செவ்வாய், 15 ஏப்ரல், 2014

தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல்


உள்ளாட்சித்தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், தமிழக முதல்வருக்கு அசைக்க முடியாத துணிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தான்தோன்றித்தனம் தொடர்கிறது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பழைய பழக்கமும் வழக்கமாகிவிட்டது.

சென்ற ஆட்சியின் பல நலத்திட்டங்கள், சமச்சீர் கல்வி, புதிய தலைமைச் செயலகம் இப்போது அண்ணா நூலகம் என்று வரிசையாக அவரின் மிக மட்டமான பழிவாங்கல் குணத்தைக் காட்டி வருகிறார். இதெல்லாம் யார்வீட்டு அப்பன் பணத்தில் உருவானவை? நானா திருந்துவேன்? இன்னும் 5 ஆண்டுகள் நான் வைத்ததுதான் சட்டம்! என்று சொல்லாமல் சொல்கிறார்.

நிரந்தர முதல்வர் என்ற கனவில் இருந்த என்னை 1996 ல் ஒருமுறையும், 2001-ல் ஒருமுறையும் வீட்டிற்கு அனுப்பி கொடநாட்டில் என்னை ஓய்வெடுக்க வைத்தீர்கள் இல்லையா? அதற்கு நான் பழிவாங்க வேண்டாமா? என்ற நினைப்பில்தான் முதல்வர் செயல்படுகிறார். அவரின் இலக்கு தி.மு.க.வோ அல்லது கருணாநிதியோ இல்லை. மக்கள்தான்! 

மீண்டும் அடுத்தமுறை வீட்டிற்கு அனுப்பத்தான் போகிறீர்கள். அதற்குள் நான் நினைத்ததை சாதித்துவிட்டுப் போகிறேனே! என்ற தீர்மாணத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா இருக்கிறார். மக்களைப்பற்றி அவருக்கு என்ன கவலை? இனிவரும் 4 வருடங்களும் இந்தக் கோமாளிக்கூத்தை சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.


மற்ற கட்சிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. இவ்வளவு காலம் குதிரை ஏறி சவாரி செய்த கட்சிகள் இன்றைக்கு வேஷம் கலைந்து போய் நிர்கதியாய் ஆகி அரசியல் அனாதைகள் ஆகியிருக்கிறார்கள்..! போராட்டம், மாற்றுக்கருத்து என்று வாய் திறந்தாலே ஜெயிலுக்குத்தான் போக வேண்டிவரும் என்பதால் வாய்பொத்தித்தான் கிடக்க வேண்டியிருக்கும்.

விஜயகாந்தின் அரசியல் இனி கேள்விக்குறிதான். இவரும் இவரது மனைவியும் தங்களை ஏதோ காப்பாற்ற வந்த கடவுள் என்கிற நிலைக்கு நினைத்துகொண்டு "கனவில்" மிதந்தனர்..! விஜயகாந்துக்கு என்று இருந்த "இமேஜ்" உடைந்து போன "மண்சட்டி" போல் இப்போது ஆகியிருக்கிறது. கருணாநிதியை எதிர்த்து வீரவசனம் பேசிய இவர், ஜெயலலிதாவை எதிர்த்து எதுவும் செய்யாமல் செல்லாக்காசாகப் போகிறார்.

தி.மு.க. முடங்கிப் போகுமா இல்லை முஷ்டி தூக்கி எழுமா எனபதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். பா.ம.க. வில் ஏற்கனவே பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. வைகோவின் குரல் அவ்வப்போது ஒலித்து ஒலித்து அடங்கும். கம்யூனிஸ்ட்டுகள் மாற்று இடம் தேடி அலைவார்கள். இப்படித்தான் இருக்கிறது இன்றைய அரசியல் சூழல்.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜிஆரின் மறைவிற்குப் பின் ஜா. ஜெ. போட்டியில் தமிழகமே அசிங்கப்பட்டு ஆளுநர் ஆட்சி சிறிது காலம் அமுல்படுத்தப்பட்டு பின்னர் வந்த தேர்தலில் அதிர்ஷ்டவசமாக, (எம்.ஜி.ஆர் இருந்தவரை தலையெடுக்கவே முடியாமல் இருந்த) தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது.


அந்த நேரத்தில் தினமணி நாளிதழில் அதன் ஆசிரியர் திரு. கஸ்தூரிரங்கனால் எழுதப்பட்ட தேர்தலுக்குப்பின் தமிழக அரசியல் என்ற தலையங்கத்திற்கு வாசகர் கடிதம் பகுதியில் நான் விமர்சனம் எழுதினேன்.   

22 ஆண்டுகளுக்கு முன்பு (பிப்ரவரி 5, 1989) நான் எழுதிய இந்தக் கடித விமர்சனத்தை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தேர்தலுக்குப்பின் தமிழக அரசியல்


ஜெயலிலிதா அணியும், இ.காங்கிரசும் இணைந்து போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்று அவை பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துக் கூறுபவர்களைக் கருணாநிதி கிண்டலாகப் பேசியிருக்கிறார். தொலைக்காட்சியில் பேசும்போது, அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்... என்று பேசுபவர்களுக்கு இந்த உலகமே தோன்றாமலிருந்தால்... என்று கேட்டிருக்கிறார்.


நம்ப முடியாத இந்த வெற்றியினால் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் இவர், தமக்கு கிடைத்திருக்கும் வாக்குகளைவிடத் தமக்கு எதிரான வாக்குகள் அதிகம் என்பதை மறந்தது ஏனோ? வாரிசுப் பிரச்னையினால் கட்சியில் உட்பூசல் ஏற்படாமலிருந்தால், நிலையான ஆட்சிக்கு உத்தரவாதம் கிடைக்கும். இல்லையென்றால் ஆட்சிக்கு குந்தகம் ஏற்படலாம்.




மற்ற அணித் தலைவர்களைவிட (ஜானகியோ, மூப்பனாரோ) ஜெயலலிதாதான் எதிர்கட்சித் தலைவராகச் செயல்படத் தகுதியானவர். தங்களின் கூற்றுப்படி, சட்டப்பேரவையில் தன் எதிர்ப்பாற்றலைக் காண்பித்து மக்களைக் கவருவாரேயானால் அடுத்த பொதுத்தேர்தலில் அவரது கட்சி வெற்றிபெறக்கூட வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அவர் மமதையையும், அகம்பாவத்தையும் எந்த அளவில் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வார் என்றுதான் சந்தேகமாக உள்ளது.

தமிழக காங்கிரஸை தலைமை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்வரை இதன் நிலைமை இப்படியேதான் நீடிக்கும். ஜானகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும், எம்.ஜி.ஆரைப்போல் வரவேண்டும் என்ற சிவாஜியின் ஆசை இனி நிறைவேறாது என்பதும் இந்தத் தேர்தல் முடிவுகளில் தெளிவாகிறது.

(நவம்பர் 2011-ல் எனது மற்றொரு தளத்தில் வெளியான பதிவின் மீள்பதிவு)

எம்.ஞானசேகரன்.

2 கருத்துகள்:

ராஜி சொன்னது… [Reply]

விஜயகாந்த் பற்றிய கருத்து உண்மைதான்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ராஜி அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!