புதன், 7 மே, 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை V



டோக்கியோ விமான நிலையத்தை அடைந்ததும், நாகேஷ் தீடீரென்று மயங்கி விழுந்தார். அங்கு என்னைக் காண வந்திருந்த பத்திரிகையாளர் மணியன், எங்கோ விரைந்து சென்று, சிறிது நேரத்திற்கெல்லாம், ஒரு டாக்டரோடு வந்தார். அந்த டாக்டர் பரிசோதித்து, 'பலவீனம்; ஓய்வு எடுத்தா சரியா போகும்...' என்றார். வேண்டுமாயின், நர்சிங் ஹோமில் சேர்க்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். சிறிது விவாதத்திற்குப் பின், வேண்டாமென்று முடிவு செய்தோம்.

அதற்குள் நாகேஷுக்கு, கொஞ்சம் சரியானது. மெல்ல எழச் செய்து, வேறு ஒரு இடத்தில் இருந்த சோபாவில் உட்கார வைத்து, விவரம் கேட்டேன். அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டோம்.

நாகேஷை, அந்த நிலையில் விட்டுவிட்டு, நான் மட்டும் எப்படி டோக்கியோவிற்குள் நுழைவது? நாகேஷ் ஓரளவிற்கு குணமாகும் வரை, காத்திருந்து, பின், ஓட்டலுக்குப் புறப்பட்டோம். அவரும், வேறொரு காரில் வந்தார். அவருக்கு துணையாக அசோகனை தங்க வைக்க, ஏற்பாடு செய்திருந்தேன்.

விமான நிலையத்தில், ஏர் பிரான்ஸ் கம்பெனி குழுவினர் படம் எடுத்தனர்.
பாங்க் ஆப் இந்தியாவில், பணிபுரியும் நண்பர் சந்தானம், அவரது மனைவி நிர்மலா மற்றும் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் ஜெயராமன் ஆகியோர் வந்திருந்தனர்.

சந்தானத்தின், இரு குழந்தைகளும் ஜப்பானிய உடை அணிந்திருந்தனர். சில ஜப்பானியப் பெண்கள் எனக்கு மாலை அணிவித்து, வரவேற்பு அளித்தனர்.

விமான நிலைய சடங்குகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட பின், டோக்கியோவின் மிகப் பெரிய ஓட்டல்களில் ஒன்றான, இம்பீரியல் ஓட்டலை அடைந்தோம்.

ஓட்டலை அடைந்தோமே தவிர, அறைகள் கிடைக்கவில்லை. எங்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை, மறுநாள் காலையிலிருந்து தான், 'புக்' செய்யப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்ல, இரவு, 12:00 மணிக்கு முன், அந்த அறைக்குச் சென்றோமானால், ஒரு நாள் வாடகை கொடுத்தாக வேண்டும். அதாவது, பதினோரு மணி, ஐம்பத்தொன்பது நிமிடத்தில், அந்த அறைக்குள் நுழைந்தால் கூட, முதல் நாள் வாடகையைச் செலுத்தியாக வேண்டும். எனக்குத் தரப்பட்டிருக்கும் பணத்தின் அளவோ மிகக் குறைவு. எனவே தான், என்னோடு வந்து, பயணத்தினால் சோர்ந்து போயிருந்த பெண்களைக் கூட, உடனே அறைகளுக்கு அனுப்ப முடியவில்லை. அவர்களும் இதை உணர்ந்திருந்த காரணத்தால், எந்தவித மனக்கஷ்டமும் கொள்ளாது, ஒருவருக்கொருவர், சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

இரவு வெகு நேரமாகி விட்டதால், அவர்களுக்கு ரொட்டி, கேக் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாமென்று எண்ணிக் கேட்டேன். பன்னிரெண்டு மணிக்கு மேல், அறைக்குச் சென்ற பின் தான் கிடைக்கும்; அதுவும் முன்னமேயே குறிப்புக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டுமென்று தெரிவித்தனர். எனக்கு, இவைகௌல்லாம் புரியாத புதிராகவே இருந்தது.

இதைக் கேட்டு கொண்டிருந்த பெண்கள், தங்களை அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் கேக், ரொட்டி போன்ற பெயர்களைக் கேட்டதும், அதற்கு மேல் தங்களுக்கிருந்த பசியை மறைக்க சக்தியற்று, ஆவலோடு விசாரித்தனர். அங்கு, அந்த வேளையில் ஏதும் கிடைக்காதென்பதை அறிந்தபோது, என் மீதே, எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

என்னை நம்பி வந்த அந்த இளம் பெண்களுக்கு, முதல் நாளிலேயே பசிக்கு உணவு கொடுக்க இயலாதவனாகி விட்டேனே என்று, வேதனையாக இருந்தது. 'மோராவது கிடைக்குமா?' என்று கேட்டேன்.

என் உடன் வந்திருந்த சந்தானம், இதையெல்லாம் கவனித்து, 'அரை மணி நேரம் அவகாசம் தருவதாயின், உணவு தயார் செய்து விடுவேன். எல்லாரும் சாப்பிடலாம்...' என்றார்.

நான் மரியாதைக்கு, 'வீண் சிரமம் வேண்டாம்; ரொட்டி கிடைத்தாலே போதும்...' என்றேன்.

ஆனால், அவர், 'உங்கள் தகுதிக்குச் ஏற்ற முறையில், உணவு படைக்க எங்களால் இயலாது; ரசம் சாதம், அப்பளம் இவ்வளவுதான் செய்ய முடியும்...' என்று சொல்லியவாறே, எங்களுடைய அனுமதியைப் பெறாமலேயே, தன் மனைவியை வீட்டுக்கு அனுப்பி விட்டார். சாப்பாடு கிடைக்கும் என்று தெரிந்ததும், மூன்று பெண்களின் பேச்சும், சிரிப்பும் மீண்டும் தொடர்ந்தன.

சினிமா உலகத்தில், எத்தனையோ நடிக, நடிகையரை பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட வசதிக் குறைவுகள் நேரிடும் போது, எப்படியெல்லாம் ஆத்திரப்பட்டிருக்கின்றனர், கேவலமாய் பேசியிருக்கின்றனர், தங்களின் தகுதிக்கும் குறைவான செயலில் இறங்கியிருக்கின்றனர் என்பதை, கண்கூடாகக் கண்டறிந்தவன் நான். ஆனால், இந்தப் பெண்கள் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சந்தானம், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவில்லை. அறைகளின் சாவிகளைப் பெறவும், சாமான்களின் எண்ணிக்கையைச் சரி பார்க்கவும், தன் வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதுமாக, 'துருதுரு'வென்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

சிறிது நேரத்திற் கெல்லாம், 'உணவு தயார், போகலாம்...' என்று அழைத்தார். அவரே தன் காரில், எங்களை அழைத்துப் போனார். அவர் வீட்டிற்குப் போனோம். மாடியில் தான், அவரது குடியிருப்பு.

விசாலமான நடுத்தரமான, ஒரு அறையில், மேசை, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சுவரில், கலையழகு நிரம்பிய படங்கள்; சிலை வடிவங்கள். அவைகளில் பெரும்பாலானவை, சந்தானத்தின் மனைவி நிர்மலா கை வண்ணத்தில் மிளிர்ந்தன.

குடும்பத்தின் சிறந்த தலைவி, கணவனுக்கு பண்புள்ள மனைவி, விருந்தினருக்குப் பாசமுள்ள உறவினர், குழந்தைகளுக்கு அன்புத் தாய், இப்படிப்பட்ட, ஒருவர் கையால், உணவு பரிமாறப்பட்டு, உண்டோம்.

வயிறு புடைக்க சாப்பிட்டோம். எங்களின் அதிர்ஷ்டம் அன்று, சந்தானத்தின் தாயார் இந்தியாவிலிருந்து ஜப்பான் வந்திருந்தார். அவர்கள், தின்பண்டங்களைச் செய்து கொண்டு வந்திருந்தார். அவைகளும் எங்களுக்குப் பரிமாறப்பட்டன.

ஜப்பான் நாட்டிற்குப் புதியவர்களாக அடியெடுத்து வைத்த எங்களுக்கு, இரவு, ௧௨:௦௦ மணிக்கு மிகப் பெரிய விருந்தே நடைபெறுகிறதென்றால், தமிழ்ப் பண்பின் தனித் தன்மைக்கு, நற்சான்று என்றுதானே கொள்ள முடியும்.

உணவு உண்டு மூச்சு விடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, சந்தானம் ஒரு சிறிய படம் பிடிக்கும் கருவியையும், படங்கள் ஒட்டப்பட்டிருந்த ஆல்பம் ஒன்றையும் கொண்டு வந்து, எங்களைப் படம் எடுக்க விரும்புவதாய் சொல்லி படமெடுத்தார். அதோடு, அவர் எடுத்த படங்கள் நிறைந்த, அந்த ஆல்பத்தை பிரித்துக் காண்பித்தார்.

அதில், ஒட்டப்பட்டிருந்த படத்தைப் பார்த்து, ஒரு கணம் திகைத்தேன். அது வேறு யாருடைய படமுமல்ல! இதயதெய்வம் அமரர் அண்ணாதுரையின் உருவம்தான். எங்கு சென்றாலும், என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும், அந்த அமரரின் உருவத்தை, திரும்பத் திரும்பப் பார்த்தேன்.

நான், என் வாழ்க்கைப் பாதையில், எங்கெங்கு காலடி எடுத்து வைக்கிறேனோ, வைக்க இருக்கிறேனோ அங்கெல்லாம், அமரர் அண்ணாதுரை முன்சென்று, நான் நடக்கும் பாதைகளை சீர் செய்து, அரசியலிலும், கலைத் துறையிலும் எனக்குத் தேவையான அத்தனையையும் நிறைவேற்றி வைத்திருப்பதை, இன்னமும் நிறைவேற்றி வைப்பதை எண்ணி, என் கைகள், அவர் இருக்கும் திசை நோக்கித் தானாக உயர்ந்தது.

ஜப்பானில் நாங்கள் சந்தித்த சில மணி நேரத்திற்குள்ளாகவே, எங்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்த சந்தானம், இப்போது ஒரு படி உயர்ந்து நின்றார். அவர், அண்ணாதுரை பற்றிச் சொன்ன கருத்து, என்னை மேலும் சிந்திக்க வைத்தது. அது...
தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


-- எம்.ஜி.ஆர்.,

தினமலர் - வாரமலரிலிருந்து ...

தொடர்புடைய இடுகைகள்;
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை - I
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை - II
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை - III
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை - IV  


செவ்வாய், 6 மே, 2014

தேர்தலும் பெண்களும்


பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிய சிந்தனை 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் எழுந்தது. குறிப்பாக அந்தக் காலகட்டத்தில் முதன் முதலில் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும்தான் இந்தப் பிரச்னை தீவிரமடைந்தது, என்றாலும் இந்த இரண்டு நாடுகளுமே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க முன்வரவில்லை.

1893-ம் ஆண்டு நியூசிலாந்து நாடுதான் அங்கு நடந்த பொதுத்தேர்தலில், உலகிலேயே முதன் முதலாக பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. பின்னர் ஆஸ்திரேலியா 1902-ம் ஆண்டிலும், ஃபின்லாந்து 1906-ம் ஆண்டிலும், நார்வே 1913-லும் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தன.

ஸ்வீடன், அமெரிக்கா இந்த இரு நாடுகளும், தங்கள் நாடுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் மட்டும் வாக்களிக்க பெண்களை அனுமதித்தன.

முதல் உலகப்போருக்குப் பின்னர்தான் ஐரோப்பாவிலும் வேறு சில நாடுகளிலும் பெண்களுக்கான வாக்குரிமை பற்றிய வாதங்கள் தீவிரமடையத் தொடங்கின.

1914-39 காலகட்டத்தில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா (1919), அமெரிக்கா, ஹங்கேரி (1920), பிரிட்டன் (1918-1928), பர்மா (1922), ஈக்வேடார் (1929), தென்னாப்பிரிக்கா (1930), பிரேசில், உருகுவே, தாய்லாந்து (1932), துருக்கி, கியூபா (1934), பிலிப்பைன்ஸ் (1937) உள்பட 28 நாடுகள் முதலில் அந்தந்த நாடுகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மட்டும் பெண்களை வாக்களிக்க அனுமதித்தன. பின்னர்தான் பொதுத்தேர்தல்களிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் வாக்களிக்கச் சம உரிமை அளிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா, யுகோஸ்லேவியா, சீனா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் சேர்ந்தன.

இந்தியாவில் 1949-ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின் மூலம் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

பாகிஸ்தானில் 1956-ல்தான் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தன.

ஸ்விட்சர்லாந்து மற்ற நாடுகளைவிட வெகு காலத்திற்குப் பின்னர்தான் தன் நித்திரையிலிருந்து மெல்ல விழித்துக் கொண்டது. 1971-ம் ஆண்டு வாக்கில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது.

சிரியா 1973-ல் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக வாக்களிக்கும் முழு உரிமையை வழங்கியது.

பெண்களுக்கு இந்த உரிமைகள் சும்மா வந்துவிடவில்லை. 19, 20-ம் நூற்றாண்டுகளில் தொடர்ந்து நடைபெற்ற பல போராட்டங்களுக்குப் பின்னர்தான் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டன.

அமெரிக்காவில் முதன் முதலில் பெண்ணுரிமைகளுக்காகப் போராடியவர் லுக்ரேஷியா மோட் என்பவர்.

1890-ம் ஆண்டு வயோமிங் மாநிலம் பெண்களுக்கு முதன் முதலாக உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை அளித்தது. அடுத்த 25 ஆண்டுகளில் மெல்ல மெல்ல ஒவ்வொரு மாநிலமும் இதைச் செயல்படுத்தின. 1918-ல் 15 மாநிலங்கள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கின.

பிரட்டனில் 1792-ம் ஆண்டு பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என முதன் முதலாக குரல் எழுப்பியவர் மேரி உல்ஸ்டோன்கிராஃப்டி. 1850-ல் ஜான் ஸ்டுவர்ட் மில் என்பவரும் அவரது மனைவி ஹாரியாட்டும் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

விக்டோரியா மகாராணி பெண் இயக்கங்களுக்கு எதிராக இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 1869-ல் வரி கட்டும் பெண்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்டது.

1917-1918-ம் ஆண்டுகளில்தான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்காகச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டப்படி 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. 1928-ல் 21 வயதிற்கு மேற்பட்ட எல்லா பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

வியாழன், 1 மே, 2014

பாகுபாடட்ற்ற ஒரு சர்வதேச விழா!


மே மாதம் முதல் தேதி, தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பொன்னாள். உலகம் எங்குமுள்ள பாட்டாளி மக்கள் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். தினம் 12 மணி நேர வேலையை 8 மணியாகக் குறைக்கத் தொழிலாளர்கள் போராடி வெற்றி பெற்றது மே முதல் தேதியன்றுதான்.

ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் அலுவலக உழைப்புக் கொடுக்கும் நாம் அதன் சகிப்புத்தன்மையை மாதக் கடைசியில் வரும் சம்பளத்திற்காக அதை கடமையாக கருதுகிறோம். ஆனால் 1880-களில் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 18-மணி நேரம் உழைத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அடிப்படை வசதிவாய்ப்புகள், அடிப்படை கூலி நிர்ணயங்கள், விடுமுறைகள் என அனைத்தும் மறுக்கப்பட்டிருந்தது. அவன் அடிமையாக்கப்பட்டிருந்தான். அவனுடைய உழைப்புச் சுரண்டலில் முதலாளித்துவம் பெருத்துக் கொண்டிருந்தது.

அன்றைய காலக்கட்டங்களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் மார்க்சிய/ கம்யூனிஸ தோழர்கள் உழைக்கும் மக்களை ஒன்றிணைத்து முதலாளித்துவத்திற்கு எதிராக எழுப்பிய போராட்டங்கள் உலகம் முழுவதும் பரவியது. 

தோழர் கார்ல் மார்க்சின் 'மூலதனம்' என்னும் உலகப் புகழ் பெற்ற நூல் 1867 - ஆம் ஆண்டு வெளியானது. இது பொருளாதாரச் சித்தாந்தம் குறித்த நூலாகும். இந்த நூலில், எட்டு மணி நேர உழைப்பைக் கோரும் இயக்கத்தைப் பற்றி "வேலை நாள் குறித்து' என்னும் தலைப்பில் மார்க்ஸ் எழுதியுள்ளார்.

அதை பல பிரதிகள் எடுக்கப்பட்டு உலகத் தொழிலாளர்களிடம் விநியோகிக்கப்பட்டது. தொழிலாளர்கள் விழிப்புணர்வு பெற்றனர். போராட்டம் தீவிரம் அடைந்தது.

ரஷ்யாவில் தோழர் லெனின், 'உழைக்கும் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்' என்று கலகக்குரல் எழுப்பினார். போராடிய தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் என்று அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. பல அடக்குமுறைகள் திணிக்கப்பட்டன. இருப்பினும் நீண்ட போராட்டங்களுக்கு பிறகு ஒரு நாளுக்கு எட்டு மணிநேர உழைப்பு என்னும் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாம் அனுபவிக்கும் சலுகைகளுக்கு பின் ஒரு வரலாறு இருக்கிறது. அதில் உயிரைக் கொடுத்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்த தோழர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நன்றிக்கடன் நமக்கிருக்கிறது.
1837-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வான்ப்யூரன், 14 மணி நேரமாக இருந்த வேலைத் திட்டத்தை மாற்றி, அரசாங்க அலுவலகங்களில் வேலை செய்வோர் 10 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். 'இந்தப் பத்து மணி நேரம் கூட அதிகம்; எட்டு மணி நேர வேலையே நிர்ணயிக்க வேண்டும்' என்று தொழி லாளர்கள் போராட்டம் தொடங்கினர்.

இதனால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடக்க முதலாளிகள் முயன்றனர். துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதில் ஆறு தொழிலாளிகள் மாண்டனர். ஏராளமான பேர் காயம் அடைந்தனர். இதைக் கண்டிக்க 'ஹேய் மார்க்கெட்' என்ற இடத்தில் 30,000 தொழிலாளர்கள் ஒன்று கூடினர். இக்கூட்டத்தினர் மீதும் அடக்குமுறை கையாளப்பட்டது. இப் போராட்டத்தில் கைதான பலர் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

1888-ல் அமெரிக்காவில் கூடிய தொழில் கூட்டு மகாநாடு, 8 மணி நேர வேலைத் திட்டத்தை வற்புறுத்தியது. இப்போராட்டங்கள், மே மாதம் நடைபெற்றதால் இவை 'மே தினப் போராட்டம்' என்று பிரசித்தி பெற்றன. எவ்வளவோ இன்னல்களுக்குப் பின் இப்போராட்டம் வெற்றியடைந்தது.

1904-ல் ஆம்ஸ்டர்டாமில் கூடிய தொழிலாளர்கள் மாநாட்டில் ஒவ்வொரு மே 1-ம் தேதியன்றும் இவ்விழாவைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

தொழிலாளர்களின் உரிமைகளை ஸ்தாபிக்கும் நாள்தான் மே தினம். இவ்விழா எந்த ஓர் அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல. இது சாதி, சமயம், மொழி, நாடு, அரசியல் என்ற பாகுபாடு அற்ற ஒரு சர்வதேச விழா!
  
அனைத்து உழைக்கும் வர்கத்தினருக்கும் 'மே' தின வாழ்த்துக்கள்.