சனி, 30 செப்டம்பர், 2017

பரஸ்பர நிதித் (மியூட்சுவல் ஃபண்ட்) தி்ட்டங்கள் - கேள்வி-பதில்


வெகு நாட்களாக பதிவுலகத்தை வி்ட்டு விலகியிருந்தாயி்ற்று. முகநூலும் வாட்ஸ்சப்பும் அந்த இடங்களைப் பிடித்துக் கொண்டன. ஆர்வமி்ல்லாததும் காரணம்.

மீண்டும் மெதுவாய் பதிவிடலாம் என்று ஆசை துளிர்த்திருக்கிறது. அதன் தொடக்கம்தான் இந்தப் பதிவு.

அனைத்து மியூட்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வளர்ச்சியை அறிந்து கொள்ள பொதுவான இணையதளம் ஏதாவது இருக்கிறதா?

இந்திய மியூட்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் அமைப்பான ஆம்ஃபியின் இணையதளத்தில் (http://www.amfiindia.com) எல்லா விபரங்களையும் பார்க்க முடியும்.

மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டை எவ்வளவு காலத்துக்குள் பணமாக்க வேண்டும்?

தனியாக கால அளவு எதுவும் இல்லை. அது உங்களின் பணத்தேவையைப் பொறுத்தது. அதே நேரத்தில், ஒரே திட்டத்தில் மட்டும் முதலீட்டை முடக்கி வைக்காமல், வருமானத்தை மட்டும் எடுத்து வேறு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ரிஸ்க்கை குறைக்க முடியும்.

மியூட்சுவல் ஃபண்ட்டில் நீண்ட கால அடிப்படையில் எஸ்.ஐ.பி.முறையில் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாமா?

தாராளமாகச் செய்யலாம். இந்த ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் திட்டங்கள் மிகுந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டவை. திரட்டப்படும் நிதி மற்றொரு மியூட்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதுதான் இதன் போர்ட்ஃபோலியோ! இந்தத் திட்டங்களில் நிர்வாகச் செலவு மற்ற திட்டங்களை விட சற்று அதிகமாக இருக்கும். தற்போது இந்தியாவில் சமார் 35-க்கும் மேல் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் திட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் திட்டங்கள் மூன்றாண்டு காலத்தில் 30-40% ரிட்டர்ன் அளித்து வருகின்றன.


இ.எல்.எஸ்.எஸ்., குளோஸ்டு எண்டட் ஃபண்ட் வேறுபாடு என்ன?

இ.எல்.எஸ்.எஸ். என்பது பங்கு சார்ந்த ஓப்பன் எண்டட் திட்டம். இதில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்வதோடு, யூனிட்டுகளையும் விற்று பணமாக்க முடியும். இத்திட்டத்தில் வரிச்சலுகை பெற, மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டை எடுக்காமல் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இந்த மூன்று ஆண்டுகள் லாக்-இன் பீரியடை வைத்து இதை ஒரு குளோஸ்டு எண்டட் ஃபண்ட்டாக பலரும் குழப்பிக்கொள்கிறார்கள். குளோஸ்டு எண்டட் என்பது குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகே முதலீட்டை வெளியில் எடுக்க முடியும். இடையில் எடுக்க முடியாது. இ.எல்.எஸ்.எஸ், அனைத்துமே ஓப்பன் எண்டட் திட்டங்கள்தான். இதில் இடையே வெளியேற முடியும். ஆனால் வரிச்சலுகை பெற்றுவிட்டு இடையே இத் திட்டத்திலிருந்து வெளியேறினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை ரத்து செய்யப்பட்டு விடும். இது திட்டத்தைப் பொறுத்து 12 மாதங்கள், 15 மாதங்கள், 24 மாதங்கள் என்பது மாதிரி இருக்கும்.

மேலும் என்.எஃப்.ஓ.வின் போது வாங்கினால் திட்டக் காலம் முடிந்த பிறகுதான் முதலீட்டுத் தொகையை திரும்பப் பெற முடியும்.

குளோபல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்குமா?

குளோபல் ஃபண்டுகள் மூலம் திரட்டப்படும் நிதி, பெரும்பாலும் ஆசியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் விதமாகத்தான் அமைந்துள்ளன. உலக அளவில் தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை ஆசியா கொண்டுள்ளது.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், 70% ஆசியாவில்தான் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி, அதிக வருமானத்தை ஈட்டும் விதமாகவும் முதலீட்டின் மீதான ரிஸ்க்கை குறைக்கும் விதமாகவும்தான் இந்த குளோபல் ஃபண்டுகள் களமிறங்கி இருக்கின்றன.

மியூட்சுவல் ஃபண்டில் உண்மையான வருமானம் எவ்வளவு?

ஒரு திட்டம் 40% வருமானம் சம்பாதித்து இருக்கிறது என்றால், அது முதலீட்டாளர் கைக்கு வரும் முன்பு, அதனை விட அதிகமாக வருமானம் ஈட்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மியூட்சுவல் ஃபண்ட் நிறுவனம், அதன் நிர்வாகச் செலவு மற்றும் லாபத்தை எடுத்துக்கொண்டு அதனைக் கழித்துதான் என்.ஏ.வி. மதிப்பை வெளியிடுகிறது. இது திட்டத்தின் தன்மையைப் பொறுத்தது 0.25% தொடங்கி 3% வரை செல்கிறது. இதையும் சேர்த்தால் உண்மையான வருமானம் என்பது அதிகம்.


பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது, யூனிட்களை வாங்கினால் என்.ஏ.வி. அதிகமாக உள்ளது. இது ரிஸ்க்கானதுதானே?

நம்மவர்கள் பங்குச் சந்தை வேகமாக ஏறினாலும் பதற்றமடைகிறார்கள்; இறங்கினாலும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். யூனிட்களின் மதிப்பு அதிகமாக இருந்தால் அது விற்கும் காலம். குறைவாக இருந்தால் அது வாங்கும் காலம் என்று முன் கூட்டியே முடிவு செய்து கொண்டு மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டை மேற்கொண்டால் இந்தக் குழப்பங்கள் வர வாய்ப்பில்லை.

மியூட்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அவசரத் தேவைக்கு பணம் எடுப்பது எப்படி? யூனிட்களின் ஒரு பகுதியை விற்க முடியுமா?

உங்களுக்கு எவ்வளவு பணத்தேவையோ அல்லது எத்தனை யூனிட்களை விற்றால் உங்கள் தேவை பூர்த்தியடையுமோ அதற்கேற்ப யூனிட்களை விற்றுக் கொள்ளலாம்.

டேக்ஸ் சேவர் ஃபண்டில் போடப்படும் தொகையில் எந்த அளவுக்கு வரி விலக்கு உண்டு?

வருமான வரிப்பிரிவு 80C பிரிவின் கீழ் வரிச்சேமிப்பு மியூட்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு லட்சம் ரூபாய் வரை, ஒரு நிதியாண்டில் வரி விலக்குப் பெற முடியும். உங்களின் அடிப்படை வருமானத்தைப் பொறுத்தது அதிக பட்சம் 33 ஆயிரம் ரூபாய் வரியைச் சேமிக்க முடியும்.

மியூட்சுவல் ஃபண்டில் சிறப்பான வருமானம் பெற எவ்வளவு காலத்துக்கு காத்திருக்க வேண்டும்?

இதில் கால அளவு என்று எதுவும் இல்லை. நீங்கள் எந்த அளவுக்கு லாபம் எதிர்பார்த்து முதலீட்டை மேற்கொண்டீர்களோ, அதை எட்டியதும் யூனிட்களை விற்று விடலாம். இதில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று வெளியேறும் கட்டணம். அடுத்தது குறுகிய மூலதன ஆதாய வரி.