உறவுகள் எப்படி
உருவாகின்றன…? எப்படி அது நெருக்கமாக மாறுகிறது. எதனால் உறவுகளுக்குள் பிணக்கு ஏற்படுகிறது
என்பதெல்லாம் மனித வாழ்வில் தவிரக்க முடியாத உணர்வு சம்பந்தமான நிகழ்வுகள். அதுவும்
இந்திய மரபுச் சூழலில் உறவுகளுக்குள் பிணக்குகள் ஏற்பட்டால் அதை சட்டென்று முடிவுக்கு
கொண்டுவர முடியாத மனச்சிக்கல் இருக்கிறது.
ஆயுள் முழுவதும்
நீடிக்கின்ற உறவாக திருமண பந்தம் மட்டுமே இன்றுவரை இருக்கிறது. சகிப்புத்தன்மை என்பது
இந்த திருமண உறவுகளுக்குள் அதிகமாக இருக்கிறது. ஆனால் இதை விட மிக உயர்ந்த உறவாகக்
கருதப்படுகிற நட்பில் சகிப்புத்தன்மையோ, மன்னிக்கும் மனப்பான்மையோ இருப்பதாகத் தெரியவில்லை.
சின்னச்சின்ன கருத்துவேறுபாடுகளால் கூட நட்பு முறிந்து போய்விடுகிறது.
நட்பில் ‘ஈகோ’வும்
இருக்கிறது. இதனால்தான் நல்ல
நட்புகள் கூட கடைசிவரை நிலைத்து நிற்கமுடியாமல் போய்விடுகிறது. ஒவ்வொரு பருவத்திலும்,
ஒவ்வொரு கட்டத்திலும் நட்பு மாறிக்கொண்டே வருகிறது. பிரிக்கவே முடியாத உறவுகள் கூட சமயங்களில் ஆபாசமாய் அசிங்கமாய் சந்தி சிரித்து விடுகிறது. காரணம் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முயற்சிப்பதும், தான் காட்டும் அன்புக்கு அவரை அடிமையாக நடத்த முயற்சிப்பதுமே ஆகும். ஆனாலும் நட்பு முறிவதற்கு சில சமயங்களில் காரணங்களே
தேவைப்படுவதில்லை. சில நாட்கள் தொடர்பில்லாமல் இருந்தாலே போதும். அது தானாகவே தன் மரியாதையை
இழந்து விடுகிறது. அப்படியே சந்தித்துக் கொண்டாலும், பேசிக்கொண்டாலும் அது பழைய மாதிரி
நெருக்கமாக இருப்பதில்லை.
வார, மாத இதழ்களை படிப்பதில் ஆர்வமுள்ள நான் ஒரு முறை குமுதம் வார இதழைப் படித்துக்கொண்டிருந்த போது, ஒரு கவிதை தென்பட்டது. ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கும் ஒரு பெண் எழுதிய கவிதை அது. மனிதர்களின் அத்தனை சுயரூபங்களையும் வெளிப்படுத்திய கவிதை அது. எனக்கு அந்த கவிதை மிகவும் பிடித்துப்போனது. மனிதர்களை, மனித வாழ்வியலைப் பற்றி புரிந்துகொண்டவர்களால் மட்டுமே அது போன்ற ஒரு கவிதையைப் படைக்க முடியும்.
நானும் கவிதை எழுத
முயற்ச்சித்து கவிஞனாக ஆக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது. இந்தப் பெண்ணின்
கவிதையைப் படித்ததும் நான் கவிதை எழுதும் முயற்சியையே நிறுத்திவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
நீண்ட நாட்களுக்கு என் மனதைவிட்டு அகலாத கவிதை இது. வழக்கம் போல அந்தக் கவிதையைப் பாராட்டி
அந்தப்பெண்ணுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அவரிடமிருந்து வந்த கடிதமும் அந்தக்
கவிதையும் இங்கே பதிவாக்கியிருக்கிறேன். நீங்களும் படித்துப் பாருங்களேன்.
உணர்வுகள்
சராசரி மனிதனாய்
உலவுவதைக் காட்டிலும்…
தேவையில்லா அசிங்கங்களைப்
புணர்வதைக் காட்டிலும்…
உள்ளத் துணர்வை
எடுத்துரைப்பதைக் காட்டிலும்…
எதையோ நினைத்து
வருத்தமடைவதைக் காட்டிலும்…
நிஜங்களோடு மோதி
களைப்புறுவதைக் காட்டிலும்…
போலியான முகப் புன்னகை
அணிவதைக் காட்டிலும்…
பணத்தை மதித்து
ஓடுவதைக் காட்டிலும்…
உணர்வுகளைக் கொச்சைப்படுத்திச்
சிரிப்பதைக் காட்டிலும்…
சமூக அவலங்களைக் கண்டு
விலகுவதைக் காட்டிலும்…
நம்பிக்கைத் துரோகம்
செய்வதைக் காட்டிலும்…
கொல்லாமல் கொல்லும்
காதலைக் காட்டிலும்…
அரசியல் நேர்மையை
உணர்வதைக் காட்டிலும்…
சாதி அழுக்கோடு
புரள்வதைக் காட்டிலும்… நான்…
இங்கேயே இருந்து விடுகிறேன்!
சிரித்தபடி…
நானிருக்குமிடம்
மனநலகாப்பகம்.
உலவுவதைக் காட்டிலும்…
தேவையில்லா அசிங்கங்களைப்
புணர்வதைக் காட்டிலும்…
உள்ளத் துணர்வை
எடுத்துரைப்பதைக் காட்டிலும்…
எதையோ நினைத்து
வருத்தமடைவதைக் காட்டிலும்…
நிஜங்களோடு மோதி
களைப்புறுவதைக் காட்டிலும்…
போலியான முகப் புன்னகை
அணிவதைக் காட்டிலும்…
பணத்தை மதித்து
ஓடுவதைக் காட்டிலும்…
உணர்வுகளைக் கொச்சைப்படுத்திச்
சிரிப்பதைக் காட்டிலும்…
சமூக அவலங்களைக் கண்டு
விலகுவதைக் காட்டிலும்…
நம்பிக்கைத் துரோகம்
செய்வதைக் காட்டிலும்…
கொல்லாமல் கொல்லும்
காதலைக் காட்டிலும்…
அரசியல் நேர்மையை
உணர்வதைக் காட்டிலும்…
சாதி அழுக்கோடு
புரள்வதைக் காட்டிலும்… நான்…
இங்கேயே இருந்து விடுகிறேன்!
சிரித்தபடி…
நானிருக்குமிடம்
மனநலகாப்பகம்.
(மனநலத்தோடு ஜி. தீபா. கோவை)
மதிப்பிற்குரிய
கவிப்ரியன் அவர்களுக்கு,
வணக்கத்துடன் ஜி. தீபா எழுதிக்கொள்வது. நலம்.
நலமறிய ஆவல். புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள். குமுதம் இதழில் வெளியான ‘உணர்வுகள்’
எனும் கவிதை கண்டு தாங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. நன்றி… நன்றி… நன்றி!
என் கவிதை கண்டு
வந்த 115 கடிதங்களின் மகிழ்ச்சியை விட… உங்கள் கடிதம் கண்டவுடன் அடைந்த ஆனந்தம் அதிகம்.
ஆம்! ஒரு மனிதனுடைய திறமையை அடுத்தவர் பாராட்டும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சியைவிட, ஒரு
சகோதரப் பாசத்தோடு அனுப்பிவைத்த உங்கள் கடிதம் என் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது என்றால்
அது மிகையில்லை!
உங்களின் கையெழுத்து
மிக அருமையாக இருந்தது. என் நண்பர்களும் பாராட்டியதைச் சொல்லச் சொன்னார்கள். தாங்களும்
கவிதை எழுதுவதை தன்னடக்கத்தோடு மறைத்துவிட்டு என்னைப் பாராட்டியதை நான் சிரம் தாழ்த்தி
ஏற்றுக்கொள்கிறேன்.
படித்துவிட்டு
புத்தகத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்காமல் கடிதம் எழுதி பாராட்ட
எண்ணிய என் தமிழ்ச் சகோதரனுக்கு என் வணக்கங்கள். உங்கள் கடிதம் என்னை ஊக்கப்படுத்துவதுடன்
மேலும் பொறுப்பானவளாகவே செய்கிறது. மயிலாடுதுறையைச் சார்ந்த ‘மாலா’ மட்டுமல்ல, கோவையைச்
சார்ந்த ‘தீபாவும்’ இனி உங்கள் இனிய தோழியே!
நானும் உங்களின்
கடிதங்களையெல்லாம் கண்டபிறகுதான் எழுத்தின் வலிமை, வீச்சு என்ன என்பதை உணர்ந்துகொண்டேன்!
நண்பா…! நீ சிறு
தொகை பரிசளிக்க விரும்புவதாகஞ் சொன்னாய். உன் அன்பைத் தவிர எனக்கு வேறொன்றும் வேண்டாம்.
நிச்சயமாக எனக்குத் தேவைப்பட்டால் உன்னை உரிமையோடு கேட்கும் ஸ்நேகத்தை மட்டும் தந்தால்
அதுவே போதும்! என்னுடைய பொருளாதாரத் தேவை எளிதில் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. உன் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றிகள்.
உனது வாழ்க்கைமுறை,
குடும்பம், பணி, ஊர் முதலிய தகவல்களை உடனடியாக எனக்குத் தெரிவிக்கவும். மற்றபடி இப்போதைக்கு
நம் நட்பைத் தவிர வேறொன்றும் விஷேசமில்லை. அங்கு……..?
செமஸ்டர் தேர்வுகள்,
சகோதரியின் திருமணம் என பல வேலைகளினாலேயே கடிதம் எழுத இவ்வளவு நாட்கள் தாமதமாகிவிட்டது.
மன்னித்துக்கொள் தோழா!
நன்றி!
என்றும் நட்புடன்,
கோ. தீபா.
4 கருத்துகள்:
மனதைத் தொடும் கவிதை! பகிர்வுக்கு நன்றி கவிப்ரியன்!
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஞானசேகரன்!
அருமையான நேச இலைகளின் கோர்வை ...............படித்து முடித்ததும் ஒரு ஆசுவாசத்தை தருகிறது .............வாழ்த்துக்கள் உங்கள் நட்பிற்கு
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி கோவை.மு.சரளா!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!