புதன், 14 நவம்பர், 2012

நெருப்புக் கோழிகள் - படித்ததில் பிடித்தது


டாக்டர் அம்பேத்கருக்கு, ஆங்கிலேயப் பெண் பிரான்சிஸ் பிரிட்ஸ் ஜெரால்ட் எழுதியதாகச் சொல்லப்படும் காதல் கடிதங்கள் 2005-ல் புத்தகமாக வெளியிடப்பட்டன. பிரான்சிஸ், அம்பேத்கரின் சிநேகிதி. லண்டனில் இந்தியா ஹவுசிலும், காமன்ஸ் சபையிலும் டைப்பிஸ்ட்டாக இருந்தவர்.

அந்தப் புத்தகத்தை வெளியிடக்கூடாது என்று அம்பேத்கரின் பேரனும் அரசியல்வாதியுமான பிரகாஷ் அம்பேத்கர் வழக்கு போட்டார். அம்பேத்கரை ஒரு பெண் காதலித்திருந்தால் அதில் என்ன தவறு? அல்லது அம்பேத்கரும் அந்தப் பெண்ணைக் காதலித்திருந்தால்தான், அது ஒரு குற்றமா?

தலைவர்களின், அரசியல் பிரமுகர்களின் ஆண்-பெண் உறவுகள், காதல், காமம் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்ற போலித்தனம்தான் நமது சமூகத்தில் செக்ஸை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

காந்தியும் பெரியாரும் மட்டுமே இத்ல் விதிவிலக்குகள். இருவரும் செக்ஸ், ஆண்-பெண் உறவு பற்றிய தங்கள் பார்வையை, சொந்த அனுபவங்களைத் தயங்காமல் பகிரங்கமாகத் தெரிவித்தவர்கள். காந்தி தமது ஆசிரமத்தில் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் ஒன்றாகக் குளிக்கச் செய்தார். பிரித்து வைத்து 'ஒழுக்கத்தை'க் காப்பாற்றுவதை விட, சேர்த்திருக்கும் சூழலில் மனக் கட்டுப்பாட்டின் மூலம் 'பிரம்மச்சரியத்தை' நிறுவ வேண்டும்மென்று தான் செய்த சோதனைகளை அவரே பதிவு செய்திருக்கிறார்.

'40 வயதுக்கு முன் நான் சீமானாக, காலியாக, மைனராக வாழ்க்கை நடத்தினேன்' என்று தன்னைப் பற்றித் தானே எழுதினார். மதுப் பழக்கமுடைய தன் சிநேகிதர்களுடன், ஆற்றங்கரையில் நிலவொளியில் தாசிகளுடன் இரவெல்லாம் கழித்ததையும், வூட்டுக்குத் தெரியாமல் தங்களுக்கு உணவு சமைத்து எடுத்துவரும் வேலையில் மனைவி நாகம்மாளை ஈடுபடுத்தியதையும் அவரேதான் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

தன் 53-வது வயதில் ஐரோப்பிய பயணத்தின் போது நிர்வாணச் சங்கங்களின் கோட்பாடுகள் என்ன என்பதை அறியும் ஆர்வத்தில் அங்கு சென்றதையும், அவர்கள் விதிக்கு உட்பட்டு தானும் அவ்விதமாக நிர்வாணமாகச் சென்றதையும் இந்தச் சமுதாயம் தெரிந்துகொள்ளட்டும் என்றேதான் அவர் பதிவு செய்திருக்கிறார். அதை எல்லாம் தாண்டிய மாண்புகள் தன்னிடம் இருக்கிறது என்பதால், தனது சொந்த வாழ்க்கையின் சில பக்கங்களைப் பகிர்ந்து கொள்வதில் அவர் சங்கடம் எதுவும் படவில்லை.

குஷ்பு சர்ச்சையின்போது, பெரியாரின் தலையும் சேர்த்து உருட்டப்பட்டது. 'ஆண்-பெண் உறவுகொள்ள, சேர்ந்து வாழ்ந்தால் போதும்; திருமணம் தேவையில்லை. பிடிக்காவிட்டால் பிரிந்து போகலாம்' என்று சொன்னவர் பெரியார். பெண்கள், 'திருமணத்துக்கு முன் கன்னித்தன்மையை இழக்கலாம்' என்று பெரியார் எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா? என்று கேட்கப்பட்டது. திருமணமே தேவையில்லை என்று சொல்லிவிட்ட பின், தி.மு, தி.பி. எங்கிருந்து வரும்?

'சோற்றைவிட மானம்தான் பெரிது என்று வாழ்பவர்கள் தமிழ்ப்பெண்கள்!' என்ற அலங்காரமான பேச்சு நிஜமானால், வறுமையினால் பாலியல் தொழிலில் ஈடுபட்ட எந்தப் பெண்ணைப் பற்றியும் போலிசில் வழக்கு பதிவாகி இருக்கக் கூடாதே!

அரசியல் தலைவர்கள் நெருப்புக் கோழிகளாக மணலுக்குள் தலையைப் புதைத்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.


கட்டுரையாளர் - ஞானி

திங்கள், 12 நவம்பர், 2012

தமிழும் தவறும்


தமிழ்! நாம் நமது வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தும் வார்த்தை. பிறந்து தவழத் தொடங்கும் போதே தாயின் தாலாட்டால் தலைக்குள் புகுத்தப்படும் ஒரு உணர்வு. பேச்சு எழுத்து என எல்லாநேரங்களிலும் மற்றவர்களோடு தொடர்பு கொள்ள உபயோகப்படும் ஒரு மொழி!

ஆனால் தமிழர்களாகிய நாம் பேசும்போதும் எழுதும்போதும் தவறில்லாமல் பயன்படுத்துகிறோமா? இல்லை என்பதுதான் விடையாக இருக்கும். தற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறை தமிழாசிரியர்களுக்கே தமிழிலக்கணம் பற்றி தெரியுமா என்பதே ஐயப்பாடு!

அன்றாட வாழ்க்கையில் புழங்கும் வார்த்தைகளில் எத்தனை தவறுகளை நம்மில் பலர் செய்கிறோம் என்பதை கொஞ்சம் கவனியுங்களேன்.

          தவறு               சரி

           சுவற்றில்             சுவரில்
           ஒருக்கால்            ஒருகால்
           பத்திரிக்கை           பத்திரிகை
           வெய்யில்            வெயில்
           கொப்பளம்            கொப்புளம்
           அடமழை             அடைமழை
           சில்லரை             சில்லறை
           அவரல்ல             அவரல்லர்
           அருவாமனை         அரிவாள் மனை
           அலமேலு             அலர்மேலு
           எழவு                 இழவு
           ஒண்டியாய்           ஒருவனாய்
           கருத்துக்கள்          கருத்துகள்
           சிலவு                செலவு
           தெய்வீகம்            தெய்விகம்
           தொந்திரவு            தொந்தரவு
           சுதந்திரம்             சுதந்தரம்
           தேசீயம்              தேசியம்
           பண்டகசாலை         பண்டசாலை
           நாகரீகம்              நாகரிகம்
           பதட்டநிலை           பதற்றநிலை
           உடமை               உடைமை
           கோர்வை             கோவை
           கோர்த்து              கோத்து
           முகர்ந்து              மோந்து
           சிகப்பு                சிவப்பு    
           சம்மந்தி              சம்பந்தி
           சமயல்               சமையல்
           எடக்கு               இடக்கு 

ஞாயிறு, 11 நவம்பர், 2012

பாலகுமாரன் பக்கம் -2



நான் நம்பத்தயாரில்லை. ஆண்-பெண் உறவில் பிறக்கும் ஸ்நேகத்தைப் பற்றிய பரிசீலனையில் இருப்பவன் நான். ஸ்நேகிதம் என்ற ஒன்றை நம்பி தோற்றுப் போனவன். அதனாலேயே சந்தேகிப்பவன். எதிலும் ஆதாயம் காணும் சமூகம் இது என அனுபவத்தில் கண்டிருப்பவன். எனக்கு மயக்கம் தெளிஞ்சி போச்சி. யாருமே வேண்டாம்! நல்லவர்கள் கூட!

கவலைப்படாதே நானிருக்கேன் என்ற நல்லத்தனம் எனக்கு வேண்டாம். அதுவும் சுமை. ஆயுசுக்கும் என்னை கடனாளியாக்கும்.

நல்ல காதல் தோன்றிய பிறகு காமம் விலகி நிற்கும். எப்போது தேவையோ அப்போது கைகட்டி அருகே வந்து சேவைகள் செய்யும். வெறும் காமம் அபத்தம். காதலோடு கூடிய காமம் சொர்கம்.

மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம். சந்தோஷம் துக்கம், நட்பு, பகைமை எல்லாம் மனம் காட்டும் மாயைகள். கோபம் குறைய நியாயங்கள் தெளிவாய் தெரியும். ஆத்திரம் குறைய நல்லது கெட்டது எதுவென்று அறியமுடியும்.

கற்றல் எப்போது நிற்கும்? கற்ற பிறகே! ஆசை எப்போது அடங்கும்? அனுபவித்த பிறகே!. ஆசைதான் கற்றுக்கொள்ளல். ஆசைதான் வாழ்க்கை. கற்றுக்கொள்ள, கற்றுக்கொள்ள, அனுபவிக்க அனுபவிக்க உள்ளே ஒரு நிறைவு வரும். போதும் என்கிற நிறைவு வரும் வரை கற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

எதுவுமே கொடுக்கமுடியாத போது என்னையே எடுத்துக்கோங்கிற விஷயம் பெண்ணிம் மட்டுமே உண்டு. ஆண் இப்படி எதைக் கொடுப்பான்? யார் உயர்வு?

நான் தான தருமம் பண்ணல. ஆம்பளைக்கும் அலையல. எனக்குப் பிடிச்சிருந்தது, என்னைக்கொடுத்தேன். இதுக்கு நன்றி எதுக்கு?

கேலிக்கு கோபப் படுபவன் தோற்றுப் போனவன். வாழ்க்கையின் ரசம் தொலைத்தவன். வாழ்தலின் வெளிப்பாடு இடி போன்ற சிரிப்பு. இடைவிடாத ஆனந்தம். எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் தன்மை.

தொடர்புடைய இடுகை;

 பாலகுமாரன் பக்கம் - பாலகுமாரன் ரஜினிகாந்த் உரையாடல்