Thursday, March 6, 2014

எழுதாதே படி!வர வர பல வலைப்பதிவர்கள் பதிவெழுதுவதை விட்டுவிட்டு முகநூல் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். பதிவுலகம் சற்று தேக்கநிலையில்தான் காணப்படுகிறது. தீவிரமாக இயங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு பக்கம் பிரபல எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் வலைப்பதிவு எழுத்தாளர்களை மொக்கையாக தினசரி டைரிக்குறிப்பு போல எழுதுகிறார்கள் என்று வசைபாடுவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. வலைத்தளம் வைத்திருப்பவர்களில் இந்த பிரபலங்களும் அடக்கம் என்பதை ஏனோ மறந்துபோகிறார்கள். அல்லது அவர்களுக்கு மட்டும் எழுத உரிமை இருக்கிறது போல பேசுகிறார்கள்.

எழுதுவது என்பது ஒரு ஆத்ம திருப்தி. தன் மனவோட்டங்களை எழுத்தாக்குகின்ற ஆர்வம் எல்லோருக்கமே இருப்பதில்லை. ஆர்வம் இருப்பவருக்கு எழுத்து கைவரப்பெறுவதில்லை. சமுதாயத்தில் அடிமட்டத்து மக்களின் வேதனைகளையும் வலிகளையும் வெறுமனே கேட்டும் பார்த்தும் பதிவு செய்யும் எழுத்தாளனின் படைப்பைவிட அந்த சூழலில் வாழ்பவனின் நிஜமான அனுபங்களின் பதிவு என்பது வீச்சு கொண்டதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

இப்படி சாதாரணமானவர்களும் தங்களது அனுபவங்களை இணையத்தின் வாயிலாக வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தது என்பது ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல எழுத்து என்பது எப்படியும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே தீரும். இந்த சாதாரணமானவர்கள் பிரபலமடைவதைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரபலங்களே வலைப்பதிவர்களை மொக்கையாக எழுதுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள்.

பிரபலமானவர்கள் இலக்கியப்பணி செய்தாலும் அதன் வியாபாரமாக்கும் உத்தியோடுதான் செயல்படுகிறார்கள். ஆனால் சாதாரணமானவர்களோ பிரதிபலன் எதிர்பாராமல் எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை. சொல்லப்போனால் கொஞ்சம் புகழை எதிர்பார்க்கிறார்கள் அவ்வளவுதான். வெகுஜன ஊடகங்கள் இவர்களை தூக்கிவிடத் தயாராக இல்லாதபோது கிடைத்த வரப்பிரசாதம்தான் இந்த வலையுலகம்.இந்த வலையுலகத்தில் பிரபலமானால் தன்னலேயே ஊடகங்களும் இவர்களை தாங்கிப் பிடிக்க வந்துவிடுகின்றன. அதே சமயத்தில் தமது எழுத்திற்கு அங்கீகாரம் வேண்டுவோர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. வேலைக்குச் செல்பவர் எனில் வேலை நேரம் தவிர்த்த மற்ற எல்லா நேரங்களையும் இதற்காக தியாகம் செய்யவேண்டியிருக்கிறது. நள்ளிரவு வரை கூட எழுதுவோர் உண்டு. இப்படி எல்லோருமே எழுதுவதில்லை. முடிந்த போது முடிந்தவரை என்பதாகத்தான் பலரும் இருக்கிறார்கள்.

எது எப்படியோ இந்தக் காலகட்டத்தின் நிகழ்வுகள் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு பலரால் பலவிதங்களில் பதிவு செய்யப்படுகிறது. பிரபல எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், நாளிதழ்கள், கட்டுரையாளர்கள் என இவர்களால் மட்டுமே அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிந்த காலம் போய் சாதாரணமானவர்களும் பதிவு செய்யக்கூடிய காலம் வாய்த்திருப்பது நமது அதிர்ஷ்டம்தானே.

மேலும் இதில் பிரபலங்கள் வயிற்றெறிச்சல் பட என்ன இருக்கிறது? இவனுங்க எல்லாம் இலக்கியம் எழுத வந்துட்டானுங்க என்கிற அங்காலாய்ப்பு எதற்கு? எழுத்தும் தவம் போலத்தான். தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்தால் கைகூடுவது இயல்புதானே. சமீப காலங்களில் நான் விரும்பி வாசிக்கும் தளங்களில் ஜோதிஜியின் பதிவுகளும், வா. மணிகண்டனின் பதிவுகளுமே இதற்கு முக்கியமான சாட்சிகள்.

இவர்களின் மற்றுமொரு குற்றச்சாட்டுஎதையும் யாரையும் வாசிக்காமல் வந்துவிடுகிறார்கள் என்பதுதான். இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுதான் என்றாலும், பொத்தாம் பொதுவாக இப்படிச் சொல்வது சரியல்ல. உண்மையில் வாசிப்பு பழக்கமோ, விஷய ஞானமோ இல்லாமல் யாராலும் தொடர்ந்து எழுத முடியாது. அதே போல தங்களின் அனுபவங்களை எழுத்தாக்குவதில் தவறென்ன?

பரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்து வரும் சூழலில் பொருளாதாரத் தேவைகளுக்காக பணி செய்வது ஒரு புறமும், இலக்கிய மற்றும் எழுத்தார்வத்த்திற்காக இப்படி வலையுலகில் இயங்குவதுமாகத்தான் நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். வலைப்பதிவில் இயங்குபவர்கள் எல்லோருமே நுனிப்புல் மேய்கிறவர்கள் அல்லர். அவர்களும் வாசிப்பவர்களே!

வாசிப்பவர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்பது உண்மையில்லை. புத்தகங்களை வாசித்தவர்கள் இப்போது இணையங்களில் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் சதவிகிதம் மிகக்குறைவு. இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். காசு செலவழிப்பதில் தமிழர்கள் கஞ்சத்தனமானவர்கள். அதுவும் புத்தகத்திற்காக செலவழிப்பதென்றால் சொல்லவே வேண்டாம்.

இதற்கு தீர்வு வந்து பல நாட்களாகிவிட்டது. மின்னூல்கள் ஏராளமானவை இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. போதாக்குறைக்கு திரு. இரவி, திரு. சீனிவாசன் போன்றவர்களின் அரிய முயற்சியால் பல பதிவர்களின் பதிவுகளை, எழுத்துக்களை இலவச மின்னூலாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். (அந்த தளத்திற்கான சுட்டி). புத்தகங்களை பல்வேறு வகையான கையடக்க கருவிகளிலும் படிக்கும் வகையிலும் உருவாக்கி வருகிறார்கள். எனவே என்னைப்போல வாசிப்பு ஆர்வம் உள்ளவர்கள் எழுதுவதை குறைத்து படிக்கத்துவங்குங்கள். 

ஆம்! எழுதாதே! படி! இது எனக்கும் பொருந்தும்!? 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

மின்னூல்கள் இனி பொக்கிசம் தான்... திரு. இரவி, திரு. சீனிவாசன் ஆகியவர்களின் சேவை மகத்தானது... அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல...

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

வலையுலக ஆரம்பத்தில் உங்களை விட கோபம் இல்லை இல்லை எரிச்சல் இருந்தது...! சுருக்கமாக :

நிஜம் என்பது வேறு...
சிந்திக்க எவ்வளவோ உள்ளது...

எனக்கு வயித்தெரிச்சல் + அங்கலாய்ப்பு வருவதற்குள் மேற்படி தளங்களை எப்போதோ Reader-ல் Remove அவ்வளவு தான்...! ஹா... ஹா...

புரிதலுக்கு நன்றி...

Bagawanjee KA said... [Reply]

வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலான நேரத்தை தியாகம் செய்ய வேண்டியுள்ளது என்பது எனக்காகவே எழுதப் பட்டது போலிருக்கிறது !
த ம 3

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

வருகைக்கு மிக்க நன்றி தனபாலன்! உண்மையில் திரு. ரவி மற்றும் திரு. சீனிவாசன் ஆகியோருடைய பணி மகத்தானதுதான். தமிழுள்ளவரையும், இணையம் உள்ளவரையும் அவர்களின் பெயர் நிலைத்து நிற்கும்.

நல்ல உத்திதான் நானும் இதை பின்பற்றுகிறேன் தனபாலன். என்னவோ இந்த உலகத்தில் தங்களைவிட்டால் எழுத ஆளே இல்லை என்பது போன்ற மிதப்பில் இருப்பவர்களை என்ன சொல்வது?

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

சரியாகச்சொன்னீர்கள் பகவான்ஜி! இணையம் என்பது நேரவிழுங்கி மட்டுமல்ல. ஆரோக்கியக்கேடும் கூட. முக்கியமாய் கண்கள் நிறைய பாதிக்கப்படுகிறது. குடும்பம், சுற்றம், நட்பு எல்லாம் போய் வெறும் பதிவுலக நண்பர்கள் அல்லது முகநூல் நண்பர்கள் என சுருங்கி அல்லது பரந்து விட்டது.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!