செவ்வாய், 6 மே, 2014

தேர்தலும் பெண்களும்


பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றிய சிந்தனை 19-ம் நூற்றாண்டின் இறுதியில்தான் எழுந்தது. குறிப்பாக அந்தக் காலகட்டத்தில் முதன் முதலில் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும்தான் இந்தப் பிரச்னை தீவிரமடைந்தது, என்றாலும் இந்த இரண்டு நாடுகளுமே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க முன்வரவில்லை.

1893-ம் ஆண்டு நியூசிலாந்து நாடுதான் அங்கு நடந்த பொதுத்தேர்தலில், உலகிலேயே முதன் முதலாக பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. பின்னர் ஆஸ்திரேலியா 1902-ம் ஆண்டிலும், ஃபின்லாந்து 1906-ம் ஆண்டிலும், நார்வே 1913-லும் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தன.

ஸ்வீடன், அமெரிக்கா இந்த இரு நாடுகளும், தங்கள் நாடுகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் மட்டும் வாக்களிக்க பெண்களை அனுமதித்தன.

முதல் உலகப்போருக்குப் பின்னர்தான் ஐரோப்பாவிலும் வேறு சில நாடுகளிலும் பெண்களுக்கான வாக்குரிமை பற்றிய வாதங்கள் தீவிரமடையத் தொடங்கின.

1914-39 காலகட்டத்தில் ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து, செக்கோஸ்லோவாக்கியா (1919), அமெரிக்கா, ஹங்கேரி (1920), பிரிட்டன் (1918-1928), பர்மா (1922), ஈக்வேடார் (1929), தென்னாப்பிரிக்கா (1930), பிரேசில், உருகுவே, தாய்லாந்து (1932), துருக்கி, கியூபா (1934), பிலிப்பைன்ஸ் (1937) உள்பட 28 நாடுகள் முதலில் அந்தந்த நாடுகளில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மட்டும் பெண்களை வாக்களிக்க அனுமதித்தன. பின்னர்தான் பொதுத்தேர்தல்களிலும் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் வாக்களிக்கச் சம உரிமை அளிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா, யுகோஸ்லேவியா, சீனா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் சேர்ந்தன.

இந்தியாவில் 1949-ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின் மூலம் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.

பாகிஸ்தானில் 1956-ல்தான் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். இதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை அளித்தன.

ஸ்விட்சர்லாந்து மற்ற நாடுகளைவிட வெகு காலத்திற்குப் பின்னர்தான் தன் நித்திரையிலிருந்து மெல்ல விழித்துக் கொண்டது. 1971-ம் ஆண்டு வாக்கில்தான் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது.

சிரியா 1973-ல் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக வாக்களிக்கும் முழு உரிமையை வழங்கியது.

பெண்களுக்கு இந்த உரிமைகள் சும்மா வந்துவிடவில்லை. 19, 20-ம் நூற்றாண்டுகளில் தொடர்ந்து நடைபெற்ற பல போராட்டங்களுக்குப் பின்னர்தான் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டன.

அமெரிக்காவில் முதன் முதலில் பெண்ணுரிமைகளுக்காகப் போராடியவர் லுக்ரேஷியா மோட் என்பவர்.

1890-ம் ஆண்டு வயோமிங் மாநிலம் பெண்களுக்கு முதன் முதலாக உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை அளித்தது. அடுத்த 25 ஆண்டுகளில் மெல்ல மெல்ல ஒவ்வொரு மாநிலமும் இதைச் செயல்படுத்தின. 1918-ல் 15 மாநிலங்கள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கின.

பிரட்டனில் 1792-ம் ஆண்டு பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என முதன் முதலாக குரல் எழுப்பியவர் மேரி உல்ஸ்டோன்கிராஃப்டி. 1850-ல் ஜான் ஸ்டுவர்ட் மில் என்பவரும் அவரது மனைவி ஹாரியாட்டும் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

விக்டோரியா மகாராணி பெண் இயக்கங்களுக்கு எதிராக இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனாலும் 1869-ல் வரி கட்டும் பெண்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்டது.

1917-1918-ம் ஆண்டுகளில்தான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்காகச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டப்படி 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. 1928-ல் 21 வயதிற்கு மேற்பட்ட எல்லா பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

2 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

Arumai

எம்.ஞானசேகரன் சொன்னது… [Reply]

வருகைக்கு மிக்க நன்றி ராமகிருஷ்ணன் ஜெயலக்ஷ்மி அவர்களே!

கருத்துரையிடுக

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!