க்ளாரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
க்ளாரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 அக்டோபர், 2012

க்ளாராவின் கடிதம்


அன்பு நண்பருக்கு, க்ளாரா எழுதுவது. நான் நலம்.  உங்கள் நலன் உங்கள் கடிதம் மூலம் அறிந்தேன். உங்கள் கடிதம் 28-ம் தியதி கிடைத்தது. உங்களைப் பழிவாங்கும் எண்ணம் எனக்கில்லை. ஆனால் மனசுக்கு கஷ்டமாய் இருந்தது. அதனால்தான் கடிதம் போடவில்லை. நான் ஜூன் மாதம் 5-ம் தியதி நம்பிக்கை இல்லப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

உங்கள் நண்பர் திருமால் நீங்கள் வந்தது பற்றியோ கடிதம் போடச்சொன்னது பற்றியோ எதுவும் என்னிடம் சொல்லவில்லை. நான் அவரிடம் உங்களைப் பற்றி கேட்கும்பொழுதெல்லாம் நீங்கள் சென்னையில் இல்லை என்று கூறினார். அப்படியானால் எங்கு இருக்கிறீர்கள் என்ற விபரம் தெரியவில்லை. இதுவும் கடிதம் போடாததற்கு ஒரு காரணம்.

உங்களுக்கு குழந்தை பிறந்தது பற்றி எழுதியிருந்தீர்கள். மகிழ்ச்சி. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை! காலம் எத்தனை வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது! நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. கம்பனி திறந்தது பற்றி எழுதி இருந்தீர்கள். இனியாவது உங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசவேண்டும் என்று மனதார நினைத்துக்கொண்டேன்.

எனக்கும் உங்களைப் பார்க்கவேண்டும் போலிரிக்கிறது. பொதுவாக சனி, ஞாயிறு என்றால் இங்கு பிள்ளைகளுக்கு விடுமுறை. நாம் பேசுவதற்கு வசதியாக இருக்காது. திங்கள் முதல் வெள்ளி வரை நான் காலை 9.30 மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஃப்ரீயாகத்தான் இருப்பேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

உங்களுக்கு எப்போது லீவு என்று தெரியப்படுத்துங்கள். கடிதம் போடுங்கள் அல்லது ஃபோன் பண்ணுங்கள்.

மற்றவை நேரில்,

என்றும் அன்புடன்,

க்ளாரா.
31.08.1998