ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

நாட்டில் இத்தனை நல்லவங்களா?!



சனிக்கிழமை என்றால் எங்கள் அலுவலகத்துக்கு அரைநாள் விடுமுறை. வெளியூரிலிருந்து வந்து வேலை செய்பவர்கள் இரயிலைப் பிடித்துப் போவது வழக்கம். அப்படித்தான் நேற்று நாங்கள் புறப்பட்டபோது எனக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமை ஒரு வேலையை முடிக்கச்சொல்லி உத்தரவு வந்தது. எனவே மற்றவர்களை இரயில் நிலையத்தில் விட்டுவிட்டு நான் எனது அறைக்குத் திரும்பிவிட்டேன். 

வருடா வருடம் எங்கள் நிறுவனத்தில் புது வருட துவக்கத்தில் ஏதாவது பரிசுப்பொருள் கொடுப்பது வழக்கம். அப்படி இந்த வருடம் எங்களுக்கு கொடுத்தது ‘‘ரைஸ் குக்கர்’’. நண்பர்களில் ஒருவர் இதையும் தன்னோடு வீட்டுக்கு கொண்டு போனார். இரயில் நிலையத்தில் நாங்கள் இறக்கி விட்டபின் பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு நடைமேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து இரயிலுக்காக காத்திருந்தார். 

இரயிலும் வந்தது. இவர்களும் போய் ஏறியிருக்கிறார்கள். இரயில் புறப்பட்டு வேகமெடுத்து போய்க்கொண்டிருக்கிறது. அறையில் இருந்த எனக்கு அந்த நண்பரிடமிருந்து கைப்பேசி அழைப்பு வந்தது. பதட்டமாக பேசினார். என்ன செய்தி என்றால், அவசர அவசரமாக இரயிலில் இருக்கையைப் பிடிக்கும் வேகத்தில். ‘’ரைஸ் குக்கரை’’ (இதுக்கு தமிழ்ல என்னங்க?) அங்கேயே விட்டுவிட்டு இரயில் ஏறியிருக்கிறார். உள்ளே போய் இருக்கையைப் பிடித்து உட்கார்ந்ததும்தான் இவரக்கு குக்கர் ஞாபகமே வந்திருக்கிறது. உடனடியாக எனக்கு கைப்பேசியில் அழைப்பு…

இரயில் போய் இருபது நிமிடம் ஆச்சு. என் அறையிலிருந்து இரயில் நிலையம் இருப்பதோ ஒரு கி.மீ.தூரம். அவர் இரயில் நிலையம் போய் பார்க்கச்சொல்கிறார். அது அங்கு இருந்தாலும் இருக்கும். என்று கோரிக்கை வைக்கிறார். நானோ அது தேவையில்லாத வேலை. இன்னேரம் யாராவது எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள் என்றேன். அவரோ இல்லை நம் அதிர்ஷ்டம் அது அங்கு இருந்தாலும் இருக்குமில்லையா என்றார்.

நான் அவநம்பிக்கையோடு கிளம்பினேன். இரயில் நிலையம் போய், வழக்கமாய் நாங்கள் உட்காரும் இடத்தை நோக்கிப் போனேன். தூரத்திலிருந்தே தெரிந்துவிட்டது. அவர் விட்டுப்போன அந்த ‘’ரைஸ் குக்கர்’’ அனாதையாய் யாராலும் சீண்டப்படாமல் அங்கேயே கிடந்தது. ஆச்சர்யமும் மகிழ்ச்சியுமாய் நேராக அங்கே போய் அதை எடுத்துக்கொண்டு வந்துகொண்டே இருந்தேன். ஹூம்… ஒரு பய கேக்கணுமே… யாருமே உரிமை கொண்டாடவுமில்ல, கேக்கவும் இல்ல. பக்கத்திலேயே பலர் அமர்ந்திருந்தும் யாரும் இதை சட்டை செய்யவேயில்லை.

திடீர்னு எல்லாரும் நல்லவங்களா மாறிட்டாங்களா என்ன? இல்லை அதிலே ஏதாவது வெடிபொருட்கள் இருக்கும் என்று பயந்திருப்பார்களா? அப்படி ஒன்றும் இல்லையே? அதன் அருகில்தானே பலர் அமர்ந்திருந்தார்கள். பொருள் இருக்கிறது, அப்படியானால் அதன் உரிமையாளர் பக்கத்தில் எங்கோ இருக்கவேண்டும் என்று எண்ணித்தான் யாரும் கைவைக்காமல் இருந்திருக்கிறார்கள். 

எப்படியோ பொருள் கிடைத்துவிட்டது. தகவலை உடனடியாக அந்த நண்பருக்குத் தெரியப்படுத்தினேன். அவர் மகிழ்ச்சியோடு நன்றி கூறினார். இந்தக்காலத்தில் இப்படிக்கூட மக்களா?

எல்லோரும் நல்லவங்களா மாறிட்டு வர்றாங்களோ?!

14 கருத்துகள்:

ராஜி சொன்னது… [Reply]

பயம்தான் காரணமா இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

வெடிபொருட்கள் இருக்கும் என்கிற பயம் தான்... இன்றைய நிலை அப்படி...! ம்...

விழித்துக்கொள் சொன்னது… [Reply]

பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.

பெயரில்லா சொன்னது… [Reply]

வணக்கம்
அதை எப்பபோவோ எடுத்திருப்பார்கள் ஏதாவது வெடிபொருள் இருக்கும் என்ற பயத்தினால் எடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
கவிதையாக என்பக்கம்-அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்...வாருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜோதிஜி சொன்னது… [Reply]

இதே போல திருப்பூரில் ஒரு முதலாளி பை (உள்ளே பத்து லட்சம்) யாரும் சீண்டாமல் 3 மணி நேரம் அப்படியே இருந்தது. உங்கள் பழைய புகைப்படம் ஜோர். (பக்கவாட்டில் இருப்பது)

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி ராஜி அவர்களே! ஏதோ ஒரு பயம்தான் காரணமா இருக்கக்கூடும்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வெடிபொருட்கள் உள்ளே இருக்கலாம் என்ற பயம் இருந்தால் அதன் அருகில் யாரும் உட்கார்ந்திருக்கமாட்டார்கள். உரிமையாளர் அருகில் இருக்கலாம் என்ற பயமாகத்தான் இருந்திருக்கும். வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு நன்றி விழித்துக்கொள் பதிவரே!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ரூபன்!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ஜோதிஜி. சில நேரங்களில் மக்கள் தங்கள் பிரச்னைகளிலிலேயே ஆழ்ந்துவிடுவார்கள். மற்றவர்களைப் பற்றிய அவதானிப்பே இருப்பதில்லை. யார் எதை வைத்துவிட்டுப்போனால் நம்மக்கென்ன நம் வேலையைப் பார்ப்போம் என்கிற எண்ணமாகக் கூட இருக்கலாம். அது பழைய புகைப்படம் என்பதைக் கண்டுபிடித்து விட்டீர்களே!?

Unknown சொன்னது… [Reply]

அவர் யாரிடமும் இந்த பொருளை கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கமாட்டார் அதனால் அது கவனிப்பார் அற்று அன்கேயே இருந்திருக்கிறது ஒரு வேலை அப்ப்டி சொல்லியிருந்தால் அவர் சென்றதுமே அது களவு போயிருக்கும். உரிமையாளர் யாருனு தெறியாதமுன்ன அனாவசியமா பொது இடத்தில் ஒருவன் திருடமாட்டான். என்னுடைய அனுபவத்தில் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட இடங்களில்தான் அதிகம் திருடுபோய்இருக்கிறது கேட்பாறற்று வைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அதிகம் களவு போவதில்லை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

உண்மைதான் ராமஜெயம் அவர்களே! வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

ezhil சொன்னது… [Reply]

எல்லோருமே கூறிய பதில்கள் தான்...பொருள் இதுதானென்று தெரியாததால் ஏற்பட்ட பயமும், உரிமையாளர் அருகிருக்கலாம் என்ற எண்ணமும்தான் காரணமே ஒழிய அவ்வளவு நல்லவர்கள் கொண்ட உலகமாய் மாறவில்லை என்பதே உண்மை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கொஞ்சம் அசந்தால் ஆளையே விழுங்கிவிடும் உலகத்தில் இதுபோல் நடப்பது அரிதுதானே. அதுவும் அரை மணிக்கு மேலாகியும் பொருள் அங்கேயே பத்திரமாய் இருந்தது ஆச்சர்யம்தானே! வருகைக்கு மிக்க நன்றி எழில் அவர்களே.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!