செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

ஒரு நாயகன் உதயமாகிறான்...


டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வரலாற்று திருப்பமாக பார்க்கப்படுகிறது. கட்சி துவக்கி ஒரு ஆண்டிற்குள் மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கு பெற கெஜ்ரிவாலுக்கு எந்த ஆயுதம் உதவியது. இவரது முன்னேற்றத்திற்கு என்ன காரணம் ? மக்களை எப்படி கவர்ந்தார் என அரசியல் விமர்சகர்கள் தங்களின் விவாதங்களில் அலசி வருகின்றனர். இன்றைய வெற்றி மூலம் ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி நாடு முழுவதும் இன்னும் அபரிதமாக இருக்குமோ என்றே எண்ண தோன்றுகிறது. இந்த கட்சி வளர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இன்றைய தேர்தல் வெற்றி மூலம் நாடு முழுவதும் அந்த அதிர்வு பரவி , இது போல் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற அலை தற்போது எழுந்திருக்கிறது. மாநில வாரியாக ஊழல் செய்தவர்களே, ஆட்சி கட்டிலை பரபரம்பரை, பரம்பரையாக சொந்தம் கொண்டாடி வருபவர்களுக்கு ஆம் ஆத்மி ஒரு எச்சரிக்கை மணி அடித்துள்ளது என்றே கூறலாம். 


கெஜ்ரிவால் தலைநகரில் ஆட்சியை பிடித்து இருப்பதால், பிற மாநில அரசியல் கட்சிகளும் இவரது ஆதரவு, தயவை நாடி நிற்கும். இதன் மூலம் அரசியல் உறவுகளை புதுப்பித்து கொள்ளும். இதனால் உதிரி கட்சிகள் பல ஆம் ஆத்மியில் கூட்டு சேர தனது ஆதரவு கரத்தை நீட்டும். படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு ஏற்ற சூழலை ஆம் ஆத்மி உருவாக்கியுள்ளது.

தமிழகத்திலும் கடந்த 40 ஆண்டு காலமாக ஊழலில் ஊறிப்போனவர்களே ஆட்சி கட்டிலில் இருந்து வந்துள்ளனர். சோடா விற்றவன் முதல் தெருவோரம் வேலை இல்லாமல் திரிந்தவர்கள் எல்லாம் அரசியலில் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்து கொண்டு சுமோ கார்களில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. பலரும் கோடிகளில் புரள்கின்றனர். இவ்வாறு இருக்கும் போது படித்த இளைஞர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்ற கேள்வி கெஜ்ரிவால் வெற்றி மூலம் எழுகிறது. 

இந்த விழிப்புணர்வு அதிகரிக்கும் போது அரசியல் இன்னும் தூய்மை அடைய வாய்ப்பு இருக்கிறது. சரியான தலைமை, நேர்மையான பார்வைகள் என்பது புதிய இளைஞர்கள் அரசியலுக்கு உயிர்மூச்சாக இருக்க வேண்டும் என்பதே அவா. 

டில்லி தேர்தலில் ஆம் ஆத்மியின் வெற்றிக்குப் பிறகு உதயக்குமார் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கருத்து: "துப்புக்கெட்ட தமிழர்களே, டெல்லியிடம் படியுங்கள் கடுகளவும் அன்போ, நேர்மையோ, பொதுநலமோ இல்லாத அய்யாக்களின், அம்மாக்களின், அலப்பரைகளின் பின்னால் போய், அவர்கள் தரும் இலவசங்களுக்காகக் கையேந்தி, 200 ரூபாய்க்கு ஓட்டை விற்று, உங்களையும் கொச்சைப்படுத்தி, உங்கள் குழந்தைகளையும் காட்டிக்கொடுக்கும் கேவலமானவர்களே...டில்லி மக்களைப் பாருங்கள். 

இனியாவது மூளையும், முதுகெலும்பும் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் நலனுக்கான அரசியலைத் தேடுங்கள்! மக்கள் சொல்வது கேட்கிறதா, பிரதமர் அவர்களே? காங்கிரசுக்காரன் போல மக்கள் விரோதக் கொள்கைகளையும், செயல்பாடுகளையும், திட்டங்களையும் மேற்கொண்டால், அவர்களைப் போலவே வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறியப்படுவீர்கள்! 

உங்களின் அமித் சாவோ, அமெரிக்க பாரக்கோ உங்களைக் காப்பாற்ற முடியாது. எனவே அடிக்கடி உடைமாற்றி, ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கும் அமெரிக்காக்காரனுக்கு சலாம்போட்டு, உலகம் சுற்றுவதை விட்டுவிட்டு, இந்தியர்களுக்காக உருப்படியாக எதையாவது செய்யுங்கள்''. 


சாமானியனுக்கும், சாதாரண மனிதனுக்கும் ஜனநாயகம் ஆட்சி மகுடத்தைச் சூட்டும் என்பதுதான் ஆம் ஆத்மி கட்சியின் விண்முட்டப் புகழ் படைக்கும் வெற்றியாகும். பன்னாட்டுப் பகாசூரக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டுக் கொள்ளைக்கார கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஏஜெண்ட் வேலை பார்த்த நரேந்திர மோடி அரசை, எண்ணி எட்டே மாதங்களில் மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள்.

நடந்து இருப்பது ஜனநாயகப் புரட்சி. மக்களின் மவுனப்புரட்சி. தில்லி மாநிலத்தில் மட்டும் அல்ல, காஷ்மீரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை மதச்சார்பற்ற தன்மைக்கு உலைவைக்க முற்பட்டுவிட்ட நரேந்திர மோடி அரசுக்கு எதிரான மவுனப்புரட்சி அலை மக்கள் மனங்களில் எழுந்து விட்டது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி மிகுந்த பலம் பெற்று இருந்த தில்லி மாநிலத்திலேயே அந்தக் கட்சியின் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டது; நாடெங்கும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் மனதிலே எழுந்துள்ள கொந்தளிப்பை தில்லித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டி இருக்கின்றன

ஒரு நாயகன் உதயமாகியிருக்கிறான். பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

வியாழன், 5 பிப்ரவரி, 2015

எனக்குப் பிடித்த கேள்வி பதில்கள்


 
ஜெயலலிதாவை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தின் நீதிபதி பதவி, காவிரி நடுவர் நீதிமன்றத்தின் தலைவர் பதவி, உலக அழகிப் போட்டியின் நடுவர் பதவி இவற்றில் ஏதாவது ஒன்றை ஏற்கச்சொன்னால் எதை ஏற்பீர்கள்?
முதலாவதை, எனக்கு கண்ணீர் கதைகளையும், கிளுகிளு கதைகளையும் விட மர்மம் நிறைந்த திகில் கதைகள் பிடிக்கும்.

பெண்கள் மென்மையானவர்களா? மேன்மையானவர்களா?
தனக்காக அழும் பெண்கள் மென்மையானவர்கள். பிறருக்காக போராடும் பெண்கள் மேன்மையானவர்கள்.

அண்ணாவின் தலைமையில் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர். தலைமையில் நெடுஞ்செழியன், ஜெயலலிதா தலைமையில் நெடுஞ்செழியன் ஒப்பிடுக.
போர் முரசு, பக்கவாத்தியம், பூஜை மணி.

மேலே உள்ளவை அனைத்தும் குமுதம் அரசு பதில்களில் வந்தவை.

நல்ல நண்பன் யார்?
உங்கள் முதுகுக்குப் பின்னால் உங்களைப் பற்றிய அருமையான விஷயங்களை அடுக்கிக்கொண்டே இருப்பவர்.

இந்தியாவின் துரதிஷ்டம் எது?
பொதுவாகத் தென்படும் நேர்மையற்றத்தனம்!

நிறம் மாறும் பச்சோந்தியைக் கேலி செய்பவர்கள், திசை மாறும் சூரிய காந்தியை அப்படிச் சொல்வதில்லையே ஏன்?
பச்சோந்தியின் நிற மாற்றம் சந்தர்ப்பவாதம், தந்திரம், ஏமாற்று வேலை. சூர்ய காந்தி அப்படியா? அது பக்த மீராவைப்போல மலர்களில் புகுந்த காதல் வைரஸ். சூரியனின் மீதான சோகம் ததும்பும் நிறைவேறாக் காமம்.


கோபத்தின் விளைவு என்ன?
ஒரு வீரன் போர்க்களத்தில் மட்டுமே தோற்றுப் போகிறான். கோபக்காரன் போரில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் தோற்றுப் போகிறான்.

தாய் அன்புக்கும், மனைவி அன்புக்கும் என்ன வித்தியாசம்?
தாயின் அன்பை நீதிமன்றத்தில் ரத்து செய்ய முடியாது!

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

இரட்டை இலைக்கா உங்கள் ஓட்டு?

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் முதலமைச்சர் பதவியும், சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறி போனபின் திருவரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கிறது. நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்தாலும் முட்டாள் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் என்னைத்தான் ஆதரிப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஜெயலலிதாவுக்கும், அந்தக் கட்சிக்கும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

1991 முதல் 1995 வரை முதல்வராக இருந்தபோது இவர் நடத்திய தான்தோன்றித்தனமான ஆட்சியை யாரும் மறந்திருக்க முடியாது. முதலில் 'ஜெ' வை ஆதரித்த அத்தனை பத்திரிகைகளும் பின்பு அவருக்கு எதிராகத் திரும்பியது. அந்த நேரத்தில் 'ஆனந்த விகடன்' வார இதழில் வந்த தலையங்கம் இன்றைக்கும் மிகப்பொருத்தமாய் இருக்கிறது.

'இரட்டை இலை?' என்ற தலைப்பில் விகடன் எழுதிய தலையங்கம் கீழே....

இரட்டை இலைச் சின்னம் இப்போதும் ஜெயலலிதாவைக் கைவிடாமல் ஓட்டுக்களைச் சேகரித்துத் தரும் என்றும், எம்.ஜி.ஆர். மீது மதிப்பு வைத்துள்ள கிராம மக்கள், அவரது 'இரட்டை இலை'க்கு எதிராக ஓட்டுப்போட தயங்குவார்கள் என்றும் ஆளுங்கட்சித் தரப்பில் ஒரு கருத்து நிலவுகிறது.

எம்.ஜி.ஆர். எங்கே..! ஜெயலலிதா எங்கே!

மலைக்கும் மடுவுக்கும் முடிச்சுப் போட முடியுமா?

அவரது அரசியல் என்பது தெளிந்த சுவை நீர்...

இவரது அரசியலோ ஊழல் மலிந்த சாக்கடை நீர்...

அவரது இதயம் மனித நேய மலர்க் குவியல்...

இவரது இதயமோ துவேஈம் நிறைந்த தொட்டார்சுருங்கி..

அவரது கரங்கள் உதவி செய்து தேய்ந்தவை...

இவரது கரங்களோ பணப்பெட்டியின் கறை படிந்தவை...

மொத்தத்தில்...

அவர் எளிமையின் அவதாரம்...

இவர் ஆடம்பர அலங்கோலம்...

ஆகவே இரட்டை இலையை எம்.ஜி.ஆர். சின்னம் என்று நினைத்து ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போடலாம் என்று யாரேனும் நினைத்தால் அது எம்.ஜி.ஆருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்காது. தன்னுடைய முன்னோர் வெட்டியது என்ற பெருமைக்காகப் பாழுங்கிணற்றில் விழுவதற்குச் சமமாகும்.


எனவே திருவரங்கம் தொகுதி மக்களே சிந்தித்து செயல்படுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஊழலுக்குத் துணை போகாதீர்கள்.