திரைப் படங்களில் மட்டுமே என் கண்ணுக்குக் காட்சியளித்து வந்த மக்கள் திலகத்தை இன்று நான் நேரில் காணப்போகிறேன்… விடியற்காலையிலேயே உதயசூரியன் உற்சாகமாகக் கிளம்புகிறான்… ஆம் 1968 ஆம் ஆண்டு… இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் ஒரு பரவசப் பரபரப்புடன் தொடங்கப்பட்டு விட்டன. மலர்க்குழு நிறுவப்பட்டு விட்டது.
எம்.ஏ. இறுதி நிலை படித்துக் கொண்டிருக்கிற நான், அதன் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை விட, மக்கள் திலகம் அவர்கள் மலர் அமைப்புக்குழுத் தலைவராக இருக்கிறார் என்பதும், அவர் தலைமையில்தான் நாங்கள் பணியாற்றப் போகிறோம் என்பதுமே எனக்குக் கற்கண்டு செய்திகளாய் மாறி ஒருவித காய்ச்சல் வேகத்தையும், களிப்பு விறுவிறுப்பையும் உண்டாக்குகிறது; கால்வேறு தரையில் பாவ மறுக்கிறது!
மலர்க்குழுக் கூட்டம்… விடுதியிலிருந்து கிளம்புகிறேன். அடடா… ஒரு பெரிய தலைவருக்கு அளிக்கப்படுகின்ற வழியனுப்பு உபசாரங்களுடன் தோழியர், உடனுறை மாணவியர் வாசல்வரை வந்து வழியனுப்புகிறார்கள்.
மாயவரத்தைச் சார்ந்த வனஜா, மைதிலி – கழக குடும்பத்துச் சகோதரிகள் – காலையிலிருந்தே பூனைக்குட்டிகளைப் போல, அக்கா, அக்கா என்றவாறே என்னைச் சுற்றிச்சுற்றி வருகிறார்கள்… வனஜா கேட்கிறாள்… ‘அக்கா! உங்களுக்குப் பதிலாக நான்தான் அரசு மணிமேகலை என்று சொல்லிக்கொண்டு கூட்டத்திற்கு நான் போகட்டுமா?’ புட்சித்தலைவரைப் பார்க்க அந்தப் பூமனம் துடிக்கிறது! நான் சிரித்தவாறே கிளம்புகிறேன்.
கூட்டம் நடக்கவிருக்கிற கூடத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். வெற்று வார்த்தைகளை உதடுகள் உதிர்க்கின்றன; விழிகள் வாசலை வலம் வருகின்றன. அதோ! வந்துவிட்டார்!! சந்தன மின்னல் ஒன்று சபைக்குள் வருகிறது – புன்னகையோடு!!!
ச்சே! இவர்
உண்மையிலேயே என் உடன்பிறந்த தமயனாக இருகக் கூடாதா? பாசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; மலரைப் பற்றி கலந்துரையாடுகிறோம்… சில திருத்தங்கள், சில மாற்றங்கள் செய்கிறார்…
எதையோ சொல்லிவிட்டு, எதிரில் இருக்கிற என்னைப் பார்க்கிறார் - ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தயங்காமல் சொல்லலாமே’ என்கிறார். நான் தடுமாறுகிறேன். தயக்கத்தை உதறிவிட்டு, தைரியத்தை அழைத்துக்கொண்டு என் கருத்தைச் சொல்லுகிறேன்…
சிற்றுண்டி பரிமாறப்படுகிறது. அனைவரும் உண்டு முடிக்கிறோம்… பரிமாறுகிறவர் தட்டங்களையும், குவளைகளையும் சேகரிக்கின்றார். அவருக்கு உதவியாக உடலை ஒருக்களித்துக் கொள்கிறார்கள்– பின்னாலிருந்து அவர் ஒவ்வொரு தட்டமாக, குவளையாக எடுத்துக்கொள்ள! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அருகில் வருகிறார் அந்தப் பணியாளர்.
எம்.ஜி.ஆர். அவர்கள் என்ன செய்தார் தெரியுமா? தன் முன் இருந்த தட்டு, குவளையை மட்டுமல்ல – பக்கத்தில், எதிரில் இருப்பவர்கள் தட்டங்களையும் குவளைகளையும் கூட, எடுத்து எடுத்து நீட்டுகிறார் – அதே புன்னகையுடன்!
பிரமித்துப் போய்விடுகிறேன். தன் எச்சில் தட்டத்தையும், குவளையையும் எடுத்துத் தருவதையே ஒரு கேவலமாக, தங்கள் தகுதிக்கு குறைவானதாக நினைக்கிறவர்கள் அல்லவா எண்ணிக்கையில் ஏராளம்! அந்த நட்சத்திரங்களின் நடுவில் இவர் ஒரு சந்திரன்தான்!!
அவர் பேசுகிறார். பேசும்போது ஒரு சில வரிகள்… எண்ண ஆற்றலுக்கு எழுதாத சாட்சியமாய்… ‘நாட்டு மக்களுக்கு நாம் நல்லது செய்கிறோம்; நல்லதைத்தான் செய்வோம்’ என்னும்போது பேச்சாளனின் முத்திரை அழுத்தமாக வந்து பதிகின்ற அழகை அமைதியாக ஆனந்தமாக ரசிக்கின்றேன்!
வணக்கம் கூறி விடைபெறுகிறார்… கைமலர்கள் குவிக்கிறோம்; கண்மலர்கள் விரிக்கிறோம்… அவர் புறப்பட்டுப் போகிறார் – நான் நின்று கொண்டே இருக்கிறேன்…
4 கருத்துகள்:
சந்திரனல்ல.. சூரியன்...!
இப்போது தான் உங்களைப் பற்றி நினைத்தேன். உடனே வந்துவிட்டீர்கள்! ஆச்சர்யாமக இருக்கிறது. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!
தமிழை சொல்லி ஆட்சிக்கு வந்த வேஷதாரிகளின் ஆட்சியில் பள்ளிகளில் தமிழ் எந்த நிலையில் இருக்கிறது என்று சற்று சிந்தியுங்கள் சகோதரி.அவர் எனக்கு தட்டு எடுத்து கொடுத்தார்,விளக்குமாறு எடுத்து கொடுத்தார் என்றெல்லாம் தயவுசெய்து எழுதாதீர்கள்.
விஜயன்! இது 25 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு! அதற்கடுத்து நிறைய ஆட்சிமாற்றம் ஆகிவிட்டது. மற்ற ஆட்சிகளைவிட எம்.ஜி.ஆர். ஆட்சி தமிழுக்கு செய்தது அதிகம். அதை விளக்க தனி பதிவு வேண்டும்!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!