகும் பாடல். பாடலின் ‘PRELUDE’அருமையாக துவங்கும். (PRELUDE, INTERLUDE என்பவை என்ன என்று தெரிந்துகொள்ள இன்றைய இளைஞர்கள் இதுபோன்ற படங்களின் பாடல்களைக் கேட்பது நல்லது).

"
தோட்டத்துப் பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது.. அது எது?

ஆடவர் கண்கள் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது.. அது இது"

பாடலின் முதல் பாதியில் ஜெயலலிதாவுக்கு பூக்களால் ஆடை செய்திருப்பார்கள். மறுபாதியில் எம்ஜியார், ஜெயலலிதா இருவருக்கும் ஆடை அழகாக கண்னைக்கவரும் வண்ணம் இருக்கும்.

6) '
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்'

அடிக்கடி தொலைக்காட்சியில் கேட்டு, பார்த்து ரசித்த பாடல். எல்லோருமே இப்பாடலை பாராட்டிப் பேசுவார்கள். ஆகவே நானும் இழுத்துக் கொண்டு போவது அவசியமற்றது. கப்பலில் எம்ஜியார், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார் என அனைவரும் இடம்பெறும் பாடல் காட்சி. பாடலின் பல்லவியை முதலிலேயே கிடாரில் ‘PRELUDE’ ஆக வாசித்துக் காட்டுவார்கள். இதன் இடையிசையில் வரும் ல..லா..லா.. ல..லா.. லா என்ற கோரஸ் ரொம்ப பிரசித்தம்.

"
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை"


இன்றைக்கு இந்தப்பாடல்களை தொலைக்காட்சியில் வசதியாக கண்டு ரசிக்கிறோம். ஆனால், இது போன்ற வசதியற்ற அந்நாட்களில் இப்படத்தின் பாடல்களை தமிழர்களின் காதுகளுக்கு கொண்டு சென்று சேர்த்த பெருமை இலங்கை வானொலியைச் சேரும் என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.

நாகேஷின் நகைச்சுவை

இப்படத்தில் நாகேஷின் நகைச்சுவை நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைக்கும். உதாரணத்துக்கு ஒன்று. பூங்கொடியின் தோழி தேன்மொழியை (மாதவி) நாகேஷ் ஏலத்தில் எடுத்து வருவார். அப்போது எம்ஜியார் "என்னப்பா, தேன்மொழியை நீ ஏலத்தில் எடுத்தியா?"

நாகேஷ்: "அட நீங்க வேறே. இவள் வாயைப் பார்த்ததும்தான் திடலே காலியா போச்சே. பழகின தோஷத்துக்காக சும்மா பாத்துக்கிட்டு நின்னேன். என்னைப்பார்த்து 'ஈ'ன்னு சிரிச்சா. 'கொன்னுடுவேன்' அப்படீன்னு ஒரு விரலைக் காட்டினேன். அந்த ஏலக்காரன், நான் ஒரு பவுனுக்கு இவளைக் கேட்கிறேனாக்கும்னு நினைச்சு இவளை என் தலையில் கட்டிட்டான்".

'
ஆயிரத்தில் ஒருவன்' திரையிடப்பட்டபோது சென்னை புரசைவாக்கம் மேகலா தியேட்டரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடன் பந்துலுவும் அமர்ந்து படத்தைப் பார்த்தார். படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலேயே தெரிந்து விட்டது, படம் மாபெரும் வெற்றி யென்பது. தமிழ்நாட்டின் பல ஊர்களில மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிந்தது.

எப்போது பார்த்தாலும் புத்தம் புதியதாகவும் பிரமிப்பூட்டும் படமாகவும் அமைந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தைப்பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது பற்றி மிகவும் சந்தோஷம்.

'
ஆயிரத்தில் ஒருவன்' பற்றிய எனது கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு நன்றி.

இந்த விமர்சனம் மையம் (THE HUB) என்ற இணையப் பக்கத்திலிருந்தும், எண்ணங்கள் எழுத்துக்கள் சாரதா அவர்களின் திரியிலிருந்தும் எடுக்கப்பட்டது.


ஆயிரத்தில் ஒருவன் - நிச்சயம் தமிழ்ப் பட வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படமாகும். பழைய Pirates of the Carribean Sea படத்தின் காட்சியமைப்புகள் நினைவு படுத்தினாலும் தொழில்நுட்ப ரீதியிலும் சிறப்புற்று விளங்கியது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பும் முக்கியமான காரணம். எம்.ஜி.ஆர். அவர்களின் தோற்றமும், நீங்கள் குறிப்பிட்ட காட்சியமைப்புகளும் நடன அமைப்பும் ஒளிப்பதிவும் என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.