சனி, 17 அக்டோபர், 2020

வெளிநாட்டு வாழ்க்கை

 
வெளிநாட்டு வாழ்க்கையில் இரண்டு விதமான அனுபவங்களைப் பெற்றவன் நான்.
முதல் அனுபவம்; மிகக்குறைந்த ஊதியத்தில் சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்த மிகக் கொடுமையான காலகட்டம் அது.
லட்சக்கணக்கானவர்கள் இந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய கடன் சுமையிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றத்தான் வருகிறார்கள் என்றாலும் ஏஜன்ட்டுகள் புரோக்கர்கள் என்பவர்களுக்கு அழும் பணத்திற்காகவும் மேலும் கடன்பட்டு மீளாத துயரத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.
இது 2002 முதல் 2006 வரை நான் கண்கூடாகக் கண்டது. அவனுக்கென்ன வெளிநாட்ல வேலை. மார்பிள்லயே இழைச்சு வீடுகட்டுவான் என்ற உறவினர்கள் பேச்சும், நம்மைப் பற்றிய அதீத கற்பனையும் சொல்லி மாளாது. உண்மையில் அங்கு நம்மூரிலேயே சம்பாதிக்கக் கூடிய ஊதியம்தான் கிடைத்தது. ஆனால் அதற்கும் நம்மூரில் வழியில்லாமல் இருந்தது.
குறைந்த ஊதியம், 12 மணி நேர உழைப்பு. உழைப்பின் களைப்பு தீர குளித்தபின் உறக்கம். மீண்டும் காலை 7 மணிக்கெல்லாம் வேலை. இப்படித்தான் எந்திரத்தனமான பிழைப்பு. வெள்ளிக்கிழமையானால் ஒரே ஒருநாள் விடுப்பு. அன்றைக்கு ஒரு வாரக் களைப்புக்காகவும் அடுத்த வாரம் மீண்டும் புத்துணர்ச்சியாக வேலை செய்யவும் அளவுக்கதிகமாக சரக்கடித்துவிட்டு மட்டையாவது. இதுதான் 90 சதவிகித தொழிலாளர்களின் வாழ்க்கை முறை.
குடிக்காதவர்களும் உண்டுதான் ஆனால் அது மிக மிகக் குறைவு. இது ஒன்றுதான் இவர்கள் தனக்காக தேர்ந்தெடுக்கும் ஒரே வடிகால். அந்தக் காலகட்டத்தில் அப்போதுதான் கைப்பேசி அறிமுகமாகியிருந்த காரணத்தால் வாரம் ஒருமுறைதான் குடும்பத்தினரோடு பேசுவார்கள். இன்டர்நெட் மையங்களுக்குச் சென்றும் உரையாடுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் ஓவர்டைம் என்று வேலை செய்யச் சொன்னால் அந்த வாய்ப்பையும் விடமாட்டார்கள். அதில் கொஞ்சம் சம்மாதிக்கலாம் என்ற நப்பாசையே காரணம். 12 மணி வேலைநேரத்தில் கூட 4 மணி நேரம் ஓவர்டைம் கணக்கில்தான் வரும். வேறு எந்த பொழுது போக்கிற்கும் வாய்ப்பே இல்லை. வார இறுதியில் அருகில் இருக்கும் ஷாப்பிங் மால்களுக்கு போவதுதான் ஒரே பொழுது போக்கு.
தங்கும் அறை பெரும்பாலும் நிறுவனம் கொடுத்திருக்கும். ஒரு பத்துக்கு பத்து அறையில் இரண்டு படுக்கை வசதி கொண்ட கட்டிலில் குறைந்தது ஆறு பேர் தங்கியிருப்பார்கள். நண்பர்கள் சேர்ந்து திரைப்படங்கள் பார்க்க ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் டி.வி.டி.யும் வாங்கியிருப்பார்கள். கொஞ்சம் பெரிய நிறுவனமாக இருந்தால் நிறுவன வளாகத்திலேயே தங்கியிருந்தால் மூன்று வேளை உணவையும் கொடுத்து விடுவார்கள். இல்லை என்றால் சமைத்து சாப்பிடுகிற வேலையும் உண்டு.
வாழ்க்கை என்பது என்ன?
குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வதுதான். ஆனால் அதே குடும்பத்தினரின் வாழ்வுக்காக இங்கே தனித்திருப்துதான் வாழ்க்கை. எத்தனை வருடங்கள் என்ற இலக்கெல்லாம் கிடையாது. கடன் தீரும் வரை… அக்காவுக்கும் தங்கைக்கும் கல்யாணம் செய்யும் வரை… வீடுகட்டும் வரை… தன் கல்யாணத்துக்கு, தன் பிள்ளைகளுக்கு என்று வாழ்க்கை முழுவதும் இங்கே கழிப்பவர்கள் ஏராளம்.
விடுமுறையா? அப்படி என்றால்… மறந்துவிட்டிருப்பார்களா? இல்லவே இல்லை. எப்போது இரண்டு வருடம் முடியும் என்று தவியாய் தவித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டு வருடம் முடிந்தால்தான் இங்கே விடுமுறை. அதுவும் நிறுவனத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு மாதமோ இரண்டு மாதமோ அவ்வளவுதான்.
 
கல்யாணமாணவர்களின் நிலைமையும் கல்யாணத்திற்கு தயாராய் இருப்பவர்களின் நிலைமையும் சொல்லி மாளாது. ஏறக்குறைய காயடிக்கப்பட்ட நிலைமைதான். இன்னும் சொல்லிக்கொண்டே போனால் பதில் பெரிதாகிவிடும்.
இரண்டாவது அனுபவம் பிறிதொரு சமயத்தில்...

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது… [Reply]

எனது பழைய 1996 நினைவுகளை கிளறி விட்டது நண்பரே... தங்களது பதிவு.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@KILLERGEE Devakottai வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி கில்லர்ஜி.

வெங்கட் நாகராஜ் சொன்னது… [Reply]

வேதனையான சூழல் தான். எத்தனை எத்தனை மனிதர்கள் இப்படி - தனிமையில், வறுமையில்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@வெங்கட் நாகராஜ் ஆம். இந்த வேதனைகளை நானும் அனுபவித்திருக்கிறேன் நண்பரே. வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!