புதன், 21 அக்டோபர், 2015

புருஷ லட்சணம் எது? - பாலகுமாரன் பதில்கள்

புருஷ லட்சணம் எது? பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல் மட்டுமேவா?
– எம்.ஞானசேகரன், சென்னை – 43.
நேர்மையாய் பொருள் சேர்த்தல், அதை வீட்டோருக்காக செலவழித்தல். கவனமாய் சேமித்தல். கனிவாய் கம்பீரமாய் இருத்தல். பிரச்னைகள் வரும்போது மனம் கலங்காது அதை ஸ்வீகரித்தல், தீர்வு தேடல் இவையும் புருஷ லட்சணங்களாம்.

மனதை தெளிவாக்கும் விஷயங்கள் எவை? – ஆலங்கரை பைரவி, இலால்குடி.
கடலின் நீலம், வானத்தின் இருட்டு, அந்தியின் சிகப்பு, தொலைதூரம் தெரியும் பாலைவன வெண்மை, நிலவின் மஞ்சள், மலைகளின் பசுமை என்று சில வண்ணமயமான விஷயங்கள் சிறிதளவு மனதை தெளிவாக்கும். இவைகளைப் பார்த்த பிறகும் இருட்டடித்துக் கிடப்பவருண்டு.

மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும்போது அதை அறிய நினைக்கவேண்டுமா? அடக்க வேண்டுமா? – நளினம், கு.லோகநாதன், பவானி
சாட்சியாக இருங்கள், அது போதும். உங்கள் மனதை அறிவது எளிதல்ல. அது ஒரு பொங்கு மாங்கடல். உரிக்க உரிக்க வெறும் தோலாக வந்து கொண்டிருக்கும். அடக்க முயற்சித்தால் எகிறும். மனதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க அது தானாய் சுருங்கத் துவங்கும். அதாவது எண்ணங்கள் குறையும். இது பற்றி இதற்கு மேல் சொல்ல முடியாது. ஏனெனில் இது சொல்லில் அடங்காது. இது அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

வாழ்க்கையில் எல்லா வகையிலும், எல்லா வயதிலும் ஆன்மிகம் எவ்வாறு உதவும் என்று விளக்குவீர்களா? – இரா. துரைபாரதி, திருவிடைமருதூர்.
அமைதியான நெறிப்பட்ட வாழ்க்கைக்குப் பெயர் ஆன்மிகம். இதற்கு வயதெல்லாம் ஒன்றுமில்லை. அறுபது வயதிற்கு மேல் சிலர் போடுகின்ற வேஷத்திற்குப் பெயர் ஆன்மிகமில்லை.

எங்கள் ஊர் இலக்கியக் கூட்டத்தில் பிரபஞ்சன் உங்களைக் கடுமையாக தாக்கிப் பேசினாரே? தரம் தாழ்த்தி விமர்சித்தாரே? 
– அகல்யா, சிவகங்கை.
பிரபஞ்சனா? தரம் தாழ்த்தியா? ஒரு நாளும் அப்படிப் பேசியிருக்க மாட்டார். அபிப்ராய பேதமிருந்திருக்கும். அதை வெளியிட்டிருப்பார். நான் அபிப்ராய பேதங்களை வெளியிடுவதேயில்லை. குறிப்பாய் எழுத்தாளர்களைப் பற்றி விமர்சிப்பதே இல்லை. இங்கு எழுதுவதே இருபது பேர். இவரைப் பற்றி அவர், அவரைப் பற்றி இவர் என்று சண்டைகள் எதற்கு?

ஒருவன் வாழ்க்கையில் உயர தன்னம்பிக்கையும் உழைப்பும் மட்டும் போதுமா? – து. சிவா, முசிறி.
இறையருளும் வேண்டும்.

பிறர் முன் நம்மை மட்டம் தட்டிப் பேசும் நபர்கள் பற்றி…. - முகவை. முத்துசாமி, தொண்டி.
தன்னை உயர்த்திக்கொள்ள பிறரை மட்டம் தட்டுவது மனிதர்கள் வழக்கம். மட்டம் தட்டுகிற நபர்கள் பலவீனர்களாய், மாட்டிக்கொண்டு விடுவோமோ என்கிற இடைவிடாத பயமுள்ளவர்களாய், தன் தகுதியை விட அதிகமான பதவி வேண்டும் என்று ஆசைப்படுபவர்களாய் இருக்கிறார்கள்.

புறங்கூறலும், மட்டம் தட்டுவதும் ஒரு நோய். அவர்களிடம் கவனமாய் சமையத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை அன்பால் திருத்த முடியாது. அவர்கள் தானாக அடிபட்டு திருந்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

2 கருத்துகள்:

ஆரூர் பாஸ்கர் சொன்னது… [Reply]

//இங்கு எழுதுவதே இருபது பேர். இவரைப் பற்றி அவர், அவரைப் பற்றி இவர் என்று சண்டைகள் எதற்கு?// மிகவும் உண்மை..

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

@ஆரூர் பாஸ்கர்தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே! இருக்கிற எழுத்தாளர்களின் சண்டைகள் எழுத்தாளர்களின் மதிப்பையே குறைத்துவிடுகின்றன எனபதை இவர்கள் உணராமலா இருப்பார்கள்?!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!