புதன், 5 ஆகஸ்ட், 2020

துணைவன் - கிண்டில் நூல் விமர்சனம்

வாழ்க்கை ஒருத்தரோடு முடிந்து போவதில்லை. வாழ்வதற்கான வாய்ப்பை எல்லோரும் பயன்படுத்திக்கொள்வதும் இல்லை. ஆண் தனித்து நிற்கும்போதும் சரி, பெண் தனித்து நிற்கும்போதும் சரி பிரச்சினை ஒன்றுதான். ஆனால் அதை எதிர்கொள்ளத் தேவையான பொருளாதார பலம் பெண்களுக்கு இருப்பதில்லை என்றே சொல்லாம். ஆணைச் சார்ந்து வாழ்ந்துவிட்ட பிறகு அதுவும் ஒரு கைக்குழந்தை இருக்கும்போது அவளின் பாடு அதோகதிதான். ஆண் இதிலிருந்து தப்பித்து விடுகிறான். கொஞ்ச நாள் கழித்து வேறொரு திருமணத்திற்கும் தயாராகிவிடுகிறான்.

கணவனை இழந்த பெண்கள் வாழத்தான் வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறது இந்தக்கதை. விவாகரத்தோ இல்லை மரணமோ எதிர்பாராத நிலைமையில் திருமணம் என்கிற பந்தத்தில் ஒருவருடைய இழப்பு ஏற்படும்போது இன்னொருவர் நிலைகுலைந்து போவது உண்மைதான். அதிலிருந்து மீண்டெழுந்து மற்றொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவரவர் கையில் தானிருக்கிறது. ஆனால் அவளுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்ட உற்றார் உறவினர் தேவை. ஆனால் நம் சமூகம் அப்படியா இருக்கிறது?

சுகன்யா இப்படித் தவிக்கையில் அம்மா, அப்பா ஆதரவு மட்டுமே அவளைத்தாங்குகிறது. இதுவே காதல் திருமணமாயிருந்து யாருடைய உதவியில்லாமலிருந்தால் அவள் நிலைமை? வயிற்றிலே மூன்று மாதக் குழந்தை வேறு. என்னதான் ஆகும் அவளின் நிலைமை என்று யோசிக்கையிலேயே நம்மையறியாமல் சுகன்யாமீது ஒரு பரிவு வந்து விடுகிறது. வெறுமனே காதல் கதை என்கிற வழக்கத்திலிருந்து ஒரு படைப்பு என்பது சமூகத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தக் கதை அதைச் செய்கிறது. அதற்காக எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

வருணின் கதையும் ஏறக்குறைய இதுபோலவே. அனிதா என்ற அருமை மனைவியையும் குழந்தையையும் ஒரு விபத்தில் இழந்து அந்தத் துயரிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான். அப்பா கண்ணனும் அம்மா லட்சுமியும் மகனின் துயர் தாங்காது மறுமணம் செய்ய முயல்கின்றனர். குடும்ப டாக்டரின் மூலம் சுகன்யாவைப் பற்றி அறிந்து அவளையே மருமகளாக்க முயல்கின்றனர். வயதான இந்தத் தம்பதிகள்கூட குழந்தையுடன் இருக்கும் சுகன்யாவை மனதார ஏற்றுக்கொள்வதுதான் இந்தக் கதையின் சிறப்பு. விட்டேர்த்தியாய் இருக்கும் வருண் எப்படி சுகன்யாவைச் சந்திக்கிறான், எப்படி அவள் குழந்தையின்பால் ஈர்க்கப்படுகிறான் என்பதை இயல்பாகச் சொல்லியிருக்கிறார் கதையாசிரியர்.

மறுமணம் என்பது சாதாரணமாகிவிட்டாலும் இன்னும் நிறைய குடும்பங்களில் இதற்காகப் போராடத்தான் வேண்டியிருக்கிறது. படித்தவர்களிடையே இந்த மாற்றம் வந்துவிட்டாலும் பரந்த மனப்பான்மை என்பது இன்னும் பரவலாகவில்லை. இந்தக் கதையில் வரும் கதை மாந்தர்கள் எல்லாம் மனிதநேயமும் அன்பும் நிறைந்தவர்களாயிருப்பதும் வருண்-சுகன்யாவைச் சேர்த்து வைக்க முயல்வதும் ஒரு ஆறுதல்.

குழந்தையின் மீதுள்ள வருணின் பாசம் இருவரையும் சேர்த்து வைக்கிறது. தந்தையின் தொழிலை ஏற்று நடத்தும் சுகன்யா நல்ல ஆர்வமும் அனுபவமும் உள்ளவராகவே காட்டப்படுகிறார். சிவில் என்ஜினியரிங் துறை பற்றியும், கட்டுமானத்தொழில் பற்றியும் அலசி ஆராய்ந்து உள்வாங்கி எழுதியிருப்பதும் சிறப்பு. தனியாக நின்று ஜெயித்துக் காட்டுவதும் வருணன் பக்க பலமாக இருப்பதும் கதையினோட்டத்திலேயே போவது நன்றாக இருக்கிறது.

என் பார்வையில் சில நெருடல்கள்; பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களிடத்திலேயும், அன்றாடங் காய்ச்சிகளிடையேயும் தான் குடிப்பழக்கமும், பணமில்லாத போது வீட்டில் அடிதடி சண்டையும், இருப்பதையெல்லாம் அடகு வைத்துக் குடிக்கும் பழக்கமும் இருக்கிறது. குடிப்பழக்க மட்டுமல்லாது தாலியைக்கேட்டு தற்கொலை நாடகமாடி உயிரை மாய்த்துக்கொள்வது. இவளோ முதுகலைப் பட்டதாரி, படித்த நடுத்தரக் குடும்பத்தில் கூடவா இப்படி என்ற நெருடல் மட்டுமே இந்தக்கதையில்.

பெண்கள் என்றால் பக்தியை விடமாட்டார்கள் தான். ஆனால் மூடப்பழக்கங்களையுமா? எப்படி சமுதாய மாற்றம் அவசியமோ அதே மாதிரி இதிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாய் விடுபடலாம் இல்லையா?

நட்புடன்,

எம்.ஞானசேகரன்.

8 கருத்துகள்:

Akila vaikundam சொன்னது… [Reply]

அருமை சகோ

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி சகோதரி அகிலா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

விமர்சனம் நன்று...

வீட்டு நிர்வாகத்திற்கும் படிப்பிற்கும் அவ்வளவாக சம்பந்தம் இல்லை... அனைத்திற்கும் வழி நடத்தி செல்ல அன்பு(ம்) போதும்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது… [Reply]

அருமையான விமர்சனம்
நன்றி

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@திண்டுக்கல் தனபாலன் உண்மைதான் தனபாலன் அவர்களே. வீட்டு நிர்வாகத்திற்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லைதான். வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@கரந்தை ஜெயக்குமார் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

Thulasidharan V Thillaiakathu சொன்னது… [Reply]

விமர்சனம் அருமை. அதுவும் ஆரம்பத்தில் சொல்லப்படும் கருத்துகள்!

கதை கிட்டத்தட்ட ரிதம் படத்தின் கதையை நினைவூட்டுகிறது.

கீதா

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@Thulasidharan V Thillaiakathu வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதா அவர்களே.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!