வாக்குரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாக்குரிமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 ஏப்ரல், 2014

யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்?!



தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நானிருக்கும் ஓடிஸாவில் இரண்டாம் கட்ட தேர்தலும் முடிந்து விட்டது. தலைநகர் புவனேஸ்வரில் மிகக்குறைந்த அளவு வாக்கு சதவிகிதமே பதிவாகியிருக்கிறது. வெறும் 40%. ஆனால் அரசின் அத்தனை சலுகைகளையும் முதலில் அனுபவிப்பது தலைநகரங்கள்தான்.

ஊடகங்கள் தங்களின் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. ஆனால் மக்கள் என்ன தீர்ப்பு கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி! இணையத்திலும் முகநூலிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரசாரம் களைகட்டியிருக்கிறது. ஆனால் இவர்களெல்லாம் களப்பணிக்குப் போகாதவர்கள். கணிணியில் உட்கார்ந்து கொண்டு கணக்குப் போட்டுக்கொண்டிருப்பவர்கள்.

ஆனால் அடித்தட்டு வர்க்கம் எப்போதும் இவர்களைப் பிரதிபலிப்பதில்லை. அவர்களுக்கு பேராசை எதுவும் இருப்பதில்லை. சாப்பாட்டுக்குப் பிரச்னை வந்துவிடக்கூடாது. விலைவாசி அவர்களை பாதிக்கக்கூடாது. தினசரி வாழ்க்கையை ஓட்ட ஏதாவது வேலை. இருக்கின்ற வசதிகள் எதிலும் குறை வந்துவிடக்கூடாது அவ்வளவுதான்.

ஆனால் நிலைமை அவர்களுக்கு சாதகமாகவே இல்லை. விலைவாசி விண்ணை முட்டுமளவுக்கு ஏறியிருக்கிறது. வேலையோ சொல்லவே வேண்டாம். விவசாயத்திலிருந்து கட்டிட வேலைவரை எதுவுமே சரியில்லை. என்னதான் செய்து வயிறு வளர்ப்பது? மாற்று வழிதான் என்ன? வானம் பொய்த்துப்போய் விவசாயம் என்பது கேள்விக்குறியாய் ஆனபின் கூலித்தொழிலாளியாக நகர்ப்புறம் நோக்கி நடக்கத் தொடங்கி கிடைத்த வேலையை அது கட்டிட வேலையோ, கூலி வேலையோ செய்துகொண்டிருந்தவர்களின் பிழைப்பு கூட இப்போது கேள்விகுறியாகி இருக்கிறது.

மணல் திருட்டும் அதன் விளைவாய் ஏறிய மணல் விலையும் கட்டுமாணத்தொழிலையே பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. விலைவாசி ஏற்றமும், அத்தியாவசியத் தேவைகளான பால், காய்கறி, மளிகைப்பொருட்களின் விலையேற்றமும், உணவகங்களின் தாறுமாறான விலை நிர்ணயம், பொதுப் போக்குவரத்தான பேருந்துக் கட்டண உயர்வு ஆகியவற்றால் இவர்களின் வாழ்வு திண்டாட்டமாகப்போக கூலியை ஏற்றிக்கேட்க ஆரம்பித்தனர்.

ஆனால் விளைவு? ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பீகார், ஒடிஸா, மேற்கு வங்கம் என குறைந்த ஊதியத்தில் வேலைக்காக மக்கள் படையெடுத்து வர இங்குள்ளவர்களின் பிழைப்போ கேள்விக்குறியாகியிருக்கிறது. இந்த வயிற்றெறிச்சலை எப்படிக் காண்பிப்பார்கள்? உழைத்துக் கிடைத்த காசையெல்லாம் டாஸ்மாக்கை வைத்து அரசே பிடுங்கிக்கொண்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டு அந்தக்காசிலிருந்து அம்மா உணவகம், அம்மா தண்ணீர் என அதிசயம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது ஆயாஅரசு.

இது பாராளுமன்றத்தேர்தலாக இருந்தாலும் இங்கே ஆயாவா, தாத்தாவே என்ற போட்டியே பிரதானமாக இருக்கிறது. பி.ஜே.பி.கூட்டணி அடுத்து பலமானதாக இருக்கிறது. இதிலே காணாமல் போகக்கூடிய கட்சியாக காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும். மத்தியில் யார் பிரதமாராக வர வேண்டும். அல்லது எந்தக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும்? நடுநிலையாளர்களால் ஏதாவது முடிவுக்கு வர முடிகிறதா?

யாருக்கு வாக்களிப்பது? ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம். அது பெரும்பான்மையானவர்களின் கருத்துக்களோடு ஒத்துப்போகவேண்டிய அவசியம் இல்லை. வாக்களிப்பதும் அதே போல தனிப்பட்ட உரிமையே! ரகசியமும் கூட. ஏன் கணவன் தன் மனைவியைக்கூட இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.

ஆனால் ஜனநாயகம் நமக்களித்த இந்த வாய்ப்பை எப்படி யாருக்காக பயன்படுத்துவது? பிரதமர் வேட்பாளர் என்று நம்முன்னே நிறுத்தப்படுபவர் மோடி மட்டுமே. ஆனால் இவர் சார்ந்த கட்சியை மதவாதக்கட்சி, மோடியை கொலைகாரன், இந்திய ராஜபக்ட்சே என்று எவ்வளவுக்கு எவ்வளவு தூற்றப்படுகிறாரோ அவ்வளவுக்கவ்வளவு வளர்ந்து வருகிறார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

காங்கிரசால் இன்னும் தெளிவான முடிவை அறிவிக்க முடியவில்லை. தேர்தலில் வெற்றி கிட்டாதோ என்ற அவநம்பிக்கயாக இருக்கலாம். அல்லது ராகுலை முன்னிருத்துவதில் கூட தயக்கம்தான் இருக்கிறது. ஆனாலும் கடந்த பத்தாண்டுகளில் மிக மோசமான ஊழலாட்சியைத்தான் நம்மால் அனுபவிக்க முடிந்தது. 

பின்னே, எந்தக்கட்சிக்குத்தான் வாக்களிப்பது? மாநிலக்கட்சிகள் என்ன யோக்கியம்? தனக்கு கிடைக்கும் இடங்களை வைத்து செல்வாக்குள்ள மந்திரிப் பதவிகளுக்காக பேரம் நடத்துவார்கள். அந்தப் பதவிகளை வைத்து மக்களுக்கா சேவை செய்யப்போகிறார்கள்? நிச்சயம் கிடையாது! ஆனாலும் ஓட்டுப் போடவேண்டும், யார் வந்தால் தேவலை!?

ஆம் ஆத்மிக்கு வாக்களித்து அரியணையில் ஏற்ற அவகாசம் போதாது. இந்திய அளவில் இன்னும் அவர்கள் காலூன்றவே இல்லை. ஆனாலும் பல ஆண்டுகாலம் தமிழகத்தைக் கொள்ளையடித்த கும்பல்களுக்கு திரும்பத்திரும்ப வாக்களிப்பதை விட, நாமெல்லாம் எதிர்பார்த்த ஒரு மாற்றம் வரவேண்டுமென்றால் ரௌடிகளும், கேடிகளும் மந்திரியாவதைத் தடுக்கவேண்டுமென்றால் நல்லவர்களும் நேர்மையானவர்களும் அரசியலில் இறங்கவேண்டும். 

ஆனால் காமராஜரில் ஆரம்பித்து, நெல்லை ஜெபமணி, டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி வரை தேர்தலில் நின்றபோது அவர்களுக்கு தோல்விதான் கிடைத்தது. அரசியல் தூய்மை என்பதை செயல்முறையில் நடத்திக்காட்டத் துணிந்து 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் அரசியல் களம் புகுந்தார் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி. ஆனால் அது வெற்றிபெறவே இல்லை. இப்போது ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. டெல்லியில் அதை நிரூபித்திருக்கிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர். 

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆனால் சரியானவர்கள் கிடைக்கவில்லை. இங்கே நாமும் தொடங்குவோம். ஆம் ஆத்மியோடு இணைவோம். பிற்காலத்தில் சரிப்பட்டு வரவில்லை எனில் தமிழகத்தில் தனித்தியங்குவோம். இப்போதைக்கு எங்கெல்லாம் இந்தக்கட்சி வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறதோ அவர்களை ஆதரியுங்கள். எனவே ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள். இன்னும் இருக்கு எழுத... தேர்தலுக்குப் பிறகு எழுதுகிறேன்.

நட்புடன்,

கவிப்ரியன் (எ) ஞானசேகரன். 

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

நான் வாக்களிக்கப் போதில்லை!


நான் வாக்களிக்கப் போவதில்லை! ஜனநாயகக் கடமையைச் செய்யப்போவதில்லையா என்று கேட்க வேண்டாம்.  எந்தக் கட்சிக்காவது வாக்களிக்கலாம், ஆனால் வாக்களிக்காமல் இருக்கக்கூடாது. நேட்டோவைக் கூட பயன்படுத்த வசதியிருக்கிறது. ஆனாலும் நான் வாக்களிக்கப் போவதில்லை.

வெளிநாட்டில் வாழ்கிறவர்கள் கூட ஓட்டளிக்க வகை செய்யப்படுவதைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கையில் உள்நாட்டில் இருந்துகொண்டு ஏன் வாக்களிக்கப் போவதில்லை? ஒரு விஷயத்தை யாரும் யோசிப்பதே இல்லை. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள், வேலை செய்பவர்கள் வாக்களிப்பதைப் பற்றி பேசுபவர்கள், உள் நாட்டிலேயே தங்கள் சொந்த மாநிலங்களை விட்டு வெளி மாநிலங்களில் வேலை செய்பவர்களின் ஓட்டைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை?


இந்த வார புதிய தலைமுறையின் ஒரு கட்டுரையில் ஜாக்கிசேகரும் யுவகிருஷ்ணாவும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கலாமா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜாக்கியின் வலைப்பக்கத்தில் இது தொடர்பாக சூடான இடுகையையும் பகிர்ந்திருக்கிறார். அதைவிட எனக்கு வெளிமாநிலங்களில் வசிப்பவர்களுக்கு அதாவது இந்தியாவில் இருந்தும் ஓட்டுப்போட முடியாத என்னைப் போன்றவர்களின் பிரச்னையை ஏன் யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் தெரியவில்லை.

இனைறைக்கு லட்சக்கணக்கான மக்கள் பீகார், மேற்கு வங்காளம், சட்டீஸ்கர், ஒடிஸா போன்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் வந்து கட்டுமானத்தொழில்களில் வேலை செய்கிறார்கள். ஒடிஸாவிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் குஜராத் மாநிலம் சூரத்தில் வேலை செய்கிறார்கள். நம் தமிழ்நாட்டவர்கள் கூட கர்நாடகம், மஹாராஸ்ட்டிரா, புதுதில்லி போன்ற மாரநிலங்களில் வேலை செய்கிறார்கள். ஒடிஸாவில் சுரங்கத்தொழிலிலும், இரும்பு உருக்குத் தொழில்களிலும் ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் வேலை செய்கிறார்கள்.

இவர்கள் எல்லாம் எப்போதோ ஒரு வாரம் பத்து நாட்கள் ஒருசேர விடுமுறை கிடைக்கும்போதுதான் தங்கள் சொந்த மாநிலத்திற்கு சென்று வருவார்கள். அதனால் ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறைக்கெல்லாம் அவர்கள் போவது கிடையாது. போக வர பயணம் செய்யவே இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படும்.

வெளிநாட்டில் இருந்துகூட நான் சென்னைக்கு 4 மணி நேரத்தில் வந்திருக்கிறேன். ஆனால் இந்தியாவில் இருந்துகொண்டே ஒடிஸாவிலிருந்து சென்னை வருவதற்கு எனக்கு 24 மணி (இரயில் பயணம்) நேரமாகிறது என்று வேடிக்கையாக நண்பர்களிடம் சொல்வதுண்டு. அதுவும் இரயில் பயணம் என்பது இப்போதெல்லாம் நரகவேதனையாகிக் கொண்டிருக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டமும், பயணச்சீட்டை முன்பதிவு செய்யமுடியாத சூழ்நிலையும், அவசர ஆத்திரத்திற்கு பொதுப் பிரயாணிகளின் பெட்டியில் பயணம் செய்யமுடியாத நிலைமையும்தான் இருக்கிறது.

ஆக, ஒரு நாளோ இரண்டு நாளோ விருமுறை அளித்தால்கூட என்னைப் போன்றவர்கள் சொந்த மாநிலத்திற்குச் சென்று வாக்களிக்க முடியாத சூழ்நிலை. தவிரவும் பொருட்செலவு. இரயில் பயணத்தில் குறைந்த பட்சம் எனக்கு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதியில் போக வர ரூ.1000.00 செலவாகும். பிறகு மற்ற செலவுகள் ஒரு ஆயிரம் தேறும். எவனோ சம்பாதிப்பதற்கு நாம் ஏன் நம் பணத்தை செலவு செய்து கொண்டு விழுந்தடித்துக்கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தாலும், என்னைப் போன்ற நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு இது இயலாத காரியமே.

இதற்காக தேர்தல் ஆணையமோ அல்லது அரசோ இதுவரை ஏன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இராணுவத்தினருக்குக் கூட அஞ்சல் ஓட்டுப்போட வாய்ப்பிருக்கும் போது இது போன்ற வெளிமாநிலங்களில் வேலை செய்பவர்களுக்கு ஏன் ஓட்டளிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடாது? இவர்களையெல்லாம் அரசு இயந்திரம் வாக்காளர்களாகவே கணக்கில் கொள்ளவில்லையா என்ன?

அல்லது வேறு ஏதேனும் வழியிருக்கிறாதா?