திங்கள், 21 ஏப்ரல், 2014

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை III



விமான நிலையத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் நண்பர்களும், எங்களை வரவேற்று, மாலை அணிவித்தனர். இரவு நெடு நேரம் வரையில், எஸ்.எஸ்.ஆர்., என்னோடு பேசிக் கொண்டிருந்தார்.

விடியற்காலை, 5:30 மணிக்கு, விமானம் வெளிநாடு புறப்பட இருப்பதால், 3:30 மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டும். அத்துடன் நண்பர்கள், மற்றும் அந்த மூன்று இளம் பெண்கள், இவர்களையெல்லாம், எழுந்திருக்கச் செய்ய வேண்டும்.

ஓட்டல் வந்ததும், இம்மூன்று பெண்களும், அங்குமிங்கும் ஓடுவதும், ஒருவர் பெட்டிகளை, இன்னொருவர் தூக்கி சென்று, எடுத்து வைத்து, சரி செய்வதுமாக பரபரப்பாக இருந்தனர். இந்த பரபரப்பில், காலையில் நன்றாக தூங்கி விட்டார்களானால், என்ன செய்வது? அவர்களை நேரத்திற்கு எழுப்ப வேண்டுமே!

பத்திரிகையாளர் சித்ரா கிருஷ்ண சாமிக்கு போன் செய்து, அவர்களை காலையில் எழுப்ப வேண்டிய தகவலைச் சொன்னேன். 'அவங்கள ஓட்டல்காரர்களே எழுப்பிடுவாங்க; நானும் எழுப்பிடுவேன். நீங்க பயப்படாதீங்க. இன்னைக்கு அவங்க யாரும் தூங்கப் போறதா எனக்குத் தெரியலே... ஒரே அரட்டை! கல்லூரி லீவு விட்டு, ஜாலியா பிக்னிக் போறவங்க மாதிரி தான் இருக்காங்க...' என்றார்.

மறுநாள் காலையில், வெகு சீக்கிரமாகவே எழுந்து, விரைவிலேயே விமான நிலையத்துக்குச் சென்று விட்டோம். பெண்கள் மூவரும் கையில், சில அட்டைப் பெட்டிகளைத் தூக்கி கொண்டு வந்தனர். அவைகளில் ஒவ்வொன்றையும், ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டாலும், தங்கள் ஒவ்வொருவரிடம், ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளப் பிடிவாதம் பிடித்தனர். எஸ்.எஸ்.ஆர்., கமலநாதன், தட்சிணாமூர்த்தி போன்றவர்களும், தமிழக விடுதி அதிகாரிகளும் உதவி செய்து, வழி அனுப்பி வைத்தனர்.

நாங்கள் கொண்டு போயிருந்த சாமான்களின் குவியலைப் பார்த்து, அசந்து விட்டனர் அதிகாரிகள். உடைகள், விக்குகள், நகைகள், கேமராக்கள் முதலியவைகளைக் கொண்ட பல பெட்டிகள். அவசர அவசரமாகக் குறித்துக் கொண்டு, அனுமதித்தனர்.

ஐந்தரை மணிக்கெல்லாம், தமிழக மக்களின் ஆசியுடன், இந்திய மண்ணிலிருந்து வெளிநாடு புறப்பட்டோம். கொஞ்ச கொஞ்சமாக இந்தியா எங்கள் கண்ணிலிருந்து மறைந்து விட்டது. நாங்கள் கற்பனையில் கண்டு வந்த அழகுமிகு நாடுகளைக் பார்க்கப் போகும் ஆவல், எங்களைத் தொற்றிக் கொண்டது.

விமானத்தில், இளஞ் சிவப்பு நிறத்தில் உடை அணிந்த, 'ஏர் பிரான்ஸ்' விமானப் பணிப் பெண்களின் அக்கறையும், கடமையுணர்வும் கொண்ட உபசரணையை, எவ்வளவு போற்றினாலும் தகும்.

இயக்குனர் ப.நீலகண்டனும், வசனகர்த்தா சொர்ணமும் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்ப்பதும், என்னைப் பார்த்து சிரிப்பதும், பின், ஒருவரிடம் மற்றவர் ஏதோ சொல்வதையும், கேட்டவர் சிரிப்பை நிறுத்தி, சிந்தனையோடு தலையாட்டுவதையும் கவனித்தேன். முதலில் எனக்கு புரியாவிட்டாலும் பின்பு, புரிந்தது. இயக்குனருக்கு, எப்படியாவது கதையைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்... அதை, என் காதில் விழுமாறு வேண்டுமென்றே தான் பேசினார். ஆனால், எனக்கு கேட்காதவாறு பேசியதைப் போல் நடித்தார்.

நான், உடனே, 'கவலைப்படாதீங்க... ஜப்பான் போய் பேசிக்கலாம்...' என்றேன். சொர்ணம் உடனே ஜன்னல் வழியே, தெரிந்த காட்சிகளை ரசிக்கத் துவங்கி விட்டார். அவர் மட்டுமல்ல, டைரக்டரும் கூட!
விமானம் வங்கக்கடலை கடந்து, பாங்காக் நகரம் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.

'கீழ்த்திசை நாடுகளின், வெனிஸ்...' என்று போற்றப்படும், பாங்காக் நகரின் குறுக்கே ஆறுகள், ஆற்றின் கரையில் வீடுகள், நீரில் சென்று கொண்டிருக்கும் படகுகள், அனைத்தையும் கண்டோம். இவைகளை ஆகாயத்திலிருந்து, அப்படியே படமாக்கினால், எவ்வளவு அழகாக இருக்கும் என்று தோன்றியது.

என் ஆசை, நியாயமான ஆசைதான்; ஆனால், விமானத்தை வாடகைக்கு எடுத்தால் அல்லவா படமாக்க முடியும். எங்களால் முடியுமா? ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் தானே, பணத்தைச் செலவு செய்ய இயலும்? இருப்பினும், சபலத்தோடு திட்டமிட்டேன்.

ஜப்பானுக்குச் சென்று திரும்பும் வழியில், பாங்காங்குக்கும் வர இருக்கிறோமல்லவா... அப்போது, ஏதாவது வகையில், 'ஹெலிகாப்டர்' கிடைத்தால் முயலுவோம் என்று நினைத்து, என் ஆர்வத்தை, நம்பிக்கையோடு அடக்கிக் கொண்டேன். விமானம் பாங்காங் விமான நிலையத்தில், காலை, 8:50 மணிக்கு இறங்கியது.

அந்த ஊர் நேரப்படி, கைக் கடிகாரத்தை, மணி,1:20 நிமிடங்கள், தள்ளி வைக்க வேண்டி இருந்தது. ஐந்து மணி நேரத்தில், மாறுபட்ட பூமி, மாறுபட்ட உருவங்கள்... விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளை, சயாமிய நாட்டு அழகிய பணிப்பெண்கள், இன்முகத்துடன் வரவேற்றனர்.

நாங்கள் அனைவரும், விமான நிலைய, 'லாபி'க்கு போனோம். படப்பிடிப்பு குழுவினர், ஒரே மாதிரி துணியில், ஆங்கில நாகரிக பாணியில், உடை அணிந்து வந்திருந்தனர்.

ஒரே மாதிரியான உடைகளில், பலர் வருவதை அதிசயத்தோடு, விமான நிலையத்தில் இருந்தவர்கள் ரசித்துப் பார்த்தனர். நான் இவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, எப்போதும், அணியும் வேட்டி, ஜிப்பா, சால்வை, தலையில் குல்லாய் அணிந்திருந்தது, அம்மக்களை வியப்பில் ஆழ்த்தியது. வியப்போடு பார்த்தவர்கள், வேறு எங்கோ பார்ப்பது போல், மிக அருகில் வந்து, உற்றுநோக்கி, திரும்பிப் போனார்கள். என்னைப் பார்த்தவாறே, சயாமியப் பெண்களும், என் அருகே சூழ்ந்து நின்று பார்த்தனர்.  

'என்னண்ணே... உங்களுக்கு இங்கும் ரசிகைகளா...' என்றார் நாகேஷ். 'இல்லை, வேட்டியின் நுனியை எங்கே, எப்படி சொருகியிருக்கேன், என்று பார்ப்பார்களாக்கும்...' என்றேன். சிறிது நேர ஓய்வுக்கு பின், மீண்டும் விமானத்தில் ஏறினோம். விமானம் எங்களை சுமந்தபடி புறப்பட்டது.

அலைகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து, ஒன்றை ஒன்று அழுத்துவதைப் போல் என் சிந்தனைகள், எங்கெங்கோ மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம், என் அறிவை மோத, அதன் விளைவாக ஏற்பட்டிருந்த மனச்சுமையினால், உடற்சுமை அதிகமானது போல் தோன்றியது. அந்நாட்டிலிருந்த இயற்கைக் காட்சிகள், என்னை மேலும் மேலும் குழப்பிக் கொண்டிருந்தன.

இவைகளையெல்லாம், தமிழக மக்கள் நேரில் காண முடியாவிடினும், படங்களிலாவது, பார்க்கும் வாய்ப்பை தர வேண்டுமே... நான் காணும் இக்காட்சிகளை, என்னால் படமாக்க இயலுமா? இப்படி ஒரு ஏக்கம், திட்டம், வசதியின்மையின் அச்சுறுத்தல், முயன்று பார்த்தால் என்ன என்ற கேள்வி எழும்போதே, 'முதலில், 'எக்ஸ்போ'வையாவது படமாக்க முடிகிறதா பார்...' என்று மனதுக்குள், ஒரு கேலி!

சினிமாவில் பல வேடங்களில், ஒருவரே தந்திரக் காட்சியில் நடிப்பது போல், என் மனம், என்னை பல்வேறு கேள்வி கேட்டு, குழப்பிக் கொண்டிருந்தன. டில்லி மாநகரை விட்டுப் புறப்படும் போது, எனக்குள் இருந்த நம்பிக்கை, ஏறத்தாழ ஐந்தாறு மணி நேரத்திற்குள், சிதிலமாகிக் கொண்டிருக்கிற காட்சியையா நான் காண வேண்டும்!

மனிதன், தன் வலிமையை நன்கு புரிந்து திட்டம் போட்டாலும் கூட, அது முழு வெற்றி பெற்று விடும் என்று, உத்தரவாதம் தர முடியவில்லையே!
இப்படி பலவாறான எண்ணங்களுடன், அந்நாட்டின் இயற்கைக் காட்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன்.

விமானம், மணி, 10:40க்கு, கம்போடியா நாட்டின் தலைநகரான, 'பானம் பான்' விமான நிலையத்தில், இறங்கியது.
தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி: 'பொம்மை' விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

- எம்.ஜி.ஆர்.
தினமலர்-வாரமலரிலிருந்து...

தொடர்புடைய இடுகைகள்;
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை I
உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை  II

2 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தகவலுக்கு நன்றி.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!