திங்கள், 5 மார்ச், 2012

நற்பணி மன்றம் நடத்தியிருக்கிறீர்களா?

நான் இளைஞனாக இருந்தபோது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துஇளைஞர் நற்பணி மன்றம்என்ற பெயரில் சில சமூகப் பணிகளைச் செய்து வந்தோம். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பணி படிப்பகம் அமைத்தது

நகரப்பேருந்து வந்து செல்லும் எங்கள் ஊர்ச்சாலையின் இருபுறத்திலும் வளர்ந்து கிடக்கும் கருவேல மரங்களை வெட்டுவது, ஊரில் திருவிழாக்களை தலைமையேற்று நடத்துவது. பள்ளிக்கட்டிடம், குளத்தை ஆழப்படுத்துதல், சாலை செப்பனிடுதல் பற்றி சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரியப்படுத்துதல், சாதி மற்றும் வருமானச்சான்றிதழ் பெற்றுத்தர உதவிபுரிதல் போன்ற பணிகளும் அடங்கும்.

இத்தனை பணிகள் செய்தாலும் வீட்டிலும் சரி, ஊரிலும் சரி நல்ல பெயர் என்பதே இருக்காது. கைச்செலவுக்கே காசில்லாத சூழ்நிலையில் பொதுபணியை செய்வது எங்களுக்கு மிகவும் கடினமான சவாலாக இருந்தது. எங்களுக்குத் தெரிந்தவர்களிடம் நன்கொடை வாங்கித்தான் அல்லது எங்கள் கைக்காசைப் போட்டுத்தான் மன்றத்தையே நடத்தி வந்தோம்


ஊரில் படிப்பகத்த்திற்கென ஒரு பொதுவான கட்டிடத்தை நாங்கள் எங்கள் வசம் எடுத்துக்கொண்டோம். வெறும் கூரையால் வேயப்பட்ட பாழடைந்த கட்டிடம் அது.

1967 களில் திராவிட இயக்கம் வலுப்பெற்று எழுந்தபோது அறிஞர் அண்ணாவின் பேச்சால் கட்டுண்ட மக்கள் ஊரெங்கும் படிப்பகத்தை ஏற்படுத்தி நாளிதழ்களை வாங்கி நூலகக் கலாச்சாரத்தையும், வாசிப்புப் பழக்கத்தையும் உண்டாக்கியிருந்தார்கள்திருமணங்களின் போது அன்பளிப்பாக புத்தகங்களையும் வாழ்த்துமடல்களையும் வழங்கும் பழக்கம் பரவலாக ஏற்பட்டிருந்த காலம் அது

அந்தக் காலகட்டத்திலேயே மிகவும் சிற்றூர் ஆன எங்கள் கிராமத்தில்திருவள்ளுவர் படிப்பகம்ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். அந்தக் கட்டிடத்தை எங்கள் வசம் கொண்டுவந்த போது, அங்கிருந்த ஒரு பழைய பெட்டியில் அந்தக்காலத்து தினத்தந்தி பேப்பரெல்லாம் கட்டுக்கட்டாக இருந்தது. எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட செய்திகளையேல்லாம் அந்த பழைய பேப்பரில் படித்தது மிகவும் சுவாரஸ்யமான சம்பவம்.

எல்லாம் கொஞ்சகாலம்தான். பிறகு யார் பணம் கொடுத்து பத்திரிகைகளை வாங்குவது என்ற போட்டியில் நாளிதழ்கள் நின்றுபோய் சூதாட்ட அறையாயும் சோம்பேறிகள் தூங்குமிடமாகவும் மாறிப்போயிருந்தது.


அந்தக் கட்டிடம்தான் இப்போது பாழடைந்தபோயிருந்தது. இதை வைத்துத்தான் நானும் என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து இந்த நற்பணி மன்றத்தை ஆரம்பித்தோம். படிப்படியாக ஊரில் உள்ள எல்லா இளைஞர்களும் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நம்பினோம். ஒவ்வொருவராய்ப் பார்த்துப் பேசினோம். எப்படியாவது படிப்பகத்தை ஏற்படுத்தி பின்னர் அதை நூலகமாக மாற்றவேண்டும் என்ற தணியாத ஆவல் எங்கள் எல்லோருக்குமே இருந்தது

ஆனால் பெயர் கொடுத்ததோடு சரி, யாருமே எந்த வேலைக்குமே முன்வருவதில்லை. அதிலும் மாதாமாதம் சந்தா கொடுக்கவேண்டுமா இவர்களுக்கு வேறு வேலையில்லை என்று கழன்று கொண்டார்கள். ஆக ஆரம்பித்த ஐந்து பேர்தான் எல்லாமுமாக இயங்கியது.
முதலில் கட்டிடத்தை சீர்படுத்தியாக வேண்டும்! என்ன செய்வது? யாரும் நன்கொடை கொடுக்க முன்வரவில்லை. நாங்கள் எல்லோருமே இன்னும் வேலைக்கே போகவில்லை என்பதால் எங்கள் செலவுக்கே வீட்டை எதிர்பார்க்கும் சூழ்நிலை


அப்போதுதான்நேரு யுவக்கேந்திரா பற்றி கேள்விப்பட்டு, அதில் போய் எங்கள் மன்றத்தை இணைத்துக்கொண்டு அங்கிருந்து கடுமையாக போராடி ஐந்தாயிரம் நிதிபெற்றோம். அது நடத்திய கபடிப்போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்று அதில் கிடைத்த பரிசுத்தொகையையும் பயன்படுத்திக்கொண்டோம். மண்சுவரை சிமென்ட் சுவராக்கினோம். மேலே மச்சுக்கூரையை அகற்றிவிட்டு சீமை ஓடு போடத்தீர்மாணித்தோம். பணப்பற்றாக்குறையில் இடையில் பணியை நிறுத்தினோம்

வெளியூர்களில் நல்ல வேலையில் உள்ளவர்களை நாடி நன்கொடை பெற்றோம். கூரைக்கு கழிகள் அமைக்க எங்களைடைய சொந்த நிலத்தில் உள்ள பனைமரத்தை வெட்டினோம். கொத்தனார் வேலை தவிர மற்ற எல்லா வேலைகளையும் நாங்களே செய்தோம்.


இப்படி எல்லா வேலைகளையும் மன்றம் என்ற பெயரில் செய்தது வெறும் நான்கு பேர்தான். திறப்புவிழாவை தடபுடலாக நடத்த எண்ணினோம். ஆனால் பணம் இல்லை. முடிந்தவரை செய்தோம். விழா எளிமையாக முடிந்தது. பத்திரிகைகளை வரவழைத்தோம். நல்ல வாரந்திர பத்திரிகைகளின் சந்தாக்களை சில பெரியமனிதர்களிடமிருந்து பெற்றொம். இப்படியாக படிப்பகத்தை அமைத்தபின், தொடர்ந்து பத்திரிகைகளை வரவழைக்க பஞ்சாயத்தின் உதவியை நாடி அவர்களையே மாதாமாதம் தொகையைக் கொடுக்க ஏற்பாடு செய்தோம்.

ஆனால், எல்லாமே சிலகாலம்தான். வேலைதேடி வெளியூருக்கு நாங்கள் ஆளுக்கொரு திசையாய் சென்றுவிட மீண்டும் அந்த படிப்பகம் பாழடைந்துபோய் கிடக்கிறது. இன்று இளைஞர்கள் என்று வலம்வருபவர்கள் யாரும் எந்த முயற்சியும் பல வருடங்களாகச் செய்யவேயில்லை. எல்லோரும் கைப்பேசியில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள். யாரைக்குற்றம் சோல்வது?


அந்தக்காலகட்டத்தில் என் நண்பன் எனக்கெழுதிய மிகச்சிறிய கடிதம் இது….

அன்பு நண்பா!
உன் கடிதம் மணி மூலம் கிடைத்தது. படிக்க மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் தன்நலம் பார்க்கும் இவ்வுலகில் நீயும், மணியும் பொதுநலனுக்காக இப்படி ஒரு கடின உழைப்பா? ஆஹா இந்த வெயிலில் கேட்கவே எவ்வளவு குளுமையாக இருக்கிறது

முக்கியமாக அந்த ஒருங்கிணைப்பாளரைப் பாராட்ட வேண்டும். வெறும் 5 பேரைக்கொண்ட இந்த நற்பணி மன்றத்திற்கு இவ்வளவு உதவி செய்திருக்கிறார். திறப்பு விழாவிற்கு என்னால் வர இயலாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.

உன் கையிலிருந்து செலவழித்த பணத்தை நான் எப்படியும் என் மாமாவிடம் கூறி வசூலித்துக் கொடுக்கிறேன். தற்சமயம் என் நன்கொடையாக ரூ. 100 இக் கடிதத்துடன் இணைக்கிறேன். வருகிற வெள்ளிக்கிழமை ஊருக்கு வருவதாக ஒரு பிளான் இருக்கிறது. ராமன் AAA பேருந்தில் நடத்துனராக இருப்பது ஒரு சந்தோஷமான செய்தி. இங்கு வியாபாரம் சுமாராக போகிறது. இன்னும் லாபத்தை எதிர்பார்க்க முடியவில்லை.

ஏன் திடீரென்று திருமண யோசனை வந்தது? உன்னுடைய பாலகுமாரன் புத்தகம் என்ன ஆயிற்று? தொலைந்துவிட்டதா? கிழிந்துவிட்டதா? அல்லது வேறு யாராவது வாங்கிக்கொண்டார்களா?

இதுதான் சங்கதி
மற்றவை நேரில்.
அன்புடன்,
ஈஸ்வரன்.

மறக்க முடியாத நினைவுகளுடன்,

5 கருத்துகள்:

Hai சொன்னது… [Reply]

ஒரு இளைஞனால் முடியாதது எதுமில்லை..! வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்..!

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!

பெயரில்லா சொன்னது… [Reply]

உங்கள் சேவை தொடரட்டும் . நாங்கள் மாணவர்கள் சேர்ந்து ஒரு நற்பணி மன்றம் ஒன்றைஆரம்பிக்க எல்லாம் நடந்துகொண்டு இருக்கிறது நீங்கள் எந்த நிலையில் இருந்திருப்பீர்கள் என்று என்னால் உணர முடிகிறது .. நானும் அதே நிலை ... .சிறிய அளவில் ஆரம்பித்து இருக்கிறோம் ...பெரிதாக்க முடியும் என்ற நம்பிக்கையில் ..எங்களைப்போன்றவர்களுக்கு உங்களுடைய ஆலோசனைகளும் தேவை . sammoonf@gmail.com

Unknown சொன்னது… [Reply]

நற்பணி தொடர வாழ்த்துக்கள்

KGM Marimuthu சொன்னது… [Reply]

ஒரு கிராமத்தில் என்ன என்ன வளர்ச்சி இருக்கவேண்டும். எதுமாதிரியான வளர்சிகள் இருந்தா நல்லா இருக்கும் என உங்களது கருத்துக்களை பதிவு செய்யவும் நண்பர்களே....

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!