புதன், 7 மே, 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை V



டோக்கியோ விமான நிலையத்தை அடைந்ததும், நாகேஷ் தீடீரென்று மயங்கி விழுந்தார். அங்கு என்னைக் காண வந்திருந்த பத்திரிகையாளர் மணியன், எங்கோ விரைந்து சென்று, சிறிது நேரத்திற்கெல்லாம், ஒரு டாக்டரோடு வந்தார். அந்த டாக்டர் பரிசோதித்து, 'பலவீனம்; ஓய்வு எடுத்தா சரியா போகும்...' என்றார். வேண்டுமாயின், நர்சிங் ஹோமில் சேர்க்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். சிறிது விவாதத்திற்குப் பின், வேண்டாமென்று முடிவு செய்தோம்.

அதற்குள் நாகேஷுக்கு, கொஞ்சம் சரியானது. மெல்ல எழச் செய்து, வேறு ஒரு இடத்தில் இருந்த சோபாவில் உட்கார வைத்து, விவரம் கேட்டேன். அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டோம்.

நாகேஷை, அந்த நிலையில் விட்டுவிட்டு, நான் மட்டும் எப்படி டோக்கியோவிற்குள் நுழைவது? நாகேஷ் ஓரளவிற்கு குணமாகும் வரை, காத்திருந்து, பின், ஓட்டலுக்குப் புறப்பட்டோம். அவரும், வேறொரு காரில் வந்தார். அவருக்கு துணையாக அசோகனை தங்க வைக்க, ஏற்பாடு செய்திருந்தேன்.

விமான நிலையத்தில், ஏர் பிரான்ஸ் கம்பெனி குழுவினர் படம் எடுத்தனர்.
பாங்க் ஆப் இந்தியாவில், பணிபுரியும் நண்பர் சந்தானம், அவரது மனைவி நிர்மலா மற்றும் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் ஜெயராமன் ஆகியோர் வந்திருந்தனர்.

சந்தானத்தின், இரு குழந்தைகளும் ஜப்பானிய உடை அணிந்திருந்தனர். சில ஜப்பானியப் பெண்கள் எனக்கு மாலை அணிவித்து, வரவேற்பு அளித்தனர்.

விமான நிலைய சடங்குகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட பின், டோக்கியோவின் மிகப் பெரிய ஓட்டல்களில் ஒன்றான, இம்பீரியல் ஓட்டலை அடைந்தோம்.

ஓட்டலை அடைந்தோமே தவிர, அறைகள் கிடைக்கவில்லை. எங்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை, மறுநாள் காலையிலிருந்து தான், 'புக்' செய்யப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்ல, இரவு, 12:00 மணிக்கு முன், அந்த அறைக்குச் சென்றோமானால், ஒரு நாள் வாடகை கொடுத்தாக வேண்டும். அதாவது, பதினோரு மணி, ஐம்பத்தொன்பது நிமிடத்தில், அந்த அறைக்குள் நுழைந்தால் கூட, முதல் நாள் வாடகையைச் செலுத்தியாக வேண்டும். எனக்குத் தரப்பட்டிருக்கும் பணத்தின் அளவோ மிகக் குறைவு. எனவே தான், என்னோடு வந்து, பயணத்தினால் சோர்ந்து போயிருந்த பெண்களைக் கூட, உடனே அறைகளுக்கு அனுப்ப முடியவில்லை. அவர்களும் இதை உணர்ந்திருந்த காரணத்தால், எந்தவித மனக்கஷ்டமும் கொள்ளாது, ஒருவருக்கொருவர், சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

இரவு வெகு நேரமாகி விட்டதால், அவர்களுக்கு ரொட்டி, கேக் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாமென்று எண்ணிக் கேட்டேன். பன்னிரெண்டு மணிக்கு மேல், அறைக்குச் சென்ற பின் தான் கிடைக்கும்; அதுவும் முன்னமேயே குறிப்புக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டுமென்று தெரிவித்தனர். எனக்கு, இவைகௌல்லாம் புரியாத புதிராகவே இருந்தது.

இதைக் கேட்டு கொண்டிருந்த பெண்கள், தங்களை அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் கேக், ரொட்டி போன்ற பெயர்களைக் கேட்டதும், அதற்கு மேல் தங்களுக்கிருந்த பசியை மறைக்க சக்தியற்று, ஆவலோடு விசாரித்தனர். அங்கு, அந்த வேளையில் ஏதும் கிடைக்காதென்பதை அறிந்தபோது, என் மீதே, எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

என்னை நம்பி வந்த அந்த இளம் பெண்களுக்கு, முதல் நாளிலேயே பசிக்கு உணவு கொடுக்க இயலாதவனாகி விட்டேனே என்று, வேதனையாக இருந்தது. 'மோராவது கிடைக்குமா?' என்று கேட்டேன்.

என் உடன் வந்திருந்த சந்தானம், இதையெல்லாம் கவனித்து, 'அரை மணி நேரம் அவகாசம் தருவதாயின், உணவு தயார் செய்து விடுவேன். எல்லாரும் சாப்பிடலாம்...' என்றார்.

நான் மரியாதைக்கு, 'வீண் சிரமம் வேண்டாம்; ரொட்டி கிடைத்தாலே போதும்...' என்றேன்.

ஆனால், அவர், 'உங்கள் தகுதிக்குச் ஏற்ற முறையில், உணவு படைக்க எங்களால் இயலாது; ரசம் சாதம், அப்பளம் இவ்வளவுதான் செய்ய முடியும்...' என்று சொல்லியவாறே, எங்களுடைய அனுமதியைப் பெறாமலேயே, தன் மனைவியை வீட்டுக்கு அனுப்பி விட்டார். சாப்பாடு கிடைக்கும் என்று தெரிந்ததும், மூன்று பெண்களின் பேச்சும், சிரிப்பும் மீண்டும் தொடர்ந்தன.

சினிமா உலகத்தில், எத்தனையோ நடிக, நடிகையரை பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட வசதிக் குறைவுகள் நேரிடும் போது, எப்படியெல்லாம் ஆத்திரப்பட்டிருக்கின்றனர், கேவலமாய் பேசியிருக்கின்றனர், தங்களின் தகுதிக்கும் குறைவான செயலில் இறங்கியிருக்கின்றனர் என்பதை, கண்கூடாகக் கண்டறிந்தவன் நான். ஆனால், இந்தப் பெண்கள் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சந்தானம், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவில்லை. அறைகளின் சாவிகளைப் பெறவும், சாமான்களின் எண்ணிக்கையைச் சரி பார்க்கவும், தன் வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதுமாக, 'துருதுரு'வென்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

சிறிது நேரத்திற் கெல்லாம், 'உணவு தயார், போகலாம்...' என்று அழைத்தார். அவரே தன் காரில், எங்களை அழைத்துப் போனார். அவர் வீட்டிற்குப் போனோம். மாடியில் தான், அவரது குடியிருப்பு.

விசாலமான நடுத்தரமான, ஒரு அறையில், மேசை, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சுவரில், கலையழகு நிரம்பிய படங்கள்; சிலை வடிவங்கள். அவைகளில் பெரும்பாலானவை, சந்தானத்தின் மனைவி நிர்மலா கை வண்ணத்தில் மிளிர்ந்தன.

குடும்பத்தின் சிறந்த தலைவி, கணவனுக்கு பண்புள்ள மனைவி, விருந்தினருக்குப் பாசமுள்ள உறவினர், குழந்தைகளுக்கு அன்புத் தாய், இப்படிப்பட்ட, ஒருவர் கையால், உணவு பரிமாறப்பட்டு, உண்டோம்.

வயிறு புடைக்க சாப்பிட்டோம். எங்களின் அதிர்ஷ்டம் அன்று, சந்தானத்தின் தாயார் இந்தியாவிலிருந்து ஜப்பான் வந்திருந்தார். அவர்கள், தின்பண்டங்களைச் செய்து கொண்டு வந்திருந்தார். அவைகளும் எங்களுக்குப் பரிமாறப்பட்டன.

ஜப்பான் நாட்டிற்குப் புதியவர்களாக அடியெடுத்து வைத்த எங்களுக்கு, இரவு, ௧௨:௦௦ மணிக்கு மிகப் பெரிய விருந்தே நடைபெறுகிறதென்றால், தமிழ்ப் பண்பின் தனித் தன்மைக்கு, நற்சான்று என்றுதானே கொள்ள முடியும்.

உணவு உண்டு மூச்சு விடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, சந்தானம் ஒரு சிறிய படம் பிடிக்கும் கருவியையும், படங்கள் ஒட்டப்பட்டிருந்த ஆல்பம் ஒன்றையும் கொண்டு வந்து, எங்களைப் படம் எடுக்க விரும்புவதாய் சொல்லி படமெடுத்தார். அதோடு, அவர் எடுத்த படங்கள் நிறைந்த, அந்த ஆல்பத்தை பிரித்துக் காண்பித்தார்.

அதில், ஒட்டப்பட்டிருந்த படத்தைப் பார்த்து, ஒரு கணம் திகைத்தேன். அது வேறு யாருடைய படமுமல்ல! இதயதெய்வம் அமரர் அண்ணாதுரையின் உருவம்தான். எங்கு சென்றாலும், என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும், அந்த அமரரின் உருவத்தை, திரும்பத் திரும்பப் பார்த்தேன்.

நான், என் வாழ்க்கைப் பாதையில், எங்கெங்கு காலடி எடுத்து வைக்கிறேனோ, வைக்க இருக்கிறேனோ அங்கெல்லாம், அமரர் அண்ணாதுரை முன்சென்று, நான் நடக்கும் பாதைகளை சீர் செய்து, அரசியலிலும், கலைத் துறையிலும் எனக்குத் தேவையான அத்தனையையும் நிறைவேற்றி வைத்திருப்பதை, இன்னமும் நிறைவேற்றி வைப்பதை எண்ணி, என் கைகள், அவர் இருக்கும் திசை நோக்கித் தானாக உயர்ந்தது.

ஜப்பானில் நாங்கள் சந்தித்த சில மணி நேரத்திற்குள்ளாகவே, எங்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்த சந்தானம், இப்போது ஒரு படி உயர்ந்து நின்றார். அவர், அண்ணாதுரை பற்றிச் சொன்ன கருத்து, என்னை மேலும் சிந்திக்க வைத்தது. அது...
தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


-- எம்.ஜி.ஆர்.,

தினமலர் - வாரமலரிலிருந்து ...

தொடர்புடைய இடுகைகள்;
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை - I
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை - II
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை - III
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை - IV  


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!