அப்போதுதான் ஐ.டி.ஐ. முடித்து தொழில் பழகுனர் வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருந்தேன். என்னுடைய ஊருக்கு மிக அருகிலிருந்த தொழிற்பேட்டை ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் அமைந்திருந்தது. அங்குக் கிடைத்தால் தினமும் வீட்டிலிருந்தே போய்வரலாம். இல்லையென்றால் சென்னைக்குத்தான் போகவேண்டும். நல்லவேளை ராணிப்பேட்டை சிப்காட்டிலிருந்து ஒரு பாய்லர் கம்பனியில் தொழிற் பழகுனர் வேலை உறுதியாயிற்று. மாதம் உதவித்தொகையும் கொடுப்பார்கள். ஆனால் அது எனக்குச் சம்பளம்தானே.
இருநூற்று அறுபது ரூபாய் சம்பளம். அதாவது ஒருநாளைக்குப் பத்து ரூபாய். அதற்காகத் தினமும் என்னுடைய ஊரிலிருந்து சுமார் 16 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணிக்க வேண்டும். போக பதினாறு கிலோ மீட்டர், வர பதினாறு கிலோ மீட்டர். ஆக, 32 கிலோ மீட்டர் ஒரு நாளைக்குச் சைக்கிளை மிதித்தாக வேண்டும். இளமை வேகத்தில் அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஆனால் இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்ய வேண்டும். முதல் ஷிப்ட் காலை 7.15 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3.15 மணிக்கு முடியும். இதற்காக நான் விடியற்காலை 5 மணிக்கு எழுந்து தயாராகி அம்மா கட்டிக்கொடுக்கும் சாப்பாட்டையும் எடுத்துக்கொண்டு காலை 6 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்புவேன். சரியாக 7 மணிக்குத் தொழிற்சாலையை அடைந்துவிடுவேன். எப்போதும் பத்து நிமிடம் முன்கூட்டியே போய்ச் சேர்ந்துவிடும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. ஆனால் பணி முடிந்து திரும்பும்போது வெயில் முகத்திலடிக்கும். வியர்வை ஆறாய் வழியும். இருந்தாலும் வீட்டுக்குப் போகும் அவசரம் மட்டும் குறையாது.
இரண்டாவது ஷிப்ட் நேரம் பிற்பகல் 3.15 மணிக்கு ஆரம்பித்து இரவு 11.30 மணி வரை. இதில் மதியம் இரண்டு மணிக்கு உச்சி வெயிலில் கிளம்ப வேண்டும் அது ஒரு கொடுமை. அதே போல நள்ளிரவில் வீடு திரும்ப வேண்டும். இரவில் திரும்பும்போது தனியாகக் கிளம்புவதில்லை. அக்கம் பக்கத்து கம்பனிகளில் வேலை செய்யும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து கிளம்புவதுதான் வழக்கம். காரணம் ஒன்று திருட்டு பயம். இன்னொன்று வழியில் சைக்கிள் பங்ச்சர் ஆகிவிட்டால் மீதமிருக்கும் அத்தனை கிலோமீட்டரும் நடந்துதான் போகவேண்டும். இந்தக் காரணங்களுக்காக நான்கைந்து பேர் ஒன்று சேர்ந்துதான் போவது வழக்கம். சைக்கிளை நல்ல நிலையில் பராமரித்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் சமயத்தில் கழுத்தறுத்து விடும். எனக்குத் தெரிந்து இரவில் ஒன்றும் ஆகவில்லை. பகலில் சைக்கிள் ரிப்பேராகி பிரச்சினையைச் சந்தித்திருக்கிறேன்.
ஒரு சில நேரங்களில் துணிந்து தனியாகவும் இரவு நேரங்களில் பயணித்திருக்கிறேன். உள்ளூர பயம் இருக்கும். திருட்டு பயத்தைத்தவிர, அடர்ந்த காட்டின் வழியே போகும்போது பேய் பிசாசு கதைகளும் கொலைச் சம்பவங்களும் ஞாபகம் வந்து தொலைக்கும். எங்கள் ஊரிலிருந்து ராணிப்பேட்டை சிப்காட் செல்வதானால் இரண்டு வழிகளில் செல்லலாம். ஒன்று ஆர்க்காடு சென்று அங்கிருந்து முத்துக்கடை நிறுத்தம் பின் அங்கிருந்து சிப்காட் பிறகு அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும். இன்னொரு வழி பூட்டுத்தாக்கு என்னும் ஊரின் வழியாகப் பாலாற்றைக் கடந்து பாலாற்றங்கரையிலிருக்கும் காட்டைக் கடந்து அம்முண்டி, திருவலம் என்ற ஊர்களைக் கடந்து சிப்காட்டை அடையவேண்டும். முதல் வழியில் பேருந்து வசதி உண்டு. ஆனால் இறங்கி, ஏறி, காத்திருந்து நடந்து என எல்லாம் கணக்கிட்டால் 3 மணி நேரமாகிவிடும். இரவு ஷிப்டில் வாய்ப்பே இல்லை. அங்கேயேதான் தூங்க வேண்டும்.
இரண்டாவது வழியில் ஒரே ஒரு பேருந்து மட்டும் ஓடும். அது நம்முடைய நேரத்துக்கு ஒத்து வராது. அதனால்தான் சைக்கிளைத் தேர்ந்தெடுக்கக் காரணம். மழை, வெயில் என்ற பிரச்சினைகளையும் சமாளித்துத்தான் அந்த ஒரு வருடத்தையும் ஓட்டவேண்டியதாக இருந்தது. அப்போதைய காலகட்டத்தில் மறக்க முடியாத ஒரு சம்பவம். பிரதமர் இந்திரா காந்தி படுகொலை நிகழ்வு. பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு வீட்டுக்குத் திரும்பியது.
தொழிற் பழகுனர் பயிற்சி முடித்தும் சரியான வேலை கிடைக்காமல் சென்னை அம்பத்தூரில் தினம் 8 ரூபாய்க்கு கூட ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறேன். சாப்பாட்டுச் செலவுக்கே சமாளிக்க முடியாமல் சொந்த ஊர் திரும்பிக் கொஞ்ச நாளில் நண்பரின் உதவியால் பெங்களூர் போய்ச் சேர்ந்து முதன்முதலாக முறையாக நான் வாங்கிய சம்பளம் மாதம் 600 ரூபாய்.
11 கருத்துகள்:
தங்களின் அயரா உழைப்பு போற்றுதலுக்கு உரியது
ஆரம்ப கால கஷ்டங்கள் - இப்போது நினைக்கையில் கூட நெஞ்சில் வலி தான்.
பட்ட கஷ்டங்கள் விலகி இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறோம் என்று சந்தோஷம் கொள்வோம்.
நல்ல பகிர்வு.
@வெங்கட் நாகராஜ் ஆம் நண்பரே. வலியும் வேதனைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போது நல்ல நிலையில் இருப்பது உண்மையிலேயே மகிழ்வையும் நிம்மதியையும் தருகிறது. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@கரந்தை ஜெயக்குமார்வருகைக்கு மிக்க நன்றி ஐயா, எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறோம் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் உழைப்பு வீண் போகவில்லை என்பதும் நிம்மதியைத் தருகிறது.
யப்பா... எத்தனை வலிகள்...
இதெல்லாம் ஒரு வலி; இதெல்லாம் ஒரு கஸ்ரமா ஐயா? இளம் பருவம்; வாழத் துடிக்கும் வயசு; நெஞ்சில் உரமும் சாதிக்கும் வல்லமையும் கையிலிருக்க பாதையத் தேர்ந்தெடுக்க முனைந்த முயற்சி அது!
திரும்பிப் பார்க்கும் போது அந்த நினைவுகள் எத்தனை பெருமிதம்! நான் ஒரு கடின உழைப்பாளியாய் இருந்தேன்; என் முயற்சியால் நான் இன்று இந் நிலமைக்கு வந்திருக்கிறேன் என்ற நினைப்பே இனிக்குமல்லவா?
என் முதலாவது வேலையை நினைத்துப் பார்க்கிறேன்....எனக்கு தகுதி இருந்ததா என்று தெரியவில்லை. எத்தனையோ பேர் அந்தப் பதவிக்கு ஏங்கிக் கொண்டிருக்க நான் கேட்காமலே என்னைத் தேடி என் தலையில் அணிவிக்கப் பட்ட; எனக்குக் கிடைத்த பெரும் கிரீடம் அது!!
உங்கள் பதிவின் காரணமாக இப்போது அதை நினைத்துப் பார்க்கும் போது அது அதிஷ்டத்தால் விளைந்தது என்றே நினைக்கத் தோன்றுகிறது...உங்கள் பதிவு என்னையும் பின் நோக்கிப் பார்க்க வைத்து விட்டது... நன்றி!
@திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே.
@மணிமேகலா அந்த இளமைப் பருவத்தில் அதெல்லாம் ஒரு கஷ்டமாகவே தெரியவில்லை. ஆனால் இப்போது நினைத்தால் இப்படியெல்லாமா நாம் கஷ்டப்பட்டோம் என்று எண்ணத் தோன்றுகிறது.இதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள்தானே மணிமேகலா. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அருமை சகோ
@Akila vaikundam வருகைக்கு மிக்க நன்றி அகிலா.
@Tamil வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி தமிழ். தமிழில் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்குமே.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!