ஞாயிறு, 15 அக்டோபர், 2017

500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி?

“என்ன... பாட்டெல்லாம் பலமா இருக்கு. லாட்டரி சீட்டு எதுவும் அடிச்சிருக்கா?”
“ஆமாம்பா. என்னுடைய குர்ஹாம் வீட்டை வித்துட்டேன்.”
“சரிதான் தம்பி, உனக்கு நிஜமாவே லாட்டரிதான் அடிச்சிருக்கு. அந்தப் பணத்தை அப்படியே மியூச்சுவல் ஃபண்டுல போடு.''
“இல்லப்பா... அதுல ரொம்ப சிக்கல்னு கேள்விப்பட்டேன். ''
“உனக்கு பேங்க் அக்கவுன்ட் இருக்கா?''
“இருக்கு.''
“பான் கார்டு?''
“இருக்கு.''
“ஆதார் கார்டு?''
“என்னப்பா நீ... அதுவும் இருக்கு.''
“வேறென்ன வேணும்... அவ்வளவுதான்.''
“மியூச்சுவல் ஃபண்டுக்கு இதுமட்டும் போதுமா?''
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்''
“அப்படினா சரி.''
“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன்னர் திட்டம் சார்ந்த ஆவணங்களை கவனமாகப் படிக்கவும்."
இதுபோன்ற மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து யோசித்தும் இருப்பீர்கள். ஆனால் எங்கு, எதில், எப்படி முதலீடு செய்வது என்ற கேள்விகளுக்குத்தான் உரிய பதில் கிடைக்காமல் தவித்திருப்பீர்கள்!

மியூச்சுவல் ஃபண்டில் 500 ரூபாயும் முதலீடு செய்யலாம்; 5 கோடி ரூபாயும் முதலீடு செய்யலாம். முதலீடு எதுவாக இருந்தாலும், அந்த ஃபண்டைப் பொறுத்தவரை வருமானம் ஒன்றுதான். அதே சமயம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் மாதம்தோறும் 500 ரூபாய் என 20 ஆண்டுகளுக்கு முதலீடு மேற்கொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். 12 சதவிகிதம் வருமானம் கிடைக்கிறது எனில், 4.94 லட்சம் ரூபாய் முதிர்வுத்தொகை கிடைக்கும். இதுவே மாதம்தோறும் முதலீட்டுத்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி (1,000 ரூபாய் முதலீடு மேற்கொள்கிறீர்கள்), 20 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு மேற்கொண்டால் 2.30 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைக்கும். இதில் கவனிக்கவேண்டிய விஷயம், கூட்டுவட்டி.

20 சதவிகித வருமானம்! 

ஒரு முதலீட்டில் ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியை மீண்டும் முதலீடு செய்து வட்டிக்கு வட்டி கிடைத்தால், அது கூட்டுவட்டி. உதாரணத்துக்கு, நாம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். வட்டி 10 சதவிகிதம் என்றால், வருடக் கடைசியில் அந்த முதலீட்டின் மதிப்பு 1,10,000 ரூபாய் (முதலீடு 1,00,000 + வட்டி 10,000). அடுத்த வருடம் இதே 10 சதவிகிதம் வட்டி கிடைத்தால், வருடக் கடைசியில் 1,21,000 ரூபாய் என்று வளர்ந்திருக்கும் (முதலீடு 1,10,000 + வட்டி ரூ.11,000). இதேபோல் பத்து வருடங்களுக்குத் தொடர்ந்தால், பத்தாவது வருடத்தில் உங்கள் முதலீட்டின் வட்டி 23,579 ரூபாய். இருபதாவது ஆண்டின் வட்டி 61,159 ரூபாய். முப்பதாவது ஆண்டின் வட்டி 1,58,630 ரூபாய்.

இதில் அதிசயம் என்னவென்றால், வட்டி என்னவோ அதே 10 சதவிகிதம்தான். நம் முதலீடும் ஒரு லட்சம் ரூபாய்தான். ஆனால், வருடங்கள் கூடக்கூட வட்டியும் கூடிக்கொண்டே இருக்கும். ஒரு லட்சம் ரூபாய், 10 சதவிகிதம் வட்டியில் 30 வருடங்களுக்குப் பிறகு 17,44,940 ரூபாயாக வளர்ந்திருக்கும். அதே ஒரு லட்சம் ரூபாய், அதே 30 வருடங்களில் 20 சதவிகிதம் வட்டியில் 2,37,37,631 ரூபாயாக உயர்ந்திருக்கும். ஆம், இரண்டு கோடி ரூபாய்க்குமேல் வளர்ந்திருக்கும்.

20 சதவிகிதம் வருமானம் கிடைக்குமா? எனச் சந்தேகப்படாதீர்கள். ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ப்ளூ சிப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி, பிர்லா சன் லைஃப் அட்வான்டேஜ் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தொடங்கியதிலிருந்து சராசரியாக 20 சதவிகித வருமானத்தை வழங்கியுள்ளது. அதற்காக, இந்த ஃபண்ட்கள் தொடர்ந்து 20 சதவிகித வருமானத்தை வழங்குமா எனச் சொல்ல முடியாது. இதைவிட நன்றாக வருமானம் தரலாம், தராமலும் இருக்கலாம்.

உதாரணத்துக்கு, ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட், கடந்த ஒரு வருடத்தில் 23.4 சதவிகித வருமானமும், மூன்று ஆண்டுகளில் 25 சதவிகித வருமானமும், ஐந்து ஆண்டுகளில் 11.8 சதவிகித வருமானமும் வழங்கியுள்ளது. அதே நேரத்தில் பத்து ஆண்டுகளில் 19.2 சதவிகித வருமானத்தையும், இந்த ஃபண்ட் திட்டம் தொடங்கியதிலிருந்து 24.6 சதவிகித வருமானத்தையும் வழங்கியுள்ளது. ஆகையால், மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, இவ்வளவுதான் வருமானம் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. சந்தை சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், நீண்டகால நோக்கில் முதலீட்டைத் தொடரும்பட்சத்தில், வட்டி மற்றும் கூட்டுவட்டி மூலம் மிக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

500 ரூபாய் முதலீடு - ஒரு கோடி வருமானம்! 

மியூச்சுவல் ஃபண்டில் முன்னரே சொன்னதுபோல 500 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும். ஆனால், 500 ரூபாய் முதலீட்டில் என்ன வருமானம் கிடைக்கும் என நினைப்பவர்களுக்குக்கூட ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியது மியூச்சுவல் ஃபண்ட். ஏனெனில், வெறும் 500 ரூபாய் மாதாந்திர முதலீட்டில்கூட ஒரு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட முடியும். நீண்டகால நோக்கில் முதலீட்டை மேற்கொண்டால்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு (மாதம்தோறும் ரூ.500) 
       
          ஆண்டு         வருமானம் (ரூ.)
                   5                0.5 லட்சம்
                   8                1.2 லட்சம்
                  10               1.9 லட்சம்
                  12               3 லட்சம்
                  15               5.7 லட்சம்
                  18               10.5 லட்சம்
                  20               15.8 லட்சம்
                  22               23.7 லட்சம்
                  25               43.1 லட்சம்
                  28               78.5 லட்சம்
                  30               1.2 கோடி
                  35               3.2 கோடி

மாதம்தோறும் 500 ரூபாய் என மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீடு மேற்கொண்டு, அந்த ஃபண்ட் 20 சதவிகிதம் வருமானம் வழங்கினால், 30-ம் ஆண்டில் 1.2 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில் நாம் மாதம் தோறும் 500 ரூபாய் என ஆண்டுக்கு 12 முறை, 30 ஆண்டுக்கு 360 முறை 500 ரூபாய் என ஒட்டுமொத்தமாக முதலீடு செய்த தொகை வெறும் 1.8 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால், கிடைத்த லாபம் 1,15,00,401 ரூபாய். முதலீட்டுடன் ஒட்டுமொத்தமாகக் கிடைக்கும் வருமானம் 1,16,80,401 ரூபாய். அதாவது 1.16 கோடி ரூபாய்.

சிறு துளி, பெரு வெள்ளம் 

செல்வத்தை உருவாக்குவதற்கான பிரபலமான முதலீட்டுக் கருத்து என்ன தெரியுமா? `Start Early, Invest Regularly'. நீங்களும் முடிந்தவரை உங்களுடைய முதலீட்டை ஆரம்பத்திலே தொடங்குங்கள். தொடங்கிய பிறகு முதலீட்டை நிறுத்தாமல் தொடருங்கள். தீபாவளி வரட்டும், பொங்கல் வரட்டும் எனக் காத்திருக்காதீர்கள். ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சிறிது குழப்பமாக இருக்கலாம்; பல கேள்விகள் வரலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகத்தை அணுகுங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அல்லது நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளுங்கள். கபடி விளையாட்டில் கோச் இருப்பதைப்போல, மியூச்சுவல் ஃபண்டில் உங்களை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுப் பயணத்தில் வழிநடத்திச் செல்ல நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைப்படி, `சிறு துளி பெரு வெள்ளம்' என்பதை உணர்ந்து, இன்றை முதலீட்டைத் தொடங்குங்கள். வாழ்க்கையை வளமாக்கிடுங்கள்!

Source: நாணயம் விகடன்.

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு?


இந்த மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்கள் எதற்கு? கிட்டத்தட்ட 2007-லிருந்து மியூட்சுவல் ஃபண்ட் பற்றிய தகவல்களை தேடித்தேடி படித்து வருகிறேன். கொஞ்சமாய் அதைப் பற்றிய முழு விவரம் தெரியாமலேயே முதலீடும் செய்ய ஆரம்பித்து விட்டேன். அதனுடைய முழு பலா பலன்களை அறிந்த பிறகு எனது நண்பர்களுக்கும் மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டைப்பற்றிக் கூறி சேமிப்பை இப்படி முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தி வருகிறேன்.

இப்படி அனைவரும் தங்களது பணத்தை சேமிப்பதினால் நாட்டு மக்களின் சேமிப்பு அதிகமாவதோடு மியூட்சுவல் ஃபண்ட் துறையின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். மேலும் பங்குச் சந்தைக்கும் அதிக முதலீடு வரும். இந்தியாவில் வெறும் 2% பேரிடம்தான் டீமேட் கணக்கு இருக்கிறது. சந்தையின் ரிஸ்க் பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்களுக்கு மியூட்சுவல் ஃபண்ட் முதலீடுதான் சிறந்த வழி. அதுவும் எஸ்.ஐ.பி. என்கிற சிஸ்டமேடிக் இன்வஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடு செய்வது ரிஸ்க்கை இன்னும் குறைக்கும்.

ஆனால் நிறைய பேர் பயந்து ஒதுங்குவதற்கு காரணம் இந்தப் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ஒருவேளை நஷ்டமடைந்தால் சிறுகச்சிறுக சேமித்த பணம் முழுவதும் போய்விடுமே என்கிற பயம்தான். ஆனால் இதைப் பற்றி புரிந்துகொண்டால் அனைவரும் பயனடைவார்கள் என்ற நோக்கத்தோடுதான் இங்கே என் அனுபவங்களையும் எனக்குத் தெரிந்த விவரங்களையும் பதிவிடுகிறேன்.

வாழ்க்கையில் சம்பாதிப்பவர்கள் கொஞ்சம் பொறுப்புள்ளவர்களாக இருந்தால் சேமிப்பைப் பற்றி கொஞ்சம் சிந்திப்பார்கள். வரவுக்கும் செலவுக்குமே சரியாகப்போகுது என்று சொல்பவர்கள் கூட நெருக்கடியான நேரத்தில் யாரிடமும் கையேந்தாமல் இருக்க ஏதாவது சேமிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எப்படி சேமிப்பது, எங்கே சேமிப்பது என்ற சரியான வழிகாட்டல் இன்றி, திட்டமிடல் இன்றி அவதிப்படுகிறார்கள். இன்றும் கூட பரவலாக இருக்கும் சேமிப்பு முறை ’சீட்டு கட்டுவது’. இதில் பணத்தைக் கட்டி பலனடைந்தவர்களை விட ஏமாந்தவர்கள் அதிகம். தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என நம்பி பணத்தைக் கட்டியவர்கள் கம்பி நீட்டிய பிறகுதான் தங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.

இன்று வரை சீட்டுக் கம்பனி, தீபாவளி ஃபண்டு, அதிக வட்டி என்ற ஆசை காட்டும் நிதி நிறுவனங்கள் என்று அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. மக்களும் திருந்தியபாடில்லை. எங்கே தவறு? வங்கியில் வட்டி குறைவு. அஞ்சலகத்திலும் அதே கதைதான். பாமரர்கள், அதிகம் படிக்காதவர்கள் எங்கே போய் அதிக வருவாய் உள்ள பாதுகாப்பான சேமிப்பைத் தொடங்குவது? கிராம வங்கிகளில் பெரும்பாலும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக மட்டுமே கணக்கு தொடங்குபவர்கள். படித்தவர்கள் என்ன அத்தனையும் தெரிந்தவர்களா என்ன?

எங்கள் அலுவலகத்திலேயே பலர் அறியாமையில்தான் இருக்கிறார்கள். அல்லது எச்சரிக்கையாய் இருக்கிறேன் என்ற ரீதியில் உதவாத இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் பணத்தைப் போட்டுவிட்டு சில ஆண்டுகளில் லட்சக்கணக்கில் பணம் கொட்டும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் பரஸ்பர நிதித்திட்டங்கள் (மியூட்சுவல் ஃபண்ட்) பற்றியோ, நல்ல காப்பீடு திட்டங்கள் (இன்ஷூரன்ஸ் பாலிஸிகள்) பற்றியோ சரியான புரிதல் இல்லை. முகவர்கள் எதையோ சொல்லி ஏமாற்றியிருப்பதேயே வேதவாக்காக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கூடிய மட்டும் என் நண்பர்களிடத்தில் சரியான முதலீட்டு திட்டங்களையும், உயிர் காப்பீடு திட்டங்கள் பற்றியும் விளக்குவதோடு எந்த பிரதிபலனும் பாராமல் உதவி புரிந்தும் வருகிறேன். இந்த அனுபவங்களைத்தான் இனி பதிவாக்கலாம் என்ற திட்டம். 

சோம்பல் அதிகமாகி விட்டது. படிப்பது குறைந்து விட்டது. ஒருவித சலிப்புத்தன்மையும் உருவாகி விட்டது. இதிலிருந்து மீள ஒரே வழி பதிவுலகில் மீண்டும் பவணி வருவதே. இடையிடையே புத்தகங்களில் இது சம்பந்தமாக நான் படித்த விவரங்களையும் சேர்த்தே பதிவுகள் வரும்.

நாட்டு நடப்பு பற்றியும், அரசியல் சூன்யத்தைப் பற்றியும் எழுத ஆசைதான். கடந்த பாசிஸ ஜெயலலிதா ஆட்சியின் அவலங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் கடைசியாக நான் எழுதிய பதிவு தேவை ஆட்சி மாற்றம்’. ஆனால் பணத்துக்கு விலை போன மக்களால் அந்த அவதி ஜெயலலிதா மறைந்தும் தொடர்கிறது இதன் முடிவு எப்போது என்று தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் என்னுடைய எண்ணங்களையும் பதிவு செய்ய விருப்பம் இருக்கிறது.

தொடர்ந்து இனி சந்திப்போம். வழக்கம்போல் ஆதரவு கொடுக்க நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.