வெள்ளி, 15 நவம்பர், 2013

புயலும் வாழ்வும்... ஒடிஸா ஃபைலின் புயல் அனுபவங்கள்

நான் பணி செய்வது ஒடிஸாவில். ஆனாலும் ஒரே இடத்தில் இல்லை. எங்களது ஒடிஸா கிளையின் அலுவலகம் இருப்பது கன்ஜாம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர். ஆனால் தங்கியிருப்பது அதையொட்டிய நகரான பெர்ஹாம்பூர். தற்போது இதை பிரம்மபூர் என்றே அழைக்கிறார்கள். இங்கிருந்து 260 கி.மீ.தொலைவில் மற்றுமொரு புதிய கிளை தொடங்கியதால் அங்கு எனக்கு தாற்காலிகமாக பணி மாற்றலாகி உள்ளது. இருப்பினும் எனது குடும்பம் இருப்பதோ பிரம்மபூரில். வாரம் ஒரு முறை வந்து போக வேண்டிய சூழ்நிலை.

கோபால்பூர் கடற்கரைப் பகுதியிலிருந்து வெறும் 12 கி.மீ.தூரம்தான் பிரம்மபூர். நம்ம வேலூரைப் போல இந்த நகரமும் இப்போதுதான் மாநகராட்சி ஆகியிருக்கிறது. சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல்களும் நடந்து முடிந்தபடியால் வளர்ச்சிப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே ஹைமாஸ்ட் விளக்குகள் அமைப்பதும் சாலைகளை அகலப்படுத்துவதும், போக்குவரத்தை சீரமைப்பதிலும் (மா)நகராட்சி நிர்வாகம் முழு மூச்சாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் இந்த ஃபைலின் புயல் வந்து எல்லாவற்றையும் உருத்தெரியாமல் உடைத்துப்போடும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. பயமுறுத்தலான அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியதும் கடலோரப்பகுதி ஒடிஸா முழுவதும் பாதுகாப்புப் பணிகளில் முடுக்கிவிடப்பட்டது. எனக்கென்னவோ முதலில் வேடிக்கையாகப்பட்டது. நம்ம ஊர் ரமணன் ஐயா வானிலை அறிக்கை, சொல்வது ஒன்றும் நடப்பது ஒன்றும் நாம் அறிந்ததுதானே!?
 
ஒடிஸாவில் கடந்த மாதம் பைலின் புயல் வந்து தன் வீர தீர பராக்கிரமங்களையெல்லாம் காட்டிவிட்டுப் போனபின் ஒடிஸாவின் கன்ஜாம் மாவட்ட கடலோரப் பகுதிகள் இன்னமும் சீரடைந்த பாடில்லை. நகர்ப்பகுதிகள் உடனடியான நடவடிக்கைகள் மூலம் ஓரளவு சரி செய்யப்பட்டு வருகிறது. தொலைத்தொடர்புகள் சீரடைந்து வருகின்றன. சாலைகளில் கிடந்த மரங்கள் மின்னல் வேகத்தில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டன.

ஆனால் இந்த மின்சார விநியோகம் மட்டும் இன்னமும் சீராகவில்லை. பல கோடிகள் அளவுக்கு (14,373 கோடிகள்) சேதத்தின் மதிப்பு கணக்கிடப் பட்டிருக்கிறது. கன்ஜம் மாவட்டத்தில் மட்டும் சேதத்தின் மதிப்பு 3,433 கோடிகள். பெரிய பெரிய மின் கோபுரங்களில் இருந்து தெருவிளக்குக் கம்பங்கள் வரை சாய்ந்து கிடக்கிறது. அவைகளை அப்புறப்படுத்திவிட்டுத்தான் முழுமூச்சாய் பணிகள் செய்ய இயலும். அறுந்து கிடக்கும் மின் கம்பி வடங்களுக்குப் பதிலாக புதியனவற்றை தற்காலிகமாக இணைத்து நகர்புறங்களில் படிப்படியாக மின் இணைப்பைக் கொடுக்கத் துவங்கிவிட்டனர்.

பாய்லின் புயல் தாக்குதலில் அழிந்த மரங்களுக்குப் பதிலாக மாநிலம் முழுவதும் 12 கோடி மரங்களை நட ஒடிஸா அரசு திட்டமிட்டுள்ளது. பாய்லின் புயல் தாக்கத்தால் ஒடிஸா மாநிலம் முழுவதும் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழிந்தன. இதையடுத்து அந்த மாநிலத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக 2014–15 ஆம் ஆண்டிற்குள் 12 கோடி மரங்களை மாநிலம் முழுவதும் நட ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. அதில் 6.5 கோடி மரங்கள் மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களின் கீழ் நடப்படவுள்ளன. 5.5 கோடி மரங்கள் விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில் நடுவதற்காக அளிக்கப்பட்ட உள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 16 பெரிய நாற்றுப் பண்ணைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கு இந்த பணியை முடிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

நிஜத்தில் இந்தப் புயல் அனுபவம்
இத்தனை மோசமாக இருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இயல்பு வாழ்க்கையும் கூட கொஞ்சம் மாறிப்போனது என்னவோ உண்மைதான். புயலின் தாக்கத்தையும் அதன் நிஜமான கோர முகத்தையும் பார்க்க ஒரு வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். 260 கி.மீ தூரத்தில் உள்ள கலிங்கநகர் பகுதியிலிருந்து ஒரு நாள் நாள் முன்னதாகவே அலுவலகத்திலிருந்து வந்த அறிவுறுத்தலின் பேரில் வீட்டுக்கு வந்தாயிற்று. நான் பணி செய்கின்ற இடமோ பாதுகாப்பானது. ஆனால் வீடு இருக்கிற இடமோ புயல் தாக்குதலின் முக்கியமான தொடக்க இடம். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்க புறப்பட்டாயிற்று!
பையின் புயலை பார்த்துவிடுவோம் ஒரு கை, என்றுதான் இருந்தேன். இப்போதெல்லாம் மக்களின் மனோ நிலை வெகுவாய் மாறித்தான் போயிருக்கிறது. இதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? என்ன புரியலையா? புயல் வருதேன்னு பயத்துக்குப் பதிலா கொண்டாட்டம்அது எப்படித்தான் இருக்கும்னு ‘’லைவா’’ பார்க்க ஆசை! எனக்கு மட்டுமல்ல என் வீட்டிலுள்ள வாண்டுகளுக்கும், என் மனைவிக்கும். நம்மூர்ல 2004-ல சுனாமி வந்து அடிச்சிட்டுப் போன போது தொலைக்காட்சியிலே பார்த்து மிரண்டு போனவங்க, அடுத்த முறை சுனாமி வதந்தி வந்தபோது வேடிக்கை பார்க்க சென்னை மெரினாவுக்கு போன கதை நமக்கு தெரிந்ததுதானே!

புயலுக்கு முந்தின நாள் அதாவது அக்டோபர் 11-ஆம் தேதி இரவு பிரம்மபூர் என்கிற பெர்ஹாம்பூருக்கு வந்து சேர்ந்தாகிவிட்டது. அன்று இரவோடு மின்சாரம் நின்று போய்விடும் என்று தெரிந்து போயிற்று. அதனால் இரவு 12 மணி வரை விழித்திருந்து இந்த ''ஒடிஸாவை நோக்கி ஃபைலின் புயல்'' என்ற  பதிவைப் போட்டுவிட்டுத்தான் உறங்கவே போனேன். விடிந்தாயிற்று. இன்னும் மின்சாரம் போகவில்லை. லேசாக காற்று வீசத்தொடங்கியிருந்தது. தொலைக்காட்சிச் செய்தியைப் பார்க்கலாம் என்று பார்த்தால் புவனேஸ்வரில் காற்று வீசத்தொடங்கியுள்ளதாக செய்தி. ஒடிஸா அரசு தயார் நிலையில் இருப்பதாக சன்டி.வி.செய்திகூட சொல்லியது.

அடுத்த சில நிமிடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அவ்வளவுதான். ஊரே மயான அமைதியாகி விட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாய்க் குறைந்து போய்விட்டது. காற்றின் வேகம் மெதுமெதுவாக அதிகரிக்கத் தொடங்கியது. கோபால்பூரையும் அங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் நான் இருக்கும் பிரம்மபூரையும் மாலை 5.30. மணியிலிருந்து 6 மணிக்குள் புயல் சுமார் 250-லிருந்து 280கி.மீ வேகத்தில் புயல் தாக்கும் என்ற நிலை.

‘’ஹை ஜாலி’’ ஒரு புதிய அனுபவம் கிடைக்கப்போகுதுங்கிற சந்தோஷத்துல என் மகள்கள். ‘’என்னப்பா எல்லோரும் பயந்துகிட்டிருக்காங்க’’ நீங்க என்னடான்னா எப்ப புயல் வரும்னு ஆவலா காத்துகிட்டிருக்ககீங்கன்னு’’ கேட்டா என்னப்பா ஒன்னுமே ஆகலை. வெறும் காற்றுதான். இதுக்கு ஏன் எல்லாரும் பயப்படுறாங்க. இந்தப் புயல் எப்படின்னு பார்க்கணும்பா, இது ஒடிஸாவுல எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமா இருகும்லஎன்று சொல்கிறார்கள்.

மாலை 5 மணி ஆகிவிட்டது. காற்று கொஞ்சம் வேகமெடுத்திருக்கிறது அவ்வளவுதான். புயலின் வேகம் இல்லை. சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் உறவினர்களின் தொலைபேசி அழைப்புகள். உங்களுக்கு ஒண்ணுமில்லியேன்னு…. இன்னும் புயல் வேகமெடுக்கலை. இனிமேதான் வரப்போகுதுன்னு சொல்லி வைத்தவுடன், தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. லேசான மழைத்தூறல்தான். பலமான மழை ஏதுமில்லை. காற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை அதன் ஊளைச் சத்தத்திலும், எங்கோ ஏதோ பறப்பதும் விழுவதுமான சத்தத்திலும் அறிய முடிந்தது.

கதவு, ஜன்னல்கள் எல்லாம் மூடிவைக்கப்பட்டிருந்தாலும் யாரோ வலுக்கட்டாயமாக திறக்க முயற்சிப்பதான சத்தங்கள். ஒருவிதமான பயமும் திகிலும் கூட ஆரம்பித்து விட்டது. சாப்பிட்ட பின்பும் யாரும் உறங்கப் போகவில்லை. பேய்ப் படங்ளில் மட்டுமே பார்த்த காட்சிகள் இங்கே நிஜத்தில் அரங்கேறிக்கொண்டிருந்தன. இரவு பத்து மணி வரை வடபகுதியிலிருந்தும் அதன் பிறகு தெற்கிலிருந்தும் போகப்போக சுழற்றிச்சுழற்றியும் காற்று வீசியது.

11 மணிக்கு மேல் புயல் தன் தாண்டவத்தைத் தொடங்கி விட்டது. ஊசி நுழைய முடியாத இடங்களில்கூட காற்று நுழைய முடியும்தான். ஆனால் அதுவே ஊழிக்காற்று நுழைந்தால் அதன் வேகம் எப்படி இருக்கும்? இதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. மழைத்தூறலுடன் இந்த பேய்க்காற்று கலந்து போனதால் காற்று நுழைந்த சகல இடங்களிலும் மழைநீர் வேகமாக உள்ளே நுழையத் தொடங்கியது. கன மழைக்குக்கூட பாதுகாப்பானதாய் இருந்த இந்த கான்கிரீட் வீடு முழுவதும் இப்போது தண்ணீர். படுக்கக்கூட இடமில்லாத வகையில் எங்கும் காற்றும் தண்ணீரும் அதிர்வோடு சத்தத்தோடு….

எதைச் சரி செய்வது எங்கு அடைப்பது. ஒன்றுமே புரியவில்லை. இரண்டு மகள்களும் பம்பரமாய் சுழல்கிறார்கள். தண்ணீரைப் பிழிந்து பக்கெட்டுகளில் எடுத்துப்போய் ஊற்றுகிறார்கள். தொலைக்காட்சி, படுக்கைகளை ஓரம் கட்டுகிறார்கள். அலறுகிறார்கள். நினச்சுக்கூட பார்க்கமுடியாத அனுபவம் அவர்களுக்கு. கட்டிடம் கூட அதிர்கிறது. சதாரண அதிர்வில்லை. நில நடுக்கம் ஏற்பட்டால் எப்படி குலுங்குமோ அப்படி. சின்ன மகள் அருகில் வந்து ஏம்பாஇன்னிக்கு ராத்திரியே நாமெல்லாம் செத்துருவோமாப்பாஎன்று பரிதாபமாகக் கேட்கிறாள்.
 நான் கவனத்தை திசை திருப்பி ‘’ நீ தானே புயலப் பார்க்கணும்னு கேட்ட’’ இதோ வந்தாச்சி. இப்போ ஏன் பயப்படுறேன்னு சிரிச்சிக்கிட்டே கேட்டேன். இல்லப்பா…. ''இவ்ளோ மோசமா இருக்கும்னு கனவுல கூட நினைக்கலப்பான்னு'' நடுங்கிக்கோண்டே சொல்கிறாள். ஒண்னும் ஆகாதுப்பாநாம ரொம்ப பாதுகாப்பா இருக்கோம். ஆனா மத்தவங்கள நினைச்சுப்பாரு..மரங்களிலே தங்கியிருக்கும் பறவைகளை நினைச்சுப் பாரு. கொட்டைகைகளில் இருக்கும் கால்நடைகளை நினைச்சுப்பாருநாம எவ்வளவு பாதுகாப்பா இருக்கோம்னு புரியும்னு விளக்கின பிறகு சமாதானம் ஆனாள்.

ஆனா அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. ஏதோ மாடிப்படியில் மிகப்பெரிய சத்தம். நாங்கள் தங்கியிருந்தது இரண்டாவது மாடியில். மூன்றாவது மாடியில் ஒற்றை அறையும் தொடர்ந்து மொட்டை மாடி. இரண்டாவது மாடியிலிருந்த சமையலறையில் இருந்துதான் மொட்டை மாடிக்குப் போக வழி (படிக்கட்டு). மேலே போய்ப் பார்த்தால் அடித்த பேய்க்காற்றில் மொட்டை மாடிக்கதவு உடைந்துபோய் கீழே விழுந்து கிடக்கிறது. பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த மற்றொரு கிரில் கதவு இப்போது தாக்குதலுக்கு நேரிடையாக இலக்காகி சுவரிலிருத்து எந்நேரமும் பெயர்ந்து விழலாம் என்ற நிலை. எந்த தடையும் இல்லாததால் காற்றும் மழையும் முழு வீச்சுடன் கிரில் கதவு வழியே அசுர வேகத்தில் உள்ளே நுழைந்து வீட்டையே உருக்குலைக்கத் துவங்கியிருந்தது.

நிமிட நேரத்தில் இதைப் பார்த்துவிட்டு கீழே ஓடிவர, மொட்டை மாடி மழைத்தண்ணீர் சமயலறை முழுவதும் வியாபிக்கத் தொடங்கிவிட்டது. இரவு மணி 11.30. விடிவதற்குள் இந்த ஊர் இருக்குமா அல்லது முற்றிலும் அழிந்து போகுமா? என்ற ஐயப்பாடு என்னுள். வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் ஓய்ந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்து விட்டனர். சமையலறையும், சமயலறையை ஒட்டிய குளியலறையும் சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தன. எது வேண்டுமானாலும் ஆகட்டும் விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று  சமையலறையையும் மூடியாகிவிட்டது. குளியலறைக் கதவு, அங்குள்ள வெண்டிலேட்டர் வழியாக வந்த வாயு பகவானால் தாக்கப்பட்டு உடைந்து போனது.

ஊழிக்காற்று தன் தாண்டவத்தை 12 மணியளவில் நிறுத்திவிட்டு அங்கிருந்து மெதுவாய் நகரத் தொடங்கியது. களைப்பில் ஓய்ந்து போன நாங்கள் தண்ணீர் அதிகம் பாதிக்கப்படாத ஒரு மூலையில் முடங்கி தூங்கிப் போனோம்.

ஐந்து மணிக்கு விழிப்பு வந்து ஜன்னல், கதவுகளைத் திறந்து பார்த்தால் ஊரே சுடுகாடாகாடாகாவும், வெள்ளக்காடாகவும் மாறிப்போயிருந்தது. மாடியில் இரும்புக் கதவின் தாழ்ப்பாள் (20mm Ø) வளைந்துபோய் கதவைத் திறக்கவே முடியாத சூழ்யிலையில் சுத்தியலால் அடித்து ஓரளவு நிமிர்த்தி, திறந்து மொட்டை மாடியிலிருந்து பார்த்தவுடன் புரிந்து போனது. அனைத்தும் சர்வநாசம். இயற்கைப் பேரழிவை இத்தனை அருகாமையில் இருந்து பார்க்க்கும் அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. மரங்களே இல்லை. தொலைத்தொடர்பு கோபுரங்கள் இல்லை. எங்கு பார்த்தாலும் மின்கம்பிகள் அறுந்தும் மின் கம்பங்கள் சாய்ந்தும் கிடக்கின்றன. ஆடு மாடுகளின் பரிதாபமான ஓலம். பறவைகள் அனைத்தும் ஒரே இரவில் மடிந்து போய்விட்டனவா என்ற ஐயம்.

எத்தனை விஞ்ஞானம் வளர்ந்தாலும் இயற்கைக்கு முன்னால் மனிதன் தூசு என்பது மீண்டும் ஒரு முறை நிரூபனமாகியிருக்கிறது என்பதை உணர முடிந்தது. கடவுள் எங்கே இருக்கிறார் என்ற கேள்வியும், இருந்தால் ஏன் காப்பாற்றவில்லை என்ற கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. என் வீட்டருகே இருந்த ஒரு சிறிய சிவன் கோவிலும் புயலில் காணாமல் போயிருந்தது.

தெருவில் மார்பளவு வரை தண்ணீர். விடிந்ததும் இடுப்பளவே இருந்த தண்ணீர் , எங்கிருந்தோ திடீரென வெள்ளம் போல வந்த நீரால் மார்பளவாகி தரைத்தளங்களில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் எந்த வித முன்னறிவிப்பின்றி சர்வ சாதாரணமாக நுழைந்து வியாபிக்கத் துவங்கியது. ஏந்த முன்னேற்பாடுகளையும் செய்யாத மக்களோ திணறித்தான் போனார்கள். இரவெல்லாம் கடும் புயல் தாக்குதலுக்கு பாதுகாப்பு கொடுத்த வீடு, புயல் ஓய்ந்து பிரச்னை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சோடு ஆக வேண்டிய காரியங்களை பார்க்கும் நேரத்தில் மழைநீரோடு சாக்கடைக் கழிவு நீரும் கலந்து அனைத்து வீடுகளையும் ஆக்ரமிக்கத் தொடங்கியது. பாவம் மக்கள், வீட்டைப் பூட்டிக்கொண்டு மார்பளவு தண்ணீரிலேயே வெளியேறி உறவினர், நண்பர்களின் வீடுகளுக்குப் போகத் துங்கினார்கள்.

எத்தனை எச்சரிக்கை செய்தும் ஹூம் என்னாகப்போவுது. காற்றுதானே அடிக்கும் என்ற என் வீட்டம்மாவின் அலட்சியத்தால் குடிதண்ணீர் (கேன்(மினரல்) வாட்டர்), பால், காய்கறிகள் என எதுவுமே முன்னேற்பாடாய் வாங்கி வைக்கவில்லை. மின்சாரம் இனி எப்போது வரும் என்ற கேள்விக்குறி? ஒரு வாரத்தில் வந்துவிடும். நவீன் பட்நாயக் எல்லா ஏற்படுகளையும் முடுக்கிவிட்டிருக்கிறார் என்ற அக்கம்பக்கத்தினரின் நம்பிக்கையோடு பேசிக்கொண்டிருந்தனர். நல்லவேளை சமையல் எரிவாயு இருந்ததினால் ஏதோ இருப்பதைக்கொண்டு அடுத்த மூன்று நாட்களை ஓட்டியாகிவிட்டது.

இரண்டாவது நாளில் தெருவில் நீர் வடியத் தொடங்கிவிட்டது. அப்புறம்தான் வீட்டை விட்டு வெளியே கிளம்பி நகரை வலம் வரத்தொடங்கினோம். மின்சாரம் இல்லததால் கைப்பேசியை சார்ஜ் செய்யமுடியாத நிலை. சார்ஜ் செய்தாலும் யாரிடமும் பேசமுடியாத தகவல்தொடர்பு துண்டிப்பு. இப்படி இருக்க கொஞ்ச நஞ்சம் இருந்த கைப்பேசி உயிர்ப்பில் சில புகைப்படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதை ''ஃபைலின் புயல் மறக்க முடியாத அனுபவம்'' என்ற இந்தப் பதிவில் பதிவேற்றியிருந்தேன்.
மின்சாரமில்லாமல் எந்த வேலையுமில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களின் அனுபவம் ஒருவகையில் நிம்மதியாகவும் ஒருவகையில் போரடிப்பதாவும் இருந்தது. மின்சாரம் இருந்தால் என்னுடைய மடிக்கணிணியை திறந்து வைத்துக் கொண்டு ஏதாவது செய்துகொண்டிருந்திருப்பேன். உண்பதும் உறங்குவதுமான வாழ்க்கையும், வீட்டிலேயே இருந்த சூழ்நிலை தரும் வெறுப்பும் வித்தியாசமாகத்தான் இருந்தது.

ஏதாவது எழுதலாம் என்றால், இப்போதெல்லாம் எதையும் பேனா காகிதம் என்று எடுத்து எழுதவே முடிவதில்லை. நேரடியாக கணிணியிலேயே தட்டச்சு செய்துவிடுவதால் அதற்கான அவசியம் இல்லாது போய் இப்போது அந்த பழக்கமே மறந்து போய்விட்டது. ஆனால் பிள்ளைகளோடு நிறைய பேசமுடிந்தது. நிறைய பகிர்ந்து கொள்ள முடிந்தது. அவர்களின் சந்தேகங்கள் கேள்விகளுக்கு விடையளித்த திருப்தி இருந்தது. மின்சாரமில்லாத பழைய சம்சாரி வாழ்க்கையையும் அனுபவித்த உணர்வும் கிடைத்தது.

ஆமாம் தமிழ்நாட்டு மக்களேகூடங்குளம்தான் செயல்படத் தொடங்கிவிட்டதே. இப்போது மின்வெட்டு எப்படி இருக்கிறது. ஆயா ஆட்சியின் மின்வெட்டே இல்லாத தமிழ்நாடு சாதனையாகி சாத்தியமாகிவிட்டதா என்ன? மின்வெட்டு பற்றிய பேச்சையே காணோம்!

இன்னும் கொஞ்சம் இருக்கு, அடுத்த பதிவில்........

10 கருத்துகள்:

ஜோதிஜி சொன்னது… [Reply]

அழகா வந்திருக்கு பதிவு. எனக்கும் இது போன்ற சூழ்நிலையில் எசகு பிசகாக எதிர்ப்பதுண்டு. நீங்களும் அப்படித்தானா?

அப்புறம் அங்குள்ள வாழ்நிலை இங்குள்ள சூழ்நிலை? என்ன மாதிரியான வித்தியாசங்கள் உங்கள் பார்வையில் இருக்கு என்பதை ஒரு பதிவாக எழுத வேண்டுகோள் வைக்கின்றேன்.

வவ்வால் சொன்னது… [Reply]

ஹலோவ்,

நாங்கலாம் தானே புயலிலேயே வாழ்ந்து காட்டினவங்க ... கரன்ட் வர ஒரு மாசம் ஆச்சு,ஒரு மாசம் கழிச்சும் அதுவும் 500 ஓவா லஞ்சமா கொடுத்தா பொறகு தான் , கரண்டு கம்பத்துல அந்த லைன் மேன் ஏறி கனெக்‌ஷன் கொடுத்தார்(ன்), எனவே கரன்ட் மட்டும் சீக்கிரம் வரும்னு ஆசைப்பட்டிராதிங்க அவ்வ்!

ஆல் தி பெஸ்ட்டு!

பெயரில்லா சொன்னது… [Reply]

வணக்கம்
அனுபவ நினைவுகள் சுமந்த பதிவு எழுதிய விதம் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

நன்றி ஜோதிஜி! கண்டிப்பாக எழுதுகிறேன்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வவ்வால்! வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

ரூபன்! வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

இராஜராஜேஸ்வரி சொன்னது… [Reply]

குழந்தைகளின் கேள்வி அதிரவைத்தது ..!

அமுதா கிருஷ்ணா சொன்னது… [Reply]

நேரில் பார்த்த மாதிரி இருக்கு.இன்று தான் திண்டுக்கல்லில் இருந்து வந்தேன். தினமும் 5 முதல் 6 மணிநேரம் மின் வெட்டு ஒரு வாரமாக அங்கே ஆரம்பிச்சாச்சு..

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

இராஜராஜேஸ்வரி! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அமுதா கிருஷ்ணா! தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி. அப்போ.... இன்னும் தமிழ்நாட்டுல மின்வெட்டு தீரலை. மக்கள் எல்லோரும் மௌனமாகிவிட்டாங்க அப்படித்தானே!?

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!