வெள்ளி, 7 மார்ச், 2014

மகளிர் முன்னேற்றம் - களப்பணி அவசியம்



மகளிர் தினவிழா இப்போதெல்லாம் சம்பிரதாயமாக மாறிவிட்டது. மகளிர் அமைப்புகள் இதை பெரிய அளவில் முன்னெடுக்கவில்லை. வாய்ப்பும் வசதியும் உள்ள பெண்களைத் தவிர்த்து, ஏழை மற்றும் கிராமப்புற பெண்களைப் பற்றிய அக்கறை யாருக்கும் துளியும் இல்லை. உள்ளாட்சி மன்றங்களில் பங்கெடுக்க பெரும் வாய்ப்புக்களைப் பெற்றிருந்த போதிலும் ஆண்களின் கைப்பாவைகளாகத்தான் இன்னமும் செயல்படுகின்றனர்.

பெண்களிடம் புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர அருமையான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அப்படி இருந்தும் ஊடகங்கள் சில, போலியான வாழ்க்கை முறைக்கு பெண்களை திசை திருப்புகின்றன. இது விஷயத்தில் பெண்கள் மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் இருப்பதற்குப் பதிலாக விட்டில் பூச்சிகளைப் போல் விழுந்து பலியாவதுதான் வேதனை தரக்கூடிய விஷயம். 

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப பெண்கள் தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்தான். அதே சமயம் மாற்றங்களை சுவாசமாக்கி வீறுநடை போட்டு களம் இறங்கும் பெண்களே தேசத்தின் இன்றைய தேவை. இதற்கு பெண்கள் அமைப்புகள் என்ன செய்கின்றன? வெறுமனே கூட்டம் கூட்டி மைக் பிடித்து பேசிவிட்டுப் போனால் அதனால் என்ன பயன்? களப்பணியின் அவசியம் பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை. இயற்கையாகவே அதிக திறனும் பன்முக வேலைகளைச் செய்யும் குணமும் படைத்தவர்கள் பெண்கள். அதைக் காலத்துக்கேற்றவாறு பயன்படுத்த வேண்டுமாயின் அவர்களுக்கு வழிகாட்டுதல் அவசியம்.

ஆண்களுக்கு நிகராக சகல துறைகளிலும் பெண்கள் சாதித்துக் கொண்டிருப்பதை எல்லோரும் அறியுமாறு அவர்கள் தங்களை வெளிப்படுத்தியாக வேண்டும். அப்போதுதான் இதர பெண்கள் மத்தியிலும் தன்னம்பிக்கையும் தைரியமும் வளரும். அச்சம் அறியாமை, அடிமைத்தனம் இவற்றைக் கடாசிவிட்டு, தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி இவற்றைக் கைக்கொண்டு காலத்தோடு இசைந்து செயல்பட்டால் அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்க யாராலும் முடியாது.

பிறரைச் சார்ந்திருக்காமல் சுயமாக வாழமுடிவது என்பது நகர்ப்புற பெண்களுக்கு மட்டுமே வாய்த்த ஒன்றில்லை. கணவனை இழந்த கிராமத்து உழைக்கும் பெண்கள்கூட சுயமாக வாழ்வதை காலங்காலமாக பார்க்கிறோம். இன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் கிராமத்துப் பெண்களுக்கு புது நம்பிக்கையையும், தெளிவையும் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஆனாலும் கிராமப் பொருளாதாரத்திலும், வீட்டு முன்னேற்றத்திலும் அது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியவில்லை.

தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதில் கழிக்கும் பெண்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகமாகிக் கொண்டு வருவது வேதனையான விஷயம் என்பதை பெண்களே கூட மறுக்க மாட்டார்கள்.
சங்க காலத்தில் பெண்கள்தான் முன்னிலை வகித்தனர். ஔவையார், காக்கைப் பாடினியார், வெண்ணிக்குயத்தியார் போன்றோர் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தனர். உற்பத்தி சக்திகளும், உறவுச்சிக்கல்களும் தலையெடுத்தபோது பெண் தன் தலைமைப் பண்பை இழந்தாள். இன்று இழந்ததை மீட்கும் போராட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறாள்.

ஒரு பெண் வேலைக்குப் போவது தன் குடும்பத்தின் போருளாதாரத் தேவைகளுக்காக என்பது மாறி, சமுதாயத்தில் சுயத்தோடு வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பதாக இருக்கவேண்டும். பணியிடங்களில் பாதுகாப்புக்காக ஆண்களையே நம்பியாராமல், ஆளுமையையும், அறிவுத்திறனையும் வெளிப்படுத்தும்போது ஒரு பயம் கலந்த மரியாதை ஆண்கள் மத்தியில் தன்னாலே ஏற்படும். ஆனால் சில பலவீனங்களுக்கு ஆளாகிப்போனால் தானும் கெட்டு தன் குடும்பமும் நடுத்தெருவில் நிற்க நேரிடும் என்பதையும் உணரவேண்டும். 

இரவிலும் பெண்கள் சுதந்தரமாக நடமாடும் பொற்காலம் வாய்க்க இன்னும் பலகாலம் நாம் பயணிக்கவேண்டும். அதுவரை இடம் பொருள், காலம் அறிந்து தன்னைப் பாதுகாப்பதில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சுற்றுப்புற மனிதர்களோடு நட்பு ரீதியில் பழகுவதும், எதிராளிகளை வலிந்து உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பதும் தங்கள் பாதுகாப்புக்கு கவசமாக இருக்கும். அது கோழைத்தனம் இல்லை. வக்கிரமனிதர்கள் மட்டுமே நிரம்பியதில்லை இந்த பூமி. நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆண்களாகிய நாம் பெண்ணை வெறும் சதைப்பிண்டமாகப் பார்க்காமல் சக மனிதராகப் பார்த்தாலே பல சிக்கல்கள் தீர்ந்துபோகும். நமக்கென இருக்கும் அத்தனை விருப்பு வெறுப்புக்களும் அவர்களுக்கும் இருக்கும் என்று நினைப்பதும், சமமாக நடத்துவதும், அதை வீட்டிலிருந்தே தொடங்குவதும்தான் பெண்களின் முன்னேற்றத்திற்கு உண்மையாகவே உதவி செய்யும்.



2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

சமீப காலமாக தான் பெண் கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது... அவர்களின் ஆழ்ந்த கல்வியில் அனைத்தும் மாறும்... மாறவும் வேண்டும்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

படிப்பிலும் அவர்கள் சுட்டியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஐம்பது சதவீதத்துக்கு மேல் திருமணமானதும் அவர்கள் தங்கள் எல்லா சுயத்தையும் இழந்துவிடுவதுதான் வேதனை. வருகைக்கு நன்றி தனபாலன் அவர்களே.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!