சனி, 19 செப்டம்பர், 2020

மறக்க முடியாத நினைவுகள் - ஒரு வாசகரின் விமர்சனம்

ஆசிரியரின் அனுபவங்கள், சமூகத்தின் நிகழ்வுகள் மீதான ஆசிரியரின் கோபம், பத்திரிக்கைகளில் எழுதிய வாசகர் கடிதங்கள், அரசியல் பார்வை ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல்.

ஆசிரியரின் கருத்து சுதந்திரம் வெகுவாகக் கவர்ந்தது. தவறுகளைத் துணிவாக சுட்டிக்காட்டி எழுதியிருக்கும் அரசியல் சார்ந்த கட்டுரைகள் அருமை.

கணினி கற்றுக்கொள்ள செய்த முயற்சி கள், நற்பணிமன்ற செயல்பாடுகள் சிறப்பு.

எம். எஸ். உதயமூர்த்தி பற்றிய கட்டுரையை வாசிக்கும் போது என் அப்பாதான் நினைவுக்கு வந்தார். என் சிறுவயதில் வார இதழில் வெளிவந்த எம். எஸ் . உதயமூர்த்தியின் கட்டுரைகளை அப்பா பைண்ட் செய்து வைத்திருப்பார். பலமுறை என்னை படிக்கச் சொல்லியும் நான் இதுவரை படித்ததில்லை. அப்பாவின் இறப்புக்குப் பின் அவருடைய தொகுப்புகள் இடமின்மையால் பரணுக்குப் போய்விட்டது. இந்தக் கட்டுரை அந்தத் தொகுப்புகளை எடுத்து வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. அதற்காக ஆசிரியருக்கு நன்றி.

மறக்க முடியாத ஆசிரியர்கள் கட்டுரையைப் படிக்கும்போது உண்மையிலேயே மனதுக்கு மகிழ்வாக இருந்தது. இந்த வயதில் கூட நம்முடைய ஆசிரியர்களை எண்ணிப்பார்த்து மகிழ்வும் நன்றிகூறவும் முடியுமென்றால், ஆசிரியப் பணிக்கு இதைவிட வேறென்ன பெரிதாக விருதுகள் இருந்துவிட முடியும். இக்கட்டுரை என்னுடைய ஆசிரியப் பெருமக்களையும் நினைத்துப் பார்த்து தலைவணங்க வைத்தது உண்மை.

ஏன் எழுத வேண்டும் கட்டுரையில் ஆசிரியர் குறிப்பிட்டது போல நம் இருப்பை உணர்த்துவதைவிட ஒரு மன நிம்மதி கிடைப்பது என்னவோ உண்மைதான். நானெல்லாம் 5 மாதங்களில் திடீரென எழுதத் தொடங்கியவள். அதன் காரணமாகவே பல வருடங்கள் கழித்து மீண்டும் அதிகம் வாசிக்கவும் தொடங்கியிருக்கிறேன்.

பொதுவாக நம்முடைய சுய அனுபவங்களை நூலாக எழுதுவதில் பிறருக்கு என்ன இலாபம் என்ற எண்ணம் எனக்குண்டு. ஆனால், மற்றவருடைய அனுபவங்கள் நம்மை நாமே ஒருமுறை திரும்பப் பார்ப்பதற்கும், நாம் மறந்துவிட்டதை நினைவு படுத்தவும் நிச்சயம் உதவுகின்றன.

புத்தக வடிவமைப்பும் சிறப்பாக இருந்தது. இப்புத்தகம் எனக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்கியது. வாழ்த்துகள்.

- கற்பகாம்பாள் கண்ணதாசன்


சனி, 5 செப்டம்பர், 2020

மறக்க முடியாத ஆசிரியர்கள்

வாழ்க்கையில் நாம் அடைந்த உயரங்களுக்குக் காரணமானவர்களில் நமக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. ஒவ்வொருவரும் பல கட்டங்களைக் கடந்துதான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். இலக்கே இல்லாத வாழ்க்கையில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, இலட்சியம் குறித்தான பார்வையை விசாலப்படுத்தியவர்கள் நமது ஆசிரியர்கள்தான். நகர்ப்புற மாணவர்களுக்கு எப்படியோ, கிராமப்புற மாணவர்களுக்கு இன்று வரை ஆசிரியர்களே அவர்களின் வழிகாட்டி!

முற்றிலும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவனான எனக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் அதிகம். ஒழுக்கமான பிள்ளைகளிடத்தும், நன்றாக படிக்கும் பிள்ளைகளிடத்தும் ஆசிரியரின் அன்பு கூடுதலாக இருக்கும். கொஞ்சம் சுமாராகப் படிக்கும் எனக்கு ஆசிரியர்களின் அன்பு நிறையவே கிடைத்தது.

நான் தொடக்கப் பள்ளியில் பயின்ற நாட்கள் இன்றும் என் நினைவை விட்டு அகலவில்லை. மரத்தடி பள்ளிக்கூடம் இன்று பார்ப்பதற்கு மிகவும் அரிது. நான் 2-ஆம், 3-ஆம் வகுப்புகளில் மரத்தடியில் உட்கார்ந்து பாடம் படித்திருக்கிறேன். ஆசியர்களுக்கு நாற்காலியைத் தவிர ஒன்றும் இருக்காது.

கர்மவீரர் காமராஜர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டம் அமுலிலிருந்த நேரம். ஒரு மூன்று சக்கர மோட்டார் வண்டி பெரிய சத்தத்தோடு கருப்பு நிற பிளாஸ்டிக் கேன்களில் கோதுமையால் செய்யப்பட்ட ஒரு உணவை எடுத்து வரும். அது எங்கிருந்து தயார் செய்யப்பட்டு வருகிறது என்பது தெரியாது. ஆனால் மிகவும் சுடச்சுட இருக்கும். சாப்பாட்டு மணி அடித்ததும் எல்லோரும் வரிசையில் உட்காருவோம். 5-ஆம் வகுப்பு படிக்கும் திடகாத்திரமான மாணவர்களே எல்லோருக்கும் பரிமாறுவார்கள்.

அப்படி ஒருமுறை வரிசையில் உட்கார முண்டியடித்தபோது அப்போதைய தலைமையாசிரியர் பீதாம்பரம் என்முதுகில் கொடுத்த அறை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை.

புளியமரத்தடியில் எங்களை உட்காரவைத்து எங்களுக்கு வகுப்பெடுத்த 'மனோன்மணி' ஆசிரியையை நன்றாக நினைவிருக்கிறது. 5-ஆம் வகுப்புக்கு மாறிய போது கணிதப் பாடம் மாதாந்திரத் தேர்வில் முழு வெள்ளைத்தாளில் எழுத வேண்டியவற்றை குட்டிக்குட்டியாய் நுணுக்கி, நுணுக்கி எழுதி அரைப் பக்கத்திலேயே முடித்திருந்தேன். இந்த காரணத்துக்காக 100க்கு 100 கிடைக்க வேண்டிய எனக்கு 98 மதிப்பெண்கள் போட்டு என்னைக் கண்டித்துத் தேர்வு எழுதும் முறையைக் கற்பித்தவர் இந்த மனோன்மணி ஆசிரியைதான். அப்புறம் திருமூர்த்தி சார், கோபால் சார் என ஒரு சிலரே ஞாபகத்தில் இருக்கின்றனர்.

ஆனால் ஐந்தாம் வகுப்பு வரை எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் யார் என்று எவ்வளவு முயற்சி செய்தும் நினைவுக்கு வரவில்லை.

ஏனென்றால் தமிழாசிரியர்களுக்கென்றே ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. 'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' என்பது இவர்களுக்கு முழுவதும் பொருந்தும். தாய்மொழியில் எழுதப் படிக்க கற்றுக்கொண்டபின்தான் மற்ற பாடங்களையே படிக்க ஆரம்பிக்கின்றோம். நாம் பிறந்தது முதல் உணர்ந்து, கேட்டு, பேசி வந்தாலும் ஒரு மொழியை முற்றிலுமாக கற்பது என்பது வாசித்தலையும், பிழையற எழுதுவதையும் உள்ளடக்கியது. இதற்கான முதல் வித்து ஊன்றப்படுவது ஆரம்பப்பள்ளித் தமிழாசிரியர்களால்தான். 

உயர்நிலைப்பள்ளிக்கு என் கிராமத்திலிருந்து 3 கி.மீ. நடந்துபோக வேண்டும். அங்கும் எனக்கு வழிகாட்டியாகத் திருமதி. துர்கா, தமிழாசிரியை மனோன்மணி, தமிழாசிரியர்கள் திரு. தங்கராசு, திரு. அமரன், திரு. நாராயணசாமி ஆகியோர்களும், 8-வது 9-வது படிக்கும்போது, திரு.கண்ணபிரான், திரு. ஜான் மனோகர், திரு. அப்பாசாமி, திரு. ராஜரத்தினம் ஆகியோர்களும் முக்கியமானவர்கள்.

அங்கும் கூட 'மனோன்மணி' என்ற பெயருடைய ஆசிரியையே தமிழாசிரியராகவும் வகுப்பாசிரியராகவும் இருந்தார். ஏழாம் வகுப்பு போனபோது திருமதி. மனோன்மணி ஆசிரியரின் கணவர் திரு.ஜி. நாராயணசாமி ஐயா அவர்கள் தமிழாசிரியராக இருந்தார். படிப்பில் சுட்டியாக இருந்த காரணத்தால் மனோன்மணி ஆசிரியையிடம் நல்ல பெயர் எடுத்தபடியால் சுலபமாக அவரது கணவரான நாராயணசாமி ஐயா அவர்களிடமும் நல்ல பெயர் வாங்க முடிந்தது.

ஆனால் எட்டாம் வகுப்பில் திரு. தங்கராசு ஐயா தமிழாசிரியராக வந்த பின்பு தமிழாசிரியர் என்றால் மென்மையானவர்கள் மட்டுமில்லை இவரைப் போலக் கண்டிப்பானவர்களும் உண்டு என்பதை அறிந்துகொண்டேன். நல்ல மாணவர்களிடத்தில் அன்பும், சரியில்லாத மாணவர்களிடத்தில் கண்டிப்பும் என்பதே அவரது பாணி.

பெரும்பாலும் அவரிடம் அடி வாங்காதவர்களே கிடையாது. அதிலும் காதில் கிள்ள ஆரம்பித்தால் அது ஜென்மத்துக்கும் மறக்காது. அத்தனை கண்டிப்பானவர்.

ஒன்பதாம் வகுப்புக்குப் போனபோது திரு. அமரன் ஐயா அவர்கள் தமிழாசிரியர். அவரது கையெழுத்து அச்சில் வார்த்தது போல இருக்கும். பள்ளியில் இலக்கியப் போட்டிகள் எது நடந்தாலும் அது கட்டுரைப் போட்டியோ, கையெழுத்து போட்டியோ அல்லது ஓவியப் போட்டியோ எது நடந்தாலும் என்னை கேட்காமலேயே என் பெயரைச் சேர்த்து விடுவார். இதிலிருந்து பின்வாங்கவே முடியாது. எப்படியோ மன்றாடி பேச்சுப் போட்டியிலிருந்து தப்பித்து விடுவேன்.

அப்போது அவர் தந்த ஊக்கம்தான் இந்த அளவுக்காவது என்னால் எழுத முடிவதற்கான காரணம். கட்டுரைப்போட்டி எந்த தலைப்பில் எப்போது கொடுத்தாலும் அதில் நான் கலந்து கொண்டால் முதல் பரிசு எனக்குத்தான். இந்த தன்னம்பிக்கைதான்  பிற்காலத்தில் ஒரு பிரபல வார இதழ் (இப்போது ‘அறிவாளிகள்’ மட்டுமே படிக்கும் இதழ்) ஒரு கட்டுரைப்போட்டியை அறிவித்தபோது நண்பர்களிடம் சவால் விட்டு அந்தப்போட்டியில் ஜெயித்தும் காட்டினேன். என் அழகான கையெழுத்துக்கும் காரணம் அவரே! பின்னாளில் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள், துணுக்குகள், விமர்சனங்கள் என என் பன்முகத்தன்மை வெளிப்பட அவரே காரணமானவர்.

எட்டாம் வகுப்பிலேயே மாற்றலாகிப்போன தங்கராசு ஐயா எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அமரன் ஐயாவும் வேலூரில் தான் இருக்கிறார் என்று நம்புகிறேன். இதில் திரு. நாராயணசாமி ஐயா சில வருடங்களுக்கு முன்பு மறைந்துவிட்டார்.

அவரது துணைவியார் திருமதி. மனோன்மணி ஆசிரியை அவர்களை எப்போதாவது சென்று பார்ப்பது உண்டு. என் இந்த தமிழறிவுக்குக் காரணமான தமிழாசிரியர்களை எப்போதுமே என்னால் மறக்க முடிந்ததில்லை.

மேல்நிலை வகுப்புக்குப் போனபோது ஆசிரியர்களும் நாங்களும் மிகவும் நெருக்கமானோம். தமிழாசிரியர் திரு. சைலவாசன், ஆங்கில ஆசிரியை திருமதி. கோமதி, தாவரவியல் துறை ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன், விலங்கியல் துறை ஆசிரியை திருமதி. சாந்தி, வேதியியல் துறை ஆசிரியை திருமதி. மங்களம், இயற்பியல் துறை ஆசிரியர்களான திரு. மாசிலாமணி, திரு. சுந்தர்ராஜன் என இவர்கள் எல்லோருமே நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் போதித்தவர்கள். தனிப்பட்ட முறையிலும் அன்பு செலுத்தியவர்கள். கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு கல்வி போதித்தவர்கள் என்பதால் இவர்கள் மட்டும் அடிக்கடி ஞாபகத்தில் வந்து போவார்கள்.

மேல்நிலைக்கல்வி பயிலும் போது எனக்குத் தமிழாசிரியர் திரு. சைலவாசன் ஐயா அவர்கள். எந்தப் பேச்சுப்போட்டியிலும் பங்கெடுக்காத நான் இவரின் வகுப்பெடுக்கும் அழகால், பேச்சாற்றலால் மிகவும் கவரப்பட்டேன். இவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும் கூட. பட்டிமன்றம் என்றால் என்ன என்பதையே இவரால்தான் நான் அறிந்துகொண்டேன். இவர் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் என்றால் அது எவ்வளவு தொலைவிலிருந்தாலும் நண்பர்களுடன் சைக்கிளில் கிளம்பிச் சென்றிருக்கிறேன்.

நாளடைவில் எங்களூரில் நடைபெற்ற ஊர் கோவில் திருவிழாவில் இவரின் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்ய அவர் வீடு தேடிச்சென்று ஒப்புதல் வாங்கி எல்லா ஏற்பாடுகளும் செய்தபின் அவரால் அதில் கலந்துகொள்ளாமல் போனது எங்கள் துரதிட்டமே! பின்னர் இவர் எங்களூரிலிருந்து மாற்றலாகி வேலூருக்கு அருகில் உள்ள பள்ளிகொண்டா’விற்கு தலைமையாசிரியராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றதாக அறிந்தேன்.

தொழிற்கல்வி படித்த போது இன்றைய வேலைக்கும், வாழ்க்கைக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த ஆசிரியர்கள், திரு. கதிர்வேலு, திரு. செல்வராஜ், திரு. பாலசுப்பிரமணியன் ஆகியோர்களும் மிக முக்கியமானவர்கள். காலமாற்றத்தில் நானே ஒரு தொழிற்பயிற்சி ஆசிரியராக ஆனபோது எனக்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக வழகாட்டி இன்றைய முன்னேற்றத்திற்கு காரணமான திரு. எஸ்.ராமச்சந்தின் சார் அவர்களும் முக்கயமானவர்களில் ஒருவர்.

நட்புடன்,

எம்.ஞானசேகரன்.