கல்லூரி விடுதிக்கு
அம்மா எழுதும்
கடிதத்தில் தெரியும்
தாய்ப்பால் வாசம்
பணிவிடைத் தாள்களின்
அடியில் மட்டுமே
வரவேற்கப்படும்
அப்பாவின் கடிதங்கள்
காதலிக்கும்போதுதான்
தெரியவந்தது
கடிதங்களைப் படித்தும்
பசி ஆறலாம்
சுமக்கும்
செய்திகளிலிருந்து
கடிதங்களே
அறிவித்துவிடும்
நண்பர்கள் வயதை
பிரசவத்திற்குப்
பிறந்தகம் போன
மனைவிகளின்
கடிதங்களால்
காப்பாற்றப்படலாம்
பல
கணவர்களின் கற்பு
இப்பொழுதெல்லாம்
என்
கண்களில் படுகின்றன
தொலைபேசிகள்
கடிதங்களின் சவப்பெட்டியாக!
-
- நெல்லை
ஜெயந்தா
2 கருத்துகள்:
சிறப்பான கவிதை பாராட்டுகள்
வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி மாலதி அவர்களே!
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!