Tuesday, December 24, 2013

புரட்சித்தலைவரை முதன் முதலாக பார்த்தபோது… ரோஹினி.

1978 – நான் தனியார் பள்ளியொன்றில் தமிழாசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். மலையரசிக்கும் வானரசனுக்கும் பருவந்தோறும் நடக்கும் ஊடல் முற்றிசிணுக்கும் தூறல்சிறு மழையானது. சிறு மழை-பெருவர்ஷமானது

இரவும் பகலும் ஜலப்பிரவாகத்தில் ஜீவித இயக்கும் ஸ்தம்பதமானது. புயலால் மக்கள் அடைந்த கஷ்ட நஷடங்கள் நெடிய கண்ணீர்க் கதைகளாயின. உயிர்ச்சேதம்-உடைமைச் சேதங்களுக்குப் பரிகாரமாக அரசு ஆறுதல் கரம் நீட்டி நிதியளித்ததோடு-பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு முன் பணம் கொடுக்கவும் முன் வந்தது.

ஆனால் அரசு அலுவலர்களுக்கு மட்டுமே அட்வான்ஸ் அளிக்கப்படும் என்ற உயர் அலுவலர்களின் உதாசீனத்தால் அட்வான்ஸ் மறுக்கப்பட்ட சோர்வோடு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியினர் அவசரக் கமிட்டி அமைத்தனர். நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில்தானே பணிபுரிகிறோம்.

எங்கள் கூரை சரியவில்லையா? எங்கள் உடமைகள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகவில்லையா? வெள்ளமும் புயலும் எல்லோருக்கும் பொதுதானே! என்ன செய்யலாம்! என்ன செய்யலாம்என்று குமுறிக்கொண்டிருந்தபோது

செய்தி வந்தது. மான்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவர் அவர்கள் உதகைக்கு வருகிறார்! பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு பேச்சு மருந்து பூசப் பள்ளித்திடலில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார் என்று.

‘’தாய்க்குலம் சார்பாக சார்பாக நீங்களும் வரவேணும்’’ அழைப்பை ஏற்று அவர்களோடு அவர்களில் ஒருத்தியாகக் காத்து நின்றேன். நிமிடங்கள் மணிகளான பின்னர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பொன்மனச்செம்மல் வெளியே வந்தார்.

முற்றுகையிட்டோம். முன் ஒத்திகையின்மையால் சில ஆசிரியர்கள் சொற்சுருக்கமற்று செய்தியை நீட்டியபோது முதல்வர் கண்கள் தானாகக் கைக்கடிகாரத்தில் படிந்தன. பளீரென இடைவெட்டி உரையாடலில் நுழைந்தேன். ‘’அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் புயல் நிவாரண முன்பணம் கிடைக்கவில்லையே!’’

‘’அது எப்படி கிடைக்காமல் போகும்? ஆணை எல்லோருக்கும் பொதுதானே அம்மா!’’
‘’இல்லை! எங்களுக்கு மறுக்கப்பட்டது.’’ ‘’உடனே மாற்றப்படும்’’.
மிக்க நன்றி’.
நாடோடி மன்னன் பாணியில் ஒரு கையசைப்பு, ஒரு புன்னகை, கரங்குவிப்பு. விண்ணப்பத்தினை கையில் வாங்கிக்கொண்டு காரேறிப் பறந்தார்.
அப்புறம்-
அன்று மாலை பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நொந்திருந்த ஆசிரியர்களுக்கு இதமாக சில சொல்லி ஆணையிட்டார். அடுத்த சில நாட்களில் அட்வான்ஸ் கிடைத்தது.

ஒரு தலைவனுக்கான சுறுசுறுப்போடு துணிந்து விரைந்து செயலாற்றிய பாங்கு. நாலே வரிகளில் நடந்த உரையாடலில் ஆசிரியர்களின் துயர் துடைத்த சாமர்த்தியம்!

முதன் முறையாக புரட்சித்தலைவரைச் சந்தித்த போதே-நான் பார்த்த நிர்வாகத்திறன்! இப்போது நினைத்தாலும் என்னைப் பூரிக்க வைக்கிறது.
 
கவிதாயினி ரோஹினி.

மக்கள் மனதில் என்றும் மின்னும் எம்.ஜி.ஆர் - தினமலர்

நூற்றாண்டுகள் கடந்தாலும், நீ வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா? எதிரியை நோக்கிய வாள் வீச்சும், கொஞ்சும் உன் தமிழ் பேச்சும், அந்த சிரிப்புக்கு இடையே ரசிகனின் மூச்சும் இருந்ததை, யார் தான் மறப்பார்? "நாள் ஒரு மேனி, பொழுதொரு வண்ணம், ஒருவர் மனதிலே ஒருவரடி,' அது, எம்.ஜி.ஆர்., என்ற மக்கள் தலைவனின் திருவடி.

பெயரில் கூட, அவருக்கு சுமை வேண்டாம் என்பதால் தான், எம்.ஜி.ராமச்சந்திரனை, எம்.ஜி.ஆர்., ஆக்கியது தமிழகம். "நமக்கென்று யார் வருவார்... கேட்பதை இங்கு யார் தருவார்...' என, தமிழகம் தனித்திருந்த போது, திரையில் பார்த்த நாயகன், தரையில் இறங்கி வந்தார், மக்கள் திலகமாக!நடிகனாகவோ, அரசியல்வாதியாகவோ, முதல்வராகவோ பார்க்கவில்லை, வெகுஜனம்; எங்கள் வீட்டு பிள்ளையாக, கலங்கரை விளக்கமாக, ஒளி விளக்காக, எங்கள் தங்கமாக, ஆசை முகமாக, ஆனந்த ஜோதியாக, இவ்வளவு ஏன், "ஆயிரத்தில் ஒருவனாகவே...' பார்த்தது. 
 
தன்னை நோக்கி வந்த சங்கடங்களைக் கூட, சாதனைகளாய் மாற்றிய எம்.ஜி.ஆர்.,யின் வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய பாடம். எம்.ஜி.ஆர்., என்ற சரித்திரத்தை படிக்க, புத்தகம் தேவையில்லை; அவர் நடித்த படங்களும், பாடல் வரிகளுமே போதும்.
 
"இதயம் எனது ஊராகும், இளமை எனது தேராகும், மான்கள் எனது உறவாகும், மானம் எனது உயிராகும், தென்றல் என்னைத் தொடலாம், குளிர்த்திங்கள் என்னைத் தொடலாம், மலர்கள் முத்தம் தரலாம், அதில் மயக்கம் கூட வரலாம்,' இந்த வரிகள் போதும், அந்த மாமனிதனின் எண்ணங்களை அறிய. "சிரித்து வாழ்ந்த போதும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாத...' அந்த சிவப்பு மனிதனின் கரங்கள், கட்டி அணைத்த கருப்பு மனிதர்களின் தோள்கள், எத்தனை! மக்களை மதிக்க தெரிந்த அந்த குணம் தான், "நமக்கென்று ஒருவன்; அவனே நமக்கு இறைவன்,' என, எம்.ஜி.ஆர்., நினைவுகளை நம் மனதிலே, நிலை நிறுத்துகிறது.சொல்லாமல் வரும் புயலையும், நிலநடுக்கத்தையும் சந்திக்க துணியும் மனிதன், இந்த மனிதரின் பிரிவை தாங்க முடியாமல் அழுத தினம், இன்று. 
 
காலத்தை வென்ற மனிதனை, காலன் வென்றதும், தகர்ந்தது தமிழக மக்கள் மனம். திரைக் காட்சியிலும், அரசு ஆட்சியிலும் மக்களோடு மக்களாய் வாழ்ந்த, அந்த மூன்று எழுத்து நாயகனை, இன்றும் நம் மூச்சில் சுமக்கிறோம். "வாழ்ந்தவர் கோடி... மறைந்தவர் கோடி... மக்களின் மனதில் நிற்பவர் யார்?; சரித்திரம் சொல்கிறது, அதுவே எம்.ஜி.ஆர்.,"என்னை எடுத்து, தன்னைக் கொடுத்து, போனவன் போனாண்டி... தன்னைக் கொடுத்து, என்னை அடைய... வந்தாலும் வருவாண்டி...' என காத்திருக்கும் கூட்டம் தனி! எம்.ஜி.ஆர்., வாழ்க்கை பயணத்தில், அவருடன் பழகிய சிலரை சந்தித்தபோது...

எனக்கு இரு குலதெய்வம்:

கணேசன், மாநகராட்சி துப்புரவு கண்காணிப்பாளர், மதுரை:  

எனக்கு இரு குலதெய்வம்; ஒன்று கருப்பணசாமி, மற்றொன்று எம்.ஜி.ஆர்., அவரால் வாழ்க்கை பெற்ற சாமானியர்களில் நானும் ஒருவன். சென்னையில் அவரை சந்திக்க, வீட்டிற்கு பல முறைச் சென்றுள்ளேன். பார்த்ததும், "சாப்பிட்டாயா?' என்ற கேள்வி தான், அவரிடம் முதலில் வரும். உலகத்தமிழ் மாநாட்டிற்காக, மதுரையில் தங்கியிருந்த எம்.ஜி.ஆரை பார்க்கச் சென்றேன். "அடிக்கடி, என்னை பார்க்க வருகிறாய்; உனக்கு வேலை இல்லையா?' எனக்கேட்டார். "இல்லை...' என, நான் சொல்லி முடிப்பதற்குள், "மதுரை மாநகராட்சியில் வேலை பார்க்கிறாயா?' என, அவரே பதிலையும் முடித்து, பணி ஆணையும் வழங்கிவிட்டார். இன்று என்னிடம் இருப்பவை, அன்று எம்.ஜி.ஆர்., வழங்கியவை. என் வீடு, வாகனங்களில் கூட, எம்.ஜி.ஆர்., பெயர் தான், வைத்திருக்கிறேன். எங்களிடம் வாழும் போது, அவர் எப்படி மறைவார்?

நான் முதல் ஏவுகணை:

மாயத்தேவர், முன்னாள் எம்.பி., திண்டுக்கல்; 

எம்.ஜி.ஆர்., கட்சி தொடங்கிய போது, திண்டுக்கல் லோக்சபாவிற்கு இடைத்தேர்தல்; பாசத்தில், என்னை வேட்பாளராக்கினார். 16 சின்னங்களை, கலெக்டர் என்னிடம் காண்பித்தார்; இரட்டை இலையை தேர்வு செய்து, எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தேன்; அவர் காரணம் கேட்டார். "இரண்டாம் உலகப்போரில் வின்சென்ட் சர்ச்சில் வெற்றியை காட்டியது இரட்டை விரல்; அது போல், நாமும் காட்டலாம்,' என்றதும், மகிழ்ச்சியடைந்தார்.அவர் உண்ணும் போது, உடன் யார் இருந்தாலும், உண்ண வேண்டும். சென்னை ஓட்டலில், அவருடன் சாப்பிடும் போது, நான் பாதியில் எழுந்தேன்; என்னை உட்காரச் சொன்னவர், "இந்த உணவுக்காக தான், நீ வக்கீல், நான் நடிகன்; அதை வீணாக்காதீர்கள்,' என, அறிவுரை வழங்கி, உண்ண வைத்தார். தன் அரசியல் ராக்கெட்டில், முதல் ஏவுகணை என்ற பெருமையை, எனக்கு தந்த உத்தமர் அவர்.
மறக்க முடியாத மனிதநேயம்:

எஸ்.டி.சண்முகவேலு,  எரசக்கநாயக்கனூர், தேனி: 

சென்னை சத்யா ஸ்டூடியோவில் உரிமைக்குரல் படப்பிடிப்பில் அவரை காணச் சென்ற போது, ""என் கூட நடிக்கிறீயா...'' எனக்கேட்டார். "உங்க பக்கத்தில் நிற்கும்போதே, எனக்கு கை, கால் உதறுது; உங்க அன்பே போதும்,' என, நான் கூறியதும், என்னை கட்டிப்பிடித்து, போட்டோ எடுக்கச் சொன்னார். அருப்புக்கோட்டை வறட்சி நிதி வசூலுக்கு வந்த அவர், மதுரை தமிழ்நாடு ஓட்டலில் தங்கியிருந்த போது, அவரை சந்திக்க, மனைவி குழந்தைகளுடன் காத்திருந்தேன். அடையாளம் கண்டு, உதவியாளரிடம் என்னை அழைத்து வர செய்தவர், என் மகள்களுக்கு சத்யா, ராணி என பெயரிட்டு, "சத்யா, எனது தாய், ராணி எனது அண்ணியார்,' எனக் கூறி, என் மனைவியிடம் நலம் விசாரித்தார். வெளியே வந்த என் மனைவி, "கட்சிக்காக, சொத்துக்களை நீங்கள் விற்ற போது, எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது; இந்த கூட்டத்தில், உங்களை அடையாளம் கண்டு பேசியிருக்கிறார் என்றால், அவருக் காக நம் சொத்துக்களை இழந்தாலும், பரவாயில்லை,' என, நெகிழ்ந்து போனார். மறக்க முடியாத மனிதநேயர், அவர்.

பஞ்சாட்சரம், குடும்பத்தலைவி, தட்டட்டி, சிவகங்கை: 

என் கணவர் சிதம்பரம், சென்னை ஓட்டலில் வேலை பார்த்த போது, அவரது ருசி அறிந்து, தன் வீட்டு சமையல்காரர் ஆக்கினார் எம்.ஜி.ஆர்., 30 ஆண்டுகள், அவருடன் தான் தங்கியிருந்தார்; பொங்கலுக்கு மட்டும் ஊருக்கு வருவார். சம்பளத்திற்காக இல்லாமல், எம்.ஜி.ஆர்.,ன் பாசத்திற்காக தான், என் கணவர், அவரிடம் வேலை பார்த்தார். ஒரு நாள் கூட, அவரை வேலைக்காரர் போல, அவர் நடத்தியது இல்லையாம். "அய்யா... வாங்க, போங்க,' என்று தான், அழைப்பாராம். என் மகள் திருமணத்திற்கு, நாங்கள் எதிர்பார்த்தை விட, அதிகமாகவே செய்தார். இன்று என் கணவர் என்னுடன் இல்லை; அவர் நேசித்த மனிதன் இங்கு இல்லாத போது, அவர் மட்டும் எப்படி, என்னுடன் இருப்பார்?
சிரிப்பில் மயங்கி விடுவோம்:

எஸ். நாகராஜன், ஓட்டல் மேலாளர்,அருப்புக்கோட்டை : 

1977 ல் அருப்புக்கோட்டை தொகுதியில் எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று, நன்றி அறிவிப்புக்காக, 3 நாட்கள் அருப்புக்கோட்டை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அவருக்கு தேவையான உணவுகள், மதுரை ஓட்டலில் இருந்த வந்தது. இருப்பினும், அருப்புக்கோட்டை தனலட்சுமி ஓட்டலில் இருந்து, நானும் உணவு கொண்டு செல்வேன்; அவற்றையும் உண்பார். நண்பர் ஆறுமுகம் வீட்டில் தயாரான கீரை மசியலை, விரும்பி உண்பார். அப்போது, அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. வரவேற்கும் அவரது சிரிப்பில், நாங்கள் மயங்கிவிடுவோம். அவரது சென்னை வீட்டில், 3 முறை சாப்பிட்டிருக்கிறேன். "அவங்களை நல்லா கவனிங்க,' என, தன் வேலையாட்களிடம் கூறுவார். இவ்வாறு அந்த பொன்னின் நிறம், பிள்ளை மனம், வள்ளல் குணம் பற்றி மனம் திறந்தனர்.

4 comments:

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

Pls check your Profile. I had try with so many times. Not enter. Now I am coming from Google Plus. sorry for English. NHM Problems.

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

சரி செய்துவிட்டேன் ஜோதிஜி அவர்களே! என்.எச்.எம்.ரைட்டர் எனக்கும்கூட பல சமயங்களில் வேலை செய்வதில்லை. நலம்தானே! சென்ற வாரம் முழுக்க சென்னையில் இருந்தேன். அதனால் பதிவுலக பக்கம் வரமுடியவில்லை.

ஜோதிஜி திருப்பூர் said... [Reply]

நலமே. எம்ஜிஆர் குறித்து ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் மக்களின் அடிப்படை வசதிகளை கணக்கில் எடுத்துக் கொள். மக்களை வெறுப்பேத்தாதே. தமிழ்நாட்டில் இது தான் அவர் இருக்கும் வரையிலும் எடுபட்டது. இப்போது மக்களின் மனோபாவம் மாறிவிட்டது.

கவிப்ரியன் ஆர்க்காடு said... [Reply]

இத்தனை வருடங்கள் ஆனபின்பும் அவருடைய வாக்கு வங்கி குறையாது இருப்பதே மக்கள் அவர் மீது வைத்திருக்கும் கண்மூடித்தனமான அன்பிற்கு சாட்சி. ''ஜெ'' இதை தனக்கு சாதகமாக சாதுர்யமாக பயன்படுத்திக்கொண்டார்.

Post a Comment

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!