ஞாயிறு, 27 அக்டோபர், 2013
திங்கள், 21 அக்டோபர், 2013
மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது… எத்திராசன்
புரட்சித் தலைவர் அவர்கள் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட நேரமது. தமிழகமே கொதித்துக் கொண்டிருந்தது. கொந்தளித்துக் கொண்டிருந்தது. தமிழக அரசியலில் என்ன நேருமோ, எப்படியாகுமோ என்று இந்தியத் துணைக் கண்டமே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தது.
சாலையிலே ஓடுகிற வாகனங்கள் எல்லாம் அவருடைய திருப்பெயர் வாழ்க என்ற வாசகங்களைத் தாங்கி இருந்தால்தான் பொதுமக்களாலே வழிமறிப்பு இல்லாமல் ஒழுங்காகப் போய்ச் சேரும் என்ற நிலை.
அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் காரையே வழிமறித்து ‘எம்.ஜி.ஆர். வாழ்க’ என்ற வாசகங்களை எழுதிக் கொண்டதற்குப் பிறகுதான் போகவிட்டனர் பொதுமக்கள்.
அத்தோடு அவருடைய அரசியல் வாழ்வே அழிந்துவிடும் என்று ஆருடம் கணித்தனர் சிலர். சத்தியமே வெல்லும் என்றார் மூதறிஞர் இராஜாஜி அவர்கள்.
தமிழகத்தின் மூலை முடுக்கெங்கிலுமிருந்து பேருந்துகளிலும், சுமையுந்துகளிலுமாக சாரை சாரையாக வந்து சத்யா ஸ்டுடியோவில் பொதுமக்கள் அவரைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். எனக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற வேட்கை எழுந்தது.
1972-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 12-ஆம் நாள் நானும் என்னுடைய நண்பர்களும் மிதிவண்டி எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றோம், அயனாவரத்திலிருந்து அடையாறுக்கு.
மாலை சுமார் ஆறு மணியளவில் நாங்கள் சத்யா ஸ்டுடியோவிற்குள் நுழைந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 10 மணிக்குத்தான் பார்க்க முடியும் என்றார்கள். இந்தச் சூழ்நிலையிலும் படத்தில் நடிக்கிறாரே எப்படி முடிகிறது? என்று வியந்துபோனேன் நான்!
பத்து மணி என்ன? பத்து நாளே ஆனாலும் பார்த்துவிட்டே போய்விடுவது என்று தீர்மானம் செய்துகொண்டு அங்கேயே இருந்தோம். எங்களுடைய பெரும் பேறு ஏழு மணிக்கெல்லாம் அவர் வந்துவிட்டார். எப்போதும் போல அவருடைய முகம் முழு நிலவைப் போல பொலிவுடன் திகழ்ந்தது. எந்தவிதமான கலக்கமும் அதில் காணப்படவில்லை.
மலை குலைந்தாலும் நிலை குலையாத மனவளம் கொண்டவர். எஃகு உள்ளம் படைத்தவர். எதையும் தாங்கும் இதயம் உடையவர் என்று நான் எண்ணிக் கொண்டேன். நாடே விம்மி வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் அநீதிக்கு ஆளானவர் அமைதியாக எப்போதும் போல் இருக்கிறாரே என்று நான் ஆச்சர்யப்பட்டேன்.
அவரைக் கண்டவுடனே கரை காணாத களிப்பும், அதே நேரத்தில், அவருக்கா இப்படி என்ற கலக்கமும் ஏன்பட்டது. அங்கு கூடியிருந்தவர்களின் வினாக்களுக்கு அவர் விடையளித்தார். நானும் சில கேள்விகள் கேட்டேன்.
இனப்பிரச்னையைக் கிளப்புகிறார்களே? என்றேன் நான். ‘அது அவர்களின் துருப்பிடித்த ஆயுதம்’ என்றார் அவர். கருணாநிதியின் மகன் ஸ்டாலின் இளைஞர் தி.மு.க. நடத்துகிறாரே பொதுக்குழு, செயற்குழுவின் ஒப்புதல் பெற்றாரா? என்றேன். ‘இல்லை’ என்றார். அப்படியானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே என்றேன். ‘அது அவருடைய சொந்த மகன்’ என்று சொன்னார்.
இன்று உங்களை அமைச்சர் சத்தியவாணி முத்து அவர்கள் சந்தித்தார்களே என்ன சொன்னீர்கள் என்று கேட்டதற்கு… ‘என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கையெழுத்துப் போட்டவர்களிலே நீங்களும் ஒருவர். ஆகையினால் உங்களுக்கு சமரசம் பேச தகுதியில்லை என்று கூறினேன்’ என்று பதிலளித்தார்.
எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி, ஒரு மாமனிதரை – மகத்தான தலைவரை – வள்ளலை – வரலாற்று நாயகரை – உத்தமரை – ஊருக்கு உழைப்பவரை – சத்தியசீலரை – சத்தியத்தாய் புதல்வரை – பார்த்தேன் பேசினேன். கேள்வி கேட்டேன். அவரும் பதில் சொன்னார். இதுவே நான் முதன் முதலாகச் சந்தித்த நிகழ்ச்சியாகும்.
ம.சா.எத்திராசன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)