துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துபாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 அக்டோபர், 2020

வெளிநாட்டு வாழ்க்கை

 
வெளிநாட்டு வாழ்க்கையில் இரண்டு விதமான அனுபவங்களைப் பெற்றவன் நான்.
முதல் அனுபவம்; மிகக்குறைந்த ஊதியத்தில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்த மிகக் கொடுமையான காலகட்டம் அது.
லட்சக்கணக்கானவர்கள் இந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய கடன் சுமையிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றத்தான் வருகிறார்கள் என்றாலும் ஏஜன்ட்டுகள் புரோக்கர்கள் என்பவர்களுக்கு அழும் பணத்திற்காகவும் மேலும் கடன்பட்டு மீளாத துயரத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.
இது 2002 முதல் 2006 வரை நான் கண்கூடாகக் கண்டது. அவனுக்கென்ன வெளிநாட்ல வேலை. மார்பிள்லயே இழைச்சு வீடுகட்டுவான் என்ற உறவினர்கள் பேச்சும், நம்மைப் பற்றிய அதீத கற்பனையும் சொல்லி மாளாது. உண்மையில் அங்கு நம்மூரிலேயே சம்பாதிக்கக் கூடிய ஊதியம்தான் கிடைத்தது. ஆனால் அதற்கும் நம்மூரில் வழியில்லாமல் இருந்தது.
குறைந்த ஊதியம், 12 மணி நேர உழைப்பு. உழைப்பின் களைப்பு தீர குளித்தபின் உறக்கம். மீண்டும் காலை 7 மணிக்கெல்லாம் வேலை. இப்படித்தான் எந்திரத்தனமான பிழைப்பு. வெள்ளிக்கிழமையானால் ஒரே ஒருநாள் விடுப்பு. அன்றைக்கு ஒரு வாரக் களைப்புக்காகவும் அடுத்த வாரம் மீண்டும் புத்துணர்ச்சியாக வேலை செய்யவும் அளவுக்கதிகமாக சரக்கடித்துவிட்டு மட்டையாவது. இதுதான் 90 சதவிகித தொழிலாளர்களின் வாழ்க்கை முறை.
குடிக்காதவர்களும் உண்டுதான் ஆனால் அது மிக மிகக் குறைவு. இது ஒன்றுதான் இவர்கள் தனக்காக தேர்ந்தெடுக்கும் ஒரே வடிகால். அந்தக் காலகட்டத்தில் அப்போதுதான் கைப்பேசி அறிமுகமாகியிருந்த காரணத்தால் வாரம் ஒருமுறைதான் குடும்பத்தினரோடு பேசுவார்கள். இன்டர்நெட் மையங்களுக்குச் சென்றும் உரையாடுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் ஓவர்டைம் என்று வேலை செய்யச் சொன்னால் அந்த வாய்ப்பையும் விடமாட்டார்கள். அதில் கொஞ்சம் சம்மாதிக்கலாம் என்ற நப்பாசையே காரணம். 12 மணி வேலைநேரத்தில் கூட 4 மணி நேரம் ஓவர்டைம் கணக்கில்தான் வரும். வேறு எந்த பொழுது போக்கிற்கும் வாய்ப்பே இல்லை. வார இறுதியில் அருகில் இருக்கும் ஷாப்பிங் மால்களுக்கு போவதுதான் ஒரே பொழுது போக்கு.
தங்கும் அறை பெரும்பாலும் நிறுவனம் கொடுத்திருக்கும். ஒரு பத்துக்கு பத்து அறையில் இரண்டு படுக்கை வசதி கொண்ட கட்டிலில் குறைந்தது ஆறு பேர் தங்கியிருப்பார்கள். நண்பர்கள் சேர்ந்து திரைப்படங்கள் பார்க்க ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் டி.வி.டி.யும் வாங்கியிருப்பார்கள். கொஞ்சம் பெரிய நிறுவனமாக இருந்தால் நிறுவன வளாகத்திலேயே தங்கியிருந்தால் மூன்று வேளை உணவையும் கொடுத்து விடுவார்கள். இல்லை என்றால் சமைத்து சாப்பிடுகிற வேலையும் உண்டு.
வாழ்க்கை என்பது என்ன?
குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வதுதான். ஆனால் அதே குடும்பத்தினரின் வாழ்வுக்காக இங்கே தனித்திருப்துதான் வாழ்க்கை. எத்தனை வருடங்கள் என்ற இலக்கெல்லாம் கிடையாது. கடன் தீரும் வரை… அக்காவுக்கும் தங்கைக்கும் கல்யாணம் செய்யும் வரை… வீடுகட்டும் வரை… தன் கல்யாணத்துக்கு, தன் பிள்ளைகளுக்கு என்று வாழ்க்கை முழுவதும் இங்கே கழிப்பவர்கள் ஏராளம்.
விடுமுறையா? அப்படி என்றால்… மறந்துவிட்டிருப்பார்களா? இல்லவே இல்லை. எப்போது இரண்டு வருடம் முடியும் என்று தவியாய் தவித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டு வருடம் முடிந்தால்தான் இங்கே விடுமுறை. அதுவும் நிறுவனத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு மாதமோ இரண்டு மாதமோ அவ்வளவுதான்.
 
கல்யாணமாணவர்களின் நிலைமையும் கல்யாணத்திற்கு தயாராய் இருப்பவர்களின் நிலைமையும் சொல்லி மாளாது. ஏறக்குறைய காயடிக்கப்பட்ட நிலைமைதான். இன்னும் சொல்லிக்கொண்டே போனால் பதில் பெரிதாகிவிடும்.
இரண்டாவது அனுபவம் பிறிதொரு சமயத்தில்...

சனி, 9 நவம்பர், 2013

கணவா? இது கனவா?!


சில காலங்கள் நானும் வளைகுடா (துபாய்) வாழ்க்கை வாழ நேரிட்டது. அப்போது நான் பட்ட வேதனைகள் சொல்லி மாளாதது. பணம் ஒன்றே குறிக்கோளாய் மாறிவிட்ட உலகத்தில் அதைத்தேடி நானும் ஓடிய காலமது. மனைவி, பிள்ளைகள், உறவுகள், நண்பர்கள் என அனைவரையும் பிரிந்து புதிய சூழ்நிலையில் பணியாற்றிய போது நான் அடைந்த மன உளச்சல்களும் ஏராளம்.

மனைவியையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு இத்தனை ஆயிரம் மைல் தொலைவில் தன்னந்தனியாக வாழ்வதில் எனக்கும் நிம்மதியில்லை. அவர்களுக்கும் நிம்மதி இல்லை. வருஷத்துக்கு ஒருமுறை ஒருமாத விடுமுறை. கண்மூடி கண்திறக்கும் நேரம் குடும்பத்துடன் இருந்துவிட்டு திரும்ப விமானம் ஏறி… அடுத்த பயணத்துக்காக நாட்களை எண்ணிக்கொண்டு… ஒவ்வொரு முறையும் பிரிவுத்துயரில் வெம்பி… சே! 

வாழ்க்கையை அனுபவிப்பதற்குத்தான் பணம். ஆனல் பணத்துக்காக வாழ்க்கையின் இனிமையான தருணங்களை, சந்தோஷங்களை இழப்பது எவ்வளவு பெரிய மடத்தனம்! காலம் கடந்துதான் எனக்கு அந்த ஞானோதயம் ஏற்பட்டது.

ஒரு ஜான் வயிற்றுக்காக, நிர்வாணத்தை மறைக்கும் ஆடைக்காக, போராட்டமே ஆகிப்போன வாழ்க்கைக்காக, எந்த நேரத்திலும் மரணம் நேரலாம் என்ற நிச்சயமில்லாத உடலுக்காக  மனிதர்கள் எதை எதையெல்லோமோ இழக்கவேண்டியிருக்கிறது இல்லையா?
அதனாலேயே மூன்று வருட விசாவை ரத்து செய்துவிட்டு பாதிலேயே இந்தியாவிற்கு திரும்பி வந்துவிட்டேன். என் மன நிலையைப் போலத்தான் இருந்திருக்கும் என் இல்லாளின் நிலைமையும். என் அதிர்ஷடம் இந்தியாவில் இருந்தாலும் தமிழ்நாட்டில் வேலை செய்யமுடியாத நிலை. ஒடிஸா, கர்நாடகம், ஜார்கண்ட் என சுற்றி விட்டு மீண்டும் ஒடிஸாவிற்கே வந்திருக்கிறேன். இந்தமுறை நிறைய முயற்சிகள் எடுத்து குடும்பத்தையும் இங்கேயே அழைத்து வந்திருக்கிறேன். இதுவும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை?!

சமீபத்தில் இந்தக் கவிதையை வாசிக்க நேர்ந்தபோது என் கடந்தகால நினைவுகள் வந்து போயின.

இது இணையத்தில் ஏதோ ஒரு தளத்திலிருந்து ‘காப்பி’ செய்யப்பட்ட கவிதை.எனவே இந்தக் கவிதையை என் வலைத்தளத்தில் சேமிக்கும் பொருட்டு இங்கே பதிவாக்கியிருக்கிறேன். கவிதைக்கு உரியவர்கள் மன்னிப்பார்களாக!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து
முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது
காத்திருக்க வேண்டாமென கண்டித்துவிட்டு
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்…
கையிலிருப்பதை தட்டிப் பறிப்பாய்…
கெஞ்சுவதும் மிஞ்சுவதும்,
அழுவதும் அணைப்பதும்,
கண்டிப்பதும் கண்ணடிப்பதும்
இடை கிள்ளி… நகை சொல்லி…
அந்நேரம் சொல்வாயடா ‘அடி கள்ளி’…

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்…
என் துபாய் கணவா…
கணவா… ‘எல்லாமே கனவா?!’

கணவனோடு இரண்டு மாதம்…
கனவுகளோடு இருபத்தியிரண்டு மாதமா?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ…
5 வருடமொருமுறை ஒலிம்பிக்…
4 வருடமொருமுறை உலகக்கோப்பை கிரிக்கட்…
2 வருடமொருமுறை கணவன்…
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்து கொண்டாய்!...
இது வரமா? சாபமா?...

அழகுக்காய்… பிணத்தின் சாம்பலில் முகம் பூசுவோர் உண்டோ?
கண்களின் அழுகையை கண்ணாடி தடுக்குமோ என் கணவா?!
நான் தாகத்தில் நிற்கிறேன்… நீ கிணறு வெட்டுகிறாய்!
நான் மோகத்தில் நிற்கிறேன்… நீ விசாவைக் காட்டுகிறாய்!

திரும்பி வந்துவிடு என் துபாய்க் கணவா!
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்.
விட்டுக்கொடுத்து… தொட்டு பிடித்து…
தேவை அறிந்து சேவை புரிந்து…
உனக்காய் நான் விழித்து… எனக்காக நீ உழைத்து…
தாமதத்தில் வரும் தவிப்பு… தூங்குவதாய் உன் நடிப்பு…

வார விடுமுறையில் பிரியாணி… காசில்லா நேரத்தில் கஞ்சி…
இப்படி காமம் மட்டுமன்றி… எல்லா உணர்வுகளையும்
நாம் பறிமாறிக்கொள்ள வேண்டும்!
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம், உறவு, உல்லாசப் பயணம்
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது என் கணவா!

தவணை முறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்போதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா?
அனுப்புகிற தினார்கள் ரூபாயாக மாறும், காதலாக மாறுமா?
பணத்தைத் தரும் பாரத வங்கி பாசத்தைத் தருமா?

நீ இழுத்துச்செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்…
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?!
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு…தங்கம் தேடிச்சென்றாயே?
பாலையில் நீ! வறண்டதோ என் வாழ்வு?!

வாழ்க்கை பட்டமரமாய்ப் போன பரிதாபம் புரியாமல்…
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகின்றாய்.
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா…
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
உன் துபாய் தேடுதலில் தொலைந்தது என் வாழ்க்கையல்லவா?

விழித்துவிடு கணவா… விழித்துவிடு…
அந்தக் கடவுச் சீட்டு வேண்டாம், கிழித்துவிடு!
விசாரித்து விட்டுப் போகாதே என் கணவா,
விசாவை ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா…
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!