செவ்வாய், 27 அக்டோபர், 2015

காதலின் பொன் வீதியில்…


(பழைய நாட்குறிப்பிலிருந்து)
வேலைதெரிந்தாலும் பட்டறை வேலையில் அனுபவமில்லை. தொழில் சுத்தமும், நேர்மையும் இருந்தால் வேலை தேடிவரும் என்பது நிரூபனமாகிவிட்டது. சில நாட்களாகவே மனதில் சந்தோஷம் பூத்துக் குலுங்க ஆரம்பித்து மனிதனாய் உலா வர ஆரம்பித்திருக்கிறேன். அவள் நட்பு கிடைத்ததாலா? இல்லை இந்த தொழில் ஆரம்பித்ததாலாழ இரண்டும்தான் காரணம் என்று யோசிக்கையில் புலப்பட்டது. ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது இதைச் செய்யலாமே என்று உற்சாகமும் ஊக்கமும் கொடுத்தது அவள்தானே!

ஓ, இந்தப் பொக்கிஷம் எனக்கில்லையோ?! ஒரு கணம் எதுவும் ஓடவில்லை. அன்பில் அசத்தும் இவள் சில நேரங்களில் விட்டேர்த்தியாய் நடந்து கொள்வது ஏன் என்றுதான் புரியவில்லை.

ஹலோ! குட் மார்னிங். என்ன காலைலயே கண் கலங்கியிருக்கு, அழுதீங்களா? என்ன ஆச்சு? ம் … சொல்லுங்க.

ஒண்ணுமில்ல அமுதா.

என்கிட்டயே மறைக்கிறீங்களா?

இல்ல, நான் நீ வேணும்னு கேட்டிண்டிருக்கேன். ஆனா நீ எனக்காக வேற பொண்ணு பார்க்கிறேன்னு கிளம்பிண்டிருக்கே – அதான் என்னால துக்கம் தாங்க முடியல!

ப்ளீஸ்… உங்கள கன்ட்ரோல் பண்ணிக்கோங்க. அதான் நான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேன்ல. எது எப்படின்னு விதி இருக்கோ அதுபடிதான் நடக்கும். நான் எப்ப எங்க போனாலும், நீங்க எப்பவும் என் சேகர்தான், என்ன? அழக்கூடாது. ச்சே… ஆம்பிளைப் பிள்ளை அழலாமா? ம்…

நான் போயிட்டு வரட்டா?

‘அவள் போய்விட்டாள். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. நான் தெளிவில்லையோ? ஏன் சதா அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். பிரிவு வரப்போவது நிஜம். அதை ஏன் ஏற்கவில்லை என் உள் மனம்?

ஒருவர் மற்றொருவர் மகிழ்விலும், நலத்திலும், மேம்பாட்டிலும் அக்கறை கொள்வதும் அதனைச் செயல்படுத்துவதும் அன்பாகுமில்லையா? என் நலத்தில் அவள் காட்டும் அக்கறையை நாம் ஏன் காட்டவில்லை? மனதை திசை திருப்பினேன். நாமும் இவளுக்காக மாப்பிள்ளை பார்த்தால் என்ன?

அவர்கள் ஜாதியிலேயே மாப்பிள்ளை பார்க்கவேண்டும். ஜாதிப் பிரச்னை சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாய்ப் புரையோடியிருக்கிறது. ‘முடவனுக்கு கொடுத்தால்கூட கொடுப்பேனே தவிர எங்க ஜாதி தவிர்த்து வேறு ஜாதியில எம்பொண்ணைக் கொடுக்க மாட்டேன்’ – ஒரு முறை பேச்சு வாக்கில் அவள் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.

முதல் வேளையாக திருமண தரகரிடம் பணம் கொடுத்து வரன் ஏதாவது இருந்தால் உடனே இந்த முகவரிக்கு தெரியப்படுத்து என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நான்கு நாட்கள் முடிந்து போயிருந்தன. என் கண்கள் ஒளியின்றி இருப்பது எனக்கே தெரிந்தது. மெட்ராஸிலிருந்து வந்தாளா? வந்திருந்தால் ஏன் என்னை வந்து பார்க்கவில்லை? வீட்டிற்குப் போகலாமா? வீட்டிற்குப் போய் என்ன பேசமுடியும்? அந்த எண்ணத்தைத் தவிர்த்து விட்டேன்.

ஏனோ தெரியவில்லை இந்த மாதம் தொழில் மந்தமாக இருக்கிறது. எப்படி எல்லாவற்றையும் சரிகட்டுவது என்று கணக்குப்போட்டுக் கொண்டிருந்தது மனசு. தொழில் ‘டல்’லாக இருக்கும்போது உற்சாகம் குறைந்து போகிறது. எரிச்சல் வருகிறது. நிதானம் போய்விடுகிறது. என்ன செய்வது என்ற சிந்தனையே மேலோங்கி விடுகிறது.

இப்போது ஆறுதல் சொல்ல அவள் பக்கத்தில் இருந்தால் தேவலை என்று தோன்றியது. ‘பொண்டாட்டி வேணும்’னு சொல்றது இதுக்குத்தானோ?!

ஹலோ சேகர்! எப்படி இருக்கீங்க. எப்ப பார்த்தாலும் மூஞ்சிய உம்முன்னு வச்சுக்கின்னு… சாப்பாடு கொண்டு வந்தீங்களா? ம்… சாப்பிட்டு கிளம்புங்க, போய் வேலையைப் பாருங்க. நீங்க இல்லன்னா அங்க ஒழுங்கா வேலை நடக்கிறதில்லை. எவளை நினைச்சுக்கிட்டு இங்க உட்கார்ந்திருக்கீங்க?

எவளை என்றுதான் உனக்குத் தெரியுமே!

ஐயோ! இனிமே அப்படியெல்லாம் பேசக்கூடாது.

ஏன்?

மீனாவுக்குப் பிடிக்காது!

யார் அது மீனா? என்ன குழப்பறே?

நான் ஒண்ணும் குழப்பல. என் ஃப்ரெண்டோட தங்கச்சி பேருதான் மீனா. உங்களுக்காக பெண் பார்த்துட்டு வந்திருக்கேன்.

உனக்கு ஏனிந்த வேலை?

என் சேகருக்கு நான் செய்யாம வேறு எவ செய்வா?

சரி, என்ன ஜாதி அவங்க?

ஏன் நீங்க வேற ஜாதில கட்டிக்க மாட்டீங்களா?

என்னப்பத்திதான் உனக்குத் தெரியுமே. முதல்ல அவங்க எங்க ஜாதியில பெண் கொடுப்பாங்களா? கேட்டுச் சொல்லு. உங்க வீடு மாதிரி ஜாதி வெறி இருக்கப்போவுது.

ஏம்பா கோவமா பேசறீங்க?

பின்ன ஏன்ன? நீ வேற ஜாதின்னு தெரிஞ்சுதானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன். வேற ஜாதில கட்டிக்க மாட்டீங்களான்னா என்ன அர்த்தம்?

சாரி, நான் உங்க கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல… என் தோழி ஒருத்தி, நான் வே ஜாதியில மாப்பிள்ளை பார்க்கட்டுமாடின்னு கேட்டப்போ நான் என்ன சொன்னேன் தெரியுமா? வேற ஜாதின்னா… நான் சேகரையே கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னேன்.

நீ கூட ஜாதி பார்க்கிற இல்ல?

இல்ல, எங்க அப்பா அம்மாவுக்காக.

அவங்க ஒத்துக்கிட்டா என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா?

தெரியலை!

ஏன்?

நான் உங்கள ‘புருஷனா’ நினெச்சுப் பார்க்கல.

அப்போ…

நல்ல ஃப்ரெண்டாதான் நினைச்சேன்.

சதா சர்வ காலமும் உன்னையே நினைச்சிக்கிட்டிருக்கிற என்னை இதுவரைக்கும் ஒரு நாள் கூட அப்படி நினைச்சதில்லையா?

நினைச்சேன்! ஒரு நாள் உங்க வீட்ல சாப்பிடாம வந்து உட்கார்ந்துகிட்டு அழுதீங்களே! நிம்மதியாய் சாப்பிடவாவது பொண்டாட்டி வேணும்னு கேட்டீங்களே… அப்போ நினைச்சேன்.

தன் தர்மத்தையும் விட்டுவிடாமல், பிறர் தர்மத்தையும் தூற்றாமல், யாரையும் கொச்சைப்படுத்தாமல், காதலையும் கேவலப்படுத்தாமல் என்னை மனதுக்குள் ஏற்றுக்கொண்ட இந்த நேசிப்பினை கருணை என்று சொல்வதா? காதல் என்று சொல்வதா? நன்றிப் பெருக்கால் என் கண்கள் பணித்தன. மனசுக்குள் அவளை கை கூப்பினேன்.

சாரி, அமுதா, நீ கிளம்பு. நாம இப்படி பேசிக்கிட்டிருந்தா வேதனைதான் அதிகமாகும். சாதி மதிப்பிழக்கும்போதுதான் சாதி அடிப்படையில் வரும் போலி மதிப்புகள் மறையும். நம்மோட சந்ததிகளையாவது நாம நல்லபடியா சாதி வித்தியாசமில்லாம வளர்ப்போம்.

மனிதரில் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பில் ஆறுதலும், மகிழ்ச்சியும் பரிமாறப்படுகின்றன. அதனால் வாழவேண்டும் என்ற பிடிப்பும் ஏற்படுகின்றது. எனக்கு இந்தப் பிடிப்பு இவளால் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்திற்கு உள்ளே உள்ள உறவைக் காட்டிலும், குடும்பத்திற்கு வெளியே உள்ள உறவு, உண்மையானதாகவும், ஆதரவானதாகவும் ஏன் நெருக்கமானதாகவும் அமைந்துவிடுகிறது.. எனக்கும் இப்படித்தான் இவள் அமைந்துவிட்டாள்.

ஹாய் சேகர்…

அவள் வந்துவிட்டாள். என் முகம் ஏன் இத்தனை பிரகாசமடைகிறது? இது எத்தனை நாளைக்கு? உள்ளுக்குள் மனசு கேள்வி கேட்டது.

என்ன யோசனை? உங்க நண்பர்கள் எல்லாம் வண்டி வாங்கறாங்க! நீங்க எப்ப வண்டி வாங்கறது? ஹூம்… நீங்க எப்ப வண்டி வாங்கி, நான் எப்ப அதில உட்கார்ந்து வர்றது?

இல்ல அமுதா, வண்டி வாங்க இன்னும் கொஞ்சம் நாளாகும். எதுவும் தோணாத எம் மனசுல ஆர்வத்த விதைச்சு, இன்னைக்கு 4 பேர் என்கிட்ட வேலை செய்யுற அளவுக்கு முன்னேறினதுக்கு என்னோட உழைப்பு வேணும்னா காரணமா இருக்கலாம். ஆனா அந்த உழைப்புக்கு உற்சாகம் கொடுத்த நீதான் முக்கியமான காரணம் எனபதை உன்னாலேயே கூட மறுக்க முடியாது.

போதும் போதும் ஐஸ் வச்சது! வண்டி எப்ப வாங்கறீங்கன்னு கேட்டா, இந்த ராமாயணமெல்லாம் யார் கேட்டது?

சரி வாங்கறேன். முதல்ல நீ உட்காருவியா சொல்லு?
நீ ங்க முதல்ல வண்டி வாங்குங்க.

தொழில் ஆரம்பிச்சதுல கொஞ்சம் கடன் இருக்கு. முடிஞ்சதும் வாங்குற எண்ணம் இருக்கு. கண்டிப்பா வாங்கிடுவேன்.

நீங்க என்னை உண்மையா நேசிக்கிறதுன்னா, அந்த நேசிப்பை உங்க உழைப்புல காண்பிங்க. எங்க அப்பா அம்மா எல்லோர் முன்னிலையிலும் நெஞ்சு நிமிர்த்தி நடக்கனும். ‘ஐயோ எம்பொண்ணை இவனுக்கு கொடுக்காம போய்ட்டமே’னு வருத்தப்பட வைக்கனும். செய்வீங்களா சேகர்?

நிச்சயம் செய்வேன். இது சத்தியம். சரி, அந்த பெண் வீட்டலிருந்து தகவல் வந்ததா?
ம்… வந்தது… அவங்க அப்பா அம்மா வேற ஜாதின்னா வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்… வருத்தமா?

ச்சேச்சே… இதுக்கு வருத்தமா? எனக்கு இது நடக்காதுன்னு தெரியும்.
எப்படி?

இதுன்னு இல்ல, எனக்கு கல்யாணம்னு அவள்ளவு சீக்கிரம் நடக்காது. என் குறை பற்றிய உண்மையை முதலிலேயே சொல்லிடறதுனால நின்னுடும்னு தோணுது.

என்ன பெரிய குறை! கை கால் ஏதும் முடமில்லையே? தலைமுடி இல்லேன்னா கூட குறைன்னு சொல்வாங்களா?

சொல்றாங்க!

யார் சொல்றது?
என் நண்பர்கள்ல சில பேர், நம்மைப் பற்றி தெரிஞ்சவங்க என் குறை பற்றி அவளுக்குத் தெரியுமான்னு கேட்டார்கள்.

நீங்க சொல்றது… நட்புல குறையெல்லாம் பார்க்கமாட்டாங்கன்னு…

அப்போ, காதலிச்சா குறையைப் பார்ப்பாங்களா? – நான் கேட்டேன்.

ஆமா, ‘லவ்’ல கொஞ்சம் அழக எதிர்பார்ப்பாங்க.

அதனாலதான் நீ என்னை லவ் பண்ணலையா?

என்ன சேகர், இப்படி புரியாம கேள்வி கேட்டுகிட்டு. என்னப்பத்தி தெரிஞ்சிகிட்டே எப்படி உங்களால இப்படி கேள்வி கேட்க முடிஞ்சது? நாம ரெண்டு பேரும் சேரணும்னு விதி இருந்தா கண்டிப்பா சேருவோம். கவலையை விடுங்க.

எனக்கு மாப்பிள்ளை பார்த்தீங்களே என்ன ஆச்சு?

பையனுக்கு படிப்பு குறைச்சல். வேண்டாம்னு சொல்லிட்டேன்.

எனக்கும் இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆவாது!

ஏன் அப்படி சொல்ற?

எங்க ஜாதில அதிகமா யாரும் பெண்ணை வேலைக்கு அனுப்பறதில்ல. அதுவுமில்லாம நான் அதிகமா வேற படிச்சிருக்கேன். பத்தாததிற்கு செவ்வாய் தோஷம்… அது இதுன்னுட்டு…
ஆசைப்பட்ட இரண்டு பேர் சேர்ந்து வாழ இந்த சமூகம் எத்தனை வேலிகளைப் போட்டிருக்கிறது இல்லையா?

ஏன் மனசைப்போட்டு அலட்டிக்கறீங்க? கல்யாணம் நடக்கிறவரை நாம ஒருத்தருக்கு ஒருத்தர் நாம ஆதரவா இருப்போம். ம்… இப்ப என்ன பண்ணனும்னு சொல்லு உன்னை… நானிருக்கிறேன் இல்ல…ம்.

வேண்டாம் அமுதா… இது எனக்கு நிரந்தரமா உங்கிட்டேயிருந்து வேணும்னு தோணும். என்னைக் கட்டுப்படுத்திக்கிறது தவிர எனக்கு வேறு வழியில்லை.

ச்சேச்சே.. இதுக்கா கண் கலங்குவாங்க.

இல்ல அமுதா, இனி ஏனோ தானோ என்று இருக்கப்போவதில்லை. மனசை ஒருமுகப்படுத்தி கடவுளை வேண்டிக்கப்போகிறேன். சுத்தமான பிரார்த்தனைக்கு பலன் உண்டுன்னு சொல்வாங்க. சாத்தியமாகாதது நடக்குதான்னு பார்ப்போம். எனக்காக நீயும் பிரார்த்தனை செய். இவன் சுமைகளைக் களைந்து, இவன் சந்தோஷம் பெறவேண்டுமென்று…. மற்றது விதிப்படி நடக்கட்டும்.

ஒருவர் கண்களில் ஒருவர் வழியும் கண்ணீரைத் துடைக்க அனிச்சையாய் கை எழுந்தது.

தொடர்புடைய இடுகைகள்;

என் இனிய ஸ்நேகிதிக்கு...

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து!?
 

புதன், 21 அக்டோபர், 2015

புருஷ லட்சணம் எது? - பாலகுமாரன் பதில்கள்

புருஷ லட்சணம் எது? பரஸ்பரம் விட்டுக்கொடுத்தல் மட்டுமேவா?
– எம்.ஞானசேகரன், சென்னை – 43.
நேர்மையாய் பொருள் சேர்த்தல், அதை வீட்டோருக்காக செலவழித்தல். கவனமாய் சேமித்தல். கனிவாய் கம்பீரமாய் இருத்தல். பிரச்னைகள் வரும்போது மனம் கலங்காது அதை ஸ்வீகரித்தல், தீர்வு தேடல் இவையும் புருஷ லட்சணங்களாம்.

மனதை தெளிவாக்கும் விஷயங்கள் எவை? – ஆலங்கரை பைரவி, இலால்குடி.
கடலின் நீலம், வானத்தின் இருட்டு, அந்தியின் சிகப்பு, தொலைதூரம் தெரியும் பாலைவன வெண்மை, நிலவின் மஞ்சள், மலைகளின் பசுமை என்று சில வண்ணமயமான விஷயங்கள் சிறிதளவு மனதை தெளிவாக்கும். இவைகளைப் பார்த்த பிறகும் இருட்டடித்துக் கிடப்பவருண்டு.

மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும்போது அதை அறிய நினைக்கவேண்டுமா? அடக்க வேண்டுமா? – நளினம், கு.லோகநாதன், பவானி
சாட்சியாக இருங்கள், அது போதும். உங்கள் மனதை அறிவது எளிதல்ல. அது ஒரு பொங்கு மாங்கடல். உரிக்க உரிக்க வெறும் தோலாக வந்து கொண்டிருக்கும். அடக்க முயற்சித்தால் எகிறும். மனதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க அது தானாய் சுருங்கத் துவங்கும். அதாவது எண்ணங்கள் குறையும். இது பற்றி இதற்கு மேல் சொல்ல முடியாது. ஏனெனில் இது சொல்லில் அடங்காது. இது அனுபவித்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

வாழ்க்கையில் எல்லா வகையிலும், எல்லா வயதிலும் ஆன்மிகம் எவ்வாறு உதவும் என்று விளக்குவீர்களா? – இரா. துரைபாரதி, திருவிடைமருதூர்.
அமைதியான நெறிப்பட்ட வாழ்க்கைக்குப் பெயர் ஆன்மிகம். இதற்கு வயதெல்லாம் ஒன்றுமில்லை. அறுபது வயதிற்கு மேல் சிலர் போடுகின்ற வேஷத்திற்குப் பெயர் ஆன்மிகமில்லை.

எங்கள் ஊர் இலக்கியக் கூட்டத்தில் பிரபஞ்சன் உங்களைக் கடுமையாக தாக்கிப் பேசினாரே? தரம் தாழ்த்தி விமர்சித்தாரே? 
– அகல்யா, சிவகங்கை.
பிரபஞ்சனா? தரம் தாழ்த்தியா? ஒரு நாளும் அப்படிப் பேசியிருக்க மாட்டார். அபிப்ராய பேதமிருந்திருக்கும். அதை வெளியிட்டிருப்பார். நான் அபிப்ராய பேதங்களை வெளியிடுவதேயில்லை. குறிப்பாய் எழுத்தாளர்களைப் பற்றி விமர்சிப்பதே இல்லை. இங்கு எழுதுவதே இருபது பேர். இவரைப் பற்றி அவர், அவரைப் பற்றி இவர் என்று சண்டைகள் எதற்கு?

ஒருவன் வாழ்க்கையில் உயர தன்னம்பிக்கையும் உழைப்பும் மட்டும் போதுமா? – து. சிவா, முசிறி.
இறையருளும் வேண்டும்.

பிறர் முன் நம்மை மட்டம் தட்டிப் பேசும் நபர்கள் பற்றி…. - முகவை. முத்துசாமி, தொண்டி.
தன்னை உயர்த்திக்கொள்ள பிறரை மட்டம் தட்டுவது மனிதர்கள் வழக்கம். மட்டம் தட்டுகிற நபர்கள் பலவீனர்களாய், மாட்டிக்கொண்டு விடுவோமோ என்கிற இடைவிடாத பயமுள்ளவர்களாய், தன் தகுதியை விட அதிகமான பதவி வேண்டும் என்று ஆசைப்படுபவர்களாய் இருக்கிறார்கள்.

புறங்கூறலும், மட்டம் தட்டுவதும் ஒரு நோய். அவர்களிடம் கவனமாய் சமையத்திற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை அன்பால் திருத்த முடியாது. அவர்கள் தானாக அடிபட்டு திருந்துவதை நான் பார்த்திருக்கிறேன்.