திங்கள், 12 ஆகஸ்ட், 2013

புரட்சி நடிகர்! Vs புரட்சித் தலைவர்!!



‘நான் ஏன் பிறந்தேன்?இது தன் சுய சரிதைத் தொடர் கட்டுரைக்கு எம்.ஜி.ஆர். சூட்டியிருந்த தலைப்பு.

ஓர் பிரபல வாரப் பத்திரிகையில் முதலில் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்தார்; என்ன காரணமோ அப்பத்திரிகையில் இக் கட்டுரைத் தொடர் பாதியில் நின்றது.

பின்னர் –
அவரது கழகத்தின் அண்ணா அறக் கட்டளை நடத்தும் வாரப் பத்திரிகையில், அதே தலைப்பில், அதே தொடரை எழுதத் தொடங்கினார்; என்ன காரணமோ இப்பத்திரிகையிலும் இக்கட்டுரைத் தொடர் பாதியில் நின்றது.

இரண்டாம் முறை, அவரது கழகம் சார்ந்த வாரப் பத்திரிகையில் கட்டுரையைத் தொடங்கியபோது முன்னுரையில், அக்கட்டுரைத் தொடரிலிருந்து முழுமையாகவோ, பகுதிகளாகவோ எடுத்து பிரசுரம் செய்தால் காபிரைட் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார் எம்.ஜி.ஆர்.

1949 நவம்பரில், ஓர் சினிமா மாதப் பத்திரிகை எம்.ஜி.ராமச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றை, அவரை பேட்டி கண்டு வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...

‘பாட மட்டும் தெரிந்தவர்களை வைத்துதான் பட முதலாளிகள் தைரியமாக படங்களைப் பிடித்திருக்கின்றனர். ஆனால் நல்ல நடிப்புத் திறமை, வசன சுத்தம், கவர்ச்சிகரமான தோற்றம் இவைகளைப் பெற்றிருந்தும் பாடத் தெரியாத குறையினால் அனேகர் உப நடிகர்களாகவே இருந்து மங்கி மறைந்திருக்கின்றனர்.

பின்னர் வந்தது இரவல் குரல் வாங்கும் வழக்கம்... சமீப வருஷங்களில்தான் ஆண்களுக்குக் கூட குல் இரவல் வாங்குவதற்கு பட முதலாளிகள் முற்பட்டனர். அது முதலே எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற சிலருக்கு கதா நாயகர்கள் வேஷம் கிடைக்கத் தொடங்கியது.

சக்கரவர்த்தித் தோருமகள் படத்தில் நடிகரானது எப்படி? ஏன்?

1949 நவம்பர் இதழில் அந்த சினிமா பத்திரிகை எழுதியது... ‘கொல்லங்கோட்டை அடுத்த வடவனூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவர் 1916-ம் வருஷம் ஜனவரி மாதம் 11-ம் தேதியன்று மருதூர் கோபால மேனன்-சத்தியபாமா அம்மாள் ஆகியோரின் புத்திரராய்ப் பிறந்தார். ராமச்சந்திரனுடன் பிறந்தவர்கள் ஒரு தமக்கையும் தமயனும் ஆவர். தமக்கை காலமாகிவிட்டார். தமயன் சக்ரபாணி மட்டும் இப்பொழுது சினிமா உலகில் ஒரு பிரபல வில்லனாய் விளங்கி வருகிறார்.

‘மருதூர் என்பது எம்.ஜி.சகோதரர்களின் வீட்டுப் பெயர் ஆகும். அந்தக் காலத்தில் இந்தப் பெயர் மலையாளப் பக்கங்களில் ஒரு பணக்காரக் குடும்பத்தை குறிப்பிட்டு வந்தது... இரு நாலக்குடா பக்கங்களில் கோபால மேனன் ஒரு ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டராகவும், கவுரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும் உத்தியோகம் பார்த்து வந்த்தார்... ராமச்சந்திரன் பிறந்து இரண்டரை வருடங்களில் மேனன் காலமானார். பின்னர் அக்குடும்பம் ஆதரிப்பாரின்றித் தவிக்கலாயிற்று... ... ராமச்சந்திரன் மூன்றாவது வகுப்பிலும், சக்ரபாணி இரண்டாவதும் பாஸ் ஆனார்கள்.

அதற்கு மேல் படிக்கவிடாமல் அவர்களது குடும்பச் சூழ்நிலை தடுத்தது. ஏதாவது தொழில் செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. வேலு நாயரின் நண்பரான நாராயண நாயரின் இந்த சமயத்தில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனியில் பின்பாட்டு பாடுபவராய் இருந்தார். நாராயண நாயரின் சிபாரிசின் பேரில் ராமச்சந்திரன், சக்ரபாணி இருவரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பனியில் நடிகர்களாய் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

ராமச்சந்திரனுக்கு முதன் முதலில் குறிப்பிடத்தக்க வேஷத்தை வாங்கிக் கொடுத்தவர் ஹாஸ்ய நடிகர் காளி என்.ரத்தினம்தான்... பி.யூ.சின்னப்பா (கம்பனியில்) ராஜபார்ட் ஆனதும் அவருக்கு அடுத்த முக்கிய வேஷங்களிலும், அவருடன் ஸ்திரீ பார்ட்டாகவும் ராமச்சந்திரன் நடிக்கலானார்.

‘சதிலீலாவதி’ (1936) படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலில் நடித்தார்; இன்ஸ்பெக்டர் வேஷம்; சிபாரிசு செய்து வேஷம் வாங்கிக் கொடுத்தவர் நடிகர் எமெ.கே.ராதாவின் தந்தை கந்தசாமி முதலியார். ‘இரு சகோதரர்கள், ‘தட்சயக்ஞம், வீர ஜகதீஷ், ‘மாயமச்சீந்திரா, ‘சீதா ஜனனம், ‘ஜோதிமலர், ‘தமிழறியும் பெருமாள், ‘அரிச்சந்திரா, ‘மீரா, ‘சாலி வாகனன், ‘ஸ்ரீமுருகன்(1946)... சின்னச் சின்ன வேஷங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

கதாநாயகனாக எம்.ஜி.ஆர். நடித்த முதல் முதல் படம் ‘ராஜகுமாரி (1947). அந்தப் படத்துக்கு வசனம் எழுதியவர் மு.கருணாநிதி!

‘தினமணி கதிர் ஏட்டில் மு.கருணாநிதி ‘நெஞ்சுக்கு நீதி தொடர் கட்டுரை எழுதினார். ‘ராஜகுமாரி படப்பிடிப்பின் போது அவர் எம்.ஜி.ஆரை சந்தித்தது பற்றி பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

‘அந்தப் படத்தில்தான் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். கதர் உடையும், கழுத்தில் துளசி மணி மாலையும் துலங்கிடக் காட்சியளிக்கும் காந்தி பக்தரான எம்.ஜி.ஆர். அவர்களுடன் எனக்குத் தொடர்பும் நட்பும் ஏற்பட்ட காலம் அதுதான். அண்ணாவின் நூல்களை நான் அவருக்குக் கொடுப்பேன். காந்தியின் நூல்களை அவர் எனக்குக் கொடுப்பார். எங்களுக்கிடையே அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். அவைகளின் முடிவு பிறகு அவர் கழக அணியில் இருந்ததுதான்.

‘ராஜகுமாரி படத்துக்குப் பின்னரும் ‘அபிமன்யூ, ‘மோகினி, ‘ராஜமுக்தி, ‘தினகுமார் ஆகிய படங்களில் எஸ்.எம்.குமரேசன், கே.ஆர்.ராமசாமி, தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா ஆகிய கதாநாயக நடிகர்களுடன் இணைப் பாத்திரங்களில் நடித்தார் எம்.ஜி.ஆர்.

மீண்டும் ‘மந்திரிகுமாரி’ (1950) படத்தில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். கதை வசனம் மு.கருணாநிதி! ‘மருதநாட்டு இளவரசி (1950) படத்தில் எம்.ஜி.ஆர்.கதாநாயகன்; கதாநாயகி வி.என்.ஜானகி! இடையில் ‘பணக்காரிபடத்தில் மட்டும் எம்.ஜி.ஆர். வில்லனாக, மாற்றான் மனைவியை காதலிப்பவராக நடித்திருக்கிறார். அந்த ஒரு படம் தவிர கடைசி படம் வரை எம்.ஜி.ஆர் ஹீரோதான்.

1977 ஜூன் 30-ல் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக பதிவி ஏற்றார். முதல்வராதற்கு முன்பே ஒப்பந்தமாகி படப்பிடிப்பு நடந்திருந்த ‘இன்றுபோல் என்றும் வாழ்க, ‘நவரத்தினம், ‘ மீனவ நண்பன், ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்,, போன்ற படங்கள் 1978 வரை வெளி வந்தன. எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 136. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ஆகியவை எம்.ஜி.ஆர். இயக்கிய படங்கள்.


முதலமைச்சராக பதவியேற்ற பின் ஒரு முறை எம்.ஜி.ஆர். சொன்னார், ‘பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயிடம் மீண்டும்  அனுமதி கோரியுள்ளேன். அவர் அனுமதித்தால் மீண்டும் படங்களில் நடிப்பேன்.

பாரதி நூற்றாண்டு விழாவின் போது, தமிழக அரசின் சார்பில் பாரதியார் வாழ்க்கை வரலாறு தயாரிக்கப்படும் என்றும், தான் அந்தப் படத்தை டைரக்ட் செய்யப்போவதாகவும் எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.

ராஜராஜசோழனின் 2000-மாவது முடிசூட்டுவிழாவின் போது, ‘பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கப் போகிறேன். நானே டைரக்ட் செய்வேன் என்றார் எம்.ஜி.ஆர்.

அண்ணாவின் தி.மு.கழகம் எம்.ஜி.ஆருக்கு கொடுத்த பட்டம் ‘புரட்சி நடிகர். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க. அவருக்கு கொடுத்த பட்டம் ‘புரட்சித் தலைவர்.
அவரோடு ஏராளமான படங்களில் இணைந்து நடித்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவுடன் ஏற்பட்ட மோதல் 1967 ஜனவரியில் துப்பாக்கிச் சூடுகளாய் மாறி, படுகாயமுற்று எம்.ஜி.ஆர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

பொதுக்கூட்டங்களில் பேசும்போது, ‘ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே என்று ஆரம்பிப்பார் எம்.ஜி.ஆர். இது பற்றி அவரே விளக்கினார். என்னைப் போருத்தவரை நான் சுடப்பட்டு மருத்துவ மனையில் இருந்தபோது என் உடம்பிலிருந்து நிறைய ரத்தம் விரயமாகியிருந்தது. அப்போது என் உடம்பில் ரத்தம் செலுத்தி என்னை வாழவைக்க மருத்துவ நிபுணர்கள் ஆவன செய்தார்கள்.

அந்த ரத்தத்துளிகள் என் உடம்பில் இருப்பதால்தான் நான் மனிதனாக உலவுகிறேன். அப்போது என் உடம்பில் செலுத்தப்பட்ட ரத்தம் யாருடைய ரத்தம் என்பது எனக்குத் தெரியாது. எப்போது அதை சேமித்தார்கள் என்பதும் தெரியாது. அதை கொடுத்தவருக்கும் அது பற்றி தெரியாது. ஆனால் அந்த ரத்தத் துளிகள்தான் என்னை மீண்டும் மனிதனாக்கியது.

அந்த ரத்தம் பலருடைய ரத்தமானதால் அனைவரையுமே நான் ‘என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே என்று குறிப்பிடுகிறேன்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு வந்த படங்களில் ஒன்று கலைஞரின் ‘எங்கள் தங்கம். கதை – கருணாநிதி, திரைக்கதை வசனம் – முரசொலி மாறன்; நாயகி – ஜெயலலிதா; (இதில் மூவர் முதலமைச்சர் ஆயினர், ஒருவர் மத்திய அமைச்சரானார்). கதாநாயகன் எம்.ஜி.ஆர் பாடுவதாக இப் படத்தில் ஒரு பாடல்...

‘நான் செத்துப் பொழைச்சவண்டா! எமனை பார்த்து சிரிச்சவண்டா!

- அறந்தை நாராயணன்.

4 கருத்துகள்:

வே.நடனசபாபதி சொன்னது… [Reply]

//அண்ணாவின் தி.மு.கழகம் எம்.ஜி‌.ஆருக்கு கொடுத்த பட்டம் ‘புரட்சி நடிகர்.’//
இந்த படத்தைக் கொடுத்தது கலைஞர் மு. கருணாநிதி என நினைக்கிறேன். ஏனெனில் அண்ணா தி.மு.க தொடங்கியவுடன் திரு கே. ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் கருணாநிதி கொடுத்த அந்த பட்டம் தலைவருக்கு வேண்டாம் .இனி அவரை புரட்சித்தலைவர் என்றே அழைப்போம் என்று சொன்னார்.

காரிகன் சொன்னது… [Reply]

அட்டகாசமான பல அறிய தவல்களை சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.மேலும் புரட்சி நடிகர் மற்றும் புரட்சி தலைவர் இரண்டுக்கும் இடையே இருந்த அரசியலை திரு நடன சபாபதி சரியாக சொல்லிவிட்டார்.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வே.நடனசபாபதி அவர்களே!
உண்மைதான். கலைஞர் மு கருணாநிதி கொடுத்த பட்டப் பெயர்தான் புரட்சி நடிகர். அதே போல கே.ஏ.கிருஷ்ணசாமிதான் எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் என்று அழைக்கத் தொடங்கினார். வருகைக்கும் தங்களின் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

காரிகன்! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!