வேலூர் கோட்டை பிரமிப்புக்கு பஞ்சமில்லாத கோட்டை. எப்படித்தான் இதைக் கட்டியிருப்பார்கள் அந்தக்காலத்தில்? சின்ன வயசில் சுற்றிப் பார்த்தபோது எங்களுக்கு கோட்டையைப் பற்றி விளக்கிச்
சொல்லக்கூட யாரும் இல்லை. அப்போதெல்லாம் வேலூர் என்றாலே
மனதில் நிழலாடுவது இந்த பிரமாண்டமான கற்கோட்டைதான்.
இந்த கோட்டைச் சுவர்கள் உட்பொருந்தும் செங்கோணக் கற்களில் கட்டப்படுள்ளது. இக்கட்டடக் கலைநுட்பம் ஆங்கிலேயர்களின்
பொறியியல் பாணியை நினைவூட்டுகின்றன. கோட்டையின் பிரதான சுவர்
கருங்கற்களால் ஆனது. கோட்டைச்சுவர்கள் அமைத்தபோது ஏதாவது
கலவையோ, சாந்துப்பூச்சோ நடைபெற்றதற்கான அடையாளமே இல்லை.
சுவரின் மேல் பகுதியில் நடப்பதற்கான நடைபாதைகள் அமைக்கப்படுள்ளன.
இக்கோட்டையின்
வாசல் பல கதவுகளுடன் சாலை வழியும், அதைத் தற்காக்கும் இழுவைப் பாலமும்
கொண்டுள்ளது. இது தவிர தனியாக கீழ் வழிகளும் உள்ளன. பலமான அரண்களுடன் எதிரிகள்
யாரும் எளிதில் நுழைந்து விடாதபடி யோசித்து யோசித்து கட்டியிருக்கிறார்கள். இந்த
நட்பமான வசதிகளை வைத்துப் பார்க்கும்போது வேலூர் கோட்டை எந்த அளவுக்கு இராணுவ
முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறியலாம்.
கோட்டையைச் சுற்றிலும் மிகப்பெரிய அகழி. இன்று வரையிலும் அதிலுள்ள நீர் வற்றி நான் பார்த்ததேயில்லை. வலதுபுறம் எப்போதும் நீர் நிரம்பியே இருக்கும். கோட்டையைச்
சூழ்ந்துள்ள அகழியின் நீளம் 8000 அடியும் ஆழம் 190 அடியிலிருந்து முறையே 20 அடி
வரையிலும் உள்ளது. வட பகுதியில் உள்ள அகழியில் படகுப்
போக்குவரத்தும், மீன் பிடித்தலும் நடைபெறுகிறது. இடதுபுறமோ கோரைப்புற்கள் ஆளுயரத்துக்கு மேல் வளர்ந்து கிடக்கும். கோட்டையின் பின்புறமும் செடிகளும் புல் பூண்டுகளும்தான். தெற்குப் பகுதி அகழியின் அகலம் குறைவு. அருகிலேயே
ஒரு சிறிய பூங்கா!
பழமையின் சான்றாக கம்பீரமாக விளங்கும் இந்தக்கோட்டையில்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் வெடித்தது. இதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
சின்ன வயசில் ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது 12 கி.மீ. தொலைவிலுள்ள இந்த வேலூருக்கு சுற்றுலா அழைத்து வந்ததை இப்போது நினைத்தால்
சிரிப்புதான் வருகிறது. அந்த நினைவு இன்றும் பசுமையாக
இருக்கிறது. கோட்டையின் தெற்குப் பகுதியலுள்ள பூங்காவில் ஒரு
சின்ன இரயில் (புகைவண்டி)
ஓடிக்கொண்டிருந்தது. எனது முதல்
ரயில் பயணமே அதுதான். பராமரிப்பு பிரச்னைகள்
காரணமாக அது சில ஆண்டுகளிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.
அதற்கப்புறம் அதைச் சீண்டுவார் யாருமில்லை. இந்தக்கால
தலைமுறைக்கோ அதைப்ற்றி தெரியக்கூட வாய்ப்பில்லை!?
கோட்டை மைதானம்; பல அரசியல் கட்சிகளின் களமே இதுதான். எம்ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது வேலூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது
அவரை முதன் முதலாக பார்க்கும் சந்தோஷத்தில் இரவெல்லாம் விழித்திருந்து அந்த கோட்டை
மைதானத்தில் நண்பர்களோடு காத்திருந்தது ஞாபகத்தில் வந்து போகிறது. அப்புறம் வருடத்திற்கு ஒரு முறை சுற்றுலாத்துறை நடத்தும் பொருட்காட்சி.
சுற்று வட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் பொழுதுபோக்க அப்போது சினிமா
தியேட்டர்களை விட்டால் வேறு வழியில்லை. அதனால் இந்த கோட்டை மைதானத்தில் நடைபெறும் பொருட்காட்சியின்போது கூட்டம்
அலை மோதும்!
கோட்டையின் பழம்பெருமை கருதியோ அல்லது கோட்டை இனியும் பாதுகாக்காவிட்டால்
அழிந்துவிடும் என்று கருதியோ தொல்லியல் துறை கோட்டையை தன் கட்டுப்பாட்டில்
எடுத்துக்கொண்டது. கோட்டை மைதானத்தின் பாதி எழில்மிகு பூங்காவாக மிளிரத் தொடங்கியது. எஞ்சியுள்ள பகுதியில்தான் பொதுக்கூட்டங்களோ சுற்றுலா பொருட்காட்சியோ
நடந்து வருகிறது.
ஜலகண்டேஸ்வரர் ஆலயம்; ஆளரவமற்ற இந்தக் கோட்டையில் எப்போதாவது வரும் சில சுற்றுலாப் பயணிகள் தவிர, சில அரசு அலுவலகங்கள் இயங்கி வந்ததால்
கொஞ்சமே கொஞ்சம் மக்கள் நடமாட்டம் இருந்து வந்தது. 1983-ம்
ஆண்டு என நினைக்கிறேன். அப்போதுதான் சத்துவாச்சாரி என்னும்
பகுதியிலிருந்து ஜலகண்டேஸ்வரர் சிலையை எடுத்து வந்து கோட்டைக்குள் இருந்த
ஆலயத்தில் மிக விமர்சையாக பிரதிஷ்டை செய்தார்கள். அது
அப்போதைய செய்தித்தாள்களில் முக்கிய இடம் பெற்றது. அதன்பிறகுதான்
கோட்டை ஒரு வழிபாட்டுத்தலமாகவும் அதிகமான மக்கள் புழங்கும் இடமாகவும் மாறியது.
வேலூர் கோட்டையில் உள்ள இந்த புகழ்பெற்ற ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மூலவர் ஜலகண்டேஸ்வரர். மூலவரைச் சுற்றி ஒரு சுற்றுப் பாதையும் மகா
மண்டபமும் வடக்கு முகம் நோக்கிய நடராசர் சிலையும் மற்றும் பல உப தெய்வங்களும் உள்ளன.
விஜயநகர கட்டடக் கலையின் அற்புதமாக விளங்கும் இக்கோயிலின்
வெளிப்பிரகாரத்தின் தெற்கில் அமைந்துள்ள கல்யாண மண்டபம் பிற்கால விஜயநகர
கட்டடக் கலையின் ரத்தினமாக விளங்குகிறது. இத் திருத்தலத்திற்கு கண்ணைக் கவரும் சிற்பங்களும், கலை எழில் மிக்க தூண்களும் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
10 கருத்துகள்:
ஒருமுறை வர வேண்டும்... சிறப்பு தகவல்களுக்கு நன்றி...
நல்ல பதிவு.
அறியாத தகவல்கள்
இன்னும் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தால் மேலும் ரசித்திருப்போம்.
எனக்கு பிடித்த இடங்களுள் வேலூர் கோட்டை மிக முக்கியமானது. அங்கு போனாலே மனசுக்குள் மைதி குடி புகும். வேலூருக்கு வந்தால் மிஸ் பண்ணாத ஒரு இடம் இது!! பகிர்வுக்கு நன்றி!
நம்ம ஊரு....வாங்க வாங்க! வருகைக்கு நன்றி!
திண்டுக்கல் தனபாலன்! அவசியம் காணவேண்டிய இடம் வேலூர் கோட்டை! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!
முருகாநந்தன்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! வரும் பதிவுகளில் புகைப்படங்களை அதிகம் பகிர்ந்து உங்களின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்.
ராஜி அவர்களே! வருகைக்கு மிக்க நன்றி! உண்மைதான் மிகவும் அமைதியான இடம். உள்ளே மரங்கள் சூழ்ந்த பகுதி. ஜலகண்டைஸ்வரர் ஆலயத்தின் உள்ளே நிலவும் குளிர்ச்சி என ஒரு ரம்யமான இடம். இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. நான் சென்று பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
வாங்க உஷா! நம்ம ஊருன்னா தனி பாசம் வந்துடுது இல்ல! வருகைக்கு மிக்க நன்றி!
நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். வருவோம்.
வருகைக்கு நன்றி ஜோதிஜி!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!