புதன், 30 ஏப்ரல், 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை IV



கம்போடியா, வியட்நாமுக்கு அருகே உள்ள நாடு; விமான நிலையத்தில் சிப்பாய்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. விமான நிலையத்தில் பெரிய, 'பேனர்'கள், சிவப்பு நிற எழுத்துக்களைக் கொண்டு, ஆங்காங்கே காட்சி அளித்தன.

அவற்றில் ஒன்றில் கீழ்க்காணும் வாக்கியங்கள், ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டிருந்தன...

'கம்போடியர்கள் தங்கள் நாட்டை வாடகைக்கு விட மாட்டார்கள்; வியட்காங்குகளோ, வடக்கு வியட்நாமியர்களோ, அதை விழுங்க முடியாது...' வியட்நாம் சண்டை, கம்போடியாவிலும் பரவி விடுமோ என்பது, அன்றைய நிலைமை. அதனால்தான் கம்போடிய மக்கள், இவ்வாறெல்லாம் எழுதி வைத்திருந்தனர். 'பானம் பான்' விமான நிலையத்தில், நாங்கள் கூட்டமாக இறங்கிச் சென்றபோது, அங்கே அமர்ந்திருந்த, அமெரிக்கர்கள், எங்களை வியப்புடன் பார்த்தனர்.

'இந்தியர்கள் எல்லாம், ஏன் இந்தியாவிலிருந்து ஓடி வருகின்றனர்; அங்கே என்ன நேர்ந்து விட்டது?' என்று, ஓர் அமெரிக்கர் கேட்க, நாங்கள் திரைப்படக் குழுவினர் என்பதை, அவர்களிடம் விளக்கினார் நாகேஷ்.
பதினொன்றரை மணிக்கு கம்போடியா விமான நிலையத்தைவிட்டுப் புறப்பட்டோம். இடையில் மேகத்தால், விமானம் சற்று நிலை தடுமாறியவாறு சென்றது.

விமானத்தில் அறிவிப்பாளர், 'ஹாங்காங்குக்கு அருகில் செல்லச் செல்ல மேக மூட்டம், அதிகமிருக்கும்; பெல்ட்டைப் போட்டுக் கொள்ளுங்கள்...' என்று சொல்லி, 'மேக மூட்டம் அதிகமாக இருப்பினும், உங்கள் கழுத்தையோ, முதுகையோ உடைக்காமல், ஹாங்காங் கொண்டு சேர்க்க முயலுகிறேன்...' என்று, நகைச்சுவையாக சொன்ன போது, 'ஆபத்து' என்று அச்சப்பட்டவர்களும் கூட, வாய்விட்டு சிரித்தனர்.

நாங்கள் பயணம் செய்த விமானம், 1:15 மணிக்கு, ஹாங்காங் விமான நிலையத்தில் இறங்கியது. விமான நிலையத்தின் முன்பும், இரு புறங்களிலும் நீர்ப்பரப்பு. விமான ஓட்டி கொஞ்சம் கவனம் தவறிடினும், சமுத்திரத்தில் இறங்கி விடுவார்.

சமுத்திரத்தைக் தூர்த்து, நிலப்பரப்பை அதிகப்படுத்தி, விமான நிலையத்தை விரிவுபடுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அங்கிருந்து தமிழ் மக்கள், எங்களைக் கண்டதும், அவர்கள் காட்டிய ஆர்வம் கலந்த அன்பு, வரவேற்பு, மறக்க இயலாதது.

இளைப்பாறுமிடத்தில் புத்தகங்கள், கலைப்பொருள்கள் முதலியவைகளைப் பார்த்து கொண்டிருக்கும் போதே, இயக்குனர் ப. நீலகண்டனிடம், ஹாங்காங் விமான நிலையத்தில், எந்தெந்த காட்சிகளை எடுக்க வேண்டும் என்பதையும், கதையின் ஒரு பகுதியையும் சொன்னேன். அருகில் ஒன்றும் கவனியாதவர் போலிருந்த சொர்ணம் குறித்துக் கொள்வதை, நானும் ஒன்றுமறியாதவன் போலவே கவனித்தேன்.

விமானம் ஜப்பானுக்கு புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டது. எல்லாரும், அவசர அவரசரமாக புறப்பட்டோம். சிறிது நேரம் தங்குவதற்கும், திரும்ப விமானத்திற்குள் செல்வதற்கும், அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த அட்டைக்கு, 'டிரான்சிட் கார்டு' என்று பெயர்.

ஆண்கள் எல்லாரும் அடையாள அட்டைகளைக் கொடுத்து, விமானத்திற்குப் போய் கொண்டிருந்தனர். பெண்களும், தங்களிடம் தரப்பட்டிருந்த அட்டைகளை காவலர்களிடம், கொடுத்தனர். ஆனால், லதாவின் அடையாள அட்டை காணவில்லை. எல்லாப் பெண்களும், விமானத்திற்கு போகாமல், லதாவின் அட்டையைத் தேடினர்; நேரம் ஆகிக் கொண்டிருந்தது.

'பயணத்தை நிறுத்தி, லதாவை எங்கள் குழுவைச் சேர்ந்தவர் என்று, உறுதிப்படுத்தி அழைத்து செல்வதா அல்லது மேலதிகாரிகளிடம் ஆதாரங்களை காட்டி, அவர்கள் சம்மதம் பெற்று அழைத்துச் செல்வதா...' என்று, ஒரே குழப்பம். அதற்குள், 'கிடைத்து விட்டது கிடைத்து விட்டது...' என்று சந்திரகலாவும், மஞ்சுளாவும் சத்தம் போட்டபடி ஓடி வந்தனர். லதாவும், ஓடி வந்தார்; எல்லாருடைய முகத்திலும் நிம்மதி தெரிந்தது. முகம் கழுவ, குளியல் அறைக்குள் சென்ற லதா, அங்கு அதை வைத்துவிட்டு வந்திருக்கிறாள்.

'இனிமேல் லதா தன்னுடைய பாஸ்போர்ட் முதற்கொண்டு, அனைத்தையும், வேறு யாரிடமாவது கொடுத்து வைத்துவிட வேண்டும். தன்னிடம் வைத்துக் கொள்ளகூடாது...' என்றாள் என் மனைவி. மணி, 2.20க்கு விமானம் புறப்பட்டது.

ஹாங்காங்கிலிருந்து புறப்பட்ட விமானம், ஜப்பான் கடலைக் கடந்து, ஒசாகா நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.'மிஸ்டர் நாகேஷ், நாம இப்ப எவ்வளவு தூரம் வந்திருப்போம்...' என்று கேட்டார் ஒருவர்.

'கொஞ்சம் இரு; வெளியே எட்டிப் பார்த்து சொல்றேன். மைல் கல் வெளியே தானே, நட்டிருப்பான், பாத்துட்டாப் போறது...' என்றார் நாகேஷ். அவ்வளவுதான்! சொர்ணமும், மற்றவர்களும் வாய்விட்டுச் சிரித்தனர். ஒசாகாவை நெருங்க நெருங்க விமானம், மேலும் கீழும் ஆடியது.

அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த அசோகன், 'என்ன நாகேஷ்... இப்படி மேலும் கீழும் ஆட்டி பயமுறுத்துறான்...' என்றார்.

'ஒண்ணுமில்லே. ஒசாகா எங்கே இருக்குதுன்னு குனிஞ்சு குனிஞ்சு தேடுறான்...' என்று, பதில் சொன்னார் நாகேஷ். இப்படிப்பட்ட பதில்களைக் கேட்டு, யாரால் தான் சிரிக்காமல் இருக்க முடியும்?

சரியாக, 5.50 மணிக்கு, ஒசாகா விமான நிலையத்தில் இறங்கிய விமானம், மணி, 6:20-க்கு அங்கிருந்து புறப்பட்டு, 7.20 மணிக்கு, டோக்கியோ விமான நிலையத்தை அடைந்தது.

இது, இந்திய நேரத்தைக் காட்டுவதாகும். அப்போது டோக்கியோவின் நேரம் இரவு, மணி, 10.30; பாஸ்போர்ட், விசா போன்றவைகளை, விமான நிலைய அதிகாரிகளிடம் காண்பித்துக் கொண்டிருந்தோம். வெளியே ஓரிரு தமிழன்பர்கள், குடும்பத்தோடு நிற்பதை கண்டேன்.

பாஸ்போர்ட், விசா போன்றவைகளைக் காண்பித்துவிட்டு, காவலரைத் தாண்டி, இடுப்பளவு உயரமே உள்ள கம்பிக் கதவுகளுக்கு மறுபுறம் நின்று கொண்டிருந்தேன். நாகேசும், தன்னுடைய பாஸ்போர்ட், விசாக்களைக் காண்பித்துவிட்டு வந்தவர், என்னருகில் வந்ததும், அதுவரையில் நான் காணாத ஒரு பெரிய பயங்கர மாற்றம், அவரிடம் தெரிந்தது.

அவருடைய கண்கள் பெரிதாயின. முகம், ஒரு பக்கமாக, விகாரமாக இழுக்கப்பட்டது. சொல்ல முடியாத, ஏதோ ஒரு வார்த்தை வெளியே வந்தது.

பேச இயலாத ஒருவன், தன்னைப் பயங்கரமான ஆயுதங்களால், தாக்க வருபவர்களை பற்றி, மற்றவர்களுக்கு சொல்ல விரும்பினால், என்ன செய்வான்? பயத்தினாலும், தன்னால் ஏதும் செய்ய இயலவில்லை என்கிற கோழைத்தனத்தோடும், எப்படியாவது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, சப்தமிட விரும்பி கத்தினால், எப்படி இருக்கும்... உருவில்லாத வார்த்தைகள், அடிவயிற்றிலிருந்து அழுத்தித் தள்ளப்பட்ட காற்றின் உதவியால், வார்த்தைகளுக்குப் பதில், இனம் புரியாத கூச்சல் கரகரத்த குரலில் வெளிவருமே, அதுபோல், இல்லை அதைவிடப் பயங்கரமாக அலறியவாறு, கீழே விழுந்து விட்டார் நாகேஷ்.

அவரது வாயிலிருந்து, நுரை நுரையாக வந்தது. நான் பிடிக்காவிட்டால், அவர் தரையில் அப்படியே விழுந்திருப்பார். மீண்டும் மீண்டும் மிரண்ட பார்வைகளோடு அலறினார். பாஸ்போர்ட் முதலியவைகளைப் பரிசீலித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் கூட, ஏதும் புரியாத நிலையில், தங்கள் இருக்கையை விட்டு எழுந்து நின்றனர். நான், அவருடைய நெஞ்சைத் தடவிக் கொடுத்தேன்.
தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

-- எம்.ஜி.ஆர்.,
தினமலர்-வாரமலரிலிருந்து... 

தொடர்புடைய இடுகைகள்;
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை I
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை II
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை III

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

யாருக்கு ஓட்டு போட்டீர்கள்?

சொன்ன மாதிரியே நான் ஓட்டுப்போட போகவில்லை. ஓடிஸாவிலிருந்து போக வர செலவு, முன்பதிவில்லா இரயில் பயணம், விடுமுறையின்மை இன்னபிற காரணங்களால் என்னால் ஓட்டுப்போட தமிழகம் போக முடியவில்லை. ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியவில்லையே என்ற வருத்தமும் கூட. ஆனால் மிக உண்ணிப்பாக தேர்தல் நிகழ்வுகளை கவனித்து வருகிறேன்.

முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகள் கேள்விக்குறியதாகத்தான் இருக்கின்றன. மத்தியில் யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதில் நடுத்தர வர்க்கம் தெளிவாகவே இருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் கீழ் மட்டத்திலுள்ள ஏழை மக்கள் யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விசுவாசமாய் ஓட்டுப் போட்டிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. 

என்னுடைய குடும்பம் இங்கிருந்து தமிழ்நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து விட்டபடியால் என்னுடைய மனைவியின் ஓட்டு பதிவாவதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால் எங்கள் சொந்த ஊரான வேலூரிலிருந்து காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள எனது குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற வாக்களிக்க வேண்டிய நிலைமை.

மனைவியும் சளைக்காமல் பேருந்துப் பயணம் மேற்கொண்டு சென்னைக்குச் தன்ன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். அங்குள்ள எங்கள் பகுதியில் பணம் விளையாடியதாக தகவல் இல்லை என்கிறார். அவருக்கு யாரும் கொடுக்கவும் முயற்சிக்கவில்லை. காலையிலேயே சென்று ஓட்டுப்போட்டு விட்டு வேலூர் வந்து சேர்ந்து விட்டார். பதினெட்டு வயதைக் கடந்த என் மகளுக்கும் வாக்காளர் அடையாள அட்டைக்காக இணைய தளத்தின் மூலம் முயன்றேன். பதிவும் செய்தாகிவிட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே செய்திருந்தும் கடைசிவரை பெயர் சேர்க்க முடியாமல் போய்விட்டது.

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு ஓட்டுக்கள் விழவில்லை. ஆனாலும் எங்கள் குடும்பத்தில் பணச்செலவு மற்றும் பயணச்சிரமம் பாராமல் என்னுடைய கடைசி சகோதரன் பெங்களூரிலிருந்து வேலூர் வந்து ஓட்டைப்போட்டதையும், இன்னொரு சகோதரன் சென்னையிலிருந்து வேலூர் வந்து ஓட்டுப்போட்டதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். வேலூரில் உள்ள எங்கள் பகுதியிலும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையை எந்தக் கட்சியும் செய்யவில்லை என்பதும் ஆறுதலான விஷயமே!

யாருக்கு ஓட்டுப்போடப் போகிறாய் என்று மனைவியிடம் கேட்டேன். அது ரகசியம் என்று சொல்லிவிட்டார். பின்பு யாருக்கு ஓட்டுப்போடுவது என்பது உன்னுடைய உரிமை. அதில் தலையிட மாட்டேன். ஆனால் எந்த அளவுக்கு நீ யோசித்து முடிவெடுத்திருக்கிறாய் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறது என்றேன். தயக்கத்திற்குப் பிறகு சொன்னார். மாநிலக் கட்சிகளுக்கு நிச்சயம் ஓட்டில்லை. காங்கிரசுக்கும் போடப்போவதில்லை. மத்தியில் ஆட்சிமாற்றம் வேண்டும். இப்போது நீங்கள் யோசித்துக்கொள்ளுங்கள் என்றார். 

என்னால் நம்பமுடியவில்லை. செய்திகளையும் செய்தித்தாள்களையும் தொடர்ந்து பார்ப்பவர். தற்போதைய கெஜ்ரிவாலிலிருந்து மோடி, ஜெயா, ஸ்டாலின் வரை ஒரு அனுமானம் வைத்திருக்கிறார். என்னுடைய நடுநிலைமையான அலசல்களையும் கவனிப்பார். ஆனால் இப்படியோரு முடிவை எடுத்தது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படித்தான் எல்லாருமே நினைத்திருப்பார்களோ!?

ஆக மத்தியில் ஆட்சி மாற்றம் வரக்கூடும். ஆனால் மாநிலத்தில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுவார்கள்?  16-ம்தேதி  வரை காத்திருக்கத்தான் வேண்டும்!

புதன், 23 ஏப்ரல், 2014

யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்?!



தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நானிருக்கும் ஓடிஸாவில் இரண்டாம் கட்ட தேர்தலும் முடிந்து விட்டது. தலைநகர் புவனேஸ்வரில் மிகக்குறைந்த அளவு வாக்கு சதவிகிதமே பதிவாகியிருக்கிறது. வெறும் 40%. ஆனால் அரசின் அத்தனை சலுகைகளையும் முதலில் அனுபவிப்பது தலைநகரங்கள்தான்.

ஊடகங்கள் தங்களின் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. ஆனால் மக்கள் என்ன தீர்ப்பு கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி! இணையத்திலும் முகநூலிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரசாரம் களைகட்டியிருக்கிறது. ஆனால் இவர்களெல்லாம் களப்பணிக்குப் போகாதவர்கள். கணிணியில் உட்கார்ந்து கொண்டு கணக்குப் போட்டுக்கொண்டிருப்பவர்கள்.

ஆனால் அடித்தட்டு வர்க்கம் எப்போதும் இவர்களைப் பிரதிபலிப்பதில்லை. அவர்களுக்கு பேராசை எதுவும் இருப்பதில்லை. சாப்பாட்டுக்குப் பிரச்னை வந்துவிடக்கூடாது. விலைவாசி அவர்களை பாதிக்கக்கூடாது. தினசரி வாழ்க்கையை ஓட்ட ஏதாவது வேலை. இருக்கின்ற வசதிகள் எதிலும் குறை வந்துவிடக்கூடாது அவ்வளவுதான்.

ஆனால் நிலைமை அவர்களுக்கு சாதகமாகவே இல்லை. விலைவாசி விண்ணை முட்டுமளவுக்கு ஏறியிருக்கிறது. வேலையோ சொல்லவே வேண்டாம். விவசாயத்திலிருந்து கட்டிட வேலைவரை எதுவுமே சரியில்லை. என்னதான் செய்து வயிறு வளர்ப்பது? மாற்று வழிதான் என்ன? வானம் பொய்த்துப்போய் விவசாயம் என்பது கேள்விக்குறியாய் ஆனபின் கூலித்தொழிலாளியாக நகர்ப்புறம் நோக்கி நடக்கத் தொடங்கி கிடைத்த வேலையை அது கட்டிட வேலையோ, கூலி வேலையோ செய்துகொண்டிருந்தவர்களின் பிழைப்பு கூட இப்போது கேள்விகுறியாகி இருக்கிறது.

மணல் திருட்டும் அதன் விளைவாய் ஏறிய மணல் விலையும் கட்டுமாணத்தொழிலையே பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. விலைவாசி ஏற்றமும், அத்தியாவசியத் தேவைகளான பால், காய்கறி, மளிகைப்பொருட்களின் விலையேற்றமும், உணவகங்களின் தாறுமாறான விலை நிர்ணயம், பொதுப் போக்குவரத்தான பேருந்துக் கட்டண உயர்வு ஆகியவற்றால் இவர்களின் வாழ்வு திண்டாட்டமாகப்போக கூலியை ஏற்றிக்கேட்க ஆரம்பித்தனர்.

ஆனால் விளைவு? ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பீகார், ஒடிஸா, மேற்கு வங்கம் என குறைந்த ஊதியத்தில் வேலைக்காக மக்கள் படையெடுத்து வர இங்குள்ளவர்களின் பிழைப்போ கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்த வயிற்றெறிச்சலை எப்படிக் காண்பிப்பார்கள்? உழைத்துக் கிடைத்த காசையெல்லாம் டாஸ்மாக்கை வைத்து அரசே பிடுங்கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டு அந்தக்காசிலிருந்து அம்மா உணவகம், அம்மா தண்ணீர் என அதிசயம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது ஆயாஅரசு.

இது பாராளுமன்றத்தேர்தலாக இருந்தாலும் இங்கே ஆயாவா, தாத்தாவே என்ற போட்டியே பிரதானமாக இருக்கிறது. பி.ஜே.பி.கூட்டணி அடுத்து பலமானதாக இருக்கிறது. இதிலே காணாமல் போகக்கூடிய கட்சியாக காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும். மத்தியில் யார் பிரதமாராக வர வேண்டும். அல்லது எந்தக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும்? நடுநிலையாளர்களால் ஏதாவது முடிவுக்கு வர முடிகிறதா?

யாருக்கு வாக்களிப்பது? ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். அது பெரும்பான்மையானவர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகவேண்டிய அவசியம் இல்லை. வாக்களிப்பதும் அதே போல தனிப்பட்ட உரிமையே! ரகசியமும் கூட. ஏன் கணவன் தன் மனைவியைக்கூட இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

ஆனால் ஜனநாயகம் நமக்களித்த இந்த வாய்ப்பை எப்படி யாருக்காக பயன்படுத்துவது? பிரதமர் வேட்பாளர் என்று நம்முன்னே நிறுத்தப்படுபவர் மோடி மட்டுமே. ஆனால் இவர் சார்ந்த கட்சியை மதவாதக்கட்சி, மோடியை கொலைகாரன், இந்திய ராஜபக்ட்சே என்று எவ்வளவுக்கு எவ்வளவு தூற்றப்படுகிறாரோ அவ்வளவுக்கவ்வளவு வளர்ந்து வருகிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

காங்கிரசால் இன்னும் தெளிவான முடிவை அறிவிக்க முடியவில்லை. தேர்தலில் வெற்றி கிட்டாதோ என்ற அவநம்பிக்கயாக இருக்கலாம். அல்லது ராகுலை முன்னிருத்துவதில் கூட தயக்கம்தான் இருக்கிறது. ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் மிக மோசமான ஊழலாட்சியைத்தான் நம்மால் அனுபவிக்க முடிந்தது. 

பின்னே, எந்தக்கட்சிக்குத்தான் வாக்களிப்பது? மாநிலக்கட்சிகள் என்ன யோக்கியம்? தனக்கு கிடைக்கும் இடங்களை வைத்து செல்வாக்குள்ள மந்திரிப் பதவிகளுக்காக பேரம் நடத்துவார்கள். அந்தப் பதவிகளை வைத்து மக்களுக்கா சேவை செய்யப்போகிறார்கள்? நிச்சயம் கிடையாது! ஆனாலும் ஓட்டுப் போடவேண்டும், யார் வந்தால் தேவலை!?

ஆம் ஆத்மிக்கு வாக்களித்து அரியணையில் ஏற்ற அவகாசம் போதாது. இந்திய அளவில் இன்னும் அவர்கள் காலூன்றவே இல்லை. ஆனாலும் பல ஆண்டுகாலம் தமிழகத்தைக் கொள்ளையடித்த கும்பல்களுக்கு திரும்பத்திரும்ப வாக்களிப்பதை விட, நாமெல்லாம் எதிர்பார்த்த ஒரு மாற்றம் வரவேண்டுமென்றால் ரௌடிகளும், கேடிகளும் மந்திரியாவதைத் தடுக்கவேண்டுமென்றால் நல்லவர்களும் நேர்மையானவர்களும் அரசியலில் இறங்கவேண்டும். 

ஆனால் காமராஜரில் ஆரம்பித்து, நெல்லை ஜெபமணி, டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி வரை தேர்தலில் நின்றபோது அவர்களுக்கு தோல்விதான் கிடைத்தது. அரசியல் தூய்மை என்பதை செயல்முறையில் நடத்திக்காட்டத் துணிந்து 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் அரசியல் களம் புகுந்தார் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி. ஆனால் அது வெற்றிபெறவே இல்லை. இப்போது ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. டெல்லியில் அதை நிரூபித்திருக்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர். 

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் சரியானவர்கள் கிடைக்கவில்லை. இங்கே நாமும் தொடங்குவோம். ஆம் ஆத்மியோடு இணைவோம். பிற்காலத்தில் சரிப்பட்டு வரவில்லை எனில் தமிழகத்தில் தனித்தியங்குவோம். இப்போதைக்கு எங்கெல்லாம் இந்தக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறதோ அவர்களை ஆதரியுங்கள். எனவே ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். இன்னும் இருக்கு எழுத... தேர்தலுக்குப் பிறகு எழுதுகிறேன்.

நட்புடன்,

கவிப்ரியன் (எ) ஞானசேகரன்.