புதன், 30 ஏப்ரல், 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை IV



கம்போடியா, வியட்நாமுக்கு அருகே உள்ள நாடு; விமான நிலையத்தில் சிப்பாய்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. விமான நிலையத்தில் பெரிய, 'பேனர்'கள், சிவப்பு நிற எழுத்துக்களைக் கொண்டு, ஆங்காங்கே காட்சி அளித்தன.

அவற்றில் ஒன்றில் கீழ்க்காணும் வாக்கியங்கள், ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டிருந்தன...

'கம்போடியர்கள் தங்கள் நாட்டை வாடகைக்கு விட மாட்டார்கள்; வியட்காங்குகளோ, வடக்கு வியட்நாமியர்களோ, அதை விழுங்க முடியாது...' வியட்நாம் சண்டை, கம்போடியாவிலும் பரவி விடுமோ என்பது, அன்றைய நிலைமை. அதனால்தான் கம்போடிய மக்கள், இவ்வாறெல்லாம் எழுதி வைத்திருந்தனர். 'பானம் பான்' விமான நிலையத்தில், நாங்கள் கூட்டமாக இறங்கிச் சென்றபோது, அங்கே அமர்ந்திருந்த, அமெரிக்கர்கள், எங்களை வியப்புடன் பார்த்தனர்.

'இந்தியர்கள் எல்லாம், ஏன் இந்தியாவிலிருந்து ஓடி வருகின்றனர்; அங்கே என்ன நேர்ந்து விட்டது?' என்று, ஓர் அமெரிக்கர் கேட்க, நாங்கள் திரைப்படக் குழுவினர் என்பதை, அவர்களிடம் விளக்கினார் நாகேஷ்.
பதினொன்றரை மணிக்கு கம்போடியா விமான நிலையத்தைவிட்டுப் புறப்பட்டோம். இடையில் மேகத்தால், விமானம் சற்று நிலை தடுமாறியவாறு சென்றது.

விமானத்தில் அறிவிப்பாளர், 'ஹாங்காங்குக்கு அருகில் செல்லச் செல்ல மேக மூட்டம், அதிகமிருக்கும்; பெல்ட்டைப் போட்டுக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, 'மேக மூட்டம் அதிகமாக இருப்பினும், உங்கள் கழுத்தையோ, முதுகையோ உடைக்காமல், ஹாங்காங் கொண்டு சேர்க்க முயலுகிறேன்...' என்று, நகைச்சுவையாக சொன்ன போது, 'ஆபத்து' என்று அச்சப்பட்டவர்களும் கூட, வாய்விட்டு சிரித்தனர்.

நாங்கள் பயணம் செய்த விமானம், 1:15 மணிக்கு, ஹாங்காங் விமான நிலையத்தில் இறங்கியது. விமான நிலையத்தின் முன்பும், இரு புறங்களிலும் நீர்ப்பரப்பு. விமான ஓட்டி கொஞ்சம் கவனம் தவறிடினும், சமுத்திரத்தில் இறங்கி விடுவார்.

சமுத்திரத்தைக் தூர்த்து, நிலப்பரப்பை அதிகப்படுத்தி, விமான நிலையத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கிருந்து தமிழ் மக்கள், எங்களைக் கண்டதும், அவர்கள் காட்டிய ஆர்வம் கலந்த அன்பு, வரவேற்பு, மறக்க இயலாதது.

இளைப்பாறுமிடத்தில் புத்தகங்கள், கலைப்பொருள்கள் முதலியவைகளைப் பார்த்து கொண்டிருக்கும் போதே, இயக்குனர் ப. நீலகண்டனிடம், ஹாங்காங் விமான நிலையத்தில், எந்தெந்த காட்சிகளை எடுக்க வேண்டும் என்பதையும், கதையின் ஒரு பகுதியையும் சொன்னேன். அருகில் ஒன்றும் கவனியாதவர் போலிருந்த சொர்ணம் குறித்துக் கொள்வதை, நானும் ஒன்றுமறியாதவன் போலவே கவனித்தேன்.

விமானம் ஜப்பானுக்கு புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டது. எல்லாரும், அவசர அவரசரமாக புறப்பட்டோம். சிறிது நேரம் தங்குவதற்கும், திரும்ப விமானத்திற்குள் செல்வதற்கும், அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த அட்டைக்கு, 'டிரான்சிட் கார்டு' என்று பெயர்.

ஆண்கள் எல்லாரும் அடையாள அட்டைகளைக் கொடுத்து, விமானத்திற்குப் போய் கொண்டிருந்தனர். பெண்களும், தங்களிடம் தரப்பட்டிருந்த அட்டைகளை காவலர்களிடம், கொடுத்தனர். ஆனால், லதாவின் அடையாள அட்டை காணவில்லை. எல்லாப் பெண்களும், விமானத்திற்கு போகாமல், லதாவின் அட்டையைத் தேடினர்; நேரம் ஆகிக் கொண்டிருந்தது.

'பயணத்தை நிறுத்தி, லதாவை எங்கள் குழுவைச் சேர்ந்தவர் என்று, உறுதிப்படுத்தி அழைத்து செல்வதா அல்லது மேலதிகாரிகளிடம் ஆதாரங்களை காட்டி, அவர்கள் சம்மதம் பெற்று அழைத்துச் செல்வதா...' என்று, ஒரே குழப்பம். அதற்குள், 'கிடைத்து விட்டது கிடைத்து விட்டது...' என்று சந்திரகலாவும், மஞ்சுளாவும் சத்தம் போட்டபடி ஓடி வந்தனர். லதாவும், ஓடி வந்தார்; எல்லாருடைய முகத்திலும் நிம்மதி தெரிந்தது. முகம் கழுவ, குளியல் அறைக்குள் சென்ற லதா, அங்கு அதை வைத்துவிட்டு வந்திருக்கிறாள்.

'இனிமேல் லதா தன்னுடைய பாஸ்போர்ட் முதற்கொண்டு, அனைத்தையும், வேறு யாரிடமாவது கொடுத்து வைத்துவிட வேண்டும். தன்னிடம் வைத்துக் கொள்ளகூடாது...' என்றாள் என் மனைவி. மணி, 2.20க்கு விமானம் புறப்பட்டது.

ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம், ஜப்பான் கடலைக் கடந்து, ஒசாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.'மிஸ்டர் நாகேஷ், நாம இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்...' என்று கேட்டார் ஒருவர்.

'கொஞ்சம் இரு; வெளியே எட்டிப் பார்த்து சொல்றேன். மைல் கல் வெளியே தானே, நட்டிருப்பான், பாத்துட்டாப் போறது...' என்றார் நாகேஷ். அவ்வளவுதான்! சொர்ணமும், மற்றவர்களும் வாய்விட்டுச் சிரித்தனர். ஒசாகாவை நெருங்க நெருங்க விமானம், மேலும் கீழும் ஆடியது.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அசோகன், 'என்ன நாகேஷ்... இப்படி மேலும் கீழும் ஆட்டி பயமுறுத்துறான்...' என்றார்.

'ஒண்ணுமில்லே. ஒசாகா எங்கே இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்...' என்று, பதில் சொன்னார் நாகேஷ். இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு, யாரால் தான் சிரிக்காமல் இருக்க முடியும்?

சரியாக, 5.50 மணிக்கு, ஒசாகா விமான நிலையத்தில் இறங்கிய விமானம், மணி, 6:20-க்கு அங்கிருந்து புறப்பட்டு, 7.20 மணிக்கு, டோக்கியோ விமான நிலையத்தை அடைந்தது.

இது, இந்திய நேரத்தைக் காட்டுவதாகும். அப்போது டோக்கியோவின் நேரம் இரவு, மணி, 10.30; பாஸ்போர்ட், விசா போன்றவைகளை, விமான நிலைய அதிகாரிகளிடம் காண்பித்துக் கொண்டிருந்தோம். வெளியே ஓரிரு தமிழன்பர்கள், குடும்பத்தோடு நிற்பதை கண்டேன்.

பாஸ்போர்ட், விசா போன்றவைகளைக் காண்பித்துவிட்டு, காவலரைத் தாண்டி, இடுப்பளவு உயரமே உள்ள கம்பிக் கதவுகளுக்கு மறுபுறம் நின்று கொண்டிருந்தேன். நாகேசும், தன்னுடைய பாஸ்போர்ட், விசாக்களைக் காண்பித்துவிட்டு வந்தவர், என்னருகில் வந்ததும், அதுவரையில் நான் காணாத ஒரு பெரிய பயங்கர மாற்றம், அவரிடம் தெரிந்தது.

அவருடைய கண்கள் பெரிதாயின. முகம், ஒரு பக்கமாக, விகாரமாக இழுக்கப்பட்டது. சொல்ல முடியாத, ஏதோ ஒரு வார்த்தை வெளியே வந்தது.

பேச இயலாத ஒருவன், தன்னைப் பயங்கரமான ஆயுதங்களால், தாக்க வருபவர்களை பற்றி, மற்றவர்களுக்கு சொல்ல விரும்பினால், என்ன செய்வான்? பயத்தினாலும், தன்னால் ஏதும் செய்ய இயலவில்லை என்கிற கோழைத்தனத்தோடும், எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, சப்தமிட விரும்பி கத்தினால், எப்படி இருக்கும்... உருவில்லாத வார்த்தைகள், அடிவயிற்றிலிருந்து அழுத்தித் தள்ளப்பட்ட காற்றின் உதவியால், வார்த்தைகளுக்குப் பதில், இனம் புரியாத கூச்சல் கரகரத்த குரலில் வெளிவருமே, அதுபோல், இல்லை அதைவிடப் பயங்கரமாக அலறியவாறு, கீழே விழுந்து விட்டார் நாகேஷ்.

அவரது வாயிலிருந்து, நுரை நுரையாக வந்தது. நான் பிடிக்காவிட்டால், அவர் தரையில் அப்படியே விழுந்திருப்பார். மீண்டும் மீண்டும் மிரண்ட பார்வைகளோடு அலறினார். பாஸ்போர்ட் முதலியவைகளைப் பரிசீலித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் கூட, ஏதும் புரியாத நிலையில், தங்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்றனர். நான், அவருடைய நெஞ்சைத் தடவிக் கொடுத்தேன்.
தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

-- எம்.ஜி.ஆர்.,
தினமலர்-வாரமலரிலிருந்து... 

தொடர்புடைய இடுகைகள்;
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை I
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை II
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை III

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!