மறக்க முடியாத
நினைவுகளில் சந்தோஷமான நினைவுகள் மட்டுமே இருப்பதில்லை. சோகமான சம்பவங்களும், ஆறாத
துயரங்களும், வேதனைகளும், வலிகளும் கூட இருக்கலாம் இல்லையா? மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள்
மனதிற்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரவல்லது. ஆனால் மறக்க வேண்டிய நிகழ்வுகளும்
கூட அடிக்கடி வந்து ஞாபகப்படுத்தி நிம்மதியைக் குலைத்துக்கொண்டே இருக்கும்.
உதாரணமாக
காதலில் துரோகத்தைச் சந்தித்தவர்கள் அந்த நிகழ்வை மறக்க மிகவும் பிரயத்னப்பட வேண்டியிருக்கலாம்.
கொஞ்சநாள் மறந்திருந்தாலும் கூட நண்பர்கள் யாராவது ஞாபகப்படுத்திவிட்டால் மீண்டும்
அவர் பழைய துயர நிலைக்கு மாறலாம். ஆனால் முற்றிலும் மறந்துபோக வழி இருக்கிறதா?
‘நாம் யாரிடமாவது
வாக்குவாதம் போடும்போதோ, சண்டை போடும்போதோ… உன்னால் எனக்கு ஏற்பட்ட இந்த கசப்பை நான்
காலம் முழுக்க மறக்கவே மாட்டேன்…’ – என்று நினைத்துக்கொள்வோம். ‘இன்றைக்கு நீ சொன்னதை
என்றைக்கும் நான் மறக்கமாட்டேன்’, என்று வெளிப்படையாகவே சொல்வோம்.
இப்படி நீங்கள்
சொல்லும் போதே அந்த சண்டையில் அவரால் நீங்கள் துக்கமும், மனவேதனையும் அடைந்திருக்கிறீர்கள்
என்று அர்த்தம்.
உங்களுக்கு துக்கத்தையும்
மனவேதனையையும் தந்த அந்த செயலை, அந்த வார்த்தையை ஒருபோதும் மறக்கமாட்டீர்கள் என்றால்,
வாழ்நாள் முழுவதும் அந்த துக்கத்துடனும், மனவேதனையுடனும் தான் இருப்பேன் என்று உங்களுக்குள்ளே
உறுதிமொழி எடுத்துக்கொள்வது எவ்வளவு பெரிய அறியாமை. தேவையற்ற துக்கத்தையும், வேதனையையும்
யாராவது சேமித்து வைப்பார்களா?!
ஒருபுறம் மகிழ்ச்சியாக
வாழ்வதற்காகவும், அமைதியாக இருப்பதற்காகவும் நாம் எவ்வளவோ விஷயங்களை சிரத்தை எடுத்து
செய்து கொண்டிருக்கிறோம். மறுபுறம் நமக்கு வேதனைகளை உருவாக்கும் சம்பவங்களையும், எண்ணங்களையும்
பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு முரண்பாட்டிற்குரிய, முட்டாள்தனமான
விஷயம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
கணவன் மனைவிக்குள் தடித்த வார்த்தை ஒன்று விழுந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அதை ‘போய் தொலை’ என்று மனதை விட்டு அகற்றிவிடவேண்டும். அகற்றாமல் அதை அப்படியே மனதுக்குள் வைத்துக்கொண்டு மேலோட்டமாக இருவரும், ஒருவர் மீது இன்னொருவர் அன்பு செலுத்துவதுபோல் காட்டிக்கொண்டு சினிமாவுக்குச் சென்றாலும், அல்லது வேறு எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அது தற்காலிக நிம்மதியாக மட்டுமே இருக்கும்.
திடீரென்று ஒருநாள்
உள்ளே அமுங்கிக்கிடக்கும் கசப்பு 'இந்த மனுஷனை திருப்திப்படுத்த முடியாது’ என்று மனைவியோ,
‘எவ்வளவு வாங்கிக் கொடுத்தாலும் இவளுக்கு திருப்தியே வராது’ என்று கணவரோ பேசி, விட்ட
இடத்தில் இருந்து மீண்டும் வாக்குவாதத்தையோ, சண்டையையோ தொடங்கிவிடுவார்கள்.
நட்பிலும் காதலிலும்
கூட இதே கதைதான். துரோகத்தால்தான் மனிதன் அதிகம் பாதிக்கப்படுகிறான். நமக்கு துரோகம்
செய்தவர்கள் குற்ற உணர்ச்சியே இல்லாமல் சந்தோஷமாக வாழும் போது தவறே செய்யாத நாம் ஏன்
புழுங்கித் தவிக்கவேண்டும். அவரின் சுயரூபம் இப்போதாவது தெரிந்ததே என்று நிம்மதி அடைந்து
அடுத்த வேலையைப் பார்க்கப் போகவேண்டும். அதேயே நினைத்துக் கொண்டிருப்பதும், நெஞ்சில்
அவர் மீது வன்மத்தை வளர்த்துக் கொள்வதும் எந்தவிதத்திலும் நம் உடலுக்கும் மனதிற்கும்
ஆரோக்கியமானதல்ல.
மேலோட்டமாக நாம்
என்னதான் செய்தாலும், அடிப்படையான எண்ணங்களும் உணர்வுகளும் சரியால்லாமல் கசப்புடன்
இருந்தால், அந்த உறவு அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல்தான் காணப்படும். வாரத்திற்கு
ஒருமுறை அந்த உறவு சரிந்துகொண்டுதான் இருக்கும். உடனடியாக நாம் உறவின் அஸ்திவாரத்தை
சரி செய்திடவேண்டும். சரி செய்யாவிட்டால், ‘இவரை (இவளை) ‘சரிசெய்யவே முடியாது’ என்று
கணவன்-மனைவி உறவுக்குள் போலித்தனம் புகுந்துகொள்ளும்.
நம் உறவில், நட்பில்
போலித்தனம் இல்லாமல் வாழவேண்டும் என்றால், கசப்பான வார்த்தைகளையும், கசப்பான சம்பவங்களையும்
மனதிற்குள் வைத்துக்கொள்ளவே கூடாது. அதாவது யார் மீதும் ‘கொலவெறி’ இருக்கவே கூடாது. இது முடிகிற
காரியமா? மானமிருந்தால் மார்க்கமுண்டு இல்லையா?
இப்படி கசப்பான
சில மறக்க முடியாத நினைவுகளை மறக்க முயற்சித்துக்கொண்டிருக்கும்,
உங்கள் அன்பன்,