உழைக்கும் மகளிர் தினத்தையொட்டி 'வினவு' தளத்தில் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட கடிதம் (கட்டுரை) இது. கடிதம் எழுதிய வாசகி அவரது மன உணர்வுகளை, வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை, மனக்குமுறல்களை இதில் பதிவு செய்கிறார். இந்தக்கடிதம் அவரது கணவனை நோக்கி எழுதப்பட்டாலும் அப்படி அவரது கணவரிடம் பேசமுடியாது என்பதுதான் யதார்த்தம். ஆண் என்ற அதிகாரத்தில் வாழும் ஆண்டைகளும், பெண் என்ற அடிமை நிலையை ஏற்றுக்கொண்ட பெண்களும் அவசியம் படிக்கவேண்டிய அற்புதமான கடிதம்.
எனக்கு மிகவும் பிடித்த பாதித்த கடிதம் என்பதால் வாசகர்களிடம் மீண்டும் இதை பகிர்ந்து கொள்கிறேன். வினவு தளத்திற்கு நன்றி.
இந்தக்
கடிதத்தை நான் யாருக்காக எழுதுகிறேன். எனக்காகவா? இல்லை என் மனதில் உள்ளதை இந்தக் கடிதம் மூலம் உனக்கு
தெரியப்படுத்தவா? இதனால் எனக்கு
ஏதாவது தீர்வு கிடைக்கும் என்ற நப்பாசையா? இல்லை..எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை…என் மன உணர்வுகளை உன்னால் புரிந்து கொள்ள
முடியாமல் போன மன அழுத்தத்திலிருந்து விடுபடவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
என் அம்மாவை கருவியாகக் கொண்டு இந்த
உலகத்தில் எட்டிப் பார்த்த என்னை “அடடா! மூக்கும் முழியும் எப்படி இருக்கு பாரு? உன்னை எந்த மவராசன் வந்து கொத்திக்கொண்டு
போகப்போறானோ?” என்று யாரோ
சில பெண்கள் கேட்டு வைத்து எனக்கும், உனக்குமான (நிர்) பந்தத்தை அப்போதே ஏற்படுத்தி விட்டார்கள்
என்று அம்மா சொன்னார். என்னைப் போல் நீ பிறந்த போதும், “நீ சிங்கக்குட்டிடா! எத்தனை பேரை ‘அடக்கி’, ‘ஆள’ப்பிறந்திருக்கிறாயோ?” என்று உனது ஆணாதிக்கத்தை எத்தனை பேர் தலை
தூக்கி நிறுத்தி வைத்தார்களோ? தெரியவில்லை…ஆனால் நீ உன் கோபத்தை ‘அடக்கி’, ஒரு பெண்ணின் மனதை ‘ஆளப்’ பிறந்திருக்கிறாய்
என்று யாராவது உனக்கு தெளிவாக சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
எத்தனையோ கனவுகளுடன் சுற்றித்
திரிந்த என்னை, “அத்தனை
கனவுகளையும் உன் கணவனின் காலடியில் போட்டுவிடு. அவன் தான் உன் கனவுகளுக்கு உரம்
போடுபவன்” என்ற
மந்திரங்களையெல்லாம் ஓதி என்னை உன் கையில் பிடித்துக் கொடுத்தார்களே….அவர்களுக்குத் தெரியுமா? நான் சுமக்கப்போவது உன் கனவுகளை மட்டும்
தான் என்று.
பிறந்து வீட்டில் சொகுசாக வளர்ந்த
என்னை, ‘நீதான் எனக்கு’ என்று முடிவான பிறகு அத்தனை ஆயக்கலைகளையும்
கற்றுக்கொள்ள தயார்படுத்தினார்களே..இல்லாவிட்டால் நான் நல்ல மருமகளாக இருக்க
முடியாது என்று சொல்லி அனுப்பினார்களே…பிறந்த வீட்டுப்பிரிவையும், உன் அருகாமையில் கிடைக்கும் வெட்கத்தையும், புது வீட்டு சொந்தங்களை பற்றித் தெரியாத
தயக்கத்தையும் சுமந்து கொண்டு வந்த எனக்கு, உன் வார்த்தை அன்பு, அம்பாக மாறி என் மனதை குத்திக்கிழிக்கப் போகிறது என்று
அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
திருமணத்துக்கு முன்பு நீ
பேசும்போதெல்லாம், “இந்த திருமணம்
நின்று விட்டால் உன்னை எங்காவது கடத்திக்கொண்டு கூட போய்விடுவேன்..நீ இல்லாத
வாழ்க்கை எனக்கொரு வாழ்க்கையா?”
என்று
அன்பை பொழிந்தாயே…அப்போது என்
முட்டாள் மனதுக்குத் தெரியவில்லை, திருமணமான ஒரே
வாரத்தில் நீ உன் சுயரூபத்தை காட்டப்போகிறாய் என்று.
திருமணமானவுடன் மேலே படிக்கலாம் என்ற
கனவுடன் இருந்த என்னை, “முதலில்
புருஷனுக்கு தேவையானதை செய், அவனுக்கு எது
பிடிக்கும், பிடிக்காது
என்று தெரிந்து வைத்துக்கொள். அப்புறம் உன் சமத்து..உன் அப்பாவை பணம் அனுப்ப
சொல்லி மேலே படித்துக்கொள்” என்று
மாமியாருக்கே உள்ள அக்கறையைக் காட்டிய போது அசந்துதான் போனேன். அதெப்படி இந்த
எலும்பில்லாத நாக்குக்கு சக்கரையைத் தடவவும், விஷத்தைக் கக்கவும் முடிகிறது? ஆச்சரியம்தான்!
சமையல் வேலையை நான் தெரிந்து
வைத்திருக்கிறேனா என்பதை, வந்த முதல்
நாளே டெஸ்ட் செய்து பார்த்த போது பயந்து நடுங்கித்தான் போனேன், இன்னும் எதற்கெல்லாம் டெஸ்ட் வைப்பார்களோ
என்று. ‘அப்பாடா! ஒரு
வழியாக சமாளித்தோமே’ என்று நானாக
ஆசுவாசப்படுத்திக் கொண்ட வேளையில், மாமியார் இன்னொரு மருமகளான உன் அண்ணியைப் பார்த்து, “நீ இப்படி
சமைப்பாயா?” என்று கேட்டு
வைத்து தொலைக்க, அவள் அதற்கு
மேல் என்னுடன் ஒட்டாமல் என்னை விட்டு தள்ளியே இருந்துவிட்டாள். அதற்கும் மேல்
அவளுக்கு என் மேல் என்ன வன்மமோ? புகுந்த
வீட்டுக்குள் இப்படி ஒரு அரசியல் இருக்கும் என்பதை புதிதாக வந்த நான் எப்படி
அறிவேன்?
இரண்டு மருமகள்கள் சேர்ந்தால் நம்மை ஆட்டிப்படைத்து விடுவார்கள் என்ற பயமோ என்னமோ, இருவரையும் ஆரம்பத்திலேயே பிரித்து வைக்கும் சூட்சுமம் உன் அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. உன் அண்ணியை என் கூடப்பிறந்த அக்காவைப் போல் நினைத்தேனே..ஆனால் அவள், என் கணவனான உனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் எனக்கும் கொடுக்க மறந்தாள்?
உறவுகளுக்குள்ளேயே கணவனையும், மனைவியையும் வேறு வேறு இடத்தில் வைக்க, புகுந்த வீட்டு உறவுகளால் மட்டும் தான்
முடிகிறது. நானும் உனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஏன் உன் உறவினர்களுக்கு புரிய
வைக்க நீ முயற்சிக்கவில்லை? அவர்கள்
அடித்துக்கொண்டால் என்ன? நாம்
தப்பித்தோமே என்ற எல்லா
ஆண்களின் மனோபாவம் தான் உனக்கும். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்’ என்று சொல்வதைப் போல இரண்டு பெண்கள்
அடித்துக் கொண்டால் ஆண்களுக்குத்தான் கொண்டாட்டம் என்பது ஏன் இந்தப் பெண்களுக்கு
புரிவதில்லை? இப்படி
புரியாமல் இருப்பதுதானே ஆண்களின் பலம்.
திருமணமான ஒரு வாரத்திலேயே சீர், செனத்திகளை வாங்குவதற்காக என் அப்பா, அம்மாவுடன் அடித்துக்கொட்டுகிற மழையில்
ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கினோமே..அப்போது
டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் எல்லாம் இந்த இந்த அளவுகளில்
வேண்டும் என்று நீ என் காதில் கிசுகிசுத்துக்கொண்டு வந்த போதெல்லாம் அது
விளையாட்டு என்றுதானே நினைத்தேன். சமையல் பாத்திரங்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவிடி ப்ளேயர், கட்டில், பீரோ என்று அத்தனை பொருட்களும் அப்பா போட்டு வைத்திருந்த
பட்ஜெட்டுக்குள் அடங்கிப்போனதில் உனக்கு என்ன வருத்தம் இருந்ததோ? அதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
கடைசியாக ஸ்பீக்க்கர் மட்டும் வாங்க முடியாமல் போனதால் உனக்கு என் வீட்டார் மேல்
எந்தளவுக்கு கோபம் இருந்ததோ?
உன்னிடம் அன்பை மட்டுமே
எதிர்பார்த்து வந்த எனக்கு, சீர்
பொருட்களில் ஏதோ ஒன்று குறைந்ததை பெரிய கெளரவப் பிரச்சினையாக நீ ஆக்கிய போதும், அதையே திரும்ப திரும்ப சொல்லிக்காட்டிய
போதும் அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு
வந்தது. தொண்டையிலும் ஏதோ கசந்தது.
முழுங்கவும் முடியாமல், துப்பவும்
முடியாமல் என்னவோ? என்
வாழ்க்கையை வியாபாரமாக்கிய அப்பா, அம்மாவின்
மேல் கோபம் வந்தது.
அத்தனை கசப்புகளையும் மென்று
முழுங்கிவிட்டு, வாழ்க்கை
இப்படியும் இருக்கும் என்ற யதார்த்தை உணர்ந்து, ஆசையாக உன்னிடம் “என்னங்க..நான் ஒண்ணு கேட்கட்டுமா?” என்று ஆரம்பித்தால், “என்ன வேணும்னாலும் கேளு..ஆனா நகை வேணும்னு
மட்டும் கேட்டிராத..அதுக்கெல்லாம் உங்க அப்பா இருக்காரு..உங்க அப்பா அளவுக்கு நான்
பெரிய ஆள் கிடையாதும்மா” சட்டென்று
முகத்திலடித்தாற்போல் பேசிய பேச்சுக்கள் ரொம்ப நேரம் காதை விட்டு நீங்க
மறுத்தது. அப்போதும் அவன் அன்பாக இல்லாவிட்டால் என்ன? நான் அதைவிட அன்பை அள்ளித்தருவேன் என்று நானே
எனக்கு செய்து கொண்ட சமாதானம் தான் இன்னும் என் வாழ்க்கையைத் தாங்கிப் பிடித்துக்
கொண்டிருக்கிறதோ…
பாஷை தெரியாத ஊரில் புது மனைவியாக
வந்த என்னை தனியாக வீட்டிலேயே விட்டுவிட்டு ஏற்கனவே நீ இருந்த உன் அண்ணன் வீடே கதி
என்று போய்விட்டாய். நீ அங்குதான் இருக்கிறாய் என்பது கூட தெரியாமல் உனக்காக ஆசை
ஆசையாக சமைப்பதும், உனக்காக நான்
காத்துக்கொண்டே இருந்ததும், உனக்காகவே பூ
வைத்து, பொட்டு
வைத்து சே! வீட்டைச் சுற்றிப்பார்க்கும் போது வீடும் மட்டுமல்ல…என் மனதும் வெறுமையாக இருந்தது. எனக்குப்
பிடிக்கவே பிடிக்காத தனிமை! உனக்கு அதுதான் சந்தோஷம் என்று தெரிந்திருந்தால்
நானும் உன்னுடய சந்தோஷங்களில் ஒரு தோழியாக பங்கெடுத்திருப்பேன். ஆனால் அதற்கும்
நீ இடம் கொடுக்காமல் போனது எப்படி? நாம் இருவர் மட்டுமே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் எல்லாம்
உனக்கு அண்ணியாக வாய்த்தவளுக்கு எப்படி தெரிந்தது?
ஏன் இதையெல்லாம் போய் அடுத்தவரிடம்
சொல்கிறீர்கள் என்று கேட்டால் “நீ இப்போது
வந்தவள், அவர்கள் என்
கூடவே இருப்பவர்கள்” என்று நீ
சொன்னபோது, பழைய உறவுகளை
மறக்காமல் இருக்கும் ஆணாக பெருமைப்படுவேனா இல்லை என் மனதைப் புரிந்துகொள்ளாத
கணவன் என்று வருத்தப்படுவேனா….
அண்ணியாக
வாக்கப்பட்டவளோ, ஏதோ ஒரு நாள்
என் முன்னால் அவளை மட்டம் தட்டிப் பேசிய மாமியாரை கேள்வி கேட்க தைரியமில்லாமல், என் மேல் கோபம்கொண்டு ஏன் தள்ளி வைத்தாள்? அதையும் நான் உனக்கு புரிய வைக்க முயற்சி
செய்தால் அதைக் காதில் வாங்காத ஒரு அலட்சியம் எனக்கு கண்ணீராக முட்டிக்கொண்டு
வந்ததை நீ அறிவாயா?
என்றோ வீசிய என் முற்போக்கு சிந்தனைகள், வார்த்தைகள் எல்லாம் இன்று இந்த தனிமையில் சுக்கு நூறாய் உடைந்து போனது யாருக்குத் தெரியப்போகிறது? தன் மனைவியின் கண்களில் காதலைத் தேடும் கணவன், அதே கண்களில் அவள் மனதையும் தேடாமல் இருப்பது எப்படி என்றுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை.
திருமணமான பிறகும் குடியும், கும்மாளமுமாக பொழுதைக் கழிப்பதில் உனக்கு
என்ன சந்தோஷமோ? உன்னை
சுற்றியிருக்கும் சுவாரஸ்யங்களைத் தொலைத்து விட்டு எதில் தேடுகிறாய் உன்
சந்தோஷத்தை? குடியும், புகையும் மட்டுமே வாழ்க்கையின் முதல்
சந்தோஷம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் உன்னைப்பற்றி ஏன் உன் பெற்றோர்கள்
முழுதாக அறியவில்லை? திருமணத்திற்குப்
பிறகு மகன் செய்யும் சின்ன சின்னத் தவறுகளை பெற்றோர்கள் கண்டும், காணாமல் இருக்கிறார்களா அல்லது இருப்பது
போல் நடிக்கிறார்களா? இன்னும்
எனக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.
உன் உடல்நிலையை மனதில் கொண்டு, உன் பெற்றோர் சொன்னாலாவது நீ திருந்தலாம்
என்ற நம்பிக்கையில் அவர்களிடம் சொன்னால், அதற்கும் அவர்கள், “ஆண் பிள்ளை அப்படித்தான் இருப்பான். உனக்கு என் மகனை
மயக்கத் தெரியவில்லை” என்று
சம்மட்டியால் அடித்தது போல் சொன்னதில் நன்றாகவே அடையாளம் தெரிந்து கொண்டேன்
சுயநலவாதிகளை.
சமயத்திற்கு தகுந்தாற்போல் பெண்களை
சாடுவதில் இந்த சமூகத்திற்குத்தான் எத்தனை ஆசை!வேலைக்குப் போகும் பெண்ணா? “உனக்கு சம்பாதிக்கும் திமிர்” என்பதும், அதிகம் பேசினால் “வாயாடி”,
அமைதியாக
இருந்தால் “ஊமைக்கொட்டான்
மாதிரி இருந்துக்கிட்டு…” என்று பட்டம்
கொடுப்பதும், கணவனை
சொல்பேச்சுக் கேட்க வைத்தால்,
“மயக்கி
விட்டாள்” என்று
சொல்வதும், அதே கணவன்
மனைவி சொல்வதை கேட்காமல் இருந்தால், “மயக்கத் தெரியவில்லை” என்பதும் அப்பப்பா! போதுமடா சாமி! ஒரு பெண் படித்து பட்டம்
பெறுகிறாளோ, இல்லையோ இந்த
சமூகம் அவள் கேட்காமலேயே அத்தனை பட்டத்தையும் கொடுத்து விடுகிறது அதுவும்
பெண்களாலேயே. வெளியுலகில் சாதிப்பதைத்தான் இத்தனை நாள் சாதனை என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். இல்லை…குடும்ப
உறவுகளுடன் போராடுவதும் பெண்களுக்கு மிகப்பெரிய சாதனைதான்.
திருமணத்திற்கு பிறகு வரும் ஒவ்வொரு
பண்டிகையும் தலை தீபாவளி, தலைப்பொங்கல்
என்ற பெயரில் வசூல் வேட்டையை நடத்தும் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
தலைப்பொங்கல் வந்தபோது, “உன் அப்பாவை
ஒரு ஐயாயிரம் பணம் அனுப்பச்சொல்” என்று வாய்
கூசாமல் உன் அம்மா கேட்டபோது, அவர்களுக்கு
இல்லவே இல்லாத வெட்கத்தால் வெட்கித் தலைகுனிந்தேன். இதற்கு மேலும் நான் வாயைத்
திறக்காமல் இருக்க வேண்டும் என்று எப்படி நீ எதிர்பார்த்தாய்? எந்த மருமகளும் இவர்களை எதிர்த்து பேச
வேண்டும் என்று நினைத்துக்கொண்டா வருகிறாள்? எவ்வளவு கொடுத்தாலும் தீரவே தீராத இந்த வரதட்சணை ஆசை
எந்தப் பெண்ணுக்கும் அருவெறுப்பைத் தராதா?
எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்
கொள்ள மறுக்காத உன் கைகள் ஏன் என் பிறந்த வீட்டுக்கு செய்ய வேண்டுமென்றால்
மட்டும் பின்வாங்குகிறது? உன் அப்பா, அம்மாவையும் மிஞ்சிய ஆண்பிள்ளையாக உன்னைப்
பார்க்கும் போது எந்த பெண்தான் ஆவேசப்படாமல் இருப்பாள். இன்னும் எனக்குத் தேவையான
விஷயங்களை என் அப்பாவிடம் உரிமையாக கேட்பதுபோல் உன்னிடம் கேட்க முடிவதில்லை. இந்த
விரிசல் ஏன் என்பதை யோசிக்கக்கூட உனக்கு அவகாசம் இல்லை? நம்மைத் தொல்லைப்படுத்தாமல் இருக்கும்வரை
நமக்கு லாபம் என்ற சுயநலமான மனம்.
குழந்தை பிறந்தால் பிரச்சினை
தீர்ந்து விடும் என்ற நினைப்பில் உன் கருவை ஆசையாக நான் சுமந்தபோது எனக்குள்
ஏற்பட்ட மகிழ்ச்சியான மாற்றத்தை உன்னால் மட்டும் ஏன் உணர முடியாமல் போனது? கருவை சுமந்த நேரத்தில் கூட ஆறுதலான ஒரு
பேச்சோ, அரவணைப்போ
இல்லாத ஜடமாய் எப்படி நீ மாறிப்போனாய்? குழந்தை பெற்றுத் திரும்பிய உடனேயே, என் அன்பை கொஞ்சம் கொஞ்சமாக உணர
வைத்துக்கொண்டிருந்த தருணத்தில் உன் அஜாக்கிரதையால் வேலையை இழந்து வந்தாய்.
அப்போதும் உன் மேல் முன்னைவிட அன்பாகத்தானே இருந்தேன்…
பிள்ளை வந்த நேரம் அப்பன் வேலை
போச்சு என்று உன் வீட்டார் என் மனதைக் காயப்படுத்திய போதும் உனக்கு ஆதரவாக
இருந்த அந்த தருணத்தை உன்னால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? உன் கல் நெஞ்சைக் கரைக்கும் கருவியாகவே
மாறிப்போன நம் குழந்தையுடன் வேலையில்லாத உன்னையும் சேர்த்து தேற்றினேனே..அதில்
உனக்கு தெரியவில்லையா என்னுடைய எதிர்பார்ப்பில்லாத அன்பு.
பிரச்சினை கொடுத்த இந்த இடத்தில்
நாம் இருக்க வேண்டாம் என்று வேலையுடன் வேறு இடத்தில் வந்தவுடனாவது நீ மாறிவிடுவாய்
என்று நினைத்தேனே…எதிலும்
ஆர்வம் இல்லாமல் இருக்கும் உனக்கு தண்ணியடிப்பதிலும், தம்மடிப்பதிலும் மட்டும் எப்படி ஒரு
ஆர்வத்தைக் கொண்டுவர முடிந்தது? வாழ்க்கையே
அதைச் சுற்றித்தான் இருக்கிறது என்று நீயாக எழுப்பியிருக்கும் கோட்டையை உடைக்க
முடியாமல், அதிலேயே மாட்டிக்கொண்ட
என் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தாயா?
உன்னைத் திருத்த நான் எடுத்த
முயற்சிகளை எல்லாம் தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதிலிருந்து தப்பிக்கவும்
நீயாகவே ஒரு வழியைத் தேடிக்கண்டுபிடித்தாயே….கையில் கைக்குழந்தையுடன் பின்னிரவு வரை வீட்டில் தனியாக
அழுது கொண்டிருந்ததை பொறுக்காத என் அப்பா, “உங்கள் மகனிடம் எடுத்து சொல்லுங்கள்” என்று வேதனையுடன் சொன்னதை நீயும், உன் பெற்றோர்களும் இவர்கள் யார் நம்மை
கேள்வி கேட்க என்ற ஈகோவுடன் என்னை வார்த்தைகளால் குத்திக் கிழித்தபோது இந்த
வாழ்க்கையே வேண்டாம் என்று தான் நினைத்தேன்.
உன் தவறுகளிலிருந்து நீ தப்பித்துக்
கொள்வதற்காகவும், உன்னை யாரும்
கேள்வி கேட்கக்கூடாது என்ற ஆணாதிக்கத்தாலும், “உங்களைப் பற்றி தவறாக பேசுகிறாள். அதனால் தான் நான் இப்படி
லேட்டாக வருகிறேன்” என்று உன்
பெற்றோர்களிடம் என்னைப் பற்றி தவறாகக் கூறி என் தலையில் பெரிய குண்டைத் தூக்கிப்
போட்டாயே….இந்த
சாதுர்யம் யாருக்கு வரும்? இதற்கு மேலும்
உன்னைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வருமா? தப்பித்துக்கொள்ள இப்படி ஒரு வழி இருக்கும் என்று ஏன் என்
முட்டாள் மனதுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும்
தொல்லையாக நினைத்து பிறந்த வீட்டிலேயே விட்டுவிட்டு வருவதும், அதிலிருந்து மீண்டு நானாகவே வெளியில்
வருவதும் யாருக்காக என்று பல நேரம் புரியாமல் குழம்பித் தவிக்கிறேன்.
என் வாழ்க்கை எதை நோக்கிப்
பயணிக்கிறது என்று நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு பைத்தியக்கார
ஆஸ்பத்திரியே நினைவுக்கு வருகிறது. அந்த நினைப்பில் குழந்தை முகம் தெரியும்போது
நானாகவே விழித்துக் கொள்கிறேன். அவள் முகத்தில் இருக்கும் மழலைச் சிரிப்பை
கவனிக்கும்போது வாழ்க்கையை கொஞ்சம் பிடித்துக்கொள்கிறேன்.
டி.வியில் வரும் பெண்கள், வீதியில் வரும் பெண்கள் அனைவரையும்
பாகுபாடில்லாமல் அலட்சியப் பார்வை வீசும் உனக்கு என் வீட்டுப்பிரச்சினையை எள்ளி
நகையாடவும், அந்தப்
பிரச்சினையில் குளிர்காய்வதற்கும் சொல்லியா தர வேண்டும்? பெரியவர்களின் குழப்பங்களுக்கெல்லாம் பலிகடா
ஆக்கப்படுவது வீட்டிற்கு வரும் மருமகள் தானா? இன்னும் எத்தனை வருடங்கள் இப்படியே ஓடும் என்று நினைக்கும்
போது மன அழுத்தம் அதிகமாகிறது. இந்தப் பெண்களுக்குத்தான் இன்னும் எத்தனை எத்தனைப்
பிரச்சினைகள்?
வீட்டிற்குள் என்னை மட்டம் தட்டிக்
கொண்டே இருப்பதும், வெளியில்
கொஞ்சம் பெருமையாக பேசுவதும் என்ற உன் இரண்டுபட்ட மனநிலை என்னைப் பல நேரம்
ஆச்சரியப்பட வைக்கிறது. காலையில் இருந்து இரவு வரை எதற்காகவாவது கத்திக் கொண்டே
இருப்பதும், இரவானால்
இரண்டு அன்பான வார்த்தைகளை உதிப்பதும் ஏன் எனக்கு இத்தனை நாள் உறைக்கவில்லை? என் பிறந்த வீட்டுக்கு ஏதாவது பிரச்சினை
என்றால் ஆறுதல் சொல்வது போல் அதை மேலும் கிளறி விடுவது என்ன ஒரு தந்திரம்? அதிலும் நிறைய குளிர்காய்ந்து விட்டு ஒன்றும்
தெரியாத குழந்தை இமேஜை கொண்டு வந்துவிடுகிறாயே..அந்த சைக்கோத்தனம் என்னைத் தவிர
வேறு யாருக்குத் தெரியும்?
எனக்கு வரதட்சணையாகத் தந்த நகைகளை
என் வீட்டு விசேஷங்களுக்கு கூட போடவிடாமல் வம்பிழுத்த போது, என் பெற்றோர்கள் உன் அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டு அத்தனையும்
பிடுங்கிக்கொண்டு வந்தார்கள். இந்தப் பெரியவர்களின் பிரச்சினையில் நீ ஏன் என்னை
மட்டும் இன்னும் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறாய்? நான் உன்னிடம் எதிர்பார்த்தது அன்பை மட்டும்
தான், ஆனால் அந்த
அன்பையும் பெறுவதற்கு, அத்தனை இடிகளை
வாங்கியும், இன்னும்
உன்னிடமிருந்து முழுதாக கிடைக்காமல் தவிக்கிறேனே….அத்தனையும் பொறுத்துக் கொண்டாலும் குழந்தைக்கு உடல்நிலை
சரியில்லாத நேரத்தில் கூட உன் அன்பைக் காட்டத் தெரியாமல் இருப்பது எனக்கு
ஆத்திரத்தைக் கொடுக்கிறது. அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் என்
உடல் பலத்தையும் இழக்கிறேன்.
நீ உன் பிறந்த வீட்டுக்குப் போ
என்று விளையாட்டாக சொன்னாலும் மனம் பதைபதைக்கிறது. பிரச்சினையால் என்னையே தாங்கிக்
கொண்டே இருப்பதால் என் கூடப் பிறந்தவர்களுக்கும் பெற்றோர்கள் மீது கோபம்.
திருமணத்திற்கு முன்னால் பிறந்த வீடாவது இருந்தது. ஆனால் புகுந்த வீடு கைவிட்டால்
பிறந்த வீடும் நிரந்தரமில்லை. இது பெண்களுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடோ!
ரோட்டில் போகும்போது ஆயிரம்
பெண்களை நீ ரசித்தாலும் நான் இந்த நடிகனைப் பிடிக்கும் என்று சொன்னால் போதும்.
உன் தலையில் என்னென்ன கற்பனைகள் ஓடுமோ? பெண் மனசு ஆழம் என்று யார் எழுதி வைத்தார்கள், கணவன் எதை மனதில் வைத்து எதை
வெளிப்படுத்துகிறான் என்று புரியாமல் இன்னும் எத்தனைப் பெண்கள் என்னைப்போல்
இருக்கிறார்களோ? உன் தாழ்வு
மனப்பான்மையால் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை இழந்து விட்டு, அதை வெளிக்காட்டினால் இந்த உலகம் ஏசும்
என்பதால் அந்தப் பழியையும் என்னையே தாங்கிக்கொள்ள சொல்வது நியாயமா?
எனக்கு பொறாமை வரவேண்டும்
என்பதற்காக நீ காட்டும் சீண்டல்களால் எனக்கு பயமில்லை. உன் மனதையும் அப்படி
ஒருத்தி கரைத்து விட்டால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறெதுவுமில்லை. அப்படியாவது
ஒரு பெண்ணின் மனதை நீ அறிந்து வந்தால் சரிதான்!
உனக்குத் தெரியுமா? உன்னை என் கணவனாக பார்க்காமல் என்னைப்போல்
நீயும் ஒரு உயிர் என்று நினைப்பதால்தான் இன்னும் உனக்கு சேவை செய்யமுடிகிறது.
உன்னைப் பெற்றவர்களை மாமனார், மாமியார்
என்று நினைக்காமல் வயதான அப்பா, அம்மா என்று
நினைப்பதால் தான் உறவுகளைத் தாண்டிய மனிதாபிமானத்துடன் அவர்களை தாங்கிக்கொள்ள
முடிகிறது. இதையெல்லாம் என்று நீ உணரப்போகிறாயோ?
உன் வாழ்க்கையில் பிடிப்பு வர ஒரு
வேலையைத் தேடிக்கொள் என்று அனைவரும் சொல்லும்போது, “எதை வேண்டுமானாலும் செய்” என்று அப்போதைய நல்லபிள்ளையாக சொல்லிவிட்டு, அதற்கு மேல் எதையும் யோசிக்க விடாமல்
இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை விஷயங்களையும் விஷ ஊசி போல்
ஏற்றிவிடுவது எனக்கு இப்போது புரியாமல் இல்லை. உன்னை விட்டு மொத்தமாக வெளியில்
வந்தால் தான் எனக்கான பிடிப்பை நான் தேடிக்கொள்ள முடியும் என்பதை நான் எப்படி
மற்றவர்களுக்கு சொல்வேன்? இன்னும் நான்
வேலைக்குப் போனால் உன் ஈகோவால் இன்னும் என்னென்ன பிரச்சினைகளை எனக்குள்
திணிப்பாய் என்று நினைக்கும்போது இந்த நிம்மதியே போதும் என்று என் மனம் ஆறுதல்
அடைகிறது.
நான் இல்லாத வாழ்க்கையிலும் உன்னை
சீண்ட யாருமிருக்க மாட்டார்கள் என்று நினைக்கும் போது திரும்பவும் உன்னையே
நினைத்துக் கவலைப்படுகிறேன். “என்னையே எனக்குப்
பிடிக்கவில்லை” என்று
சிகரெட்டை ஊதித்தள்ளும் போது உன்னைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். ஆனால் அதை நான்
எப்போது சொன்னேன் என்பது போல உன் ஈகோவால் என்னைத் தட்டிக்கழிக்கும்போது சே!
என்ன மனிதன் இவன்? என்று
எரிச்சலடைகிறேன்.
நான் உனக்கு அன்பான மனைவிதான்
உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை;
உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை;
நான் உனக்கு அன்பான மனைவிதான்
உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை;
உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை;
நான் உனக்கு அன்பான மனைவிதான்
உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை
உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை
நான் உனக்கு அன்பான மனைவிதான்
நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை
நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை
நான் உனக்கு அன்பான மனைவிதான்
என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை
என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை
நான் உனக்கு அன்பான மனைவிதான்
உனக்காகவே வாழும் வரை!
உனக்காகவே வாழும் வரை!
மேலே படிக்கப்போகிறேன்..வாழ்க்கையை
ரசித்து வாழப்போகிறேன்..என்ற கனவுகளுடன் வந்த நான் எனக்கான வாழ்க்கையை சரி
செய்துகொள்ளவே நேரத்தை வீணடித்திருக்கிறேன். அடுத்த குழந்தையும் சீக்கிரம்
பெற்றுக்கொள்ளுங்கள் என்று யாராவது சொல்லும்போதெல்லாம் வெறும் குழந்தையை
சுமக்கும் பொருளாக மட்டுமே நான் இருப்பது அருவெறுப்பைத் தருகிறது. இந்த நிலையில்
இன்னும் எத்தனைப் பெண்கள் இருக்கிறார்களோ?
இந்த உருப்படாத வாழ்க்கை எதற்கு
உபயோகப்பட்டதோ இல்லையோ பலவித குணங்களுடன் உள்ள மனிதர்களைப் படிக்கவும், அதுவே என் எழுத்துக்களாக உருமாறவும்
உதவியிருக்கிறது. ஓடும் வரை ஓடட்டும் இந்த பற்றற்ற வாழ்க்கை..மனதில் உள்ள
போராட்டத்தை அன்பான மனிதர்களின் நகைச்சுவையான பேச்சுக்களால் மறக்கிறேன்.
குழந்தையின் எதிர்காலத்தில் என் அழுகையை அடக்கிக்கொள்கிறேன். அவளின் வளர்ச்சியில்
என் சந்தோஷத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன்.
இப்படிக்கு
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
வினவு
பின்குறிப்பு:
துயரமான
யதார்த்தம், மீள முடியாத
குடும்பம் என்ற இந்த பிரச்சினையிலிருந்து இவருக்கு மீள என்ன வழி? படிப்போ, இல்லை வேலைக்கு போவதோ முதலான கிரமமான வழிமுறைகள் மட்டுமே
இதை தீர்த்துவிடுமா, தெரியவில்லை.
குடும்பம் என்ற கூட்டிற்குள் நின்று மட்டும் ஒரு பெண் சமூக ரீதியாக
விதிக்கப்பட்டிருக்கும் தளையை அறுத்துவிடவோ, அதை புரிந்து கொள்வதோ சிரமம் என்று தோன்றுகிறது. சமூக
ரீதியான அனுபவம், சமூக
மாற்றத்திற்கான முனைப்பு என்று பெரிய கோடு போட்டுக் கொண்டால்தான் குடும்பம் போடும்
சின்னதான ஆனால் துயரமான கோட்டை அழிக்க முடியும். சமூக மாற்றத்திற்கான வேலைகளில்
புடம்போடப்படும் பெண்கள்தான் தங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையும் அது
விதித்திருக்கும் கீழான இழிவுகளையும் புரிந்து கொள்வதோடு அவற்றை இரக்கமின்றி
எதிர்த்து வெல்ல முடியும் என்பது எங்கள் அனுபவம். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்
6 கருத்துகள்:
நன்றி என்றும் உங்கள் அன்பை தேடி அன்புதில்
மிக அருமையான கடிதம். பகிர்விற்கு நன்றி கவிப்ரியன்!
வருகைக்கு நன்றி அன்புதில்!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஞானசேகரன்!
முனைவர் ஜீவாராணி
நான் வாழ்ந்த வாழ்க்கை, வாழும் வாழ்க்கை, , இனி மாறுமா வாழ்க்கை என்ற மயிரிழையில் ஊசலாடுகிறது என் வாழ்க்கை.......
@பெயரில்லா
விரக்தி நம்மை அழித்துவிடும். வாழ்க்கை நிச்சயம் மாறும். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. எந்த ஆலோசனைக்கும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துரையிடுக
வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!