செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

மணமான மாணவர்கள்


கலிங்க நகரைப் பற்றியும், சுகிந்தா குரோமைட் சுரங்கம் பற்றியும் நான் அந்தப் பகுதிக்குச் செல்லும்வரை அறிந்திருக்கவில்லை. இணையத் தேடலும் அது குறித்த அறிவும் கூட எனக்கு அப்போது இல்லை. எங்கள் நிறுவனம் டாடா ஸ்டீல் நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தப்படி நாங்கள் அங்கு பணியாற்ற அனுப்பப் பட்டோம். எங்கள் நிறுவனத்தின் பணியும் அதில் எங்களின் பங்களிப்பு என்ன என்பதையும் அறிந்து கொண்டபோது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருந்தது.

நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியமிக்க டாடா ஸ்டீல் ஜாம்ஷெட்பூரில் (டாடா நகர்) தனது தொழிற்சாலையைத் தொடங்கியபோதே அப்போதைய பிரிக்கப்படாத ஒடிஸாவிலும் கால் பதித்தது. இரும்புத்தாதும், மாங்கனீசும் நிரம்பியமயூர்பன்ஜ்’, ‘ஜோடாபகுதிகளில் வெட்டி எடுக்கப்படும் தாதுக்கள்தான் டாடா நகருக்கு கொண்டு போகப்பட்டது. மேலும் ஜோடா பகுதியில்பெர்ரோ மாங்கனீஸ் தொழிற்சாலையையும் நிறுவியது. பிறகுதான்ஜாஜ்பூர்மாவட்டத்தின் சுகிந்தா பகுதியில் களமிரங்கியது.

தேவைக்குப்போக இந்த தாதுக்களை ஏற்றமதி செய்யவும் தொடங்கியபோதுதான் அருகிலுள்ள வசதியான துறைமுகங்கள் இவர்களின் பார்வையில் படத்தொடங்கின. அருகில் உள்ள தாம்ரா, பாரதீப், கோபால்பூர் துறைமுகங்களை எப்படி பயன்படுத்தலாம் என்று திட்டங்களை வகுத்தார்கள். அந்த திட்டத்தின்படிகோபால்பூரில்புதிய இரும்பு உருக்கு ஆலையை நிறுவுவதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கின. இதில் முக்கியமானது நில ஆர்ஜிதப் பணிகள். ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், சில கிராமங்கள் என நில ஆர்ஜிதப் பணிகள் துவங்கியபோதே பிரச்னைகளும் சேர்ந்தே ஆரம்பித்தன. அரசியல்வாதிகளும் குளிர்காய உள் நுழைந்தார்கள்.

பிரம்மபூரிலிருந்து (பெர்ஹாம்பூர்) மிக அருகில் உள்ள கோபால்பூர் துறைமுகத்தை ஒட்டிய பகுதியில் தொழிற்சாலையை அமைத்தால் ஏற்றுமதி இறக்குமதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர்களின் கணக்கு. ஆனால் நில ஆர்ஜிதப் பணிகள் அத்தனை சுலபமானதாக இல்லை. காலதாமதம் ஆக ஆக நிலங்களின் மதிப்பும் இழப்பீட்டுத் தொகையும் அதிகமாயின. ஒரு கட்டத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம்கோபால்பூரில்தன் தொழிற்சாலையை அமைப்பதிலிருந்து பின்வாங்கியது. ஆனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அதன் வசமே இருந்தன.

வேறு இடத்தில் தொழிற்சாலையை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கியபோது தேர்வான இடம்தான் இந்த கலிங்கநகர் பகுதி. கோபால்பூரில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நிர்வாக காரணங்களுக்காக கட்டப்ப்பட்ட அலுவலகத்தில் ஒரு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை துவக்கியது. அதை நிர்வகிக்க எங்கள் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது. டாடா ஸ்டீல் நிறுவனம் ஏற்கனவே எங்கள் நிறுவனத்தோடு சேர்ந்து ஜாம்ஷெட்பூரில் ஒரு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதான் எங்கள் நிறுவனத்திற்கும் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கும் உள்ள உறவு! இதில் ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்னவெனில் டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குனர், எங்கள் நிறுவன இயக்குனர் இருவரும் தமிழர்கள்!

2005-ல் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாய்க், டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குனர் பி. முத்துராமன், எங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்ட துவக்க விழா!

நான் கோபால்பூரில் உள்ள எங்கள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தபோது இது எதுவும் எனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கலிங்க நகர் பகுதியிலும் மற்றொரு பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரமது. இரண்டு மூன்று மாதங்கள் நான் கோபால்பூர் நிறுவனத்தில் இருந்தபோது கலிங்கநகர்-சுகிந்தா பகுதியிலும் எங்கள் பயிற்சி நிலையம் ஆரம்பமாகியிருந்தது. அங்கே பயிற்றுனராக ஏற்கனவே ஒரு தமிழர்தான் இருக்கிறார் என்று அறிந்தேன். துணைக்கு நம் ஆள் ஒருவர் இருக்கிறார் என்று கொஞ்சம் தைரியம் வந்தது.

பார்த்தவுடனே பயமுறுத்தும் முகங்கள். நாகரிகச்சுவடே இல்லாத பழங்குடியின மக்கள்தான் அவர்கள். தங்கள் பூர்வீக வாழ்விடத்தை டாடா ஸ்டீலுக்காக கொடுத்து விட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தாற்காலிக முகாம்களில் தங்கவைக்கப் பட்டிருந்தவர்களின் வாரிசுகளுக்கு அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தொழிற்சாலையில் பணிபுரியுமளவுக்கு தொழில் கல்வியை அளிப்பதுதான் திட்டம். அப்படிப்பட்ட தொழிற்பயிற்சி அளிக்கத்தான் நான் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டேன்.

பொதுவாக தொழில்நுட்ப நிறுவனங்களில் பள்ளியிறுதி (பத்தாம் வகுப்பு) முடித்தவர்களைத்தான் சேர்ப்பது வழக்கம். அதாவது வயதில் மிகக் குறைந்த மாணவர்களுக்கு அங்கே பயிற்சியும் படிப்பும் சொல்லித்தரப்படும். ஆனால் கலிங்கநகரில் தொடங்கிய எங்களது நிறுவனத்தில் பயிற்சிக்காக என்று வந்து சேர்ந்தவர்களில் எல்லாரும் 16 வயதிலிருந்து 40 வயதுவரை இருந்தார்கள். 5 ம் வகுப்பிலிருந்து பத்தாவது வரை என எல்லாம் கலந்துசிலர் படிக்காதவர்கள். சிலருக்கு கல்யாணமாகி குழந்தைகள், சிலருக்கு இரண்டு மனைவிகள் என்று வித்தியாசமான கலவையில் மாணவர்கள்?!

2 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

பத்து பேரின் போட்டோவைப் பார்த்ததும் நீங்கள் அவர்களுக்கு பயிற்ச்சி அளிக்க எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது !
த ம 2

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பகவான்ஜி.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!