மனிதனுக்கு வெளி உதவி என்பது இல்லவே இல்லை. அன்றும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. இனியும் இருக்காது. ஏன் இருக்க வேண்டும்? நீங்கள் ஆண்களும் பெண்களும் இல்லவா? உலக நாயகர்களான உங்களுக்கு பிறர் உதவியா? வெட்கமாக இல்லை? நீங்கள் ஆன்மா. நீங்கள் சக்தி. நீங்களே முயன்று துன்பங்களிலிருந்து விடுபடுங்கள். உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு யாரும் எப்போதும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. இப்படி ஒருவர் இருப்பதாக நினைப்பது ஓர் இனிய மயக்கம். அதனால் எந்தப் பயனுமில்லை!
இது அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் சுவாமி விவேகானத்தர் குறிப்பிட்டது.
‘ஆயிரம் ஆண்டுகளாக இருந்த வழிகாட்டியும் தேவையில்லை. நேற்று தோன்றிய வழிகாட்டியும் தேவையில்லை. ஏனெனில் நாம் உயிர் உள்ளவர்கள். நம்மிடம் உயிர் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆற்று வெள்ளம் போல எங்கும் தங்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. இறந்து போன நேற்றைய வழிகாட்டியின் உதவியைக் கொண்டு, உயிர் ததும்பும் இன்றைய வாழ்க்கையின் இயக்கத்தை உணர முடியாது’ என்றார் ஜே. கிருஷ்ணமூர்த்தி.
‘நம்மை நாம் கற்று உணர்வோம். மற்றொருவர் காட்டும் நெறியைப் பின்பற்றி நம்மை நாம் கற்று உணர்தல் இயலாது. அவ்வாறு கற்க முற்பட்டால், அது அவர்களைப் பற்றிக் கற்பதே ஆகுமன்றி, நம்மைப் பற்றிக் கற்பது ஆகாது’ என்று ஜே.கே. சொன்னதை ஒவ்வொரு மனிதரும் நூறு முறை சிந்தித்து தெளிதல் நலம்.
சிந்தனை மனிதனுக்கு மட்டுமே ஆண்டவன் வழங்கியிருக்கும் அரிய வரம். தன் வழியைத் தானே சிந்திக்காதவனுக்கு, வாழ்வில் சிகரங்களைச் சந்திக்கும் வாய்ப்பில்லை. அடுத்தவன் சொல்வதைக் கேட்டு நடப்பது என்று முடிவெடுத்த யாரும் ஒருவனை மட்டும் வழிகாட்டியாய் வைத்துக் கொள்வது இல்லை. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ஒரு சமயம் ஒருவன் சொல்வது சரியாகத்தோன்றும். அடுத்த நாள் இன்னொருவனின் ஆலோசனை அதைவிடச் சிறப்பானது என்ற நம்பிக்கை எழும். ஒரு வாரம் கழிந்ததும் நாலு பேரைக் கேட்ட பின்பு ஒரு முடிவெடுப்பது நல்லது என்று ஞானம் கனியும். இறுதிவரை நிலையான முடிவுக்கு வராதபடி, நெஞ்சுக்குள் குழப்பம் கூடு கட்டும்.
சொந்தமாக யோசித்து முடிவெடுக்க அஞ்சுகிறோம். சாமியார்கள், ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், குருமார்கள், நம்பிக்கைப் போதகர்கள் என்று நான்கு திசைகளிலும் தேடி ஓடுகிறோம். நம் அறியாமையே அவர்கள் மூலதனம். விளைவு… அவர்கள் குடிசை கோபுரமாகிறது. நம்முடைய வாழ்க்கை மண் மேடாகிறது.
வேதங்களும் உபநிடதங்களும் வழங்கும் கருத்துக்களின் சாரம் ’உன்னை நீ அறிவாய்’ என்ற ஒரு வரியில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. நாம் பிறரை அறியவும், பிறர் மூலம் நம்மை அறியவும் முற்படுகிறோம். தன்னைத்தவிர அனைத்தையும் அறிபவன் அறிஞனாகிறான். தன்னை மிகச் சரியாக அறிபவன் மட்டுமே ஞானியாகிறான். நம் மூதாதையர் தங்களை அறிவதில்தான் அதிகம் கவனம் செலுத்தினர்.
‘நான் யார்? என் உள்ளம் யார்? என் ஞானங்கள் என்ன?’ என்ற கேள்விகளால் அவர்கள் வேள்வி நடந்தது. அதனால்தான், வாழ்க்கை குறித்த தெளிவு அவர்களுக்கு இருந்தது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க் கவிஞன் கணியன் பூங்குன்றன், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்றான். திருமூலர், ‘தானே தனக்குப் பகைவனும் நண்பனும்’ என்று உணர்த்தினார். ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்று சொன்னவரும் அவரே. தன்னைத் தன்னாலே உயர்த்திக்கொள்க’ என்கிறது பகவத் கீதை.
அனுபவங்களை விட மிகப் பெரிய ஞானாசிரியன் இந்த உலகில் யாருமில்லை. அனுபவம் ஆளுக்கு ஆள் மாறுபடும். நாளுக்கு நாள் வேறுபடும். ‘ஒருவன் கண் மற்றவருக்குச் சிறகாக முடியாது. ஒருவன் கால் இன்னொருவனுக்கு வாகனமாக இயலாது. ஒருவன் குரல் வேறொருவனுக்குப் பாட்டாக மாறாதுய என்கிறார் கலீல் ஜிப்ரான்.
சுயமாய் அனுபவித்து அறிவதுதான் உயர்வு. எந்த உயர்வும் உடனே வெற்றிக்கு வாசற்கதவைத் திறந்துவிடாது. தொடர் தோல்விகளுக்குப் பின்புதான் சரித்திர வெற்றி சாத்தியம். வெற்றி பெற்ற வரலாற்று நாயகர்களின் முதுகுக்குப் பின்னால் ஆயிரம் தோல்விகள் மறைந்திருக்கின்றன.
தகரக் கதவுடன் கூடிய மரக்கூண்டு வீட்டில் வாழ்க்கையைத் துவங்கிய ஆபிரகாம் லிங்கன், வெள்ளை மாளிகையின் உள்ளே நுழையும் வரை சந்தித்த தோல்விகள் ஏராளம். அவர் சுவைத்த தோல்விகளை வேறு யார் சந்தித்திருந்தாலும், வாழ்க்கை மீதிருக்கும் கவர்ச்சியே காணாமல் போயிருக்கும்.
லிங்கன் தன்னுடைய 19-வது வயதில் சிறிய பெட்டிக்கடை வைத்தார். வியாபாரம் நொடித்தது. 20 வயதில் மதுபானக் கடையைத் திறந்தார். இருப்பது அனைத்தையும் இழந்து திவாலானார். 23-வது வயதில் இலினாய்ஸ் மாநில சட்டசபைத் தேர்தலில் நின்று தோற்றார். 26 வயதில் உயிருக்குயிராய் நேசித்த ரட்லெட்ஜ் என்ற இளம் பெண்ணைக் கைப்பிடிப்பதற்கு முன், காலன் அவளை அழைத்துக் கொண்டான். 27 வயதில் கடுமையான நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டார். 49 வயதில் அமெரிக்க செனட்டர் தேர்தலில் ஸ்டீஃபன் டக்ளஸிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தொடர் தோல்விகளால் துவண்டுவிடாத லிங்கன் 1861-ல் அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதியாகப் பொறுப்பேற்று சரித்திரம் படைத்தார். லிங்கனின் முயற்சி மட்டுமே நமக்குப் பாடம். நம் சுய அனுபவங்களே நம்மை வழி நடத்தும்.
‘நெறியை’ மட்டுமே புத்தர்கள் காட்டுவார்கள். நடப்பது அவரவர் பொறுப்பு என்றார் கௌதமர். கைகாட்டி மரம் ஊரின் திசையைத்தான் காட்டும். நாம் விரும்பும் இடத்துக்கு நம்மை அது கொண்டு சேர்க்காது.
விவேகானந்தர் சொல்கிறார்; ‘ஆயிரம் தெய்வங்களின் மீது நம்பிக்கை வைத்து, உன் மீது நம்பிக்கை வைக்காது போனால் உன்னை விட நாத்திகன் உலகத்தில் யாருமில்லை!’
எஸ். ராமகிருஷ்ணன்.
4 கருத்துகள்:
வார்த்தைகளில் வலிமை அதிகம். ஆனால் இங்கே சூழ்நிலைகள் தான் நம்மை பந்து போல பந்தாடிக்கொண்டிருக்கின்றது.
படித்ததில் பிடித்தது எங்களுக்கு பிடித்துள்ளது, சூழ்நிலைகள் நம்மை யார் சிந்திக்க விடுவதில்லை. தன் சுய பரிசோதனை செய்யாமல் வரையறுக்கப்படாத இலக்கு நோக்கி ஓடி என்ன பயன்? சிந்திக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு மிக்க நன்றி ஜோதிஜி அவர்களே!
வருகைக்கு மிக்க நன்றி அ.பாண்டியன் அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!