வியாழன், 10 ஜனவரி, 2013

வலைச்சரம் அறிமுகத்தில் மறக்க முடியாத நினைவுகள்

நான் பதிவுலகில் காலடி வைத்தபோதே எனக்கு அறிமுகமானது வலைச்சரம். ஏதாவது ஒரு தளத்திற்குச் சென்றால் முகப்பில் இருக்கும் பதிவை மட்டுமே படிப்பதில்லை. அங்கே உள்ள இணைப்புகளுக்கெல்லாம் செல்வேன். அதிலுள்ள பழைய பதிவுகளையெல்லாம் படிப்பேன். இப்படித்தான் தமிழ்மணம், தமிழ்வெளி, இண்ட்லி, திரட்டி, வலைச்சரம் என திரட்டிகளெல்லாம் எனக்கு அறிமுகமாயின.  இதிலிருந்து எனக்கு தேவையான அல்லது விருப்பமான பதிவுகளை மட்டும்தான் தேர்வு செய்து படிப்பது வழக்கம். மற்றொரு வழியிலும் மற்ற தளங்களுக்குச் செல்வதுண்டு. அது நமது தளத்திற்கு வந்து படித்து பின்னூட்டமிடுபவர்களின் முகவரி வழியே சென்று படிப்பது.  

வலைச்சரம் எனக்கு மிகவும் பிடித்தமான தளம். அது பதிவர்களையே வாரத்திற்கு ஒருவரை ஆசிரியராக பணி செய்ய அழைப்பது. மிகப்பிரபலமான பதிவர்களுக்குத்தான் அதில் வாய்ப்பு என முதலில் எண்ணியிருந்தேன். அப்புறம் சில பதிவர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அவர்களை மட்டுமே அங்கு அறிமுப்படுத்துகிறார்கள் என்று நினைத்தேன். தொடர்ந்து வாசிப்பதிலிருந்துதான் தமக்குப்பிடித்த சுவாரஸ்யமான வலைப்பதிவுகளை / பதிவர்களை மற்ற எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியே வலைச்சரத்தில் அறிமுகப்படுத்துகிறார்கள் என்று தெரிந்துகொண்டேன்.  

திரட்டிகளில் பகிர்வதோடு என் கடமை முடிந்தது என நினைத்திருந்த வேளையில் வாசகர்களின் வருகை ஒரு கிறக்கத்தைத் தந்தது. ஒருநாளில் இத்தனைபேர் வந்து படிக்கிறார்களா என்று வியப்பு ஏற்பட்டது. வெறும் நூற்றுக்கணக்கில் வருவதற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால் ஆயிரக்கணக்கில் வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். நல்ல பதிவுகள் என்றால் தன்னால் வாசகர்கள் வருவார்கள் என்பதை அறிந்து கொண்டபின்புதான் நான் எழுதவே ஆரம்பித்தேன். இதுவரை நான் எழுதிய பதிவுகள் எல்லாம் என்னுடையதே இல்லை. எனக்கு என் நண்பர்கள் எழுதிய பழைய கடிதங்களே! சில இணையத்தில் கிடைத்த நகைச்சுவையான புகைப்படங்கள்.

 இத்தனைக்கும் சக பதிவர்களின் இடுகைகளைப் படித்து பின்னூட்டமிடுவதும் மிகக்குறைவு. காரணம் பணிச்சூழல். முதன் முதலில் 'மகிழம்பூச்சரம்' சாகம்பரி அவர்கள்தான் என் வலைப்பதிவை வலைச்சரத்தில் (31.10.2011 - 06.11.2011) அறிமுகப்படுத்தினார். இணைப்பு; வலைச்சரத்தில் மறக்க முடியாத நினைவுகள்). அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து  உஷா அன்பரசு அவர்களால் வலைச்சரத்தில் (24.12.2012 - 30.12.2012) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இணைப்பு; வகுப்பு-இரண்டாம் நாள்.

10) மறக்க முடியாத நினைவுகள்
 என்று சொல்லும் கவிப்ரியன்
கடிதங்களை சுவாரஸ்யமாக திரைக்கதைப் போல் நகர்த்துகிறார்.
 

அதற்கு அடுத்த வாரத்திலேயே (புத்தாண்டின் முதல்வாரத்திலேயே) பலராலும் மிகவும் அறியப்பட்ட 'தேவியர் இல்லம் திருப்பூர்' ஜோதிஜி அவர்களால் (31.12.2012 - 05.01.2013) மீண்டும் வலைச்சரத்தில் எனது பதிவு அறிமுகமானது. இணைப்பு;  ஜோதிஜி 7 வது நாள்- விதைகள் மலடா?


தமிழ்நாட்டை விட்டு வேறொரு மாநிலத்தில் வேலை நிமித்தமாக உயர் பதவியில் வசிக்கும் இவர் அக்கறைபோடு பகிர்ந்து கொள்வதை படித்துப் பாருங்க.  நேரமில்லை என்பது ஒரு பொய்ச் சாக்கு என்பது மனதிற்கு தெரியும் தானே?



இது போன்ற தளங்களை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்க.  நாம் இருப்பதை விட்டு விட்டு எத்தனையோ தேவையில்லாத விசயங்களுக்கு அலைந்து கொண்டு இருப்பது புரியும்.

தினந்தோறும்  வலையுலகில் உலவும்போது கண்ணில்பட்ட மிக முக்கியமான வலைப்பதிவு இந்த ஜோதிஜியின்  'தேவியர் இல்லம் திருப்பூர்'. ஒரு வலைப்பதிவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இவரது தளம். இவரது நட்பு கிடைத்ததையே பெரிதாக நினைத்துக்கொண்டிருந்த வேளையில்தான் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி கௌரவித்திருக்கிறார்.

என் பதிவுகள் குறித்து எனக்கே திருப்தியில்லை. எழுத எண்ணமிருந்தும் நேரம் கைகொடுப்பதில்லை. கடந்த காலங்களில் என் நண்பர்கள் எழுதிய கடிதங்களைத்தான் பதிவிட்டு வருகிறேன். இந்த அறிமுகங்கள் என்னை சோம்பலிலிருந்து விடுபட்டு உற்சாகமாய் எழுத ஊக்குவிக்கின்றன. இனியாவது எழுத ஆரம்பிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருக்கிறது.

என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய இருவருக்கும் மனமார்ந்த நன்றி!

உடனுக்குடனே என்னால் பதிவிடமுடியவில்லை. ஒரிசாவில் ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சி ஒன்றின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால் அப்போது நன்றி தெரிவிக்கக் கூட முடியவில்லை. கடந்த 5 ம் தேதி விழா இனிதே முடிந்தது!

தொடர்புடைய இடுகை; வலைச்சரத்தில் மறக்க முடியாத நினைவுகள்.

2 கருத்துகள்:

  1. நல்ல எழுத்துக்கள் எங்கிருந்தாலும் வெளியில் வந்துவிடும்.. வாழ்த்துக்கள் ! தொடர்க!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் தங்களின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி உஷா அன்பரசு அவர்களே!

    பதிலளிநீக்கு

வந்தது வந்தீங்க. ஏதாவது சொல்லிட்டுப்போங்களேன்!