பிரபஞ்சம், பூமி, சூரியன் போன்றவைகளைப் பற்றி பள்ளிக்கூட பாடத்தில் எத்தனைதான் படித்திருந்தாலும் சுஜாதாவின் நூல்களை வாசிக்கத் தொடங்கிய போதுதான் அதனை முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது. பால்வீதி காலக்ஸி பற்றியெல்லாம் இவ்வளவு தெளிவாக தமிழில் யாரும் விளக்க முடியாது என்றே நினைக்கிறேன். அவரின் விளக்கத்திலிருந்து சில துளிகள்.
பிரபஞ்சத்துக்கு ஆரம்பம் இருந்தால், அதற்கு முன் என்ன இருந்தது என்ற கேள்வி தானாகவே வருகிறது. ஒன்றுமே இல்லை என்றால், சூனியம் என்றால் அதை கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. காலம் கூட இல்லாத சூனியம் எப்படிச் சாத்தியம் என யோசிக்க முடிகிறதா பாருங்கள்! கற்பனை செய்துகொள்ள முடியாத ஒன்றுமில்லாததில் இருந்து திடப்பொருள்கள் தோன்றின என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும்? முடியும் என்று சொல்கிறது நவீன க்வாண்டம் அறிவியல்.
ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து திடப்பொருள் (MATTER) தோன்ற முடியும். எப்போது…? தோன்றும். அதே சமயம், அதன் எதிர்ப்பொருளான ANTI MATTER தோன்றி அவை இரண்டும் சேரும்போது ஒன்றையொன்று ரத்து செய்துகொண்டு ஒன்றுமில்லையாகலாம். ஒரு மணற்பரப்பில் ஒரு பிடி மணலை எடுத்துப் பக்கத்தில் குவித்தால் ஏற்படும் பள்ளம் ANTI MATTER. மீண்டும் மணலை நிரப்பி விட்டால் பரப்பு சூனியம்!
இது போலத்தான் பிரபஞ்சத்தில் அவ்வப்போது பொருளும் எதிர்ப்பொருளும் சூனியத்திலிருந்து தோன்றி அழிந்து கொண்டிருக்கின்றன.
நாமிருப்பது சூரியக்குடும்பம். ‘மில்கி வே’ என்னும் பால்வீதி காலக்ஸியில். இதில் ஒரு
ஓரத்தில் உள்ள நடுவாந்திர சைஸ் நட்சத்திரம் சூரியன். சூரியனைச் சுற்றி பூமி மணிக்கு 66,000 மைல் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமி சூரியனைச் சுற்றிவர ஒரு வருஷம் ஆகிறது. சூரியன் பால்வீதியில் ஒரு
சுற்றுவர 22.5 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
இத்தனைக்காலமாக சுற்றுவதால் மெல்லத்தானே சுற்றும் என்று எண்ணாதீர்கள்.
ஆகாச கங்கை என்னும் பால்வீதியை ஒரு
சுற்று முடிக்க எத்தனை மைல் போகவேண்டும் தெரியுமா? நூறாயிரம் ஒளி
வருஷங்கள். அதாவது 5865696-க்கு அப்புறம் 12 பூஜ்ஜியங்கள். அத்தனை மைல். எனவே சூரியன் ஒரு வினாடிக்கு 135 மைல் வேகத்தில் பயணம் செய்கிறது.
இது ஒரு காலக்ஸியின் ஒரு
நட்சத்திரத்தின் சரித்திரம் மட்டுமே!
இப்படி பல
கோடிக்கணக்கான காலக்ஸிகள், பலகோடிக்கணக்கான நட்சத்திரங்கள்… இதனாலெல்லாம் பயனேயில்லையா? இந்த அண்ட பேரண்டத்தில் நாம் மட்டும்தான் உயிருள்ளவர்களா? இதையெல்லாம் யோசித்தால் ராத்திரி தூக்கம் வருமா?