“என்ன... பாட்டெல்லாம் பலமா இருக்கு. லாட்டரி சீட்டு எதுவும் அடிச்சிருக்கா?”இதுபோன்ற மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விளம்பரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்து யோசித்தும் இருப்பீர்கள். ஆனால் எங்கு, எதில், எப்படி முதலீடு செய்வது என்ற கேள்விகளுக்குத்தான் உரிய பதில் கிடைக்காமல் தவித்திருப்பீர்கள்!
“ஆமாம்பா. என்னுடைய குர்ஹாம் வீட்டை வித்துட்டேன்.”
“சரிதான் தம்பி, உனக்கு நிஜமாவே லாட்டரிதான் அடிச்சிருக்கு. அந்தப் பணத்தை அப்படியே மியூச்சுவல் ஃபண்டுல போடு.''
“இல்லப்பா... அதுல ரொம்ப சிக்கல்னு கேள்விப்பட்டேன். ''
“உனக்கு பேங்க் அக்கவுன்ட் இருக்கா?''
“இருக்கு.''
“பான் கார்டு?''
“இருக்கு.''
“ஆதார் கார்டு?''
“என்னப்பா நீ... அதுவும் இருக்கு.''
“வேறென்ன வேணும்... அவ்வளவுதான்.''
“மியூச்சுவல் ஃபண்டுக்கு இதுமட்டும் போதுமா?''
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்''
“அப்படினா சரி.''
“மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன்னர் திட்டம் சார்ந்த ஆவணங்களை கவனமாகப் படிக்கவும்."
மியூச்சுவல் ஃபண்டில் 500 ரூபாயும் முதலீடு செய்யலாம்; 5 கோடி ரூபாயும் முதலீடு செய்யலாம். முதலீடு எதுவாக இருந்தாலும், அந்த ஃபண்டைப் பொறுத்தவரை வருமானம் ஒன்றுதான். அதே சமயம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் மாதம்தோறும் 500 ரூபாய் என 20 ஆண்டுகளுக்கு முதலீடு மேற்கொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். 12 சதவிகிதம் வருமானம் கிடைக்கிறது எனில், 4.94 லட்சம் ரூபாய் முதிர்வுத்தொகை கிடைக்கும். இதுவே மாதம்தோறும் முதலீட்டுத்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி (1,000 ரூபாய் முதலீடு மேற்கொள்கிறீர்கள்), 20 ஆண்டுகளுக்குப் பதிலாக 10 ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு மேற்கொண்டால் 2.30 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைக்கும். இதில் கவனிக்கவேண்டிய விஷயம், கூட்டுவட்டி.
20 சதவிகித வருமானம்!
ஒரு முதலீட்டில் ஆண்டுதோறும் கிடைக்கும் வட்டியை மீண்டும் முதலீடு செய்து வட்டிக்கு வட்டி கிடைத்தால், அது கூட்டுவட்டி. உதாரணத்துக்கு, நாம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். வட்டி 10 சதவிகிதம் என்றால், வருடக் கடைசியில் அந்த முதலீட்டின் மதிப்பு 1,10,000 ரூபாய் (முதலீடு 1,00,000 + வட்டி 10,000). அடுத்த வருடம் இதே 10 சதவிகிதம் வட்டி கிடைத்தால், வருடக் கடைசியில் 1,21,000 ரூபாய் என்று வளர்ந்திருக்கும் (முதலீடு 1,10,000 + வட்டி ரூ.11,000). இதேபோல் பத்து வருடங்களுக்குத் தொடர்ந்தால், பத்தாவது வருடத்தில் உங்கள் முதலீட்டின் வட்டி 23,579 ரூபாய். இருபதாவது ஆண்டின் வட்டி 61,159 ரூபாய். முப்பதாவது ஆண்டின் வட்டி 1,58,630 ரூபாய்.
இதில் அதிசயம் என்னவென்றால், வட்டி என்னவோ அதே 10 சதவிகிதம்தான். நம் முதலீடும் ஒரு லட்சம் ரூபாய்தான். ஆனால், வருடங்கள் கூடக்கூட வட்டியும் கூடிக்கொண்டே இருக்கும். ஒரு லட்சம் ரூபாய், 10 சதவிகிதம் வட்டியில் 30 வருடங்களுக்குப் பிறகு 17,44,940 ரூபாயாக வளர்ந்திருக்கும். அதே ஒரு லட்சம் ரூபாய், அதே 30 வருடங்களில் 20 சதவிகிதம் வட்டியில் 2,37,37,631 ரூபாயாக உயர்ந்திருக்கும். ஆம், இரண்டு கோடி ரூபாய்க்குமேல் வளர்ந்திருக்கும்.
20 சதவிகிதம் வருமானம் கிடைக்குமா? எனச் சந்தேகப்படாதீர்கள். ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ப்ளூ சிப் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி ஈக்விட்டி, பிர்லா சன் லைஃப் அட்வான்டேஜ் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தொடங்கியதிலிருந்து சராசரியாக 20 சதவிகித வருமானத்தை வழங்கியுள்ளது. அதற்காக, இந்த ஃபண்ட்கள் தொடர்ந்து 20 சதவிகித வருமானத்தை வழங்குமா எனச் சொல்ல முடியாது. இதைவிட நன்றாக வருமானம் தரலாம், தராமலும் இருக்கலாம்.
உதாரணத்துக்கு, ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட், கடந்த ஒரு வருடத்தில் 23.4 சதவிகித வருமானமும், மூன்று ஆண்டுகளில் 25 சதவிகித வருமானமும், ஐந்து ஆண்டுகளில் 11.8 சதவிகித வருமானமும் வழங்கியுள்ளது. அதே நேரத்தில் பத்து ஆண்டுகளில் 19.2 சதவிகித வருமானத்தையும், இந்த ஃபண்ட் திட்டம் தொடங்கியதிலிருந்து 24.6 சதவிகித வருமானத்தையும் வழங்கியுள்ளது. ஆகையால், மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, இவ்வளவுதான் வருமானம் கிடைக்கும் எனக் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. சந்தை சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், நீண்டகால நோக்கில் முதலீட்டைத் தொடரும்பட்சத்தில், வட்டி மற்றும் கூட்டுவட்டி மூலம் மிக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
500 ரூபாய் முதலீடு - ஒரு கோடி வருமானம்!
மியூச்சுவல் ஃபண்டில் முன்னரே சொன்னதுபோல 500 ரூபாய்கூட முதலீடு செய்ய முடியும். ஆனால், 500 ரூபாய் முதலீட்டில் என்ன வருமானம் கிடைக்கும் என நினைப்பவர்களுக்குக்கூட ஆச்சர்யத்தை அளிக்கக்கூடியது மியூச்சுவல் ஃபண்ட். ஏனெனில், வெறும் 500 ரூபாய் மாதாந்திர முதலீட்டில்கூட ஒரு கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட முடியும். நீண்டகால நோக்கில் முதலீட்டை மேற்கொண்டால்...
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு (மாதம்தோறும் ரூ.500)
ஆண்டு வருமானம் (ரூ.)
5 0.5 லட்சம்
8 1.2 லட்சம்
10 1.9 லட்சம்
12 3 லட்சம்
15 5.7 லட்சம்
18 10.5 லட்சம்
20 15.8 லட்சம்
22 23.7 லட்சம்
25 43.1 லட்சம்
28 78.5 லட்சம்
30 1.2 கோடி
35 3.2 கோடி
மாதம்தோறும் 500 ரூபாய் என மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றில் முதலீடு மேற்கொண்டு, அந்த ஃபண்ட் 20 சதவிகிதம் வருமானம் வழங்கினால், 30-ம் ஆண்டில் 1.2 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில் நாம் மாதம் தோறும் 500 ரூபாய் என ஆண்டுக்கு 12 முறை, 30 ஆண்டுக்கு 360 முறை 500 ரூபாய் என ஒட்டுமொத்தமாக முதலீடு செய்த தொகை வெறும் 1.8 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால், கிடைத்த லாபம் 1,15,00,401 ரூபாய். முதலீட்டுடன் ஒட்டுமொத்தமாகக் கிடைக்கும் வருமானம் 1,16,80,401 ரூபாய். அதாவது 1.16 கோடி ரூபாய்.
சிறு துளி, பெரு வெள்ளம்
செல்வத்தை உருவாக்குவதற்கான பிரபலமான முதலீட்டுக் கருத்து என்ன தெரியுமா? `Start Early, Invest Regularly'. நீங்களும் முடிந்தவரை உங்களுடைய முதலீட்டை ஆரம்பத்திலே தொடங்குங்கள். தொடங்கிய பிறகு முதலீட்டை நிறுத்தாமல் தொடருங்கள். தீபாவளி வரட்டும், பொங்கல் வரட்டும் எனக் காத்திருக்காதீர்கள். ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்து சிறிது குழப்பமாக இருக்கலாம்; பல கேள்விகள் வரலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகத்தை அணுகுங்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் அல்லது நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளுங்கள். கபடி விளையாட்டில் கோச் இருப்பதைப்போல, மியூச்சுவல் ஃபண்டில் உங்களை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுப் பயணத்தில் வழிநடத்திச் செல்ல நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைப்படி, `சிறு துளி பெரு வெள்ளம்' என்பதை உணர்ந்து, இன்றை முதலீட்டைத் தொடங்குங்கள். வாழ்க்கையை வளமாக்கிடுங்கள்!
Source: நாணயம் விகடன்.