வெள்ளி, 23 மே, 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை VI



ண்பர் சந்தானத்தின் வீட்டிற்கு சென்று, இரவு உணவு உண்டபின், அவர் ஆல்பம் ஒன்றை எங்களுக்கு காட்டினார்.   ல்அதி முதலில் இருந்தது அமரர் அண்ணதுரையின் படம்தான். அண்ணாதுரை மறைந்தது, நாம் செய்த துரதிர்ஷ்டம். அண்ணாதுரை இன்னும் கொஞ்ச காலம் நம்மோட இல்லாமப் போயிட்டார்...'என்றார்  சந்தானம். 'அண்ணா மறைந்து விட்டார், போய் விட்டார்' என்றுதான், அந்த நல்லவரின் வாயிலிருந்து வெளிவந்ததே தவிர, 'இறந்து விட்டார்...' என்ற சொல்லைப் பயன்படுத்தவே இல்லை. அப்படியானால், மறைந்தவர் திரும்ப வரலாம் என்று தானே அர்த்தம் .
 

இப்படிப்பட்ட கற்பனைகளுக்கு என்னை ஆளாக்கி விட்ட சந்தானம், எதைப் பற்றியும் சிந்தியாத களங்கமற்ற உள்ளத்தோடு, எங்களை ஓய்வெடுக்கச் செய்யவும், அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கவும், முனைந்தார். சந்தானமும், அவர் குடும்பத்தாரும் கலையுணர்வும், தமிழ் பண்பும் கொண்ட மனிதர்களாக விளங்கினர்.

அந்த நடு இரவிலும், எங்களுடன் ஓட்டல் வரை வந்து, வழியனுப்பிச் சென்றார் சந்தானம். காலையில் சீக்கிரம் எழுந்து விட்டேன். . ஜப்பானிய சினிமா கலை நிபுணர்களும், கான்ட்ராக்டரும் என்னை சந்திப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நான் அதிகாலையில் எழுந்து வெளியே வந்த போது, சந்தானம், எனக்கு முன்னதாகவே ஓட்டலுக்கு வந்திருந்ததைப் பார்த்து திகைத்தேன். இயக்குனர் .நீலகண்டன் காலையில் என்னை சந்திப்பதற்காக குளித்து, காபி சாப்பிட்டு, தயாராக இருந்தார். அவர் எப்போதும் சிக்கனமாக வாழ்பவர்; வீண் ஆடம்பரம் எதையும் அவரிடம் காண முடியாது. தன் குடும்பத்தையும், அப்படியே உருவாக்கியிருந்தார். தான் வாங்கும் அல்லது தன் கண்ணில் படும் எந்தப் பொருளுக்கும், அதன் விலையை தெரிந்து கொள்வது அவரது இயல்பு.

அதன்படி, தான் அருந்திய காபியின் விலையை விசாரித்திருக்கிறார். ஏறத்தாழ பத்து ரூபாய் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்போது இது பெரிய தொகை. நான் வெளிநாடு புறப்படுவதற்கு முன், .வி.எம்.மெய்யப்ப செட்டியார் ஜப்பானுக்குப் போனால் எப்படியெல்லாம் செலவு  வகைகளில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து, ஒரு மணி நேரம், தந்தை, மகனுக்கு சொல்வது போல் உபதேசம் செய்திருந்தார். அவைகளில் ஒன்று, இந்த காபியை பற்றியது.

'ஓட்டலுக்குப் போய் காபி சாப்பிட்டால், பணம் சிறிது குறையும் தான். நாம் இருக்கும் அறைக்கு கொண்டு வரச் சொல்லி சாப்பிட்டால், கொஞ்சம் பணம் அதிகமானாலும், இரண்டு, மூன்று முறை சாப்பிடும் அளவிற்கு இருக்கும். தேவைக்கேற்ப அருந்தி விட்டு, மீதியை, பிளாஸ்க்கில் ஊற்றி வைத்துக் கொண்டால், மேலும், இரண்டொரு முறை சாப்பிட முடியும். இப்படிச் சிக்கனமாக இருக்க வேண்டும்...' என்றும் எடுத்துச் சொன்னார்.

இது, நீலகண்டனுக்கு தெரியாததால், கீழே போய் சாப்பிடலாம் என்று, அனைவரும் கூறிய போது, 'உங்களிடம் விமானத்தில், 'அதைக் கொண்டா இதைக் கொண்டா...' என்று, இலவசமாக வாங்கிக் குடித்ததற்கு தண்டனை இது...' என்று சொல்லிச் சிரித்தார். வெளியில் சிரித்தாலும், வெளிநாட்டில் பணத்தின் நெருக்கடியை உணர்ந்த அவர், உள்ளுக்குள் வேதனைப்படுவது எனக்குப் புரிந்தது. காலை உணவு வெண்ணெய் ரொட்டியுடன் முடிந்திருந்திருந்தது.

'முதலில், படப்பிடிப்பை எங்கே துவங்குவது...' என்று, என்னோடு கலந்து முடிவு செய்ய, என் அறைக்கு வந்தார் இயக்குனர்  .நீலகண்டன். நான், சித்ரா கிருஷ்ணசாமி, இயக்குனர் ஆகிய மூவரும், இதைப் பற்றி விரிவாகப் பேசினோம். எங்களுக்கு உதவும் பொறுப்பை  ஏற்றுக்கொள்ள சம்மதித்த, ஜப்பானிய சினிமாத் துறையினரை சந்தித்த பின் தான், முடிவெடுக்க இயலும் என்ற நிலையில், அந்த நண்பர்கள் வரும் வரை  காத்திருந்தோம். அவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு, ஒரு நிமிடம் கூட தாமதியாமல், ஓட்டலுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுடன் பேசியபின், ஒரு முடிவுக்கு வருவது எளிதாக இருந்தது.

நாங்கள் கொண்டு போயிருந்த பாடல்களை, டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து தர, கேட்டுக்கொண்டோம். ஒசாகா நகரில் நடக்கும் எக்ஸ்போவில் முதலில் படப்பிடிப்பை துவக்குவதென்று முடிவு எடுத்தோம். அன்று மாலை  6 மணிக்குஆல் நிப்பான் ஏர்வேஸ்' என்ற விமானத்தில், ஒசாகாவுக்கு புறப்பட்டோம். நாம் ஜப்பான் என்று சொல்வதைத்தான் அவர்கள்,  ஜப்பானிய மொழியில், 'நிப்பான்' என்று, சொல்கின்றனர்.

எங்கள் பொருட்கள் வண்டியிலிருந்து இறக்கி வைக்கப்பட்டன. நம் உடைமைகளை நாம் தானே எடுத்து வைக்கவேண்டும். நானோ நம் தமிழக உடையான, வேட்டி, ஜிப்பாவோடு இருந்தேன். வேட்டியை மடித்துக்கொண்டு  வேலை செய்ய இயலாத வெளிநாட்டுச் சூழ்நிலை. தம்பி நாகேஷூம், அசோகனும் கடமையுணர்வோடு, பெட்டிகளையும், மற்ற சாமான்களையும் போட்டி போட்டு தூக்கிச் சென்று வைத்ததையும், இளம் பெண்களும், மற்றவர்களும், தங்கள் வலிவுக்கும் மேலாகவே உதவுவதையும் கண்ட நான், திகைத்துப் போனேன்.

நானும் ஒத்துழைக்காமலில்லை என்றாலும், என் உடை எனக்கு கொஞ்சம் கூட ஒத்துழைப்பு தரவே இல்லை. மற்றவர்களோடு சேர்ந்து, நானும் என் கடமையை செய்ய முடியவில்லையே என்ற வேதனையோடு, ஒசாகாவுக்கு புறப்பட்டோம்.

விமானத்திலிருக்கும் போது எத்தனையோ எண்ணங்களுக்கிடையே, 'ஒசாகாவில் இறங்கும் போது  பெட்டிகளைத் தூக்க வேண்டி வருமே...' என, என் உடையை பற்றி சிந்தித்து, ஒசாகா போய் சேருவதற்கு முன், உடைகளை மாற்ற வேண்டும் என, முடிவு செய்தேன். ஆனால், எந்தப் பெட்டியில் என் உடைகள் இருக்கின்றன என்று, எனக்குத் தெரியாது. எனவே அதைப் பற்றி, பெண்களுக்கிடையில் உட்கார்ந்திருந்த, என் மனைவியிடம் கேட்டேன். அவள் சிரித்தவாறு,  'உங்கள் உடைக்காக பெட்டியைத் தேடிப்போக வேண்டாம்; இந்த பெண்களிடம் கேட்டால் கிடைக்கும். ஆனால், அவர்கள்  யாரிடமும் அதைத் தர தயார் இல்லை. வேண்டுமானால் நீங்களே கேட்டுப் பாருங்கள்...' என்றாள்.

எனக்கு ஏதும் புரியவில்லை. 'என் உடையை இவர்களிடம் யார் கொடுத்தது... அதை,  இவர்கள் எப்படித் தூக்கிக் கொண்டு வருகின்றனர். என் உடைகள்தான் என்று இவர்களுக்குத் தெரியுமா? இப்படிப் பல கேள்விகளை எனக்குள்ளே கேட்டுக் கொண்டு, பெண்களிடம், 'என் பெட்டி ஏதாவது உங்களிடம் இருக்கிறதா?' என்று கேட்டேன்.  அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, ஒருவர் மற்றவரிடம், 'நீ கொடுடி சந்திரகலா...' 'நீ மொதல்ல கொடேன் மஞ்சுளா...' 'நீயாவது கொடேண்டி லதா...' என்று, மாறி மாறி கோரிக்கை வைத்தனர்.
நான் திகைத்தவாறு கேட்டேன்... 'ஆமா நீங்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெட்டியை வெச்சிருக்கீங்களா? நான் விமானத்துக்கு வரும் போது, அப்படி எந்தப்பெட்டியும் உங்ககிட்ட இருக்கிறத பாக்கலேயே...'என்றேன்.

சந்திரகலா சிரித்தவாறு, 'இல்லீங்க சார், நாங்க மூணு பேருமே மூணு பெட்டிகள வெச்சிருக்கோம், நாங்களும், எங்களால் முடிஞ்ச அளவு சுமையை தூக்கணும்ன்னு ஏற்பாடு. இதில் யாராவது முதல்ல கொடுத்துட்டா, அவளுக்கு, ஏதும் தூக்கிட்டு வர சாமான் இருக்காது. அதனால தான் தான் இந்தப் போட்டி...' என்றாள். 'மூணு பேரும் ஒண்ணாக் கொடுத்திடுங்க...'என்று, சொல்லி வாங்கிக் கொண்டேன்.

அந்த மூன்று பெட்டிகளும்  துணிகள் வைக்கக்கூடிய  பெட்டிகளலள்ல; கடையில் கொடுக்கப்படும் அட்டைப் பெட்டிகள். இவைகளை அவர்கள் வைத்திருப்பதை நான் பார்த்திருப்பினும், அவைகள் அந்தப் பெண்களின் பொருட்கள் என்று எண்ணியிருந்தேன். என்னிடம் ஒரே சமயத்தில் எல்லோரும் கொடுத்தனர். வேட்டி, சட்டையோடு ஜப்பானில் விமானமேறிய நான், ஒசாகாவில் ஆங்கிலப் பாணியில் பேன்ட், ஷர்ட்டோட இறங்கினேன்.

என்னோடு வந்த பலருக்கு ஒரே திகைப்பு. இவர் எப்போது எப்படி உடைகளை மாற்றினார் என்று! அன்புக்குரிய நண்பர் மணியன், என்னைப் பார்த்து ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.  
-          தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
-          விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
 எம்.ஜி.ஆர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!