திங்கள், 21 அக்டோபர், 2013

மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது… எத்திராசன்


புரட்சித் தலைவர் அவர்கள் தி.மு..விலிருந்து வெளியேற்றப்பட்ட நேரமது. தமிழகமே கொதித்துக் கொண்டிருந்தது. கொந்தளித்துக் கொண்டிருந்தது. தமிழக அரசியலில் என்ன நேருமோ, எப்படியாகுமோ என்று இந்தியத் துணைக் கண்டமே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தது.

சாலையிலே ஓடுகிற வாகனங்கள் எல்லாம் அவருடைய திருப்பெயர் வாழ்க என்ற வாசகங்களைத் தாங்கி இருந்தால்தான் பொதுமக்களாலே வழிமறிப்பு இல்லாமல் ஒழுங்காகப் போய்ச் சேரும் என்ற நிலை.

அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் காரையே வழிமறித்துஎம்.ஜி.ஆர். வாழ்கஎன்ற வாசகங்களை எழுதிக் கொண்டதற்குப் பிறகுதான் போகவிட்டனர் பொதுமக்கள்.

அத்தோடு அவருடைய அரசியல் வாழ்வே அழிந்துவிடும் என்று ஆருடம் கணித்தனர் சிலர். சத்தியமே வெல்லும் என்றார் மூதறிஞர் இராஜாஜி அவர்கள்.

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலுமிருந்து பேருந்துகளிலும், சுமையுந்துகளிலுமாக சாரை சாரையாக வந்து சத்யா ஸ்டுடியோவில் பொதுமக்கள் அவரைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற வேட்கை எழுந்தது.
1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 12-ஆம் நாள் நானும் என்னுடைய நண்பர்களும் மிதிவண்டி எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றோம், அயனாவரத்திலிருந்து அடையாறுக்கு.

மாலை சுமார் ஆறு மணியளவில் நாங்கள் சத்யா ஸ்டுடியோவிற்குள் நுழைந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 10 மணிக்குத்தான் பார்க்க முடியும் என்றார்கள். இந்தச் சூழ்நிலையிலும் படத்தில் நடிக்கிறாரே எப்படி முடிகிறது? என்று வியந்துபோனேன் நான்!

பத்து மணி என்ன? பத்து நாளே ஆனாலும் பார்த்துவிட்டே போய்விடுவது என்று தீர்மானம் செய்துகொண்டு அங்கேயே இருந்தோம். எங்களுடைய பெரும் பேறு ஏழு மணிக்கெல்லாம் அவர் வந்துவிட்டார். எப்போதும் போல அவருடைய முகம் முழு நிலவைப் போல பொலிவுடன் திகழ்ந்தது. எந்தவிதமான கலக்கமும் அதில் காணப்படவில்லை.

மலை குலைந்தாலும் நிலை குலையாத மனவளம் கொண்டவர். எஃகு உள்ளம் படைத்தவர். எதையும் தாங்கும் இதயம் உடையவர் என்று நான் எண்ணிக் கொண்டேன். நாடே விம்மி வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் அநீதிக்கு ஆளானவர் அமைதியாக எப்போதும் போல் இருக்கிறாரே என்று நான் ஆச்சர்யப்பட்டேன்.

அவரைக் கண்டவுடனே கரை காணாத களிப்பும், அதே நேரத்தில், அவருக்கா இப்படி என்ற கலக்கமும் ஏன்பட்டது. அங்கு கூடியிருந்தவர்களின் வினாக்களுக்கு அவர் விடையளித்தார். நானும் சில கேள்விகள் கேட்டேன்.

இனப்பிரச்னையைக் கிளப்புகிறார்களே? என்றேன் நான். ‘அது அவர்களின் துருப்பிடித்த ஆயுதம்என்றார் அவர். கருணாநிதியின் மகன் ஸ்டாலின் இளைஞர் தி.மு.. நடத்துகிறாரே பொதுக்குழு, செயற்குழுவின் ஒப்புதல் பெற்றாரா? என்றேன். ‘இல்லைஎன்றார். அப்படியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே என்றேன். ‘அது அவருடைய சொந்த மகன்என்று சொன்னார்.

இன்று உங்களை அமைச்சர் சத்தியவாணி முத்து அவர்கள் சந்தித்தார்களே என்ன சொன்னீர்கள் என்று கேட்டதற்கு… ‘என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கையெழுத்துப் போட்டவர்களிலே நீங்களும் ஒருவர். ஆகையினால் உங்களுக்கு சமரசம் பேச தகுதியில்லை என்று கூறினேன்என்று பதிலளித்தார்.

எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி, ஒரு மாமனிதரைமகத்தான தலைவரைவள்ளலைவரலாற்று நாயகரைஉத்தமரைஊருக்கு உழைப்பவரைசத்தியசீலரைசத்தியத்தாய் புதல்வரைபார்த்தேன் பேசினேன். கேள்வி கேட்டேன். அவரும் பதில் சொன்னார். இதுவே நான் முதன் முதலாகச் சந்தித்த நிகழ்ச்சியாகும்.

.சா.எத்திராசன்.

12 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

சந்தோசமான நிகழ்வு... ம.சா.எத்திராசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

தங்களின் வருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்!

ஜோதிஜி சொன்னது… [Reply]

இது தொடர்பாக சமீபத்தில் படித்த ஒரு தகவல் இது.

ஜோதிஜி சொன்னது… [Reply]

" மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்
கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.
அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி .

ஜோதிஜி சொன்னது… [Reply]


கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.


ஆதாரம் -
கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

இராய செல்லப்பா சொன்னது… [Reply]

சுவையான நினைவுகளைப பகிர்ந்துகொண்டீர்கள். தொடர்ந்து இதேபோல் எழுதுங்கள். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

vijayan சொன்னது… [Reply]

கூத்தாடிகளுக்குள் கொள்ளை அடிப்பதை பங்கு போடுவதில் தகராறு,ஒரு கூத்தாடிக்கு நேரம் நல்லாஇருக்க அவன் ஜெயிக்கிறான்,பெரியார் சொன்னமாதிரி கூத்தாடியை ராஜாவாக்கினால் அவன் கூத்தியாவை மந்த்ரியாக்குவான் என்ற பழமொழி நம்மூரை பொறுத்தவரை உண்மையாகிவிட்டது.கருணாநிதி, mgr இவர்களை எல்லாம் மறந்துவிட்டு உருப்படும் வழியை பாருங்கள்.

பெயரில்லா சொன்னது… [Reply]

ஓரு உண்ணத மனிதரின் வெற்றி. மக்கள் திலகம் இதயக்கனி இன்றும் பாமர மக்களின் மனதில் நின்று நிலைப்பது அவரது தனிப்பட்ட வெற்றியே

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அன்பிற்குரிய ஜோதிஜி அவர்களுக்கு, தங்களுடைய விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி! இந்த தகவலை நான் சுமார் 10 வருடங்களுக்கு முன்பே படித்திருக்கிறேன். கண்ணதாசன் அவர்கள் எழுதிய அந்த புத்தகமும் என் வீட்டு அலமாரியில் தூங்கிக்கொண்டிருக்கிறது. அதில் அவர் சொன்ன அத்தனை கருத்துக்களும் உண்மை! அதை மீண்டும் ஞாபகப்படுத்தி பதிவேற்றியமைக்கு நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

கவிஞர் ராய செல்லப்பா! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

விஜயன்! நல்ல பழமொழி! ஒருவகையில் அப்படித்தான் ஆகிவிட்டது நம் மாநிலத்தில். ஆனாலும் தொழிலை வைத்து கேவலப்படுத்துவது சரியல்லவே. கூத்தாடி என்ற வார்த்தைப் பிரயோகம் சரியாகப்படவில்லை.

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

அனானி! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!