சனி, 21 ஜூன், 2014

ஹிந்தி தெரியுமா?

(ஒடிஸா வாழ் அனுபவங்கள்)
நான் இந்த ஒடிஸா மாநிலத்துக்கு வேலைக்கு வந்தபோது (2006) எனக்கு ஹிந்தி அரை குறையாகத்தான் தெரியும். இருந்தும் வேலையை ஒப்புக் கொண்டேன். அரை குறை இந்தியையும் கற்றுக்கொண்டது இந்தியாவில் இல்லை என்பது இன்னொரு சுவாரஸ்யம். அதை இன்னொரு சமயம் எழுதுகிறேன். 

ஆங்கிலத்தை வைத்து சமாளித்து விடலாம்தான். ஆனால் எனக்கு அதுவும் சவாலாகத்தான் இருந்தது. ஏனென்றால் நமது கல்வி முறை அப்படி! ஆங்கிலம் ஒரு பாடமாக பனிரெண்டாம் வகுப்பு வரை படித்திருந்தாலும் தமிழ் வழியில் அதுவும் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்ததால் அந்த ஆங்கிலத்தின் தரம் எப்படி என்பது புரியும்தானே?!

அதற்கு மேல் கல்லூரிப் படிப்புக்காக போயிருந்தால் ஆங்கிலத்தில் பேசுவது அத்தனை சிரமமாக இருந்திருக்காது. தொழிற்கல்வி பயின்று உடனே வேலையிலும் சேர்ந்து விட்டதனால் ஆங்கிலத்தில் என்னுடைய புலமையை வளர்த்துக் கொள்ள (அதாவது சரளமாகப் பேச) எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆக ஆங்கிலமும் அரை குறை, இந்தியும் அரை குறை. இந்த லட்சணத்தில்தான் நான் இந்த மாநிலத்துக்கு தொழிற்கல்வி ஆசிரியனாக பணிக்கு வந்து சேர்ந்தேன்.

எனக்கு எப்போதுமே ஊர் சுற்றப் பிடிக்கும். புதிய ஊர், புதிய மக்கள் புதிய இடம் என்றால் எனக்கு அலாதி ஆனந்தம். மொழி பற்றிய சிந்தனையோ பயமோ எனக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை. போய்த்தான் பார்ப்போமே என்கிற அசட்டுத் துணிச்சல் அதிகம். அப்படித்தான் ஒரு சமயம் 1992-ல் இராணுவத்தில் பணிபுரியும் எனது உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக நண்பர் ஒருவருன் அஸாம் மாநிலம் வரை சென்று வந்த அனுபவம் இன்றுவரை மறக்க முடியாத நிகழ்வாக மனதில் உறைந்து கிடக்கிறது. மொழி தெரியாது, இடம் தெரியாது. எப்படி யாரைக் கேட்பது என்று என்று எதுவுமே தெரியாமல் முதல் தொலைதூரப் பயணமாக அது இருந்தது.

இந்த வேலைக்கு வந்து சேர்ந்ததும் என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி ஹிந்தி தெரியுமா? என்பதுதான். ஓரளவிற்குத்தான் தெரியும் என்றாலோ அல்லது தெரியவே தெரியாது என்றாலோ என்மீது ஆரம்பத்திலேயே அவநம்பிக்கை வந்துவிடும் என்பதால் நான் ‘ஹிந்தி பேச மட்டும்தான் தெரியும், எழுதவோ படிக்கவோ தெரியாது என்றேன். ஏன் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்காரன் என்பதால் நான் ஹிந்தி பேசுவதே அவர்கள் பெரிய விஷயமாக நினைத்திருக்கலாம்.

ஏனென்றால் இங்கு நான் வகுப்பெடுக்க வேண்டியது ஆங்கிலத்தில் அல்ல. ஹிந்தி மொழியில்தான். தொழிற்கல்வி பயில வந்திருப்பவர்கள் எல்லோரும் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களே! அவர்களுக்கு ஆங்கிலத்தில் வகுப்பெடுத்தால் புரியாது, என விளக்கப்பட்டது. ஆனாலும் நான் உள்ளூர பயந்து கொண்டுதானிருந்தேன். முதன் முறையாக ஹிந்தி கற்றுக் கொள்ளாமல் இருந்ததற்காக வருத்தம் ஏற்பட்டது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்மேல் கோபம் உண்டானது.

எல்லாம் கொஞ்ச காலம்தான். அவர்களோடு பேசப்பேச, சக பணியாளர்கள், கடைத்தெரு, உணவு விடுதி என எங்கும் ஹிந்தியில் மட்டுமே பேசியாக வேண்டிய நிலை. ஒரிய மொழி அவர்களுக்குள் பேசிக்கொண்டாலும் என்னிடம் ஹிந்தியில்தான் பேசியாக வேண்டிய கட்டாயம். இதனாலெல்லாம் விரைவிலேயே நான் சரளமாக பேசக்கூடிய நிலையை அடைந்தேன்.

இப்போது தமிழ்நாட்டு நிலைக்கு வருவோம். ஹிந்தியை நாம் ஏன் கற்கக் கூடாது?! தாராளமாக கற்கலாம். யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள். திணிக்காதே என்பதுதான் பலரது வாதம். நானும் இதற்கு உடன்படுகிறேன். என்னைப்போல இப்படி வெளிமாநிலங்களில் வந்து வேலை செய்யும்போது ஹிந்தி பேச அது உறுதுணையாக இருக்கும்தானே என்ற வாதம் முன் வைக்கப்படலாம். ஆனால் உண்மை நிலை என்ன?

தற்போதைய இளைய சமுதாயம் தாய் மொழியான தமிழையே சரிவர பிழையில்லாமல் எழுதவோ, படிக்கவோ இயலாத சூழ்நிலையில்தான் வளர்கிறார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

இதுவரை ஆங்கிலம் இரண்டாவது மொழியாக கற்பிக்கப்பட்டு வந்தாலும் ஆங்கிலத்தில் சரளமாக எழுதவோ, பேசவோ படிக்கவோ நம் பிள்ளைகளால் முடிகிறாதா?

ஆம் என்பது உங்கள் பதிலாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். அப்படியே சிலர் ஆமென்றாலும் அது சென்னையைப் போன்ற மாநகரங்களில் வேண்டுமானால் சாத்தியமாகி இருக்கலாம். சிறிய நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளின் ஆங்கில அறிவைப் பற்றி அறிய புதிய ஆராய்ச்சியெல்லாம் தேவைப்படாது! அரசுப்பள்ளிகளை மட்டுமே நான் இங்கு குறிப்பிடவில்லை. சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கூட இதில் சேர்த்திதான்.

காரணம் எல்லாரும் அறிந்ததுதான். ஆசிரியர்களின் தரம்! அரசு ஆசிரியர்களோ எந்தவித அக்கறையுமின்றி வந்து போகிறவர்கள். தனியார் பள்ளிகளிலோ தகுதியே இல்லாத ஆசிரியர்கள் என ஏகத்துக்கும் இதைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம். ஏனென்றால் பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே ஆங்கிலம் சரளமாக பேசத்தெரியாது என்பதுதான் நிலை. அதைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன். ஆக இத்தனை ஆண்டு காலம் தமிழையும், ஆங்கிலத்தையும் படித்தாலும்  அதிலே திறமையான மாணவர்கள் உருவாவது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.

இதில் ஹிந்தியையும் படிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினால் இதனால் ஏதாவது பலன் கிடைக்குமா? விருப்பப்படுபவர்கள் தனியார் கல்வி நிலையங்களில் படித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லேயே! ஹிந்தி ஆசிரியர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? ஏதோ சில சான்றிதழ் படிப்பு படித்துவிட்டு ஓரளவிற்கு எழுதப் படிக்க கற்றுக் கொண்டவர்கள்தான் இங்கே ஆசிரியர்கள்! அவர்களுக்கு ஹிந்தி பேசவே தெரியாது! அவர்களிடம் கற்றுக்கொண்டு ஹிந்தியில் புலமை பெற்று வடநாட்டில் போய் வேலை செய்யலாம் என்பது எத்தனை முட்டாள் தனமான வாதம்?!

‘’சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’’ என்பது மாதிரி, ஒரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அந்த இடத்திலும் சூழ்நிலையிலும் நாம் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அது தன்னாலேயே கைவரப்பெற்று விடும் என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டிலிருந்து அலையலையாய் எல்லோரும் வட நாட்டிற்கு வேலை தேடிப்போய்க் கொண்டிருக்கவில்லை. மாறாக இன்றைய சூழ்நிலையில் அவர்கள்தான் படிப்புக்காகவும், வேலைக்காகவும் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!

இன்று எனக்கு தமிழ், ஆங்கிலம் தவிர்த்து கன்னடமும் ஹிந்தியும் சரளமாக பேசத்தெரியும், மலையாளமும் பேச முடியும். தெலுங்கு பேசுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரிய மொழி முழுவதுமாக புரிந்து கொள்ளவும், ஓரளவிற்கு பேசவும் முடியும். இதெல்லாம் எந்தப் பள்ளியில் கற்றுக் கொண்டேன்? ஆர்வமும் சூழலுக்குத் தகுந்த மாதிரி நம்மை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருந்தால் ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது அத்தனை கடினமான விஷயமில்லை.

இந்த ஹிந்தித் திணிப்பின் முழுமையான அரசியலை படிக்க வேண்டுமானால் தமிழ் ஃப்யூசர் என்ற வலைத்தளத்தில் சதுக்க பூதம் என்ற பெயரில் எழுதும் இவரின் இந்த பழைய இடுகைகளைப் படித்துப் பாருங்கள். சுட்டி; இந்தித் திணிப்பு, மெக்காலே கல்வித்திட்டம், தேவை இந்தி - பள்ளியில் ஒரு உடனடி மாற்றம்). எந்த மொழியையும் கற்பதற்கும் கற்றுக் கொள்வதற்கும் யாரும் விரோதி இல்லை. அதை வலிந்து திணிப்பதன் நோக்கமும் அதன் உள் அரசியலையும் புரிந்து கொள்ளாமல் இதற்கு வக்காலத்து வாங்கினால் அதன் எதிர்மறைப் பலன்களை அனுபவிக்கப் போவது நாம் அல்ல. நம் சந்ததியினர்.!
இன்னும் இருக்கு…
 

புதன், 18 ஜூன், 2014

கலிங்க நாடும் கலிங்க நகரும்

(ஒடிஸா வாழ் அனுபவங்கள்)

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாகிறது இந்த ஒடிஸாவிற்கு வந்து. ஒரிஸா ஒடிஸா ஆவதற்கு முன்பே இங்கே வந்தாகிவிட்டது. ஆனாலும் ஒடிஸாவை முழுதாக சுற்றிப்பார்க்கும் வாய்ப்புதான் கிடைக்கவில்லை. இங்கு என்னோடு பணி புரிபவர்கள் எல்லாருமே இந்த மாநிலத்துக்காரர்கள் என்பதால் என்னோடு ஊர் சுற்ற யாரையும் துணைக்கழைக்க முடிவதில்லை.

அதுவும் தவிர நான் 2006-ல் முதன் முதலாய் ஒரிஸாவிற்கு பணிக்கென வந்தபோது என்னை அனுப்பிய இடம் காடும் காடுசார்ந்த பகுதியுமான கலிங்கநகர் தான். ஒரு காலத்தில் கலிங்கநாடு என்றழைக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியாதலால் இதற்கு இந்தப்பெயர் வந்திருக்கக்கூடும்! பெயரில்தான் நகர் இருந்தது. உண்மையில் இங்கே அப்போது ஒரு சிறிய சிறிய குக்கிராமங்களும், மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களின் வாழ்விடங்களும்தான்.

 
நாட்டின் மிகப்பிரபலமான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் குரோமைட் தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைந்த பகுதிதான் நான் பணிபுரிய வந்த இடம். கிட்டத்தட்ட 60 கி.மீ. தெலைவில் ஒரு சின்ன இரயில் நிலையம். அங்கிருந்து இந்த 60 கி.மீ. பயணிக்க கிட்டத்தட்ட 4 மணி நேர பயணம் செய்ய வேண்டிய மோசமான சாலை வசதி எனஇந்த சூழ்நிலைகளைப் பார்த்தாலே வேலையே வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடிப்போவார்கள்.

டாடா ஸ்டீலின் சுரங்கம் மட்டுமின்றி ஒடிஸா அரசின் ஒடிஸா மைன்ஸ் கார்ப்போரேஷன் எனப்படும் OMC, ஜிண்டால் ஸ்டீல்ஸ் உட்பட மற்ற சில நிறுவனங்களின் சுரங்கங்களும் இந்தப் பகுதியில் அடக்கம். கிட்டத்தட்ட 13 சுரங்கங்கள் இங்கு உண்டு. தினமும் வெட்டியெடுக்கப்படும் குரோமைட் தாதுவை பக்கத்திலுள்ள பாரதீப் துறைமுகத்துக்கும், அதனதன் தொழிற்சாலைகளுக்கும்  கொண்டு செல்லவதற்கு இருக்கும் இந்த ஒரே ஒரு மோசமான சாலையில் ஆயிரக்கணக்கான லாரிகள் பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

தப்பித்தவறி இதில் ஏதாவது ஒரு லாரி பழுதுபட்டு நடு வழியில் நின்று விட்டால் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும் என்றால் நிலைமை எப்படி என்பது புரியும் அல்லவா? அப்படி ஒரு சமயம் ஒரு இரவு முழுவதும் சாலையிலேயே காத்திருந்த சம்பவங்களும் உண்டு.


இந்த சுரங்கம் அமைந்திருக்கும் பகுதிகள் அனைத்தும் பொதுவாக சுகிந்தா என்றழைக்கப்படுகிறது. சுகிந்தா என்ற பெயரில் ஒரு பெரிய ஊரும் அருகில் உள்ளது. அங்கு முன்பொரு காலத்தில் ஒரு சிற்றரசர் இந்தப்பகுதியை ஆண்டு வந்திருக்கிறார். அதற்கு சாட்சியாக ஒரு பழைய காலத்து அரண்மணை இடிபாடுகளுடன் காணப்படுகிறது. அவரின் வாரிகள் இன்றும் இங்கு மதிக்கப்படுகிறவர்களாக இருக்கிறார்கள்.

பத்தொன்பதாம் நாற்றாண்டின் தொடக்கத்தில் இங்கே இரும்புத்தாதும், குரோமைட் தாதும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின் இந்த சுகிந்தா ராஜாவிடம் அப்போதைய டாடா ஸ்டீல் நிர்வாகமும், அரசும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்ட பின்புதான் இங்கே தாதுக்களை வெட்டியெடுக்க ஆரம்பித்தார்கள். அப்போதைய ஒரு டன் தாதுவின் விலை என்ன தெரியுமா வெறும் 15 ரூபாய் !

இயற்கை எழில் கொஞ்சும் இந்தப்பூமி உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் மாசடைந்த பத்து இடங்களுள் ஒன்றாக இருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

பண்டைக் காலத்தில் கலிங்கநாடு என்றழைக்கப்பட்ட நிலப்பரப்பில் ஒரு பகுதிதான் இன்றைய ஒடிஸா. வரலாற்றுச் சம்பவங்களுக்கும் இந்த மாநிலம் சளைத்ததல்ல. தென்னிந்தியாவிலிருந்து சோழ அரசர்கள் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து வெற்றி வாகை சூடிய நிகழ்வுகளும், அசோகச் சக்ரவர்த்தி இந்த நாட்டின் மீது படையெடுத்து பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மாண்டு ரத்த ஆறு ஓடுவதைப் பார்த்து மனம் வருந்தி இனி எந்த நாட்டின் மீதும் படையெடுப்பதில்லை என்று முடிவு செய்து புத்த மத்த்தைப் பரப்புவதைக் குறிக்கோளாய்க் கொண்டு மனம் மாறியதும் இந்தப் பூமியில்தான்.

உலகப் புகழ் மிக்க பூரி ஜகன்நாதர் ஆலயமும், உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படக்கூடிய சிறப்பு பெற்ற கொனார்க் சூரியனார்க் கோவிலும், பழம் பெருமை வாய்ந்த லிங்கராஜ் ஆலயமும் இந்த ஒடிஸாவில் தான் இருக்கின்றன. தசரா, துர்கா பூஜை, காளி பூஜை போன்றவை இங்கு விஷேஷமாக கொண்ட்டாடப்படும் பண்டிகைகள்.

இது தவிர்த்து நிலக்கரி, குரோமைட், இரும்புத்தாது, பாக்ஸைட் போன்ற தாது வளங்கள் நிரம்பிய பூமி இது. புகழ் பெற்ற ரூர்கேலா இரும்பு உருக்குத் தொழிற்சாலையும், நால்கோ என்றழைக்கப்படும் நேஷனல் அலுமினியம் நிறுவனமும், ஜிண்டால் குழும நிறுவனங்களும் இங்கே உண்டு.

உலகிலேயே மிக நீளமான ஹிராகுட் அணையும் இந்த ஒரிஸாவில்தான் இருக்கிறது. மகாநதி இங்கேதான் பாய்ந்தோடுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உப்பு நீர் ஏரி (சிலிகா) இங்குதான் இருக்கிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்த மண்ணில்தான் பிறந்தார். ஒடிஸாவின் தென்பகுதி ஆங்கிலேய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் இருக்கு….
 

திங்கள், 9 ஜூன், 2014

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது - தமிழ்ப்பித்தன்

1956-ம் ஆண்டு! அப்போது நான் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் தென்றல்வார ஏட்டில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வந்தேன். அந்நாளில் திரைப்படப் பணிக்கெனத் தனி உதவியாளர் அவருக்குக் கிடையாது. அதனால் வசனம் எழுதுவது என்றாலும் பாடல் அமைப்பது என்றாலும் அந்தப் பணிகளுக்கு என்னையும் மற்றொரு துணை ஆசிரியரான நண்பர் தென்னரசு அவர்களையும் உதவியாளராகப் பயன்படுத்தி வந்தார்.

கவியரசர் வசனம் எழுதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரன்அப்போது வெளியாகி இருந்தது. வெற்றி நடைபோட்ட அந்தப் படத்திற்கு அற்புதமாக வசனம் எழுதியிருந்தார் கவியரசர். பெரும்பான்மையான காட்சிகளுக்குரிய வசனங்களை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதினேன். 1955-ம் ஆண்டிலிருந்தே தம் கைப்பட எழுதுவதை நிறுத்திவிட்டு டிக்டேஷன் முறையை அவர் மேற்கொண்டிருந்தார்.  

மதுரை வீரனுக்குரிய வசனங்களில் எல்லாம் கவிதை மிதந்தது; புலமை பொங்கியது; நகைச்சுவை ததும்பியது; வீரம் மின்னியது. ஆனால் எனக்கு மட்டும் வேதனைஏக்கம் ஏற்பட்டிருந்தது. மக்கள் திலகம் முழக்கமிடும் வசனங்களின் வரி வடிவங்களைப் பார்க்கும் வாய்ப்புதானே கிடைத்திருக்கிறது. அவரை சந்தித்துப் பேசுகிற வாயப்பு கிடைக்கவில்லையே என்பதுதான் அந்த ஏக்கம்.

ஏக்கம் விரைவில் மறையும் என்ற நம்பிக்கையை கொடுத்தது, கவியரசரும், பி.வி. கிருஷ்ணன் என்னும் காமிரா நிபுணரும் கூட்டாகச் சேர்ந்து ஸ்வஸ்திக் பிலிம்ஸ்என்னும் நிறுவனத்தைத் தொடங்கிய சேதி. அவர்கள் தயாரித்த பவானிஎன்னும் படத்தில் மக்கள் திலகம் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

பவானிதிரைக்கதையை எழுதுவதில் ஈடுபட்டிருந்த கவியரசர் ஒருநாள் காலையில் என்ன அழைத்துச் சொன்னார், இன்னிக்கு சாயந்தரம் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு நாம போறோம். ‘’ஸ்டோரி டிஸ்கஷனுக்குத் தயாரா இருங்க’’.

அந்தச் சேதி எனக்குத் தேனாக இனித்தது. காலையிலிருந்தே மாலை நேரத்தை எதிர்பார்த்துக் கனவுலகில் பவனி வரத்தொடங்கினேன். மக்கள் திலகம் அவர்களை முதன் முறையாக அவரது வீட்டிற்கே சென்று நேரில் பார்க்கப்போவதை எண்ணி மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தினேன்.

மாலை 6 மணியளவில் லாயிட்ஸ் தெருவில் இருந்த அவரது இல்லத்திற்கு கவியரசரும் நானும் சென்றோம். கவியரசரைக் கண்டதும் தாமரை மலர் போல் மலர்ந்து வரவேற்றார் அவர். அவரைக் கண்டதும் மன்மதனைப் பார்த்து விட்டோம் என்று என் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

கவியரசர் என்னை அறிமுகம் செய்து வைப்பார் என்று நினைத்தேன். அந்த மறதி மன்னர் மறந்துவிட்டார். ஆனால் மக்கள் திலகம் அவர்கள், என்னைச் சுட்டிக்காட்டி இவர் யார்?’ என்று கவியரசரிடம் கேட்டார். இவர் நம்ம தென்றல்சப்-எடிட்டர்! தமிழ்ப்பித்தன்னு பேரு. மதுரைக்காரர்! தமிழிலே ஆர்வம் உள்ளவர். கவிதை இலக்கணம் எல்லாம் நல்லா தெரிஞ்சவர், என்று அறிமுகம் செய்தார்.

உடனே மக்கள் திலகத்திற்கு வணக்கம் செலுத்தினேன். புதியவனான என்னைக் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில் அவர் காண்பித்த அக்கறை எனக்கு வியப்பை அளித்தது. அந்த நினைவு இன்றும் என் மனதில் ஆனந்தக் கும்மியை ஆடச் செய்து வருகிறது.

பவானி திரைக்கதையை மக்கள் திலகத்திடம் கூறத் தொடங்கினார் கவியரசர். சில காட்சிகளை அவர் ஏற்றுக்கொண்டார். சில காட்சிகளை மாற்றி அமைக்கும்படி ஆலோசனை கூறினார். கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே எங்களுக்கு நேந்திரங்காய் சிப்ஸ் வழங்கப்பட்டது. அதனைச் சில வினாடிகளில் நாங்கள் தீர்த்து விட்டோம். ஆகவே மேற்கொண்டும் எங்களுக்கு சிப்ஸ் தருவதற்கு நினைத்த மக்கள் திலகம் அவர்கள், தமது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியை அவர்களை அழைத்து, ‘’இன்னும் கொஞ்சம் சிப்ஸ் கொண்டு வாங்க அண்ணே’’ என்றார்.

சில வினாடிகளில் எம்.ஜி.சி. அவர்கள் சிப்ஸ் கொண்டு வந்து தந்தார். அது போதுமானதல்ல என்பதை மக்கள் திலகம் உணர்ந்தார். மறுவினாடி, ஒரு துள்ளளுடன் சோபாவை விட்டு எழுந்து உள்ளே சென்றார். சிப்ஸ் இருந்த பாக்கட்டையே கொண்டு வந்துவிட்டார். எங்கள் பிளேட்டுகளில் சிப்ஸை நிரப்பிவிட்டு, தமது அண்ணனை நோக்கி வெற்றிப் புன்னகை புரிந்தார். அந்தக் காட்சி இன்னும் என் கண்களில் நிலைத்து நிற்கிறது.

எல்லோருக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கவேண்டும். அனைவரின் பசியைப் போக்க வேண்டும் என்ற நற்கொள்கைகள் எல்லாம் இவரது இதயத்தில் மண்டிக் கிடப்பதை அந்த முதற் சந்திப்பிலேயே நான் தெரிந்து கொண்டேன். அவரை வாழ்த்தத் தொடங்கியது எனது நெஞ்சம்.

தமிழ்ப்பித்தன்.